top of page

விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்

 

ஆண்டவவராகிய இயேசு கிறிஸ்து பேதுரு யாக்கோபு மற்றும் யோவானுடன் ஜெபம் பண்ணுவதற்காக மலையின் மேல் ஏறினார். ஆனால் ஜெபம் பண்ண சென்ற சீஷர்கள் தூங்கி விட்டார்கள். ஆனால் ஜெபம் பண்ணி கொண்டிருந்த இயேசு கிறிஸ்து மறுரூபமானார். எலியாவும் மோசேயும் திடீரென்று தோன்றி இயேசுவோடு சம்பாஷித்தார்கள்.அவர்களை சுற்றி இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு பரலோக மகிமை காணப்பட்டது. திடீரென்று விழித்து கொண்ட சீஷர்கள் இயேசுவின் மறுரூப மகிமையை கண்டார்கள். (பேதுருவும் அவனோடிருந்தவர்களும் நித்திரைமயக்கமாயிருந்தார்கள். ஆகிலும் அவர்கள் விழித்து அவருடைய மகிமையையும் அவரோடே நின்ற அவ்விரண்டுபேரையும் கண்டார்கள்.

லூக்கா 9-32)வேதாகமத்தில் பெரும்பாலும் தேவ சமூகத்தில் காத்திருந்து ஜெபித்தவர்களே தேவ மகிமையை கண்டார்கள்.தேவனை தரிசித்தார்கள்,மேலான ஆசீர்வாதத்தை பெற்று கொண்டார்கள்.இன்றைக்கு ஊழியம் செய்கிறவர்கள் மற்றும் ஆராதிக்கிறவர்கள் அநேகர்.ஆனால் காத்திருந்து ஜெபிக்கிறவர்கள் குறைவு. அநேகர் கடமைக்காக ஜெபிக்கிறார்கள்.

 

அன்னாள் என்ற தீர்க்கதரிசி இரவும் பகலும் ஆலயத்தில் உபவாசித்து ஜெபித்து கொண்டிருந்தாள்.அன்னாளை போல இரவும் பகலும் தேவனை தேடுகிறவர்கள் எங்கே? இன்றைக்கு அநேக ஊழியங்களில் தேவ மகிமை இல்லாததற்கு காரணம் அவர்கள் தேவ சமூகத்தில் தரித்திருப்பதில்லை.அதாவது ஜெபிப்பதில்லை.இந்த கடைசி காலத்தில் பரிசுத்த ஆவியானவர் வல்லமையான ஊழியக்காரர்களையும் ஊழியக்காரிகளையும் எழுப்பி வருகிறார்.உலக ஆசை இச்சைகளுக்கு மறுப்பு சொல்லி இயேசுவின் மார்பில் சாய்ந்து திளைப்பவர்களே தேவனுடைய ஊழியக்காரர்கள்.   என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான். நீதிமொழிகள் 8-34 இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன், ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். வெளி 3-24 அதிகாலையில் தேவ சமூகத்தில் காத்திருக்கிறவர்கள் தேவ பிரசனத்தை அதிகம் உணருகிறார்கள். மேலும் அவர்கள் தேவ மகிமையை காண்கிறார்கள்.

 

தேவ சமூகத்தில் தரித்திருப்பவர்களே மகிமை மேல் மகிமையடைந்து அக்கினி ஜுவாலையாய் மாறுகிறார்கள், இயேசு கிறிஸ்து தேவையானது ஒன்றே அது என்னவெனில் தேவபாதத்தில் காத்திருந்து தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கை தெரிந்து கொள்வதையே பிரதானமாக குறிப்பிட்டார். கர்த்தருக்கு காத்திருக்கிறவர்களே புது பெலனடைந்து கழுகுகளை போல் செட்டைகளை அடித்து உயரே எழும்புவார்கள்.அவர்கள் சோர்ந்து போவதில்லை என்று வேதம் சொல்கிறது.அடுத்ததாக தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள். ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். 1 பேதுரு 5-8

 

இன்றைக்கு ஜெபிக்காதவர்கள் அநேகர் பிசாசு வைத்திருக்கும் கண்ணியில் எளிதாக சிக்கி கொள்கிறார்கள். இவர்களிடம் தேவ பெலன் இல்லாமையால் உலக ஆசை இச்சைகளுக்கும்   உலகத்தோடும் ஒத்து போய் இறுதியில் வீழ்ந்து போகிறார்கள். இன்றைக்கு கள்ள உபதேசங்களுக்கு அடிமையாகி  ஊழியங்களையும் ஊழியக்காரர்களையும் குறை சொல்லி கொண்டிருப்பவர்களை பாருங்கள்,அவர்கள் ஜெபிப்பதே இல்லை.மேலும் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள். விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள் ஜெபத்தில் உறுதியாக தரித்திருங்கள் என்று வேதம் சொல்கிறது.

 

இயேசு கிறிஸ்து எப்போழுதும் ஜெபத்தில் தரித்திருந்தார், அவரை பின்பற்றிய அப்போஸ்தலர்களும் சீஷர்களும் உபவாசிப்பதிலும் ஜெபிப்பதிலும் தரித்திருந்தார்கள். அவர்களை ஊழியத்தில் பந்தி விசாரணை செய்ய நிர்பந்தித்த போது நாங்களோ ஜெபம் பண்ணுவதிலும் தேவ வசனத்தை போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள்(அப் 6-4)ஆனால் இன்றைக்கு ஊழியம் செய்கிறவர்கள் மேடைக்கு போய் பிரசங்கம் பண்ணுவதையும் ஆராதிப்பதையும் வாஞ்சிக்கிறார்கள். இவர்களிடம் வேத அறிவு நிறையவே இருக்கிறது ஆனால் தேவ வல்லமை  இல்லை.எனவே இவர்களின் பிரசங்கங்கள் மனித நயவசனிப்பாக கேட்பதற்கு இனிமையாயிருக்கிறது,ஆனால் தேவ பெலன் இல்லை.

 

எனவே இவர்களது பிரசங்கங்களை கேட்கிறவர்கள் எந்த மாற்றமில்லாமல் அப்படியே இருளின் அடிமைதனத்திலே இன்னமும் இருக்கிறார்கள். தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே இல்லை பெலத்திலே உண்டாயிருக்கிறது.ஜெபத்திலும் உபவாசத்திலும் தரித்திருந்த அப்போஸ்தலர்கள்  சரீரங்களிலிருந்தும் உடையிலிருந்தும் வார்த்தைகளிலிருந்தும் பார்வையிலிருந்தும்  வல்லமை புறப்பட்டு அநேகரை அந்தகார வல்லமையிலிருந்தும் நோயிலிருந்தும் விடுவித்தது. பேதுருவின் நிழலுக்கு கூட வல்லமை கொடுக்கப்பட்டது, அவர்கள் உலகத்தை அசைத்தார்கள்.மகிமையான ஊழியத்தை செய்த பில்லி கிரகாம் தன் ஊழியத்தின் பெரும்பாலான நேரத்தை ஜெபத்திலே செலவிட்டதாக சொன்னார்.உங்களுக்கு தேவன் ஊழியம் செய்ய இன்னொரு வாய்ப்பை கொடுத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் நான் முழுவதுமாய் ஜெபத்திலே தரித்திருப்பேன் என்றாராம்.

 

கர்நாடகாவில் தொட்டண்ணா என்ற ஒரு பெரிய மந்திரவாதி எலிசபெத் என்ற பெண்ணுக்கு தொடர்ந்து மந்திரவாதம் செய்த பொழுது அந்த மந்திர வல்லமைகள் செயலிழந்து போனது, ஏனென்றால் அவள் தேவ சமூகத்தில் உபவாசித்து ஜெபிக்கிற ஒரு பெண், கடைசியில் இயேசு கிறிஸ்து அந்த மந்திரவாதிக்கு முன் தோன்றி அவள் என் மகள் அவளுக்கு முன்பாக உன் கையை நீட்டாதே என்று எச்சரித்தாராம். உடனே அவர் மந்திர பொருள்களை எல்லாம் ஆற்றில் எறிந்து விட்டு தேவனுக்காக தன் வாழ்க்கை முழுவதும் ஊழியம் செய்தார்.இன்றைக்கு தேவ பெலன் இல்லாததால் பில்லி சூனியம் மற்றும் பிசாசின் வல்லமைகளுக்கு பயந்து நடுங்குகிறவர்களை பார்க்கலாம். உபவாசித்து ஜெபிப்பவர்களிடம் காணப்படும் தேவ மகிமையினாலும் தேவ வல்லமையினாலும்  பரிசுத்தத்தினாலும் பிசாசு பயந்து நடுங்குகிறான். உபவாசித்து ஜெபிக்கும் போது உங்களுடைய ஆவிக்குறிய காதுகள் கூர்மையாகிறது.அவர் சத்தம் தெளிவாக கேட்கிறது, உங்கள் உணர்ச்சிகள் மென்மையாகிறது.

 

தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமான சித்தத்தை அறிந்து கொள்ள முடிகிறது. ஆவியானவர் உங்களை பரிசுத்தம் மேல் பரிசுத்தமடைய செய்கிறார், தேவனுடைய ஊழியக்காரனாக அழைக்கப்பட்ட நீங்கள் பரிசுத்தத்தை காத்து கொள்ளுங்கள்.

 

தேவ பிரசனத்தில் எப்போழுதும் திளைத்திருங்கள், அதிக நேரத்தை ஜெபத்தில் செலவிடுங்கள், வேதாகமத்தை தியானியுங்கள்.(நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள், உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள், ஜெபத்திலே உறுதியாய்த்தரித்திருங்கள். ரோமர் 12-1 நான் நித்திரைபண்ணினேன், என் இதயமோ விழித்திருந்தது, கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்:  உன்னதப்பாட்டு 5-22) ஆமென்

bottom of page