
புது வருடம் 2018
நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.
1 யோவான் 2 - நித்திய ஜீவனை பெற்று கொள்வதே பிரதான வாக்குத்தத்தம்.ஆனால் அதை விட்டு விட்டு சத்தியத்துக்கு கீழ்படிய செய்யாமல் உலக ஆசீர்வாதங்களுக்கு மாத்திரம் முதலிடம் கொடுத்து ஜனங்களை நடத்தாதீர்கள். உலகமும் அதன் ஆசை இச்சைகளும் ஒழிந்து போகும் என்று வேதம் சொல்லுகிறது.இம்மைக்காக மாத்திரம் தேவனை தேடுவீர்களென்றால் எல்லா மனிதர்களை காட்டிலும் பரிதபிக்கப்பட்டவர்களாக இருப்பீர்கள். என்று வேதம் எச்சரிக்கிறது. தேவன் இம்மையிலும் மறுமையிலும் ஆசீர்வதிப்பார் என்பது உண்மை தான். கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான் என்று வேதம் சொல்கிறது. ஆனால் உலக ஆசீர்வாதங்களை மாத்திரம் தேடி பண ஆசையினால் தேவனுக்கு பிரியமில்லாததை தொடர்ந்து செய்து கொண்டு பொருளாசையினால் தேவனுடைய நீதியையும் நியாயத்தையும் விட்டு விட்ட அநேக கண் சொருகி போன குருடர்கள் தான் இன்றைக்கு அநேகம். சத்தியத்தை போதிக்காமல், பரிசுத்த ஆவியானவர் சொன்ன பாவத்தையும் நீதியையும் நியாய தீர்ப்பையும் கண்டித்து உணர்த்தாமல் கிறிஸ்துவின் வருகைக்காக ஆயத்தப்படுத்தாமல் வெறும் உலக ஆசீர்வாதங்களை கூறி காணிக்கைக்காக ஜனங்களின் இருதயத்தை குளிரப்பண்ணி அவர்களின் மனக்கண்களை குருடாக்கி நீங்களும் குருடருக்கு வழி காட்டும் குருடராகிவிடாதீர்கள்.
அடுத்ததாக தேவன் உங்களுக்கு கொடுத்த ஆத்துமாக்களை மாத்திரம் வைத்து உங்கள் புது வருட காத்திருப்பு ஆராதனையை நடந்துங்கள். மற்ற சபைகளுக்கு போகும் ஜனங்களை கவர்ந்திழுக்கும் நோக்கத்தில் கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்து பிற சபைகளுக்கு போகும் ஆத்துமாக்களை திருடி உங்க சொந்த ராஜ்ஜியங்களை கட்டாதீர்கள். நீங்கள் தேவனுடைய ராஜ்ஜியத்தை கட்டுவதற்க்காக அழைக்கப்பட்டவர்கள். உங்களுக்கு தேவன் கொடுத்த கிருபைகளையும் வரங்களையும் வைத்து இன்னிசையினால் ஜனங்களை மயக்கி கூட்டம் சேர்க்கும் நோக்கில் பிற சபைக்கு போகிற விசுவாசிகளை அபகரிக்க தேவன் உங்களுக்கு நிச்சயம் அனுமதி கொடுக்க மாட்டார் என்பது நிச்சயம். நீங்கள் தேவ நாமத்தை மகிமைபடுத்துவதற்காக அழைக்கபட்ட ஊழியக்காரன் என்பதில் உறுதியாக இருங்கள். நான் கர்த்தர், இது என் நாமம், என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.
ஏசாயா 42-8 - ஊழியக்காரர்களே உங்களை முக்கியப்படுத்தி உங்கள் பிரஸ்தாபத்திற்காக கூட்டம் சேர்த்து கொண்டு தேவனுடைய மகிமையை எடுத்து கொள்ளாதீர்கள். நீங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்கள் என்று இயேசு சொல்ல சொன்னதில் உறுதியாக இருங்கள். ஊழியத்தில் தேவ சித்தத்தை நிறைவேற்றி அவர் நாமத்தை மாத்திரம் மகிமை படுத்துங்கள். தன் எஜமானனுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்.
லூக்கா 12-47 - இந்த 2018 ம் ஆண்டு ஆண்டவருடைய வருகைக்காக ஜனங்களை ஆயத்தப்படுத்தும்படி உங்க ஊழியம் இருக்கட்டும். இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே எனக்கு பிரியமானது என்று ஆண்டவர் சொல்கிறார். நாம் ஆவிக்குறிய இஸ்ரவேலர்கள். அவர் நம்மை அவருடைய வாக்குதத்தங்களின் படி ஆசீர்வதிப்பது நிச்சயமே. ஆனால் வெறும் வாக்குதத்தங்களை கொடுத்து ஜனங்களை ஏமாற்றாமல் அந்த வாக்குதத்தங்களுக்கு முன்பு தேவன் கட்டளையிட்ட கீழ்படிய சொன்ன காரியத்துக்கு நேராக ஜனங்களை நடத்துங்கள். ஒவ்வொரு வாக்குதத்தங்களுக்கு முன்பாக நான் சொன்ன இந்த காரியத்தை செய்தால் நான் உங்களை இந்த வாக்குதத்தத்தின் படி ஆசீர்வதிப்பேன் என்று கர்த்தர் சொல்லியிருக்கிறார். எனவே வாக்குதத்தத்தை சுதந்தரிக்க அதை விசுவாசிப்பது மாத்திரமல்ல தேவன் சொன்ன நீதியையும் நியாயத்தையும் கைக்கொள்ள செய்வது மிகவும் முக்கியம்.
பிரியமானவர்களே கடைசியாக இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையின் காலத்தில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து புத்தியுள்ள கன்னிகைகள் போல விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள். உலக ஆசீர்வாதங்களுக்காக ஓடி நித்திய ஜீவனை தருவேன் என்ற பிரதான வாக்குதத்தத்தை இழந்து போகாதீர்கள். பழைய சுபாவங்களை களைந்து போட்டு விட்டு கிறிஸ்துவின் சாயலாய் மாறி அவருடைய திவ்விய சுபாவங்களை பெற்றவர்களாய் முடிவு பரியந்தம் நிலை நிறுத்தும் இரட்சிப்பை காத்து கொள்வோம். சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.
ரோமர் 2-7 - அல்லேலுயா.கர்த்தர் இந்த 2018 ஆண்டு முழுவதும் உங்களோடு இருந்து வழி நடத்துவாராக. ஆமென்