top of page

தண்ணீர் ஞானஸ்நானம் தேவையில்லையா?

ர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடை பின்பற்றி நடக்கும் படியான ஒரு மாதிரி நமக்காக வைக்கப்பட்டிருக்கிறது. அவர் தண்ணீரினால் ஞானஸ்நானம் எடுத்தார். அவர்,தான் எடுத்த தண்ணீர் ஞானஸ்தானத்தை அந்த மாதிரியை பின்பற்றும்படியாக, பிறருக்கு ஞானஸ்நானம் கொடுக்க சொன்னார்.

 

அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.  1 யோவான் 2:6

 

ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,  மத்தேயு 28:19

 

மேல் சொல்லப்பட்டது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொன்ன  கட்டளை. அது ஒரு மனிதன் சொன்ன கட்டளை அல்ல என்பதை விளங்கி கொள்ள வேண்டும். 

 

பூமியை விட வானம் எவ்வளவு உயர்ந்ததோ அப்படியே உங்கள் வழிகளை விட என் வழிகள் உயர்ந்தது என்று சொன்ன, அனந்த ஞானமுள்ள தேவன் சொன்ன கட்டளையை புறக்கணிக்கலாமா?

 

யோவான் 16 வது அதிகாரம் 13வது வசனத்திலே சத்திய ஆவியாகிய அவர் வரும்போது சகல சத்தியத்துக்குள்ளும் உங்களை நடத்துவார் என்று இயேசு சொன்னார். மேலும் யோவான் பதினைந்தாவது அதிகாரம் 26 ஆவது வசனத்திலே என் நாமத்தினாலே பிதா அனுப்பப் போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்கு போதிப்பார் என்று இயேசு குறிப்பிட்டார். அதை தொடர்ந்து பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு பரிசுத்த ஆவியின் ஆலோசனையின் படி ஊழியம் செய்த இயேசு கிறிஸ்துவின் சீஷர்களும், ஆதி அப்போஸ்தலர்களும்  இயேசுவின் கட்டளையின்படி பரிசுத்த ஆவியின் ஆலோசனையின் படி தண்ணீர் ஞானஸ்நானம் கொடுத்தார்கள்.

 

பிலிப்பு எத்தியோப்பிய மந்திரிக்கு பரிசுத்தாவியானவரின் ஆலோசனை படி ஞானஸ்நானம் கொடுத்தான். அப்போஸ்தலர்களும் அப்படியேசெய்தார்கள். இன்றைக்கும் அதை பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். 

 

தண்ணீர் ஞானஸ்நானத்தை விட  பரிசுத்தாவியின் ஞானஸ்நானமே முக்கியம் எனவே தண்ணீர் ஞானஸ்நானம் தேவையில்லை எனறு தேவனுக்கே ஆலோசனை கொடுப்பதற்கு நாம் யார்?

 

அவர் ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.மத் 3-11

 

பரிசுத்த ஆவியானவருடைய ஞானஸ்நானம் மாத்திரம் போதும் என்றால் மேலும் அதுதான் மேலானது என்றால் பரிசுத்த ஆவியானவர் பிலிப்பை, அந்த எத்தியோப்பிய மந்திரிக்கு தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுப்பதற்காக ரதத்தில் போய் சேர்ந்து கொள் என்று சொல்லி இருக்க மாட்டாரே.

 

யோவான் நாலாம் அதிகாரம் 1,2 வசனங்களில் இயேசு கிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும் அநேகரை சீஷராக்கி ஞானஸ்நானம் கொடுக்கிரார்கள் என்று யோவான் கேள்விப்படுகிறான். இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாக  அவருடைய சீஷர்கள் அநேகருக்கு ஞான ஸ்நானம் கொடுக்கிறதை பார்க்கலாம்.

 

தண்ணீர் முழுக்கு ஞானஸ்நானத்தை பற்றி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்ன கட்டளையை பின்பற்றாமல்,காலம் காலமாகநாம் பின்பற்றி வருகிற பாரம்பரிய சபை சட்டதிட்டத்தினால்,  தேவ வசனத்தை அவமாக்குகிறோம்.

 

என் ஐனத்தாரில் என் வயதுள்ள அநேகரைப்பார்க்கிலும் யூதமார்க்கத்திலே தேறினவனாய், என் பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக மிகவும் பக்திவைராக்கியமுள்ளவனாயிருந்தேன்.  கலாத்தியர் 1:14

 

நம்முடைய பக்தி வைராக்கியம் பெரும்பாலும்,காலம் காலமாக நம்முடைய முன்னோர்கள் பின்பற்றி வந்த சபை சட்டங்களின் மேல் தான் வைராக்கியமா இருக்கிறது.

 

சத்தியத்தை நாம் சரியாக அறிந்து கொள்ளாததினால் கர்த்தரா கிய இயேசுகிறித்து நமக்கு செய்யச் சொன்ன கட்டளையை நாம் அவமாக்குகிறோம்.

 

நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமாக்குகிறீர்கள். இதுபோலவே நீங்களும் மற்றும் அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று இயேசு சொன்னார். மாற்கு 7:13

 

வேதாகமத்தை படித்து பார்த்து சத்தியம் என்ன சொல்லுகிறதோ அதற்கு வைராக்கியமாக கீழ் படியுங்கள்.

 

ஒருவன் என் மேல் அன்பாயிருந்தால் என் வசனத்தை கை கொள்ளுவான். என்னில் அன்பாயிராதவன் என் வசனத்தை கைக்கொள்ள மாட்டான். யோவான் 14-23,24.

 

சிலர், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானமே மேலானது, எனவே தண்ணீரினால் ஞானஸ்நானம் எடுக்கத் தேவையில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் அப்போஸ்தல நடபடிகள் பத்தாவது அதிகாரம் கடைசி பகுதியிலே பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டவர்களைப் பார்த்து, இவர்கள் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டிருக்கிறார்கள். ஞானஸ்நானம் பெறாதபடிக்கு தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி அவர்களுக்கு பேதுரு ஞானஸ்நானம் கொடுக்க கட்டளையிட்டதை நாம் காணலாம்.

 

அப்பொழுது பேதுரு; நம்மைப்போலப் பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி,

கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கும்படி கட்டளையிட்டான். 

அப்போஸ்தல நடபடிகள் 10-47,48

 

சிலர் எண்ணுகிறார்கள்.... தண்ணீர் ஞானஸ்நானம் என்பது பெந்தகோஸ்தே சபையின் உபதேசம் என்று.... அப்படியல்ல அது இயேசுவின் கட்டளை அதற்கு நாம் கீழ்படிவது தான் சரியானது.  ஞானஸ்தானம் என்பது நம்முடைய பாவங்கள் போக கழுவப்படக்கூடிய ஒரு அனுபவம். 

 

இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட சிறைச்சாலை தலைவனுக்கு பவுல் சொன்ன மறு மொழி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்.  அப்போஸ்தல நடபடிகள் 16 வது அதிகாரத்திலே அவன் அவர்களுக்கு ஞானஸ்தானம் கொடுப்பதை  காணலாம்.

 

இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான். அப்போஸ்தலர் 22:16

 

அப்போஸ்தல நடபடிகள் ஒன்பதாவது அதிகாரத்திலே தேவன் அனனியா என்கிற தேவ மனுஷனை பவுலிடம் அனுப்புகிறார்.அனனியா அந்த வீட்டுக்குள் பிரவேசித்து,அவன் தலையில் கை வைத்த போது அவன் பார்வை அடைந்தான்.அதன் பிறகு அவன் ஞானஸ்நானம் பெற்றான்.

 

பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாக தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.  லூக்கா 7:30

 

இஸ்ரவேல் ஜனங்கள் செங்கடலிலே தண்ணீரினாலே காக்கப்பட்டார்கள். தண்ணீரினாலே பிரித்தெடுக்கப்பட்டார்கள். அடுத்ததாக, நோவா பேழையிலே சிலராகியஎட்டு பேர் மாத்திரம் தண்ணீரினாலே காக்கப்பட்டார்கள். இவைகள் எல்லாம் தண்ணீர் ஞானஸ்நானத்துக்கு ஒப்பனையாய் சொல்லப்பட்டிருக்கிறது.  ஞானஸ்தானம் என்பது தேவனை பற்றும் நல் மனசாட்சியின் உடன்படிக்கையாக இருக்கிறது, அது நம்மை இரட்சிக்கிறது.

 

இதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது.  1 பேதுரு 3:21

 

கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவவழி.  நீதிமொழிகள் 6:23

 

நான் உனக்கு போதித்து நீ நடக்க வேண்டிய வழியை உனக்கு காட்டுவேன் என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறார். வேத வசனத்தை ஆராய்ந்து பாருங்கள் நித்திய ஜீவன் உண்டு என்று இயேசு கிறிஸ்து சொல்லி இருக்கிறார். வேதமே நமக்கு வெளிச்சம் வேதாகம வசனம் தான் நமக்கு வழி காட்டுகிற தீபமாயிருக்கிறது.

 

பரிசுத்த ஆவியினாலே எழுதப்பட்ட வேத வசனத்தை நீங்கள் ஆராய்ந்து பாருங்கள் அதை தியானம் பண்ணுங்கள். ஞானஸ்நானம் பற்றிய காரியங்களை நீங்கள் படித்து அறிந்து கொள்ளுங்கள். மனிதன் உருவாக்கின பாரம்பரியசபை திட்டங்களுக்கு நாம்  கீழ்படிவதை விட நித்திய ஜீவனுக்காக உங்களை நடத்தும் தேவனுடைய நித்திய ஜீவ வசனங்களுக்கு கீழ்படிவது மேலானது.

 

நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்று   இயேசு கிறிஸ்து,கைக்கொள்ள சொன்ன கட்டளையை தயவு செய்து புறக்கணிக்காதீர்கள்.

 

என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்க  தோன்றிருக்கிறது. நான் சொன்ன வசனமே அவனைக் கடைசி நாளில் நியாயந்தீர்க்கும்.  யோவான் 12:48

 

நான் உனக்கு விதிக்கிற யாவையும் செய்யும்படி கவனமாயிரு, நீ அதனோடே ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.  உபாகமம் 12:32

 

விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான், விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.  மாற்கு 16:16

 

பேசுகிறவருக்கு நீங்கள் செவிகொடுக்கமாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில், பூமியிலே பேசினவருக்குச் செவிகொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள் தப்பிப்போகாமலிருக்க, பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பிப்போவோம்?  எபிரேயர் 12:25

bottom of page