
கடனாளி என்கிற குறையை சரி செய்.
துன்மார்க்கன் கடன்வாங்கிச் செலுத்தாமற்போகிறான், நீதிமானோ இரங்கிக்கொடுக்கிறான். சங்கீதம் 37:21
2 தீமோத்தேயு 3 ம் அதிகாரத்தில், கடைசி காலத்தில்மனுஷர்கள் பணப் பிரியர்களாக இருப்பார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இன்றைக்கு கடன் வாங்கின அநேகர் தாங்கள் வாங்கின கடன்களை திருப்பிக் கொடுப்பதில்லை, கடன் வாங்கினவர்கள் தங்கள் கடனிலிருந்து விடுதலை பெறும் படி தேவனை நோக்கி விண்ணப்பம் செய்கிறார்கள். தேவன் அவர்கள் கடனை அடைக்கும்படியாய் அவர்களை ஆசீர்வதிக்கிறார். ஆனால் அந்த ஆசீர்வாதம் வந்த உடனே வாங்கிய கடனை அவர்கள் திருப்பிக் கொடுப்பதில்லை. ஏனென்றால்? அவர்கள் பணத்தை நேசிக்கிற சுயநலவாதிகளாக இருக்கிறார்கள்.
இக்கட்டான சூழ்நிலையில் தங்களுக்கு உதவி செய்தவர்களை மறக்கும் நன்றி கெட்டவர்களாக மாறி போனார்கள். எதற்காக கொடுக்க வேண்டும்? என்கிற மனநிலை அவர்களிடம் இருக்கிறது.... அந்த திருப்பிக் கொடுக்க வேண்டிய பணத்தை தங்கள் சொந்த செலவுக்காக செலவிட்டு கொள்வதால், அவர்கள் தேவனுடைய ஆசீர்வாதத்தை இழந்து நெருக்கமான சூழ்நிலைக்குள் தள்ளப்படுகிறார்கள்.கடனை திருப்பி கொடுக்காத அனேகர் பலவிதமான உபத்திரவங்களில் தான் இருக்கிறார்கள். ஏனென்றால்? அடுத்தவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த மேலும் கடனாய் கொடுக்கப்பட்ட பணத்தை திருப்பிக் கொடுக்காததினால் சாபமான சூழ்நிலைக்குள்ளாய் அவர்கள் கடந்து செல்லுகிறார்கள்.
கடனை திருப்பிக் கொடுக்க திராணி இருந்தும் அதை திருப்பிகொடுக்காததினால் தேவனுடைய ஆசீர்வாதத்தை இழந்து மீண்டும் கடன் வாங்க கூடிய சூழ்நிலைக்குள்ளாய் தள்ளப்படுகிறார்கள்.
ஒரு முறை கடன் வாங்கி திரும்ப கொடுக்க முடியாத நிலையில் இருந்த ஒருவரின் மனைவி, அடுத்தவர் பணம் நம்மிடம் இருப்பது நீதியல்ல. எனவே நம்மிடம் இருக்கக்கூடிய நிலத்தை விற்று கடனை திருப்பிக் கொடுத்து விடலாம் என்றார். அதற்கு அவர் கணவர், இரண்டு மூன்று வருடங்கள் கழித்து நிலத்தை விற்றால் நல்ல லாபம் கிடைக்கும், கடனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார். இப்படி தங்கள் சுய லாபத்துக்காக கடன் வாங்கின பணத்தை வருட கணக்காக திரும்ப கொடுக்காத சுய நலவாதிகள் பலர் இருக்கின்றனர்.
ஒவ்வொரு வருடமும் பணத்தின் மதிப்பு குறைந்து கொண்டே போகிறது. ஒரு வேளை உங்களுக்கு கடன் கொடுத்த பணத்தை வேறு எதிலாவது Invest பண்ணியிருந்தால் அவருக்கு லாபமாக இருந்திருக்கும்.
ஒரு ஊழியக்கார் இப்படியாக சொன்னார், உங்கள் வங்கி லாக்கரில் உள்ள நகையை விற்று கடனை அடையுங்கள், அல்லது உங்கள் நிலத்தையோ வாகனத்தையோ விற்று உடனடியாக கடனை அடையுங்கள். பண விஷயத்தில் குறையற்றவர்களாக இருங்கள். ஏனென்றால் பணத்தை திருப்பி கொடுக்காமல் துன்மார்கன் என்ற பெயருடையவனாய் தேவனுக்கு முன்பாக நிற்க போகிறீர்களா? என்றார்.
ஒரு தேசத்திலிருந்து வேலையைராஜினாமா செய்து விட்டு சொந்த தேசத்துக்கு செல்ல வேண்டுமானால் வங்கியிலிருந்து NOC வாங்க வேண்டும்.வங்கியில் வாங்கின கடனை அடைக்காமல் அந்த தேசத்திலிருந்து வெளியேற முடியாது. அதே மாதிரி இந்த உலகத்தை விட்டு பிரியும் போது குறையற்றவர்களாகவும், தேவ ராஜ்யத்திற்கு போக தகுதியு ள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.
இயேசு, இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.
அது போல திருப்பி தருகிறேன் என்று சத்தியம் பண்ணப்பட்டு வாங்கின பணத்தை குறித்த நேரத்தில் திரும்ப செலுத்துங்கள்.
ஒரு சகோதரனோடு கடன் என்கிற குறை உண்டானால் அதை கொடுத்து விட்டு அதாவது அந்த குறையை சரி செய்து விட்டு அதன் பிறகு காணிக்கையை செலுத்து என்கிற கட்டளைக்கு யாரும் கீழ்படிவதில்லையே. இன்றைக்கு பலர் பிறரிடம் வாங்கிய கடனை செலுத்தாமல், ஊழியங்களுக்காக பணத்தை தாராளமாக செலவு செய்கிறார்கள். பண விஷயத்தில் உண்மையற்றவர்களாக இருக்கும் இவர்கள் ஊழியங்களை தேவன் அங்கிகரிப்பார் என்று நினைக்கிறீர்களா?
நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும் என்று இயேசு சொன்னார். கடன் என்கிற பெயரில் அடுத்தவர் பணத்தை திருப்பி கொடுக்காமல் அபகரிப்பது,மேலும் அடுத்தவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த, அவர் கையின் பிரயாசத்தை நீங்கள் சாப்பிடுவது அநீதியல்லவா.
கடன்வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை. நீதிமொழிகள் 22:7
ஆனால் இன்றைக்கு கடன் கொடுத்தவன் கடன் வாங்கினவனுக்கு அடிமையாக இருக்கிறான். கடன் கொடுத்தவர்கள், பணத்தை திருப்பி கொடு என்று பலமுறை கடன் வாங்கினவர்கள் பின்னாடியே ஓயாமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள். கடனை திரும்பகொடுக்காமல் ஏமாற்றி கொண்டிருக்கிறவர்களே, வாங்கின பணத்தை உடனடியாக திரும்ப கொடுத்து கடன் என்கிற அடிமைத்தனத்திலிருந்து உடனே விடுதலையாகுங்கள்.
ஒருமுறை ஒரு ஊழியக்காரரிடம் பரிசுத்த ஆவியானவர், பல வருடங்களுக்கு முன்பாக ஒருவரிடம் அவசரமாக கடனாக வாங்கின 100 ரூபாயை திருப்பிக் கொடுக்க சொன்னாரார். உடனே இவர் பஸ் ஏறி சென்று அந்த நபரைப் பார்த்து அந்த பணத்தை திருப்பி கொடுக்க வந்தேன் என்றாராம். உடனே அந்த நபர் அந்த 100 ரூபாய்க்காகவா எவ்வளவு தூரம் வந்தீர்கள் என்று வருத்தப்பட்டாராம். அதற்கு அவர், இது திருப்பி தந்து விடுகிறேன் என்று உத்தரவாதத்துடன் வாங்கப்பட்ட பணம். நான் அதை மறந்து விட்டேன். ஆனால் தேவனோ அதை மறக்கவில்லை கடனாக வாங்கின பணத்தை திருப்பி கொடுக்கும் படியாக என்னை எச்சரித்தார், அதனால தான் புறப்பட்டு வந்தேன் என்றாராம்.
கடனாக வாங்கின பணத்தை குறிப்பிட்ட தேதியில் திருப்பி தந்து விடுவேன் என்று சொல்லியும்,அந்த தேதியில் கொடுக்காமல் பல மாதங்களாக பல வருஷங்களாக உத்தரவாதம் கொடுக்காமல் மௌனமாய் இருந்து கொண்டு ஏமாற்றுவது நீதியல்ல.
சங்கீதம் 15 வது அதிகாரத்தில் ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாது இருக்கிறவனே அவருடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான் மேலும் அவருடைய கூடாரத்தில் தங்குவான் என்று எழுதப்பட்டிருக்கிறதே.
நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாயிருக்கிறான். யாக்கோபு 3:2
இன்றைக்கு பண விஷயத்தில் புற ஜாதிகளிடம் இருக்கக்கூடிய உண்மையும் நீதியும் கிறிஸ்தவ ஜனங்களிடம் இல்லை.ஊழியம் செய்கிறவர்கள் கூட வாங்கின பணத்தை திரும்ப கொடுக்காமல் துணிகரமாக ஏமாற்றுகிறார்கள்.
உண்மையுள்ளவன் பரிபூரண ஆசீர்வாதத்தை பெறுவான் என்று வேதம் சொல்லுகிறது.பண விஷயத்தில் உண்மை இல்லாதபடியினாலே அவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு பகுதியில் தேவனுடைய ஆசீர்வாதத்தை இழந்து போகிறார்கள்.பிறர் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் நெருக்கமான சூழ்நிலையில் உதவிக்காக கொடுக்கப்பட்ட நிலையில் அதை அவர்கள் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றுவது தேவனுடைய பார்வையில் அநீதியாக இருக்கிறது.
பலர் தாங்கள் வாங்கின பணத்தை திருப்பி கொடுக்கும் சூழ்நிலை வரும் போது தங்கள் வாழ்வாதாரத்துக்காக அதை பயன்படுத்துகிறார்கள்.ஏனென்றால் தங்களை அறியாமல் பணத்தை நேசிக்கிற பணப்பிரியர்களாக மாறிப் போனார்கள்.
பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். 1 தீமோத்தேயு 6:1
நீங்கள் கடனை திருப்ப கொடுக்காமல் பல வருடங்களாக மௌனமாக இருந்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு கடன் கொடுத்தவர் எப்படி அதைக் கேட்பது என்று தயங்கிக் கொண்டிருக்கிறார். எனவே உடனே அவரை சந்தித்து இந்த பணத்தை நான் திரும்பி கொடுத்து விடுகிறேன் என்று உத்தரவாதம் அளியுங்கள்.
அடுத்ததாக, நீங்கள் பணத்தை திரும்ப கொடுக்க முடியாமல்நெருக்கமான சூழ்நிலையில் இருந்தால் ஆண்டவரிடம் விண்ணப்பம் பண்ணுங்கள். ஆண்டவரே கடனை திருப்பி கொடுக்க நான் ஒரு தீர்மானம் எடுத்திருக்கிறேன். எனவே இந்த பணத்தை திரும்பக் கொடுக்க எனக்கு உதவி செய்யுங்கள் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.மேலும் கர்த்தர் உங்களுக்கு உதவி செய்யும்போது அந்த பணத்தை உங்கள் சொந்த காரியத்துக்கு பயன்படுத்தாமல், கடனை உடனே திருப்பி கொடுங்கள்.
உங்களிடம் நிலமோ, நகையோ இருக்குமானால், உடனடியாக அதை விற்று கடனை திரும்ப செலுத்த பாருங்கள்.ஏனென்றால் உலக ஆஸ்திகளை விட பண விஷயத்தில் கறையற்றவர்களாகவும் பிழையற்றவர்களாகவும் உண்மையுள்ளவர்களாகவும் இருப்பது முக்கியமாயிருக்கிறது.
இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள். 2 பேதுரு 3:14
ஆமென்..