top of page

தேவனுடைய வசனத்தை வீணாய் பயன்படுத்தாதீர்கள்

  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Instagram

இன்றைக்கு அநேகர் தேவனுடைய வசனத்தை வீணாய் பயன்படுத்துகிறார்கள்.  தாங்கள் சுய இஷ்டப்படி அநேக காரியங்களை செய்து கொண்டு இதை தேவன் செய்தார். மேலும், தேவன் செய்ய சொன்னார் என்று துணிகரமாக பொய் சொல்கிறார்கள்.

  • இவர்களுக்கு தேவன் மேலும் அவரது வசனத்தை பயன்படுத்துவதிலும் பயம் இல்லாமல் போய்விட்டது.

  • ஊழியக்காரர்கள் கூட மாம்சமும் மனசும் விரும்பினவைகளை செய்து கொண்டு தேவன் செய்ய சொன்னார் என்று துணிகரமாக பேசுகிறார்கள்.

 

மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு 12-36

 

தேவசமுகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு, தேவன் வானத்திலிருக்கிறார், நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக.

பிரசங்கி 5-2 இன்றைக்கு தேவனுடைய பெயரை பயன்படுத்தி அவர் சொன்னார்...அவர் பேசினார் என்று துணிகரமாக பொய்  சொல்லாதிருங்கள்

 

இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.  வெளிப்படுத்தின விசேஷம் 19-13

 

உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.  உபாகமம் 5-11

 

கர்த்தரையும் அவரது பெயரையும் வீணாய் பயன்படுத்துகிறவர்களை தண்டிப்பேன் என்ற எச்சரிப்பை கவனித்தீர்களா?

 

ஒருவர் குடித்து விட்டு மனைவியை எப்பொழுதும் அடிப்பவர்.அவர் வசிக்கும் தெருவில் பலரோடு பேசுவதில்லை, அவரை பற்றி நல்ல சாட்சி கிடையாது, அவர் மரணமடைந்த பிறகு அவருடைய கல்லறையில் நல்ல போராட்டத்தைப் போராடினேன் ஓட்டத்தை முடித்தேன் விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன் என்று எழுதப்பட்டு இருக்கிறது. இந்த வசனத்துக்கும் அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கும் துளியளவும் சம்பந்தமே கிடையாது. அவர் கல்லறையில் எழுதப்பட்ட வார்த்தையை படிக்கிற பலர் இவர் மனைவியோடும் உறவினரோடும் நல்ல போராட்டத்தை போராடினார் என்று கிண்டலடிக்கின்றனர்.

மேலும், பல ஊழியக்காரர்களின் கல்லறையில் கூட இந்த வசனம் பொறிக்கப்பட்டிருக்கிறது. பவுல் சொன்ன இந்த வார்த்தையை தங்களுக்கு பயன்படுத்த முதலாவது தாங்கள் தகுதியுள்ளவர்களாக இருக்கிறோமா என்று யோசித்து பார்க்க வேண்டும்.

பவுலுடைய ஊழியம் எப்படி பட்டது என்பதை இவர்கள் சரியாக அறிந்து கொள்ளவில்லை. மேலும், பவுல் கிறிஸ்துவினிமித்தம் அடைந்த உபத்திரவமும் இரத்த சாட்சியான மரணமும் மேலானது.

இப்படிபட்ட ஊழியத்தை செய்து விட்டு தன் ஜீவனையே கிறிஸ்துக்கு அற்பணித்த பவுல் சொன்ன நல்ல போராட்டத்தை போராடினேன் என்று தான் செய்ததாக பொய் சொல்லி வசனத்தை வீணாய் பயன்படுத்தாதீர்கள்.

 

அது போன்றே,  திருமண அழைப்பிதழ்களில் இந்த காரியம் கர்த்தரால் வந்தது அடுத்ததாக கர்த்தர் எல்லாவற்றையும் நேர்த்தியாய் செய்து இருக்கிறார் என்கிற வசனங்களை பயன்படுத்துகிறார்கள்.தயவு செய்து நீங்கள் உங்கள் சுய ஆசையின்படி படி மாப்பிள்ளை மற்றும் பெண் பார்த்துக் கொண்டு இந்த காரியத்தை கர்த்தர் செய்தார் என்று  சொல்லாதீர்கள். அதாவது தேவனுடைய வார்த்தையை வீணிலே வழங்காதீர்கள்.ஒரு திருமணத்திற்காக பெண் பார்க்கும் போது நாட்டு சட்ட திட்டத்திற்கு எதிரான வரதட்சணையை பேசி பணத்தை சார்ந்து தேவன் விரும்பாத பிரிவினையாகிய ஜாதியை சார்ந்து பெண் பார்த்து மாப்பிள்ளை பார்த்து கொண்டு எல்லாம் கர்த்தர் செய்தார் என்று திருமண அழைப்பிதழில் பொய் சொல்லாதீர்கள்.

 

சமீபத்தில் காதலித்து வீட்டை விட்டு ஓடிப் போனவர்களை  பெற்றோர்கள் அழைத்து சமாதானப்படுத்தி திருமணம் செய்து வைத்தார்கள், அந்த திருமண அழைப்பிதழில் இந்த காரியம் கர்த்தரால் வந்தது...கர்த்தர் எல்லாவற்றையும் நேர்த்தியாய் செய்திருக்கிறார் என்று வசனத்தை வைத்து பொய் சொன்னார்கள்.  தயவு செய்து நீங்கள் இதை யோசித்துப் பார்க்கவேண்டும். பெண் பார்க்கப் போகும் போதே அரசாங்க வேலை  நிறைய பணம் கொடுப்பார்கள் அடுத்து ஒரே பெண் ஒரே பையன் எனவே சொத்து எல்லாம் நமக்கு தான் என்றெல்லாம் வரண் பார்த்து பணத்தை சார்ந்து ஜாதியைப் சார்ந்து வரதட்சணை வாங்கி பெண் பார்க்கிறவர்கள் தேவன் எல்லாவற்றையும் நேர்த்தியாய் செய்திருக்கிறார் என்று சொல்வது எப்படி சரியாகும்.

இப்படி பட்ட காரியங்களுக்கு துணை போகும் ஊழியக்காரர்களே!!  

சபையில் இத்தகய காரியங்களை கண்டித்து உணர்த்துங்கள்.  தாங்கள் செய்த மாயமாலமான காரியங்களுக்கு வசனத்தை பயன்படுத்தி வேத வசனத்தை அவமானப்படுத்துகிறவர்களை எச்சரியுங்கள். என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கி பார்ப்பேன் என்று கர்த்தர் சொல்கிறார்.

 

மனுபுத்திரரே, எதுவரைக்கும் என் மகிமையை அவமானப்படுத்தி, வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள்.  சங்கீதம் 4-2

 

நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமாக்குகிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்றும் அநேக காரியங்களையும் செய்கிறீர்கள்.  மாற்கு 7-13

 

இன்றைக்கு அநேக காரியங்களில் தேவ வசனத்தை பயன்படுத்துவதால் தேவன் நம்மை ஆசீர்வதிப்பார் என்று நம்புகிறோம். ஆனால், தேவ வசனத்துக்கு கீழ்படிவதில் தான் ஆசீர்வாதம் இருக்கிறது...... ஆனால், தவறான மற்றும் தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களை செய்து கொண்டு அதில் தேவ வசனத்தை பயன்படுத்துவது சரியா?

 

நம்முடைய சுய இச்சையினாலே மனசும் மாம்சமும் விரும்பின காரியங்களை செய்து விட்டு தேவன் எல்லாவற்றையும் நேர்த்தியாக செய்திருக்கிறார் என்று பொய் சொல்வது தவறு தானே! தேவன் செய்ய சொல்லாததை செய்து விட்டு,தேவன் செய்ய சொன்னார் என்று சொல்வது தவறு தானே!

 

எனவே நீங்கள் சுயமாக சிந்தித்து செய்த காரியத்தை தேவன் செய்தார் என்று சொல்லாதிருங்கள். தேவ வசனத்தை வீணாக பயன்படுத்துவதால் நீங்கள் நிச்சயமாக ஆசீர்வதிக்கப முடியாது. தேவ வசனத்தை பயன்படுத்துவதற்கு நீங்களும் நீங்கள் செய்த செய்கைகளும் தகுதியுடையதாயிருக்கின்றனவா என்று சுய பரிசோதனை செய்யுங்கள்.

ஆமென்

bottom of page