நீங்கள் ஆவிக்குறியவர்களா???

 

தேவனை ஆராதிப்பதற்க்காகவே பிரதானமாக தேவன் நம்மை அழைத்திருக்கிறார்.ஒரு ஆவிக்குறிய மனிதன் தேவனை இடைவிடாது ஆராதிப்பவனாகவே இருப்பான். தேவன் மேல் பசியும் தாகமும் கொண்ட அவனுடைய ஒரே விருப்பம் தேவன் மாத்திரமே ஆகும்.தேவனை காட்டிலும் பணம் அவனுக்கு பெரிதாக தோன்றுவதேயில்லை. மான்கள் நீரோடை வாஞ்சித்து கதறுவது போல ஒரு ஆவிக்குறியவன் கடும் வறட்சியினால் தாகம் கொண்ட மனிதன் தண்ணீருக்காக தவிப்பதை போல தேவன் மீது வாஞ்சை கொண்டிருப்பான். மேலும் தன்னோடு  தேவன் பேசுவதை கேட்கும்படி அவன் தேவ சமூகத்தில் காத்திருப்பான்.

 

ஆவிக்குறியவன் மனத்தாழ்மையை அணிந்திருப்பான். ஆவியில் எளிமையுள்ளவனாக இருப்பான். இவன் சகல நற்கிரியைகளையும் மனுஷர் கண்களுக்கு மறைவாகவே செய்வான். தன்னை பற்றியோ அல்லது தன்னுடைய ஆவிக்குறிய வரங்களை பற்றியோ பிறர் அறிய வேண்டும் என்று ஒரு போதும் செயல்படமாட்டான். இயேசு சொன்ன நுகமாகிய மனத்தாழ்மையையும் சாந்த குணத்தையும் ஏற்று கொண்டு அவர் காட்டிய அடிச்சுவட்டை பின்பற்றுகிறவனாயிருப்பான். மேலானவைகளை நோக்கும் அவன் தன் உள்ளான அந்தரங்கங்களை பார்க்கும் படி நடத்தப்படுவான்.

 

தேவனுடைய மகிமையை கண்ட ஏசாயா தன்னுடைய அந்தரங்கத்தையும் கண்டு உணர்ந்துவிட்டான். இப்படி எல்லாவற்றையும் நிதானித்து அறிகிற அவன் தன் ஜீவியத்தில் மறைந்திருக்கிற  பாவத்தை குறித்து நிதானித்து அறிந்து தொடர்சியான வெளிச்சத்தை பெற்று கொண்டே இருப்பான். அவன் பரிசுத்த அலங்காரத்தோடே தேவனை ஆராதிப்பான். பரிசுத்த அலங்காரமில்லாமல் அதாவது ஆடையில்லாமல் இருப்பது ஆண்டவருக்கு முன் நிர்வாணமாக நிற்பதற்க்கு ஒப்பானதாகும். எனவே ஒரு ஆவிக்குறிய மனிதன் தேவனுக்கு முன்பாகவும் மனுஷருக்கு முன்பாகவும் தன் மனசாட்சியை சுத்தமுள்ளதாக வைத்திருக்க நாடுவான். ஒரு ஆவிக்குறிய மனிதன் தேவன் அவனுக்கு அதிகம் மன்னித்திருக்கிறபடியால் தனக்கு தீமை செய்த அனைவரையும் மகிழ்ச்சியாக உடனடியாக மன்னித்துவிடுவான். ஒரு ஆவிக்குறியவன் ஆவியின் கனிகளாகிய திவ்விய சுபாவங்களை பெற்றவனாக இருப்பான்.

 

இன்றைக்கு வரங்களையும், பிரசங்கத்தையும், ஆராதிப்பதையும், அன்னிய பாஷை பேசுவதையும்  வைத்தே ஒருவன் ஆவிக்குறியவன் என்று நிதானிக்கிறார்கள். தேவனோ அவர்களின் கனிகளினால் அவர்களை நிதானித்து அறிந்து கொள்ளுங்கள் என்றார்?. நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.

 

என்ன தான் சத்தியத்தை பேசினாலும் ஊழியம் செய்து உலகத்தை ஆதாயப்படுத்தினாலும் இரத்தசாட்சியாக மரித்தாலும் அன்பு இல்லாவிட்டால் ஒரு பயனும் இல்லை. ஆவிக்குறியவன் இதை நன்கு உணர்ந்தவனாக இருப்பான். ஏனென்றால்? தன்னை நேசிப்பது போல பிறனை நேசி என்ற கற்பனையில் வேதாகமம் முழுத்தொகையாய் அடங்கியிருக்கிறதே. ஆமென்.