† எரிகோவைச் சுற்றிவா †
Bro. Edwin Corter
கர்த்தர் யோசுவாவை நோக்கி இதோ எரிகோவையும் அதின் ராஜாவையும் யுத்தவீரரையும் உன் கையில் ஒப்புக் கொடுத்தேன். யோசுவா 6:2
தேவ சித்தத்தை நெருங்காதப்படிக்கு இன்று அனேகருடைய வாழ்க்கையில் பல பிரச்சனைகள் எரிகோ கோட்டைகளாக எழுந்து நிற்பதைப் பார்க்க முடிகிறது. தேவன் நமக்காக வைத்திருக்கிற நன்மைகளை புசிக்க வேண்டுமானால் இந்த எரிகோ கோட்டைகள் விழுந்தே ஆக வேண்டும்.
பாருங்கள், கானான் தேசத்தை உங்களுக்குக் கொடுப்பேன் என்று இஸ்ரவேல் ஜனங்களுக்கு தேவன் வாக்குத்தத்தம் பண்ணினார். ஆனால் இந்த கானான் தேசத்திற்குள் இஸ்ரவேல் ஜனங்களால் உடனே நுழைய முடிந்ததா? இல்லை காரணம் அவர்களுக்கு முன்பாக நின்ற எரிகோ கோட்டை அவர்கள் பயணத்தைத் தடுத்தது என்று வேதத்தின் மூலமாக அறிந்து கொள்கிறோம்.
இதனால் இவர்கள் அப்படியே திரும்பி விட்டார்களா இல்லை மாறாக இந்த எரிகோட்டையை உடைப்பதற்காக பலவிதமான காரியங்களை கர்த்தர் மூலமாக மேற்கொண்டதை பார்க்கலாம். எப்படி இந்த எரிகோட்டையை உடைத்துப் போட்டார்கள் என்பதைத்தான் உங்களுக்கு நற்செய்தியாக இந்த பாகத்தில் பின்வருமாறு விளக்க ஆசைப்படுகிறேன்.
-
யோசுவாவுடன் சுற்றி வந்தனர் [ யோசுவா 6:2 ]
-
ஆசாரியருடன் சுற்றி வந்தனர் [ யோசுவா 6:4 ]
-
உடன்படிக்கை பெட்டியுடன் சுற்றி வந்தனர் [ யோசுவா 6:6 ]
-
யுத்தவீர்ர்களுடன் சுற்றி வந்தனர் [ யோசுவா 6:13 ]
-
ஆயத்தத்தோடு சுற்றி வந்தனர் [ யோசுவா 6:13 பிப ]
1.யோசுவாவுடன் சுற்றிவா
யோசுவா என்று சொன்னவுடனே நமக்கு ஞாபகம் வர வேண்டிய விஷயம் என்னவென்றால் அவர் பேசின விசுவாசமான வார்த்தைத்தான். தேசத்தைச் சுற்றிப்பார்க்க 12 பேர் மோசேயால் அனுப்பப்பட்டனர், அதில் பத்து பேர் அவிசுவாசமான வார்த்தையைப் பேசினர். காரணம் இவர்களுக்குள் இருந்த விசுவாச குறைப்பாட்டே ஆகும் இந்த விசுவாசக் குறைப்பாட்டிற்குக் காரணம் இவர்கள் கர்த்தரைப் பார்ப்பதற்குப் பதிலாக உலகத்தைப் பார்க்கும்படி பிசாசானவன் இவர்கள் மனதைத் திருப்பினான்.
ஆனால் யோசுவாவோ அவர்களைப் பார்த்து கர்த்தருக்கு விரோதமாக மாத்திரம் கலகம் பண்ணாதிருங்கள் அந்த தேசத்தின் ஜனங்களுக்குப் பயப்பட வேண்டாம். அவர்கள் நமக்கு இரையாவார்கள் என்று விசுவாசத்தோடு பேசினார். எண்ணாகமம் 14:9. இதனால் தான் அந்த தேசத்தை இஸ்ரவேல் தங்களுக்கு சொந்தமாக்கி கொள்ள முடிந்தது. ஆகவே நமக்கு முன் வளர்ந்து நிற்கிற எரிகோக்கள் உடைய வேண்டுமானால் நாம் விசுவாசத்தோடு இந்த பொல்லாத உலகத்தைச் சுற்றி வர வேண்டும்.
2. ஆசாரியருடன் சுற்றிவா
ஆசாரியர்கள் என்பவர்கள் கர்த்தருக்கு ஊழியம் செய்கிறவர்கள். அவர்கள் எப்பொழுதும் தேவ சமுகத்தில் நிற்கிறவர்கள் ஆகவேதான் அவர்களுக்குக் கர்த்தர் துணையாக இருந்தார் என்று வேதத்தில் வாசிக்கிறோம்.
இன்று நாம் எப்படியிருக்கிறோம் நாம் கர்த்தருக்கு ஊழியம் செய்வதற்கும் எப்பொழுதும் அவரோடு இருந்து அவரைத் திருப்தி செய்வதற்குமே இந்த உலகத்தை விட்டு இயேசுவின் இரத்தத்தால் பிரித்தெடுக்கப்பட்டோம். நாமோ இயேசுவின் இரத்தத்தை உலகக் காரியங்களுக்காகப் பயன்படுத்துகிறோம் உதாரணமாக நம்முடைய வாகனம் உடைந்து போய் விடக் கூடாது மற்றும் எந்த ஆபத்தையும் சந்திக்கக் கூடாது என்பதற்காக இன்று அனேகர் இயேசுவின் இரத்தம் என்று வாகனங்களில் எழுதி வைத்திருப்பதைப் பார்க்க முடிகிறது. ஏனென்றால் இந்த வாகனத்திற்கு அதிக பணம் கொடுத்திருக்கிறோமே!. ஒரு காரியத்தை மறந்து விடக் கூடாது நாம் எப்பொழுதெல்லாம் தேவசமுகத்தில் அவருக்காக சேவை செய்கிறோமோ அப்பொழுது மாத்திரமே நமக்கு பாதுகாப்பும் ஜெயமும் கிடைக்கிறது. பாருங்கள் கர்த்தர் மோசேயிடம் உங்கள் பிரயாணத்தைத் தொடங்குங்கள் என்று சொன்ன போது அதற்கு மோசே சொன்ன பதில் நீர் எங்களோடே கூட வாரவிட்டால் நாங்கள் பிரயாணம் பண்ணுவதில்லை என்பதாக சொல்லிவிட்டார். யாத்திராகமம் 33:15. எரிகோ கோட்டை உடைய வேண்டுமானால் நம்க்கு முன்பாக தேவ சமூகம் செல்ல வேண்டும். தேவ சமூகம் நமக்கு முன்பாக போக வேண்டுமானால் நாம் அவரோடு கூட நடக்க வேண்டும்.
3. உடன்படிக்கைப் பெட்டியுடன் சுற்றிவா
உடன்படிக்கைப் பெட்டி என்பது தேவ வல்லமையைச் சுட்டிக் காட்டுகிறது அன்று இஸ்ரவேல் ஜனங்கள் யுத்தத்திற்குப் போகும் போதெல்லாம் இந்த மகிமையானப் பெட்டியை கூடவே கொண்டு செல்வார்கள். இதற்குக் காரணம் இந்த பெட்டி எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கே தேவன் இருக்கிறார் என்று வேதத்தில் நாம் காண முடிகிறது இத்தகைய காரியத்தை நாம் 1 சாமுவேல் 4:6,7 ன் மூலம் அறிந்து கொள்ள முடுகிறது அவர்கள் ஆர்ப்பரிக்கிற சத்தத்தைப் பெலிஸ்தர் கேட்ட போது எபிரெயருடைய பாளயத்தில் இந்த மகா ஆர்ப்பரிப்பான சத்தம் என்ன என்றார்கள். பின்பு கர்த்தரின் பெட்டி பாளயத்தில் வந்தது என்று அறிந்து கொண்டார்கள். அதாவது, தேவன் பாளயத்தில் வந்தார் என்று சொல்லப்பட்டப்படியினால் பெலிஸ்தர் பயந்து ஐயோ நமக்கு மோசம் வந்தது இதற்கு முன் ஒருபோதும் இப்படி நடக்கவில்லையே என்றார்கள். இன்று இந்த பெட்டி அபிஷேகத்தின் மூலமாய் நமக்குள் வந்து இருக்கிறது என்பதை நாம் முதலில் தெரிந்திருக்க வேண்டும். ஆகவே அபிஷேகத்தின் வல்லமையை யாரெல்லாம் சுமந்து செல்கிறார்களோ அவர்களுக்கு முன்பு இந்த உலகத்தின் எரிகோ கோட்டைகள் இடிந்து விழுகிறது என்பதை மறந்து விடக்கூடாது.
4. யுத்த வீரர்களுடன் சுற்றி வா
யுத்த வீர்ர்கள் என்பது ஜெப வாழ்க்கையை வெளிப்படுத்துகிறது. யுத்தத்திற்கு யாரை அழைத்துச் செல்வார்கள், யுத்தத்தை நன்றாய் கற்றவர்களை அல்லது யுத்தத்தை நன்றாய் அறிந்திருக்கிறவர்களே என்று நாம் அறிய முடிகிறது.
ஒருவேளை யுத்தத்தை அறியாதவர்களை அழைத்து செல்வார்களானால் நிச்சயமாக அந்த தேசம் தோல்வியையே சந்திக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
எனவேதான் கர்த்தராகிய இயேசு இப்படியாகச் சொன்னார் இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப் போகாது என்றார். மாற்கு 9:29.
கிறிஸ்தவர்கள் ஜெபம் என்கிற யுத்தத்தை தெரிந்திருக்க வேண்டும். அப்பொழுது மாத்திரமே எரிகோ கோட்டையின் அதிபதியாகிய பிசாசை அழிக்க முடியும். ஆவிக்குரிய சிங்காசனத்தின் ஆதாரமே ஜெபம் என்பதை மறந்து விடாதீர்கள்.
5. ஆயத்தத்தோடு சுற்றி வா
வேதம் சொல்லுகிறது, பின்தண்டோவெனில் எக்காளங்கள் ஊதப்படுகையில் கர்த்தரின் பெட்டிக்குப் பின் சென்றது. யோசுவா 6:13 [ பிப ]
இது எதைக் குறிக்கிறது இந்த மனுஷர்கள் ஆயத்தத்தோடு யுத்தத்திற்கு வந்திருப்பதை காட்டுகிறது, எப்படியென்றால் அவர்களுடைய கவனமெல்லாம் எப்பொழுது எக்காளம் ஊதுவார்கள் எப்பொழுது எரிகோ கோட்டையை தகர்க்கலாம் என்கிறதான எண்ணம் மாத்திரமே அவர்களுக்குள் இருந்தது. வீட்டைப்பற்றியோ தன்னுடைய குடும்பத்தைப் பற்றியோ உலக காரியங்களைப் பற்றியோ அவர்கள் சிந்திக்கவில்லை. இதற்குப் பெயர்தான் ஆயத்தம்.
பத்து கன்னிகைகளில் ஐந்து கன்னிகைகள் கைவிடப்பட்டதற்குக் காரணம் அவர்களிடத்தில் ஆயத்தம் இல்லை. ஆவிக்குரிய வாழ்க்கையில் 24 மணி நேரமும் ஆயத்தத்தோடு இருக்க வேண்டும். ஆயத்தமில்லாமல் இருப்போமானால் நாம் இடித்துப் போட்ட எரிகோ கோட்டையை பிசாசானவன் மறுபடியும் கட்டி விடுவான்
வேதம் சொல்லுகிறது, நீ ஆயத்தப்படு உன்னுடனே கூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து. எசேக்கியேல் 38:7.
நம்முடைய வாழ்க்கையில் எரிகோ கோட்டைகள் விழ வேண்டுமானால் எப்பொழுதும் நாம் மேலே சொல்லப்பட்ட ஆவிக்குரிய ஆயுதங்களுடன் ஆயத்தமாய் இருந்து எரிகோவைச் சுற்றி வர பேண்டும். இப்படி செய்யும் போது மாத்திரமே.... யோசுவா 6 ஆம் அதிகாரத்தில் எரிகோ கோட்டை விழுந்தது போல நம்முடைய வாழ்க்கையிலும் இந்த எரிகோ கோட்டைகள் விழுந்து நமக்கு கானானுக்கு போகும் வழியாக மாறும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
கர்த்தர் தாமே இந்த செய்தியின் மூலம் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக.