top of page

வெள்ளையடிக்கபட்டவர்கள்

அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள், உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள். மத்தேயு 23:28.

இன்றைக்கு அநேகருடைய இருதயம் சகல அசுத்தங்களாலும் மாயமாலத்தினாலும் வீண் பெருமைகளாலும் அசுத்த சிந்தனைகளாலும் கள்ளம் கபடு மற்றும் விபச்சார சிந்தைகளாலும் நிறைந்திருக்கிறது. இவர்கள் பல வருடங்களாக சத்தியத்தை கேட்டும் அதன் படி செய்யாமல் அதற்க்கு கீழ்படியாமல் இருக்கிறார்கள். இவர்கள் செவிகள் சத்தியத்தை கேட்டும் கேளாதவர்களாக இருக்கிறது. ஏனென்றால் இவர்கள் இருதயமோ ஆண்டவரை விட்டு வெகு தூரமாக விலகியிருக்கிறது,வெறும் உதடுகளினால் ஆண்டவரை ஆராதிக்கிறார்கள்.. ஆலயத்தில் வந்து நீர் மாத்திரம் போதும் என்று தேவனை ஆராதிக்கும் இவர்கள் மற்ற நாள்களில் உலகத்தை நேசித்து உலக பொருள்களுக்கு அடிமையாகி உலகத்தால் தங்களை கறைப்படுத்தி கொள்கிறார்கள். மறுபடியுமாய் அடுத்த வாரம் ஆலயத்துக்கு வந்து இயேசு போதுமே என்று பாடுகிறார்கள். மனிதர்கள் இவர்களை நீதிமான்கள் என்கிறார்கள். ஆனால் நினைவுகளின் தோற்றங்களையும் எண்ணங்களையும் நியாயம் தீர்க்கும் தேவன் இவர்கள் உள்ளதில் உள்ள அக்கிரமங்களையும் மாயமாலத்தையும் அறிகிறார். இன்றைக்கு பணத்துக்காகவும் பொருளுக்காகவும் துணிகரமாக பலரை ஏமாற்றி பலருக்கு இடுக்கண் செய்து சபையில் பரிசுத்தவான்கள் போல நடித்து கொண்டிருக்கிற இவர்கள் மேல் தேவக்கோபாக்கினை அவர்கள் தங்கள் மாம்ச பெலனை இழக்கும் போது சடுதியாக வெளிப்படும். தேவன் இவர்களை பார்த்து மாயக்காரர்களே வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே என்றார்.

(மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும்.  மத்தேயு 23:27).

நாம் நம்மை நல்லவர்களாக காட்டும் படிக்கு நாம் மனிதர்கள் முன்பாக நடித்து கொண்டிருப்போமென்றால் இன்றைக்கு மனம் திரும்புவோம். தேவனுக்கு முன்பாக எல்லாம் நிர்வாணமாகவும் வெளியரங்கமாகவும் இருக்கிறது. உங்கள் இருதயம் எப்படி இருக்கிறது. இரகசியமாக நீங்கள் துர் ஆலோசனை பண்ணி பொல்லாப்பான காரியங்களை செயல்படுத்தி பிறரை வஞ்சித்து நீங்கள் ஆதாயம் தேடலாம்.ஆனால் அந்த ஆதாயம் சாபமாக உங்கள் வீடுகளில் படுத்திருக்கும். ஒரு நாள்  அவைகள் ஆசீர்வாதமாக இருக்க வேண்டிய உங்கள் சந்ததிகளில் வாழ்க்கையை ஒரு புயலை போல புரட்டி போடும் போது உங்களால் சகித்து கொள்ள முடியாது.ஏனென்றால் தேவன் பிதாக்களுடைய பாவத்தை பிள்ளைகளுடைய மடியில் சரிகட்டுவார். ஏனென்றால் இவர்கள் தொடர்ந்து அநியாயம் செய்து ஒரு புறம் இருதயம் கடினப்பட்டு மறுபுறம் தேவபக்தியின் வேஷத்தை தரித்து கொண்டு அதன் பலனை மறுதலிக்கிற இவர்களை தேவன் எவ்வளவு எச்சரித்தும் அவர்கள் கீழ்படியாமல் போனார்கள். ஒருநாள் தங்கள் சந்ததியின் வாழ்க்கையில் தாங்கள் செய்த பாவங்களின் விளைவுகள் வெளிப்படும் போது அவர்களால் தாங்க முடியாது. அனால் அன்றைக்கு காலம் கடந்த பிறகு தாங்கள் செய்த தவறுகளுக்கு மனம் வருந்தி ஒரு பிரயோஜனமில்லை. (உங்களில் ஒருவனும் பிறனுக்கு அநியாயம் செய்யக்கூடாது, உன் தேவனுக்குப் பயப்படவேண்டும், நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

லேவியராகமம் 25-17 அநியாயஞ்செய்கிறவன் தான் செய்த அநியாயத்துக்கேற்ற பலனை அடைவான்; பட்சபாதமே இல்லை.

கொலோசெயர் 3-25  (இரக்கம் செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயதீர்ப்பு கிடைக்கும் -யாக் 2-13)எனவே பிரியமானவர்களே உங்கள் இருதயத்தில் அக்கிரம சிந்தையோடு பொல்லாப்பான மற்றும் தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களை உங்கள் வாழ்க்கையில் செய்து கொண்டிருந்தால் உடனே மனம் திரும்புங்கள். தேவனிடம் மன்னிப்பு கேளுங்கள். நாம் மனிதர்களுக்கு முன்பாக  நல்லவன் போல நடிக்கலாம் தேவனோ நம் உள்ளந்திரியங்களை ஆராய்ந்து அறிகிறவர்.நம் எண்ணங்களை நீயாயம் தீர்க்கிறவர். அவரிடமிருந்து சத்தியத்தை அறிந்த நாம் தப்பித்து கொள்ளவே முடியாது.

 

எனவே தேவன் உங்களுக்கு கொடுத்த ஆயுள் நாள்களில் துன்மார்க்கமான வழிகளுக்கு விலகி நித்தியமான  வழிகளில் நடப்போம். ஆமென்.

bottom of page