top of page

2020 ல் தேவனுக்காக என்ன செய்ய போகிறீர்கள்??

 

ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.1 கொரிந்தியர் 10:31 வார்த்தைகளினாலாவது கிரியைகளினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.கொலோசெயர் 3:17.

உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஊழியத்திலும் கடந்த நாள்களில் நீங்கள் செய்த காரியங்கள் எல்லாவற்றிலும் தேவனை மகிமைபடுத்தும்படியாக இருந்ததா? நீங்கள் பேசிய வார்த்தைகள் மற்றும் கிரியைகள் தேவனுக்கு முன்பாக பிரீதியாக இருந்ததா? இன்றைக்கு நம்மை நிதானித்து அறிவோம்.ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிதாவை பார்த்து உம் நாமத்தை மகிமைபடுத்தும் என்றார்.அப்பொழுது மகிமைபடுத்தினேன், இன்னமும் மகிமை படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று.(யோவான் 12-28).

 

பிரியமானவர்களே ஆண்டவருக்காக ஊழியம் செய்யும் போது ஒவ்வொரு காரியத்திலும் தேவனே இந்த காரியத்தை செய்ய போகிறேன் என் மூலமாக உம் நாமத்தை மகிமைபடுத்தும் என்று சொல்லியிருக்கிறோமா? யோசித்து பாருங்கள். பல காரியங்களில் தேவனுடைய சித்தத்தை செய்யாமல்  நம்முடைய மாம்சமும் மனசும் விரும்பியபடி சுயசித்தம் செய்து நம்மை நாமே மகிமைபடுத்தி கொண்டோம்.இயேசுவின் நாமத்தில்  செய்வது என்றால் நம்முடைய வாழ்க்கையிலும் ஊழியத்திலும் எஜமானன் என்ன செய்ய விரும்புகிறாரோ எதை செய்ய சொல்கிறாரோ அதை செய்து அதன் மூலம் எல்லா கனத்தையும் மகிமையையும் அவருக்கு கொடுப்பது.பல வேளைகளில் இயேசுவின் நாமத்தில் செய்கிறோம் என்று நம்மை  சுற்றியுள்ளவர்களுக்காக அவர்களை பிரியப்படுத்த எல்லாவற்றையும் செய்த நாம் தேவனுக்காக அவர் செய்ய சொன்னதை செய்தோமா?

 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தேவனுக்கு சமமாயிருப்பதை கொள்ளையாடின பொருளாக எண்ணாமல் தம்மை தாமே வெறுமையாக்கி அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலானார்.பிலி2-6. அவர் அடிமையை போல சீஷர்களின் கால்களை கழுவினதை புரிந்து கொள்ளுங்கள்.ஒரு வேலைக்காரனுக்கும் அடிமைக்கும் வித்தியாசம் உண்டு. ஏனென்றால் ஒரு அடிமை தான் புசித்தாலும் குடித்தாலும் எதை செய்தாலும் எஜமானனுக்காக எந்த பிரதிபலனை எதிர்பார்க்காமல் ஊழியம் செய்வான். எஜமானனே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்பான் அவன் எதை செய்தாலும் எதையும் எதிர்பார்த்து கூலிக்காக செய்யமாட்டான், அதாவது தனக்காக தன் மகிமைக்காக எதையும் செய்ய மாட்டான். ஏனென்றால்? அவன் தன் எஜமானனுக்கு அடிமை என்பதை அறிவான்.அவன் யாரை பற்றியும் கவலைப்பட மாட்டான்.இவன் தான் இயேசு சொன்ன கடமையை மாத்திரம் செய்யும் அப்பிரயோஜனமான ஊழியக்காரன். இது தான் ஒரு உண்மையும் உத்தமுமான,ஊழியக்காரனுக்கு தகுதி (அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்த பின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்று இயேசு சொன்னார். லூக்கா 17:10)

 

இந்த 2020 ம் ஆண்டு எதை செய்தாலும்  எஜமானனின் மகிமைக்காக ஒரு அடிமையை போல ஊழியம் செய்ய நம்மை ஒப்பு கொடுப்போம். நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தரால் பெறுவீர்களென்று அறிந்து, எதைச் செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள். கொலோசெயர் 3:23,24. 

 

எனவே இந்த 2020 ம் ஆண்டு நாம் எதை செய்தாலும் தேவனுடைய மகிமைக்காக செய்து அவர் நாமத்தை உயர்த்துவோம்.  ஆமென்.

bottom of page