top of page

பரலோகத்தை மறந்த சபைகள்


இன்றைக்கு எந்த சபைகள் பரலோகத்தை பார்க்க தவறியதோ அந்த சபைகள் உலகத்தால் கறைபடுத்தப்பட்டு தேவனை விட்டு விலகி போய் கொண்டிருக்கின்றன.

மனுஷன் உலகமுழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத் தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? லூக்கா 9-25.

 
மேல் சொல்லப்பட்ட வசனத்தில் தன்னை தானே கெடுத்து நஷ்டப்படுத்தி என்ற வார்த்தையை கவனித்தீர்களா? கிறிஸ்து சபைக்கு தலையாயிருக்கிறார் என்று வேதம் சொல்கிறது ஆனால், ஊழியக்காரர்களே இயேசுவின் ஸ்தானத்தை எடுத்து கொண்டார்கள் அதாவது, தேவனுடைய பாதத்தில் விழுந்து கிடந்து அவர் அருளிய வார்த்தையை ஜனங்களுக்கு கொண்டு செல்வதே உண்மையான ஊழியம். தேவன் எதை சொல்ல கட்டளையிடுகிறாரோ அதை மாத்திரம் ஜனங்களுக்கு சொல்வதே உண்மையான தேவனுடைய தூதுவனின் வேலை அன்றைக்கு தேவ தூதர்களும் தீர்க்கதரிசிகளும் தேவன் சொல்ல சொன்னதை ஜனங்களுக்கு தெளிவாக சொன்னார்கள் இன்றைக்கு நமக்கு கொடுக்கப்பட்ட பரிசுத்தாவியானவர் பாவத்தை குறித்தும் நீதியை குறித்தும் நியாயதீர்ப்பை குறித்தும் ஜனங்களை கண்டித்து உணர்த்துகிறார். ஆனால் நம்முடைய பிரசங்கம் கலப்படமாகவே இருக்கிறது ஜனங்களை கவரும் வண்ணமாகவும் பாவத்தையும் மனம் திரும்புதலையும் குறித்து எச்சரிக்காமல் ஆசீர்வாதங்களை சொல்லி ஜனங்களை தேவனை நோக்கி திருப்பாமல் தங்கள் ஆளுகைக்குள் வைத்து கொள்கிறார்கள்.

 

ஜனங்களும் தேவனை பிரசித்தி படுத்தாமல் எங்க Pastor, எங்க Pastor என்று அவருக்கு ரசிகர் மன்றமே வைத்து விடுகின்றனர். இன்றைக்கு அநேக ஊழியக்காரர்களும் ஜனங்களுக்கு முன்பாக தங்களை உயர்த்தி கொள்ளவே விரும்புகின்றனர்.

 

 • அழகிய சபை கட்டடங்களும்

 • வண்ண விளக்குகளும்

 • விலை உயர்ந்த ஒலி அமைப்புகளும்

 • இசைக்கருவிகளும்

 

தேவனை  மகிமைபடுத்துவதற்காக அல்ல மாறாக ஜனங்களை கவர்வதற்காகவே.

 

எந்த சபையில் ஆலயத்திலும் பெரியவரான இயேசு இல்லையோ அது எவ்வளவு தான் அலங்கரிக்கப்பட்டிருந்தாலும் பாதாளத்தின் வல்லமைகள் அந்த சபையை மேற்கொள்ளும்.!!!

 

நீங்கள் உலகத்துக்கு ஒளியாயிருக்கிறீர்கள் என்று இயேசு சொன்னார். சபைகள் தேசத்துக்கு ஒளியாக இருக்க வேண்டும் ஆனால் சபைகள் ஒளி வெள்ளத்தினால் நிறைந்திருக்கிறதே தவிர தேவ பிரசன்னம் இல்லை.அநேக சபைகளின் விளக்கு தண்டு எடுத்து போடப்பட்டிருக்கிறது.


இன்றைக்கு பரலோகத்தை பார்க்க வேண்டிய நாம் உலகத்தை பார்க்க ஆரம்பித்து விட்டோம். உலகமும் அதன் ஆசை இச்சைகளும் ஒழிந்து போகும் என்ற சத்தியத்தை மறந்து விட்டோம்.

சமீபத்தில் ஒரு சபையில் நடந்த பிரச்சனைக்காக அங்குள்ள மூப்பர்கள் Media க்களை அழைத்து தங்கள் சபையில் நடக்கும் பிரச்சனைகளை சொல்ல ஆரம்பித்தார்கள். இவர்கள் யாரால் ஆளுகை செய்யபட்டவர்கள் என்பதை பகுத்தறியுங்கள். அரசியல் கட்சியில் நடக்கும் பிரச்சனைகளில் தான் Media ஐ கூப்பிடுவார்கள்.  சபையில் நடக்கும் காரியங்களுக்காக Media ஐ அழைத்து எங்களுக்குள் நடக்கும் பிரச்சனைகளை பாருங்கள்.ஒருவருக்கொருவர் அன்பாயிருந்தால் என் சீஷர்களாயிருப்பீர்கள் என்று இயேசு சொன்னதற்கு மாறாக சபைக்குள்ளாக நடக்கும் அரசியலை உலகமே பார்த்து சிரிக்கும் படி செயல்படுவது கர்த்தராகிய இயேசுவுக்கு அபகீர்த்தியை உண்டாக்குமல்லவா? உங்கள் வீட்டில் உங்களுக்குள்ளே நடக்கும் பிரச்சனைகளை ஊரே சிரிக்கும் படி வெளியே சொல்லி உங்களை நீங்களே கேவலப்படுத்துவீர்களா? நாளைக்கு இயேசு உங்களுக்கு சமாதானத்தை தருவார் என்று புறஜாதிகளிடம் சொல்லும் போது அவார்கள் உங்களை பார்த்து முதலில் நீங்கள் தொழுது கொள்கிற ஆலயத்தில் சமாதானத்தை ஏற்படுத்துங்கள் அதை முதலாவது செய்யுங்கள் என்று சொல்வார்களே?

இன்றைக்கு ஆலயத்தில் இரு பிரிவுகள் இருப்பதற்கு முக்கிய காரணம் சபையின் போதகர்களே.?!!!  அடுத்ததாக, சபையில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் பெரும்பாலும் ஊழியம் செய்ய தகுதியற்றவர்களே.??!!! சத்தியத்தை சத்தியமாக போதித்து போதிக்கப்பட்ட அந்த சத்தியத்திற்கு தாங்கள் கீழ்ப்படிந்தார்களென்றால் சபை பக்தி விருத்தி அடைந்திருக்கும்.


மற்றவனுக்கு போதிக்கிற நீ உனக்கு தானே போதியாமல் இருக்கலாமா என்று ரோமர் 2-21 ல் பவுல் சொல்வது ஊழியம் செய்கிற ஊழியக்காரர்களுக்கும் மூப்பர்களுக்கும் சத்தியத்தை சத்தியமாக போதிப்பதில்லை.

 

 1. போதித்த சத்தியத்தின் படி முதலாவதாக தாங்களே கீழ்படிவதில்லை..!

 2. காணிக்கை விஷயங்களில் உண்மையில்லை 

 3. காணிக்கை பணத்தை அநியாயமாக வீணாக்குகிறார்கள் 

 4. சபையில் பிரச்சனை வரும் போது சமாதானம் பண்ணுவதில்லை

 5. எல்லாவற்றுக்கும் மேலாக, இவர்களே சபைக்கு தலையாயிருந்து தங்கள் சுய சித்தம் செய்கிறார்கள்.

 6. தங்களுக்கு ஜால்ரா போடுகிறவர்களுக்கு ஊழியப் பொறுப்புகளை கொடுக்கிறார்கள்

 7. சபையில் தேவனால் பயன்படுத்தபடுகிறவர்களை ஓரங்கட்டுகிறார்கள்

 8. முழுக்க முழுக்க அரசியல்வாதிகளை போல சபையில் மறைமுகமாக அரசியல் செய்கிறார்கள்.

 

இவர்கள் ஆரம்ப நாள்களில் உண்மையும் உத்தமுமாக ஊழியம் செய்தார்கள், தேவனை தனக்கு முன்பாக வைத்திருந்தார்கள். ஆனால் இன்றைக்கு பரலோகத்தை மறந்து போனார்கள். இவர்கள் சபைக்குள் உலகத்தை கொண்டு வந்து வைத்து விட்டார்கள். இவர்கள் தங்களையும் கறைப்படுத்தி சபை ஜனங்களையும் கறைபடுத்தி விட்டார்கள். உலகத்தால் கறைபடாதபடிக்கு தங்களை காத்து கொள்வதே பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத பக்தி.


நான் எல்லா ஊழியக்காரர்களையும் சொல்லவில்லை. உண்மையும் உத்தமுமாக ஊழியம் செய்யும் அநேக ஊழியக்காரர்கள் இருக்க தான் செய்கிறார்கள். கிறிஸ்துவை நேசிக்கும் சபைகள் அநேகம் இன்றும் ஜுவாலித்து கொண்டிருக்கிறது.

போதகர்களே! உங்கள் சபையினருக்கு தேவனுக்கு பயப்படும் பயத்தை போதிக்கவில்லையென்றால் உங்கள் பிரதான பணியில் தோற்று போய்விட்டீர்கள்.


இயேசுவுக்காக ஊழியம் செய்வது உலக வேலையல்ல!

சபை என்பது மன மகிழ் மன்றம் அல்ல!

 

நீங்கள் சபையின் மூப்பராக இருக்கலாம் அல்லது போதகராக இருக்கலாம் ஜனங்கள் பக்தி விருத்தியடைவதற்காகவும் நற்சீர் பொருந்தவும் சபை ஏற்படுத்தப்பட்டது.

 

இயேசு கிறிஸ்து தன் சுய இரத்தத்தை சிந்தி சம்பாதித்த சபை. சபையில் அரசியல் பண்ணி சண்டை போட்டு கொண்டு உங்கள் பிள்ளைகளுக்கு சாபத்தை வைத்து விட்டு போகாதீர்கள். அநேக சபைகளில் பிரிவினைகளை உண்டாக்கி அரசியல் செய்தவர்களில் வீடுகளில் தீவிரித்து வரும் தேவ கோபாக்கினையை பாருங்கள். தேவ சித்தத்தை செய்யாத ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான். அவருடைய சித்தத்தை செய்யாதவர்களை அக்கிரம சிந்தை காரர்களே என்று இயேசு குறிப்பிட்டார். நீங்கள் பேசும் வீணான வார்த்தைகள் குறித்து நியாய தீர்ப்பு நாளிலே   கணக்கொப்புவிக்க வேண்டும் என்று இயேசு சொன்னார். நம்முடைய சகல எண்ணங்களும் கூட நியாயம் தீர்க்கபடும் என்று வேதம் எச்சரிக்கிறது அப்படியென்றால் நீங்கள் செய்யும் வீணான நடக்கைகளினால் சபைகளில் பிரிவினைகளை உண்டாக்கி ஜனங்களை இடறப்பண்ணுவதால் எதை பெற்று கொள்ள போகிறோம்? இடறல் உண்டாக்குகிறவனை கல்லை கட்டி கடலில் அமிழ்த்துவது நலமாக இருக்கும் என்று இயேசு எச்சரித்தார். ஒருவருக்கொருவர் கடித்து பட்சித்தீர்களென்றால் அழிவீர்கள் என்று இயேசு சொன்னார். ஒரு வீடு தனக்கு தானே பிரிந்திருந்தால் அது பாழாய் போகும் என்று இயேசு குறிப்பிட்டார். ஒரு காரியத்தை குறித்து பூமியில் ஒருமனப்பட்டு விண்ணப்பம் செய்தால் அந்த காரியம் பிதாவினால் உங்களுக்கு உண்டாகும் என்று இயேசு சொன்னார். நமக்குள்ளே பிரிவினைகள் இருந்தால் நம்முடைய ஜெபம் எப்படி கேட்கப்படும்.


பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா? 1 கொரிந்தியர் 3:3,4.


எப்படியெனில்  தேவனுடைய பணியை செய்ய மனித சிந்தனையும் மனித ஞானமும் நிச்சயமாக உதவாது.மனுசீக அதிகாரத்தினாலே சபையை நடத்தும் போது மாம்சீக தன்மையாகவே இருக்கும்,தேவன் தரும் ஆவிக்குறிய ஞானத்தோடு ஆவிக்குறிய அதிகாரத்தை கொண்டு தான் சபை நடத்தப்பட வேண்டும். இன்றைய பெரும்பாலான சபைகள் மனுஷீக வழிகளிலும் மார்க்க ரீதியான வழிகளிலும் நடத்தபடுகிறது.


என் வழிகள் உங்கள் வழிகள் அல்ல, என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல. என் வழிகள் பூமியை விட வானம் எவ்வளவு உயர்ந்திருக்கிறதோ அவ்வளவாய் உயர்ந்திருக்கிறது என்று  தேவன் சொன்னார். நீங்களோ மனிதமார்க்கமாய் நடந்து பூமிக்கடுத்தவைகளை சிந்திக்கிறீர்கள். பரலோகத்தை மறந்து போய் விட்டீர்கள்.

 
சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறார்கள். உங்களுக்குள் ஏன் சமாதானம் பண்ணுகிறவர்கள் இல்லையா? யாரல்லாம் பரிசுத்தாவியினால் நடத்தபடுகிறார்களோ அவர்கள் தேவனுடைய புத்திரராய் இருக்கிறார்கள்?. உங்களுக்குள்ளே தேவனுடைய பிள்ளைகள் இல்லையா? நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன் என்ற கிறிஸ்துவின் ஆவி இல்லாதவன் அவருடையவன் அல்ல. இவ்வளவு கொடிய கொள்ளை நோயின் தாக்கத்திலும் சபைகள் மனம் திரும்பவில்லையே. சபைகள் தேவன் தங்களுக்காக ஆயத்தப்படுத்திய பரலோகத்தை மறந்தது ஜனங்கள் சபையை நோக்கியும் அதன் மார்க்க சட்ட திட்டங்களை நோக்கியும் நடத்தபடுகிறார்களே தவிர இன்னும் தேவனை நோக்கி வரவில்லை. மனம் திரும்புங்கள் பரலோக ராஜியம் சமீபமாயிருக்கிறது என்று உலகத்தின் சூழ்நிலைகளை பார்த்து ஜனங்களை இரட்சிப்புக்குள்ளாக நடத்தும் காலம். கிறிஸ்து பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் மேலானவைகளை தேடுங்கள் என்று பவுல் சொன்னப்படி நம்முடைய  இலக்கு எதை நோக்கி போய் கொண்டிருக்கிறது.

 

பிரியமானவர்களே நீங்கள் ஒரு சபை போதகராக இருக்கலாம் அல்லது சபையின் மூப்பராக இருக்கலாம். எந்த நோக்கத்துக்காக ஊழியம் செய்தீர்கள் இது வரை உருப்படியாக என்ன செய்தீர்கள்? சபையில் உங்களால் வெளிப்படுத்தப்ப தேவ அன்பையும் சமாதானத்தையும் மனத்தாழ்மையையும் பார்த்து தேவன் மகிமைபட்டாரா? உண்மையும் உத்தமுமான ஊழியக்காரனே என் சந்தோஷத்துக்குள்ளே பிரவேசி என்று தேவன் உங்களை பார்த்து சொல்ல முடியுமா?சந்திப்பின் நாளிலே தேவன் உங்களை பார்த்து நீ ஊழியம் செய்தாய் ஆனால் நான் செய்ய சொன்னதை செய்தாயா என்று அதிகாரத்தோடு கேட்கும் போது என்ன பதில் சொல்வீர்கள்?? அதிக ஆக்கினையை அடைவோம் என்று உங்களில் அநேகர் ஊழியக்காரராகாதிருங்கள் என்ற வார்த்தையின் எச்சரிப்பின் உண்மையை அறிந்து கொண்டீர்களா? ஜனங்களுக்கு எப்படியோ அப்படியே ஆசாரியனையும் நியாயம் தீர்ப்பேன் என்று பழைய ஏற்பாட்டிலே தேவன் எச்சரித்ததையும் மறந்து விட்டீர்களா?ஊழியம் செய்து இயேசுவின் நாமம் தூசிக்கும்படியாக நடந்து கொண்டு அநேகருக்கு இடறலுண்டாக்கி விட்டு நரகத்துக்கு போவதை விட ஊழியம் செய்யாமல் பரலோகத்துக்கு போவது நல்லது.  ஆமென்.

bottom of page