பரலோகத்தின் தேவனால் ஊழியத்துக்கு அழைக்கப்பட்ட ஊழியக்காரர்களே!! விசுவாசிகளே!!
வரதட்சனை கொடுமையினாலே பல பெண்கள் தற்கொலை செய்து கொள்ளுவதும் பலர் கைது செய்யப்படுவதும் பல குடும்பங்கள் நாசமா போவதை பார்த்தும் இன்னும் நீங்கள் உணர்வடையவில்லையா? இன்னும் அதை செய்து கொண்டிருக்கிறீர்களே?
வரதட்சணை வாங்குவது தேசத்தின் சட்டத்தின் படி குற்றம் என்பது உங்களுக்கு தெரியாதா?
நீ விதைக்காததை அறுப்பது தேவ நீதியல்ல. ஒருவன் தான் பிரயாசப்படாததை பெற்று கொள்வது, அடுத்தவர்கள் சம்பாதித்த பணத்தை அபகரிப்பது தேவ நீதியாகுமா?
ரோட்டில் கேட்பாரற்று கிடக்கும் பணத்தை, தான் சம்பாதிக்காத பணம் தனக்கு வேண்டாம் என்று சொல்லி அதை எடுத்தவரிடம் கொடுக்கிறானே. அந்த நீதி நம்மிடம் இல்லையே?
உங்கள் சபை மக்கள் வரதட்சணை வாங்குவதற்கு பாவத்தைக் குறித்தும் நீதியை குறித்தும் பிரசங்கிக்காத மேலும் ஜனங்களின் சுய இச்சைக்கேற்றபடி நடக்கும் போதகர்களாகிய நீங்கள் தான் காரணம்.
சபை ஜனங்கள் உலகத்துக்கு வெளிச்சமாய் பூமிக்கு உப்பாய் இருக்க வேண்டும். மேலும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாய் இருக்க வேண்டும்.
இப்படி அநியாயமாக சம்பாதித்த வரதட்சணை பணத்தை ஆசீர்வாதம் பண்ணி ஜெபிக்க போகிற ஊழியக்காரர்களே நீங்கள் முதலாவது மனம் திரும்புங்கள்!!!
உங்கள் சபையில் வரதட்சணை வாங்குவது தவறு என்பதை குறித்து பேசுங்கள். இது தேவ நீதி அல்ல. அது அநியாயம் என்பதை சொல்லிக் கொடுங்கள். தயவு செய்து பணத்தை சார்ந்து திருமணங்களை நிச்சயிக்காதீர்கள் என்று ஆலோசனை கொடுங்கள். காணிக்கைக்காக வரதட்சனை பணத்தை ஆசீர்வதிக்க போய் உங்களை அசுசி படுத்திக் கொள்ளாதீர்கள். பண ஆசை எல்லா தீங்குக்கும் வேராய் இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் விசுவாசத்தை விட்டு விலகி தங்களை தாங்களே உருவ குத்திக்கொள்ளுகிறார்கள் என்பதை பற்றி புத்தி சொல்லுங்கள். பணத்தின் மேல் நம்பிக்கை கொண்டு தேவன் மேல் விசுவாசமாயிராமல் தேவனுக்கு பிரியமாய் இருப்பது கூடாத காரியம் என்பதை சொல்லிக் கொடுங்கள்.
வரதட்சணை வாங்கும் விசுவாசியே, அடுத்தவர் சம்பாதித்த பணத்தை கேட்டு வாங்குவது உனக்கு வெட்கமா இல்லையா? ஏன் உன் பையன் சம்பாதித்து பெண்ணை காப்பாற்ற திராணி இல்லையா? உன் பையனை படிக்க வைப்பதற்காக தேவன் உன் பையனுக்கு ஞானத்தை கொடுத்தாரே! அவனை படிக்க வைக்க உனக்கு திராணியை கொடுத்தாரே அந்த நன்றி இல்லையா? அடுத்தவரிடம் போய் பணத்துக்காக வரதட்சணை என்கிற பெயரில் கையேந்தி பிச்சை எடுக்கிறாயே?
நீங்கள் கொடுப்பதை கொடுங்கள். நீங்கள் செய்வதை செய்யுங்கள் என்று டீசன்டாக பிச்சை எடுக்கிறீர்களா? நாங்கள் வரதட்சனை வாங்க மாட்டோம். அது நீதி அல்ல என்று ஏன் உங்களால் சொல்ல முடியவில்லை. ஏன் தெரியுமா? தேவன் வெறுக்கிற அழிந்து போகிற பண ஆசை என்கிற இச்சை. சம்பாதிக்காத பணத்தை அபகரிப்பது பணத்தின் மேல் உள்ள இச்சையாய் இருக்கிறது, அது எல்லா தீங்குக்கும் வேராய் இருக்கிறது.
பணம் மற்றும் பொருள்களை, திருமணம் என்ற பெயரில் கேட்டு பெற்றுக் கொள்வது பொருளாசை என்கிற விக்கிரக ஆராதனையாகும். அத்தகய அடிமை தனத்துக்குள்ளே போய் உன்னை அடிமை படுத்திக் கொள்ளாதே.
உலகத்துக்கு ஒத்த வேஷம் தரித்துக்கொண்டு உலகத்தார் செய்வது போல பண விஷயத்தில் தப்பு பண்ணாதே. நீ நித்திய ஜீவனுக்காய் அழைக்கப்பட்டவன் என்பதில் கவனமாக உறுதியாக இரு. கர்த்தர் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆகவே உன் திருமண விஷயத்தில் நீதியாக நடந்து கொள்.
உங்கள் திருமண விஷயத்தில் தேவநீதி வெளிப்படட்டும்.உங்கள் திருமண விஷயத்தில் தேவ அன்பு வெளிப்படட்டும். தேவனுடைய ஆசீர்வாதம் உங்கள் திருமண காரியங்களில் இருக்கும்படி, உங்கள் திருமண காரியங்கள் எல்லாவற்றையும் நியாயமாய் நீதியாய் ஜெபத்தோடும் தேவ சித்தத்தோடும் செய்யுங்கள்.
நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும். பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். அநியாயம் செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும். அவனவனுக்கு நான் அடிக்கும் பலன் என்னோடு கூட வருகிறது என்று சொல்லிவிட்டு போயிருக்கிறார் என்பதை குறித்து ஜாக்கிரதையாக இருங்கள்.
ஆமென்..



