top of page

கிறிஸ்துவின் மணவாட்டி

 

சகோதரி. அனு ஃபெஸ்லின்

வேதாகமம் இயேசு கிறிஸ்துவை மணவாளனாகவும் சபையை மணவாட்டியாகவும் சித்தரிக்கிறது இயேசு கிறிஸ்து  தம்முடைய  சொந்த இரத்தத்தை சிந்தி சம்பாதித்தது கொண்டது தான் இந்த மணவாட்டி சபை. இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்து அவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட ஒவ்வொரும் அவருக்கு மணவாட்டியாக இருக்கின்றனர். இயேசு கிறிஸ்துவே இந்த மணவாட்டி  சபையின் தலைவராய் இருக்கிறார்.  மணவாளன் மணவாட்டியின்மேல் மகிழ்ச்சியாயிருப்பதுபோல, உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார் என்று பழைய ஏற்பாட்டில் தேவன் எருசலேமை பார்த்துக் கூறுகிறார்[ஏசாயா:62:5]. ஆம் அன்பானவர்களே நம்முடைய மணவாளனாகிய கர்த்தர் நம் மீது அளவில்லாமல் அன்புகூருகிறார். மணவாளன் மணவாட்டியின்மேல் மகிழ்ச்சியாயிருப்பதுபோல, நம்மேல் மகிழ்ச்சியாய் இருக்கிறார். இயேசு கிறிஸ்து எப்படியாய் தன் மணவாட்டி சபைக்காய் தம் ஜீவனையும் கொடுத்து அன்புகூர்ந்தாரோ அதுபோல மணவாட்டியும் தன் மணவாளனுக்கு  தன்னை முழுவதும் ஒப்புக்கொடுத்து தன் முழு மனதோடும் , முழு ஆத்துமாவோடும், முழு பெலத்தோடும் அன்புக்கூர கடனாளியாயிருக்கிறாள். நம்முடைய மணவாளனாகிய இயேசு கிறிஸ்து தம்முடைய மணவாட்டி சபையை சேர்த்துக்கொள்ளும்படி மீண்டும் வரப்போகிறார். ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் அநேகர். தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களோ சிலர். ஆட்டுக்குட்டியானவரின் கலியாணத்திற்கு அவருடைய மனைவி தன்னை ஆயத்தம் பண்ணினாள் என வேதம் கூறுகிறது. மணவாளனாகிய இயேசு கிறிஸ்து தன்  மணவாட்டி சபையிடம் எதிர்பார்கின்ற சில குணாதிசயங்களை குறித்து நாம் வேதவசனங்கள் வாயிலாக தியானிக்கலாம். 


கற்புள்ள கன்னிகையாய் தேவ உறவில்  நிலைத்திரு 


 

நான் உங்களைக் கற்புள்ள கன்னியாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங் கொண்டிருக்கிறேன் [2கொரிந்தியர்:11:2]. இவ்வசனம் நமக்கும் தேவனுக்குமான உறவைக் குறிக்கிறது. அதாவது கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு கற்புள்ள கன்னிகையாக சபை நியமிக்கப்பட்டிருக்கிறது. ஆம் அன்பானவர்களே கிறிஸ்து இயேசுவை விசுவாசித்து அவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு ஞானஸ்தானம்  பெற்ற நாம் கிறிஸ்துவாகிய ஒரே புருஷனுக்கு மணவாட்டியாக நியமிக்கப்பட்டிருக்கிறோம். ஒரு புருஷனுக்கு நியமிக்கப்பட்ட கன்னிப்பெண் எப்படியாய் தன் உறவில் தூய்மையாய் உண்மையாய் இருப்பாளோ, அதே போல நாமும் தேவனோடு உள்ள உறவில் தூய்மையாய் உண்மையாய் இருக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். ஒரு புருஷனுக்கு நியமிக்கப்பட்ட பெண் வேறு மனிதனோடு உறவு வைப்பதில்லை. அது போல நாமும் அந்தகார லோகாதிபதியாகிய சாத்தானுக்கும், உலகத்துக்கும் நம் வாழ்வில் இடம்கொடுக்காமல் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு உண்மையாய் வாழ அர்ப்பணிக்க வேண்டும். வேதம் கூறுகிறது இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது. விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான் [யாக்கோபு: 4:4]. 


தேவன் தம்முடைய சொந்த ஜனமாக பரிசுத்த சந்ததியாக இஸ்ரவேல் ஜனங்களை தெரிந்தெடுத்தார். ஆனால் அவர்களோ தேவனை மறந்து விட்டு அந்நிய தேவர்களுக்கு தூபங்காட்டி தங்கள் கைகளின் கிரியையை பணிந்து கொண்டனர். இந்த ஜனங்களை பார்த்து தேவன் கூறுகிறார், "ஒரு பெண் தன் ஆபரணத்தையும் ஒரு மணவாட்டி தன் ஆடைகளையும் மறப்பாளோ? என் ஜனங்களோ எண்ணிமுடியாத நாட்களாய் என்னை மறந்துவிட்டார்கள். ஒரு மனைவி தன் புருஷனுக்குத் துரோகம் செய்வது போல, இஸ்ரவேல் வம்சத்தாராகிய நீங்கள் துரோகம் செய்தீர்கள்[எரேமியா:2:32;3:20]. நமக்கும் தேவனுக்கும் உள்ள உறவு எப்படியாய் இருக்கிறது? நம்மை சீர்தூக்கி பார்ப்போம். நாம் கற்புள்ள கன்னிகைகளாய் அவருடைய உறவில் உண்மையாய் நிலைத்திருக்கிறோமா?தேவன் நம்மோடு ஏற்படுத்தியிருக்கிற உறவு நித்திய நித்தியமானது. வேதம் கூறுகிறது "நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன். உண்மையாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீ கர்த்தரை அறிந்துகொள்ளுவாய்[ஓசியா: 2:19].  உயர வானத்திலும் தாழ பூமியிலும் கர்த்தரே தேவன், அவரைத் தவிர வேற தேவன்  ஒருவரும் இல்லை என்பதை  அறிந்து, அவரை உண்மையாய் சேவிப்பதை தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார். நம்முடைய மணவாளனாகிய இயேசு கிறிஸ்துவை  நம்முடைய வாழ்க்கையில்  எல்லாவற்றிற்கும் மேலானவராக வைத்து முழு இருதயத்தோடும்,முழு மனதோடும்,முழு பெலத்தோடும்,முழு ஆத்துமாவோடும் அன்புகூருவோம்.  தேவ உறவில் உண்மையாய் நிலைத்திருப்போம்.

 


கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கமாய் அவரோடு ஐக்கியப்படு 

 


நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள் [1கொரிந்தியர்:12:27]. தேவனாகிய கர்த்தர் மனுஷனுடைய விலா எலும்பை எடுத்து மனுஷியாக உருவாக்கினார். அதுபோல கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் மீட்கப்பட்ட மணவாட்டிகளாகிய நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கமாய் இருக்கிறோம். ஏவாள் ஆதாமின் விலா எலும்பைப்போல நாம் கண்ணாகவோ, கையாகவோ ஏதோ ஒரு அவயவமாய் இணைந்திருக்கிறோம். நாம் எந்த அவயவமாய் இணைக்கப்பட்டிருக்கிறோமோ அதன் பணியை நாம் செய்ய வேண்டும். நம்மை தம்மோடு இணைத்தவர் தேவன். எனவே கிறிஸ்துவின் அங்கமாக அவரையே பிரதிபலிக்க வேண்டும். இயேசு கிறிஸ்து பஸ்காவை ஆசாரிக்கும் போது ரசத்தை எடுத்து தம்முடைய சீஷர்களிடம் கொடுத்து இது என்னுடைய இரத்தத்திலான புதிய உடன்படிக்கை என்னை நினைவுகூரும்படி இதை செய்யுங்கள் என்றார். அவர் நம்மோடு தமது இரத்தத்தினால் உடன்படிக்கை பண்ணி இருக்கிறார். எனவே நம்முடைய சரீரம் தேவனுக்கு சொந்தமானது. கணவன் மனைவி ஒரே சரீரமாய் இணைத்திருப்பது போல நாமும் ஒரே சரீரமாய் இணைத்திருக்கிறோம். கணவன் மனைவி ஒருவரையொருவர் எப்படி புரிந்து நடக்கிறார்களோ அதே போல நாமும் தேவனுடைய இருதயத்தை புரிந்து நடக்க வேண்டும். தாவீது ராஜாவை தேவன் தம் இருதயத்திற்கு ஏற்றவனாய் கண்டார். அவன் என் சித்தபடியெல்லாம் செய்வான் என சாட்சி கொடுத்தார். நாமும் அவருடைய சரீரமாய் அவருடைய விருப்பத்தை அறிந்து அவர் சித்தம் செய்ய ஒப்புக்கொடுப்போம். 

 


மனுஷியை உருவாக்கின பின்பு தேவன் ஆதாமுக்கு கொடுத்த கட்டளை "இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு தன் மனைவியோடே இசைந்திருப்பான்;அவர்கள் ஒரே மாம்சமாய் இருப்பார்கள். தம்முடைய முதல் மணவாட்டியாகிய ஆதாமுக்கு தேவன் கட்டளையிட்டது போல நாமும் உலகத்தை விட்டு பிரிந்து தேவனோடு இசைந்து ஒரே மாமிசமாய் இருக்கிறோம். இயேசு கிறிஸ்து தாம் மரிக்கும் முன் பிதாவிடம் வேண்டிக்கொண்ட போது "நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன் [யோவான்:17:22,23]. இந்த ஜெபத்திலும் இயேசு கிறிஸ்து  தம்முடைய அவயவங்களின் ஐக்கியத்திற்காய் மன்றாடுகிறார். தேவனோடு இணக்கமாக இருக்கிற நாம் எந்நேரமும் அவருடைய வார்த்தையினால் நம்மை போஷித்து இடைவிடாமல் அவர் பாதத்தில் அமர்ந்திருப்போம். அன்பானவர்களே மணவாளனாகிய இயேசுவின் கிறிஸ்துவின் சரீரத்தில்    இணைக்கப்பட்ட மணவாட்டிகளாகிய நாம்  அவர் குடித்த பாத்திரத்தை நாமும் குடித்து ,அவர் சித்தத்திற்கு கீழ்ப்படிந்து அவர் கொடுக்கும் பணியை நிறைவேற்றுவோம்.  நித்திய இணைப்பில் என்றும் நிலைத்திருப்போம். 

 


பரிசுத்தமும் பிழையற்றதுமான பலியாய் உன்னை ஒப்புக்கொடு

 


அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம். ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள் [2பேதுரு:3:13,14]. இயேசு கிறிஸ்து தன்னுடைய மணவாட்டியும் தன்னை போல கறை திரை  இல்லமால் இருக்கும்படி எதிர்பார்க்கிறார். ஆகவே தான்  நான் பரிசுத்தராய் இருக்கிறது போல நீங்களும் பரிசுத்தமாயிருங்கள் என்று    மணவாட்டி சபைக்கு கட்டளையிட்டிருக்கிறார். மனுஷனுடைய நீதி கந்தையும் அழுக்குமாய் இருக்கிறது.  நம்முடைய சுயநீதியினால் மணவாளனாகிய  இயேசுகிறிஸ்துவை  நாம் எதிர்கொள்ள முடியாது. வேதம் கூறுகிறது இயேசுகிறிஸ்து சபையை  திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார் [எபேசியர்:5:21-32]. மாம்சத்தால் கறைப்பட்டிருக்கிற வஸ்திரத்தையும் வெறுத்துத் தள்ளுவோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்மைத் தாமே பலியாக ஒப்புக்கொடுத்து தம்முடைய  மணவாட்டியாகிய நமக்கு  கொடுத்த இரட்சிப்பின் வஸ்திரத்தையும் நீதியின் சால்வையையும் தரித்துக்கொள்ளுவோம் . அதாவது    பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்து போட்டு, தன்னை சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் எப்போதும் தரித்துக் கொள்ளுவோம்.  நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும் போது அவரோடு கூட நாமும் மகிமையில் வெளிப்படும்படி     இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, நம்முடைய மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாவோம் [கொலோசெயர்:3:10,11]. அவர் தந்த இரட்சிப்பின் வஸ்திரத்தைக் கறைபடுத்தாமல் பாதுகாத்துக்கொள்ளும் போது ஆட்டுக்குட்டியானவரின் மனைவிக்கு அளிக்கப்படும் சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி தேவன் நம்மை தெரிந்துக்கொள்ளுவார். அந்த மெல்லியவஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதியாய் இருக்கிறது[வெளி:19:8]. ஆட்டுக்குட்டியானவரின் மனைவியாய் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி பாவத்தை வெறுத்து பரிசுத்தத்தை நோக்கி ஓடுவோம்.

 


 மணவாளனின் வருகைக்காய் ஆவலோடு காத்திரு

 


தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள் [2பேதுரு:3:12]. நாம் எப்படியாய் காத்திருக்கிறோம்? ஆவலோடு காத்திருக்கிறோமா? பயப்படுகிறோமா? திருமணம் நிச்சசயிக்கப்பட்ட பெண் தன் திருமண நாளுக்காய் ஆவலோடு ஆசையாய் காத்திருப்பது  போல நாமும் கர்த்தருடைய நாளுக்காய் காத்திருக்க வேதம் கூறுகிறது. கர்த்தருடைய நாள் மிகவும் கொடியதும் பயங்கரமுமான நாள். பராக்கிரமசாலி முதலாய் பயந்து நடுங்குகிற நாள். தேவனுடைய இரத்தத்தினால் கழுவப்பட்டு அவருடைய கண்களில் கிருபைப் பெற்ற நீதிமான்களுக்கோ அந்த நாள் மனமகிழ்ச்சியின் நாளாய் இருக்கிறது. பத்து கன்னிகைகளின் உவமை நம் எல்லோருக்கும் தெரியும். ஐந்து பேர் ஆயத்தத்தோடும் ஆவலோடும் காத்திருந்தனர். அவர்கள் மணவாளனோட கலியாணவீட்டிலே  பிரவேசித்தனர். விசுவாசிகளாகிய நமக்கு அந்த ஆசை விருப்பம் எவ்வளவாய் இருக்கிறது என்று தெரியவில்லை. செழிப்பின் உபதேசங்கள் பெருகியிருக்கிற இந்த காலகட்டத்தில் தேவனுடைய வருகையை குறித்த உபதேசங்கள் மிக குறைவு. திருமணத்திற்கு காத்திருக்கிற மணவாட்டியைப் போல நம் இருதயம் ஆத்தும மணவாளனை தேடி நாட வேண்டும். பக்தனாகிய  யோபு கூறுகிறார் "என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். அவரை நான் பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என்  கண்கள் அவரைக் காணும்; இந்த வாஞ்சையால் என் உள்ளிந்திரியங்கள் எனக்குள் சோர்ந்துபோகிறது[யோபு:20:25-27]. இந்த வாஞ்சை நமக்குள்ளும் கொழுந்துவிட்டு எரியட்டும்.  நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்? என்று தாவீது ராஜாவின் ஆத்துமா,  மான்கள் நீரோடையை வாஞ்சித்து கதறுவது போல வாஞ்சித்து கதறியது. கிறிஸ்துவின் மணவாட்டிகளாகிய நாமும் ஆசையோடும் ஆவலோடும் எப்போ என் ஆத்தும மணவாளனை சந்திப்பேன் என அந்த நாளுக்காய் ஏங்கி காத்திருப்போம்.

 


புத்தியுள்ள கன்னிகையாய்  எப்பொழுதும் ஆயத்தமாயிரு

 

 
இயேசு கிறிஸ்து கூறுகிறார் "இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள்" [லூக்கா:21:36]. வேதம் கூறுகிறது திருடன் வருகிறவிதமாய்   மனுஷகுமாரனுடைய வருகை இருக்கும்.  அவர் சொல்லிக்கொண்டு வருவதில்லை. வேதம் கூறுகிறது மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள். பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளை பிடித்துக்கொண்டு மணாளனுக்கு எதிர்கொண்டுபோகப்  புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கிறது. அவர்களில் ஐந்துபேர் புத்தியில்லாதவர்கள். அவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டு போனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டு போகவில்லை. புத்தியுள்ள ஐந்து பேரோ தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள்.நடுராத்திரியிலே இதோ மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று.அப்பொழுது அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள். புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள்.ஆனால் புத்தியுள்ளவர்கள் தங்களுக்கு போதாமலிராதபடிக்கு அவர்களுக்கு கொடுக்கவில்லை. அப்படியே புத்தியில்லாத கன்னிகைகள் எண்ணெய் வாங்கப் போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடே கூடக் கலியாண வீட்டிற்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது. மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே எங்களுக்குத் திறக்கவேண்டும் என்ற போது மணவாளன் உங்களை அறியேன் என்று சொன்னார். இங்கு எண்ணெய் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை குறிக்கிறது.

 

 
நாம் எப்போதும் தேவசமூகத்தில் ஜெபத்தோடு விழித்திருக்கும் போது தேவன் நம்முடைய தலையை எண்ணெயினால் அபிஷேகம் பண்ணுகிறார். நம்முடைய விளக்குகள் எரிந்து பிராகாசிக்கும்படியான பரிசுத்த ஆவியின் அபிஷேகம் நமக்குள் எண்ணையாய் கொழுந்துவிட்டு எரியவேண்டும். மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி ஆயத்தமாய் இருக்க வேண்டும். ஆபிரகாமின் வேலைக்காரன், ஈசாக்குக்கு பெண் பார்க்க சென்ற போது ரெபெக்காள் ஆயத்தமாய் இருந்ததை நாம் காணலாம். ரெபேக்காளின் நற்கிரியைகளைக் கண்டு ஆபிரகாமின் வேலைக்காரன் பிதாவை மகிமைப்படுத்தும்படிக்கு அவளுடைய நற்கிரியைகள் வெளிச்சம் கொடுக்கிறதாய் இருந்தது. இதனால் ஈசாக்கின் மணவாட்டியாய் அழைத்து செல்லப்பட்டாள். நம்முடைய விளக்குகள் எப்போதும் எரிந்து பிராகாசிக்கும்படியாக   நாம் எண்ணெயோடு ஆயத்தமாய் இருக்க வேண்டும். வேதம் கூறுகிறது "ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது. அவருடைய மனைவி தன்னை ஆயத்தம் பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன். ஆட்டுக்குட்டியானவரின் மனைவியாக நித்திய நித்தியமாய் அவரோடு வாழும்படியாக பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தோடு ஆவியில் அனலுள்ளவர்களாய் விழித்திருப்போம்.

 


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே நம்முடைய பிதாவாகிய தேவன்  ஒன்றுக்கும் தகுதியில்லாத நம் மேல் இவ்வளவாய் அன்புகூர்ந்து, தன் சொந்த குமாரனையே நமக்காக கொடிய சிலுவையில் பலியாக ஈந்தார். அந்த அன்பிற்கு ஈடாக நாம் என்ன கொடுக்க முடியும்?இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தம் நமக்காய் சிந்தப்பட்டதினால் நாம் நித்திய ஆக்கினைக்கு தப்பியிருக்கிறோம். நம்முடைய வாழ்க்கையை அவருக்காய் கொடுப்பதை தவிர  நாம் எதையும் கொடுக்க முடியாது.  ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தினால் மீட்கப்பட்ட மணவாட்டிகளாகிய நாம் கற்புள்ள கன்னிகைகளாய் உலகத்தை வெறுத்து அவரையே ஆத்தும நேசராய் பற்றிக்கொள்ளுவோம். நமக்காய் தன் உயிரையே தந்த இயேசு கிறிஸ்துவை நம் முழு ஆத்துமாவோடும், முழு பெலத்தோடும், முழு மனதோடும், முழு உள்ளத்தோடும் அன்புகூருவோம். தேவனோடு ஒரு நெருங்கிய உறவை ஏற்படுத்துவோம். அவருடைய சரீரத்தின் அவயவமாய் அவருக்கு கீழ்ப்படிந்து அவருடைய சித்தத்தை அறிந்து அதின்படி செயல்படுவோம். பரிசுத்த ஆவியானவரின் துணையோடு நம் இரட்சிப்பின் வஸ்திரத்தை கறைபடாமல் பாதுகாத்துக்கொள்ளுவோம். ஆட்டுக் குட்டியானவரின் மனைவியாய் மெல்லிய வஸ்திரந்தரித்து அவரோடு கலியாணத்தில் பங்கேற்க ஆவலாய் ஆசையோடு காத்திருப்போம். அவர்  மணவாளனாய் நம்மை அழைத்து செல்ல வரும் நாளை நாம் அறியாததினால் எப்போதும் நம் விளக்குகள் எரிந்து பிரகாசிக்கும்படி அவருடைய பாதத்தில் ஜெபத்துடனும் விழிப்புடனும் ஆயத்தமாய் காத்திருப்போம். இதோ நம் மணவாளனாகிய இயேசு கிறிஸ்துவின் வருகை மிகவும் சமீபமாய் இருக்கிறது. மணவாட்டியாய் அவரை சந்திக்க ஆயத்தப்படுவோம்.

 

வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும்,தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.

bottom of page