top of page
BE-BRAVE.-Featured-Image.png

தைரியமாயிரு..

Bro. Edwin Corter

  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Instagram

வேதம் சொல்லுகிறது, நீதிமான்களோ சிங்கத்தைப் போலே தைரியமாயிருக்கிறார்கள் . நீதிமொழிகள் 28:1. 

எப்படி ஒரு மனுஷன் தைரியத்தைப் பெற்றுக் கொள்கிறான்?

 

  • 1.இயேசுவின் இரத்தத்தினாலே, எபிரெயர் 10:20

  • 2.இயேசுவோடு இருக்கும் போது, அப் 4:13

  • 3. நல்மனச்சாட்சியுடன் வாழும் போது, 1யோவான் 3:21

  • 4.விசுவாசித்தினால், எபேசியர் 3:12

  • 5.இயேசுவுக்குள் நிலைத்திருக்கும் போது, 1யோவான் 2:28

 

பயம் என்பது எல்லா பிரிவினருக்கும் பொதுவான ஒன்றாக இருப்பதை நாம் இன்றைய உலகத்தில் காண முடிகிறது. நாம் நினைப்போம் எல்லா செல்வங்கள் இருக்கிறவர்களுக்கு பயம் என்கிறதான் சொல் தேவையேயில்லை என்பதாக.

ஆனால் அவர்களிடத்தில் போய் பயத்தைக் குறித்து பேசுவீர்களனால் அவர்கள் சொல்லுவார்கள் எங்கள் பணத்தை யார் எடுத்துக் கொள்வார்கள் என்கிறதான பயம், இன்னொரு பக்கம் நோய்கள் நிமித்தம் எங்கள் ஆசீர்வாதங்களை அநுபவிக்க முடியவில்லையே என்கிறதான பயம் என்று சொல்லி புலம்புவார்கள்.

ஆகவே பயம் இல்லாத ஒரு மனுஷன் உலகத்தில் இருக்க முடியாது என்பதை தெரிந்து கொள்கிறோம். ஆனால் நம்முடைய தேவன் பயம் இல்லாமல் தைரியமாக வாழ்வது எப்படி என்பதை தெளிவாக நமக்குத் தந்திருக்கிற வேதத்தில் அழகாக எழுதிவைத்திருப்பதை நாம் காண முடிகிறது. இதைக் குறித்துதான் பின்வருமாறு தைரியமாயிரு என்கிற தலைப்பில் பார்க்கப் போகிறோம்.

† தைரியமாயிருப்பதற்கு †

1. இயேசுவின் இரத்தத்தினாலே கழுவப்பட்டிருக்க வேண்டும்.

வேதம் சொல்லுகிறது,  அந்த மார்க்கத்தின் வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும். எபிரெயர் 10:20.

 

ஒரு மனுஷன் பயம் நிறைந்த பொல்லாத உலகத்தில் தைரியமாய் இருக்க வேண்டுமானால் அவன் அல்லது அவள் இயேசுவின் இரத்தத்தினால் கழுவப்பட்டிருக்க வேண்டும். இதன் அர்த்தம் என்னவென்றால் இயேசு கிறிஸ்து வேதத்தில் பதித்து வைத்திருக்கிற சத்தியத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும். இன்றைக்கு கிறிஸ்தவ உலகம் தங்களுடைய தேவைக்குத் தக்கதாக சத்தியத்தைப் பயன்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. பாரம்பரிய சபைகள் மனுஷனுக்கும் தங்கள் ஜாதிகளுக்குக் கீழ்ப்படிந்து அவர்களால் நியமிக்கப்பட்டப் போதனைகளுக்கு தங்கள் செவிகளைச் சாய்க்கிறார்கள். இல்லாவிட்டால் இவர்களுக்கு திருமணத்திற்கு சபைக் கிடைக்காது, மரித்தால் அடக்கம்பண்ணுவதற்கு இடம் தரமாட்டார்கள் என்கிறதான பயம்.

சத்தியத்தை உண்மையாக பின்பற்றுகிறார்கள் என்று சொல்லி பெந்தெகொஸ்து சபை என்றழைக்கப்படும் சபைகளுக்கு போவீர்களானால் இங்கே மாமிச அளவில் சத்தியத்தை பின்பற்றுகிறார்களேத் தவிர ஆவிக்குரிய வழியில் சத்தியத்திற்குக் கீழ்ப்படிவதில்லை.

பணம் சம்பாதிப்பதற்காக நியாயப்பிரமாணத்தை போதிப்பார்கள், சபையில் ஆட்களை சேர்ப்பதற்காக புதிய ஏற்பாட்டு சத்தியத்தைப் பின்பற்றுவார்கள். இப்படி இருந்தால் பயம் எப்படி நம்மை விட்டு போகும். எனக்குப் பிரியமான ஜனங்களே உலகத்தைப் பார்க்காமல் இயேசுவை மாத்திரம் பாருங்கள். அப்பொழுது இந்த உலகத்தைக் குறித்ததான பயம் நம்மை விட்டு போய்விடும்.

2.  இயேசுவோடு இருக்கும் போது.

வேதம் சொல்லுகிறது,  பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு அவர்கள் படிப்பறியாதவர்களென்றும், பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனே கூட இருந்தவர்களென்றும் அறிந்து கொண்டார்கள். அப்போஸ்தலர் 4:13

 

சீஷர்களுடன் இயேசு கிறிஸ்து மூன்றரை ஆண்டுகள் இருந்தார், அந்த நாட்களில் அவர்களுக்கு எதைக்குறித்தும் பயம் இல்லாமல் இருந்தது. ஏனென்றால் எல்லாவற்றையும் இயேசு பார்த்துக் கொண்டார். இதிலிருந்து என்னதெரிகிறது என்றால் இயேசு இவர்களுக்கு பாதுகாப்பான அரணாக இருந்தார் என்று அறிய முடிகிறது.

ஆனால் என்றைக்கு இயேசுவுக்கு இவர்களுக்கும் இடைவெளி வந்ததோ அந்த நாளில் இருந்து இவர்களுக்குள் பயத்தைக் கொண்டு வருகிற பிசாசு நுழைந்து விட்டதைப் பார்க்க முடிகிறது. நம் எல்லாருக்கும் தெரியும் சிலுவைப்பாடுகளின் நிமித்தம் இயேசு சீஷர்களை விட்டுப் பிரிந்து போகும் சூழ்நிலை உருவானது.

அப்பொழுது என்ன நடந்தது பேதுரு இயேசுவுக்காக மரிக்கவும் தயார் என்று சொன்னவர் இப்பொழுது பயத்தினிமித்தம் இயேசுவை மூன்றுமுறை மறுதலித்ததைப் பார்க்க முடிகிறது. ஒரு காலக்கட்டத்தில் எல்லா சீஷர்களும் பயத்தினிமித்தம் இயேசுவை தனியே விட்டுவிட்டு ஓடிப்போனார்கள்.

இன்றைக்கு நாமும் கூட அனேக நேரங்களில் இந்த உலகத்தில் உள்ள அழிந்து போகிற காரியங்களுக்காக மறுதலிக்கிறோம் காரணம் ஆவிக்குரிய சத்தியத்தில் இயேசுவை மறுதலிப்பதின் காரணமாகவே என்பதை உணர முடிகிறது. ஆகவே இயேசுவைப் பிடித்துக் கொள்ளுங்கள் பயம் நம்மைவிட்டுத் தானாகவே போய்விடும். பிறகு இத்தகைய காரியத்தை உணர்ந்த பேதுரு இயேசுவைப் பிடித்துக் கொண்டார். இதனால் தான் கர்த்தர் பேதுருவின் மேல் தம்முடைய சபையைக் கட்ட முடிந்தது.

3. நல்மனச்சாட்சியுடன் வாழும் போது.

 

வேதம் சொல்லுகிறது,  பிரியமானவர்களே நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால் நாம் தேவனிடத்தில் தைரியங் கொண்டிருந்து.  1யோவான் 3:21.

சிலர் இப்படியாக சொல்லுவார்கள் அவன் பாதி வயதில் இறப்பதற்குக் காரணம் அவனுடைய குற்றமனச்சாட்சித்தான் ஆகும் என்பார்கள். இத்தகைய காரியத்தை நாம் வேதத்தில் பல மனுஷர்களுடைய வாழ்க்கையில் பார்க்க முடிகிறது வனாந்தரத்தில் தாவீது தனக்கும் தன்னுடைய ஊழியக்காரர்களுக்கும் தேவையான உணவை சேகரிக்கும்படியாக நாபால் என்கிறதான மனுஷனுடைய வீட்டிற்கு தாவீது தன்னுடைய ஊழியக்காரர்களை அனுப்புகிறான்.

இந்த தாவீது ஒரு காலக்கட்டத்தில் நாபாலின் ஆடுமாடுகளுக்கும், அவனுடைய ஊழியக்காரர்களுக்கும் வனாந்திரத்தில் பாதுகாப்புக் கொடுத்தவர்கள். ஆனால் குடிபோதையில் இருந்த நாபால் தன்னிடத்தில் உதவிக் கேட்டு வந்த தாவீதின் ஊழியக்காரர்களை அவமானப்படுத்தி அனுப்பி விட்டான்.

இத்தகைய காரியங்களை குடிபோதையில் இருந்து வெளிவந்த நாபால் கேள்விப்பட்ட போது பயந்து குற்ற மனச்சாட்சியின் நிமித்தம் கர்த்தரால் அடிக்கப்பட்டு மரித்துப் போனதை நாம் பார்க்க முடிகிறது. இத்தகைய சம்பவத்தை 1சாமுவேல் 25 ஆம் அதிகாரத்தில் வாசிக்க முடிகிறது. சாமுவேல் தீர்க்கதரிசி தன்னுடைய மரணத்தைக் குறித்துப் பயப்படாமல் அதை தைரியமாக எதிர்கொண்டதற்குக் காரணம் அவர் கடைசிவரைக்கும் கர்த்தருடைய ஊழியத்தில் நல்மனச்சாட்சியுடன் நடந்து கொண்டார்.

4.  விசுவாசித்தினால் தைரியம் கிடைக்கிறது.

அவரைப் [இயேசு கிறிஸ்துவை] பற்றும் விசுவாசித்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திட நம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது.  எபேசியர் 3:12.

 

ஒரு மனுஷன் தன்னுடைய மகனை குணப்படுத்தும்படியாக இயேசுவிடம் வருகிறான். இயேசுவைப் பார்த்து சொல்லுகிறான் ஆண்டவரே என்னுடைய மகன் குணம் அடைய வேண்டும் என்பதாக. அதற்கு இயேசு சொன்னப் பதில் விசுவாசமுள்ளவனாயிரு அப்பொழுது உன்னுடைய மகன் சொஸ்தமடைவான்.

இதைக் கேட்ட அந்த மனுஷன் சொன்னப்பதில் ஆண்டவரே என்னுடைய விசுவாசத்திற்குத் தடையாக இருக்கிற அவிசுவாசம் என்னை விட்டு நீங்கும்படி உதவி செய்ய வேண்டும். ஏனென்றால் அந்த அவிசுவாசம் அவனுக்குள்ளே பயத்தைக் கொண்டு வந்து சந்தேகத்தை உருவாக்குகிறது என்று நாம் இந்த சம்பவத்திலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. உடனே இயேசு அவனை விசுவாசத்தினால் பெலப்படுத்தி தன்னுடைய மகன் குணமாகுவான் என்கிறதான தைரியத்தைக் கொடுத்தார். இத்தகைய சம்பவத்தை நாம் மாற்கு 9 ஆம் அதிகாரத்தில் பார்க்கலாம்.

வேதம் சொல்லுகிறது, விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் – மாற்கு 9:23

5.  இயேசுவுக்குள் நிலைத்திருக்கும் போது....

 

வேதம் சொல்லுகிறது, இப்படியிருக்க பிள்ளைகளே அவர் வெளிப்படும் போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப் போகாமல் தைரியமுள்ளவர்களாகும்படிக்கு அவரில் நிலைத்திருங்கள். 1யோவான் 2:28.

உலகமக்கள் இவ்வுலக வாழ்க்கையைப் பற்றி பயப்படுகிறார்கள் என்றால் அதில் அர்த்தம் இருக்கிறது, ஏனென்றால் அவர்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ளாதவர்கள் ஆனால் இயேசுவை ஏற்றுக் கொண்டவர்களின் வாழ்க்கையிலும் பயம் இருப்பதற்குக் காரணம் அவர்கள் இயேசுவின் போதனையில் நிலைத்திருப்பதில்லை. ஆகவேதான் காற்றும் புயலும் அடிக்கும் போது அவர்களுடைய வீடு இடிந்து போவதை நாம் பார்க்க முடிகிறது.

சீஷர்கள் சென்ற படகில் இயேசுவும் கூட இருக்கிறார் ஆனாலும் சீஷர்கள் காற்றையும் சீறிவரும் அலைகளையும் பார்த்தப் போது பயந்தனர். இதற்குக் காரணம் அவர்கள் இயேசுவின் வார்த்தையில் தங்கள் வாழ்க்கையைக் கட்டவில்லை என்பதுதான் அர்த்தமாகும்.

வேதம் சொல்லுகிறது,   நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.  யோவான் 15:7.

மேலே சொல்லப்பட்ட காரியங்கள் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் போது நாம் இந்த உலகத்தில் பயமில்லாமல் தைரியமாயிருக்க முடியும்.

கர்த்தர் நம்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக!

bottom of page