top of page

உட்புறத்தை சுத்தமாக்கு

 

மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள், உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது.  குருடனான பரிசேயனே! போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு. மத்தேயு 23:,25,26.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மனிதனை வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைக்கு ஒப்பிட்டு சொன்னார்.புறம்பே அலங்காரமாகவும் உள்ளே சகல அசுத்தத்துடன் காணப்படும் என்றார்.இன்றைக்கு பல வருஷங்களாக சத்தியத்தை கேட்கும் விசுவாசிகளும் இப்படியே தான் இருக்கிறார்கள்.புறம்பே மனிதனுக்கு நீதிமான்களாக தங்களை காட்டி கொள்கிறார்கள்.உள்ளத்திலோ மாயத்தாலும் அக்கிரமத்தாலும் நிறைந்திருக்கிறார்கள்.அதாவது புறம்பே நம்மை நீதிமான்களாக காட்ட நாம் நடித்து கொண்டிருக்கிறோம்.நம் சரீரம் மற்றும் அவயவங்கள் சுத்தமாகுவதற்க்கு நம் உள்ளான மனிதன் முதலில் சுத்தமாக்கபட வேண்டும்.அடுத்ததாக இயேசு கிறிஸ்து சொல்லும் போது வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டு வரும்.அவைகளே மனுஷனை தீட்டு படுத்தும். எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்.

இவைகளே மனுஷனை தீட்டுபடுத்தும் ஏன்றார்.மனிதன் முகத்தை பார்க்கிறான் தேவன் இருதயத்தை பார்க்கிறார்.நம்முடைய எண்ணங்களும் உள்ளந்திரியங்களும் நியாயம் தீர்க்கப்படும் காலம் வருகிறது என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. இன்றைக்கு உங்களை நிதானித்து அறிந்தால் உங்கள் உள்ளம் மற்றும் எண்ணங்கள் எந்த அளவு பரிசுத்தமில்லாமல் அலங்கோலமாகஇருக்கிறது என்பதை விளங்கி கொள்ள முடியும். இப்படி இருப்பவர்களை குருடர்கள் என்றும் இப்படி இருந்து கொண்டு ஊழியம் செய்யும் ஊழியக்காரர்களை குருடருக்கு வழிகாட்டும் குருடர்கள் என்று இயேசு குறிப்பிட்டார்.ஏனென்றால் இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் தான் இயேசு வரும் போது அவரை தரிசிக்க முடியும்.உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை என்பது உள்ளான ஒரு மாற்றம் ஏற்ப்பட்டு அது வெளிப்புறமான நம்முடைய சுபாவங்களில் வெளிப்பட வேண்டும். இதில் சொல்லப்பட்ட பாத்திரத்தின் உள்ளே என்பது நம் உள்ளான மனுஷனாகிய ஆவி ஆத்துமாவை குறிக்கிறது,மனுஷன் ஆவி ஆத்துமா சரீரம் என்ற மூன்று ஆள்தத்துவத்தை உடையவனாக இருக்கிறான். வேதாகமத்தில் மாத்திரமே ஆவி ஆத்துமாவை பற்றி மிக தெளிவான விளக்கங்கள் உள்ளன.நம்முடைய உள்ளான மனுஷனாகிய ஆவியும் ஆத்துமாவும் உயிர்பிக்கப்படும் போது நம் சரீரமும் மெய்யான சுத்திகரிப்பை பெற்றுக் கொள்ளும்.1 தெச 5 ம் அதிகாரம் 23 ம் வசனத்தில்  நம்முடைய ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும் போது குற்றமற்றதாக இருக்கும் படி காக்கப்படுவதாக என்று பவுல் எழுதுகிறார்.

 

பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும் என்று வேதம் சொல்கிறது. இன்றைக்கு நம்முடைய ஆத்துமா உயிர்பிக்கப்பட வேண்டும்.என் ஆத்துமா மண்ணோடு ஒட்டி கொண்டிருக்கிறது.உமது வசனத்தின் படி என்னை உயிர்பியும் என்று தாவீது சொல்கிறான்.என் ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்?ஏன் தியங்குகிறாய் என்று தாவீது தன் உள்ளான மனுஷனை பார்த்து பேசுகிறான். ஆவியினாலே சத்தியத்துக்கு கீழ்படிந்து உங்கள் ஆத்துமாக்களை சுத்தமாக்கி கொள்ளுங்கள் என்று பேதுரு(1 பேதுரு 1-22)எழுதுகிறார்.நீங்கள் பரிசுத்த ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய் பெலப்படவும் என்று (எபே 3-16)ல் பவுல் எழுதுகிறார்.எனவே உள்ளான மனிதனாகிய ஆவி ஆத்துமா சுத்திகரிக்கபட வேண்டும்.( இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.2 கொரிந்தியர் 7-1)

 

பரிசுத்தமாகுதலின் பூரணம் நம் ஆவி ஆத்துமா சுத்திகரிக்கப்படும் போது தான் உண்டாகுகிறது.பரிசுத்தாவியினால் தான் நம் சரீரத்தின் தேவனுக்கு பிரியமில்லாத செய்கைகள் இச்சைகள்,மாம்சத்தின் கிரியைகள் மற்றும் ஜென்ம சுபாவங்கள் அழிக்கப்பட  முடியும்,(.மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள், ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.

ரோமர் 8-13) இயேசுவின் இரத்தத்தினால் ஆத்துமா கழுவப்படும் போது பாவத்தில் மரித்து போன ஆத்துமா உயிர்பிக்கப்பட்டு ஜீவனை பெறுகிறது.பரிசுத்த ஆவியானவரால் சத்தியத்தில் நடத்தப்படும் போது நம் ஆத்துமா சுத்திகரிக்கப்பட்டு சுத்த இருதயமுள்ளவர்களாக மாற்றப்படுகிறோம்,(1 பேதுரு1-22) பரிசுத்த ஆவியானவரால் அபிஷேகிக்கப்படும் போது நம் ஆவி உயிர்பிக்கப்படுகிறது.உள்ளான மனுஷன் பரிசுத்த ஆவியானவரால் பெலனடையும் பொது நாம் கிறிஸ்துவை போல் மாறி இந்த உலகத்துக்கு ஒளியாக பிரகாசிக்க முடியும். அப்பொழுது ஜீவ தண்ணீருள்ள நதிகள் நம்மிலிருந்து பாய்ந்து செல்லும்,அதாவது கிறிஸ்துவின் திவ்விய சுபாவங்கள் நம்மில் வெளிப்படும்.அல்லேலுயா.அன்றைக்கு அப்போஸ்தலர்களும் இயேசுவின் சீஷர்களும் தேவ சமூகத்தில் உபவாசத்திலும்  ஜெபத்திலும் தரித்திருந்து பரிசுத்தாவியானவரின் வல்லமையை பெற்று கொண்டு அநேகரை இருளின் வல்லமையிலிருந்து விடுதலையாக்கினார்கள்.அவர்கள் பரிசுத்தமாகுதலின் பூரணத்தையும் சுதந்திரத்தையும் பெற்றவர்களாக விளங்கினார்கள்.இதனால் பிசாசின் வல்லமைகளை மேற்கொண்டு உலகத்தை கலக்கினார்கள்.எனவே பிரியமானவர்களே தேவனிலும் அவர் சத்துவத்தின் வல்லமையிலும் நம் உள்ளான மனிதன் பெலப்படும் படி தேவ சமூகத்தில் தரித்திருப்பதை வாஞ்சிப்போம். (அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.ரோமர் 8-11

உள்ளத்திலே யூதனானவனே யூதன், எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம், இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது. ரோமர் 2:29 ஆமென்.

bottom of page