top of page
ChatGPT Image Sep 10, 2025, 06_09_39 PM.png

பெருமையானவைகளையும் தூஷணங்களையும்.......

நாவை அடக்காதவனுடைய தேவ பக்தி வீண் என்று வேதம் சொல்லுகிறது.

 

மனுஷன் வேஷமாகவே திரிகிறான் என்று வேதம் சொல்கிறது. இன்றைக்கு புறம்பே பரிசுத்தவான்கள் போல தங்களை காட்டிக் கொள்கிறவர்கள், தங்கள் அந்தரங்க வாழ்க்கையிலே தூஷண வார்த்தைகளை பேசுகிறவர்களாகவும்,பிறரை தரம் தாழ்ந்து விமர்சிக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள்.

 

ஆசீர்வாதமான நல்ல நாட்களை காணவேண்டுமென்றால்  பொல்லாப்புக்கு தன் நாவையும் கபடத்துக்கு தன் உதடுகளையும் விலக்கி காக்க வேண்டும்  1 பேதுரு 3-10 

 

ஒருமுறை ஒரு ஊழியக்காரர் அநேக ஊழியக்கார்களை குறித்து குற்றம் சுமத்தி தூசித்துக் கொண்டே இருந்தார். நான் மாத்திரம் தான்  உண்மையாக ஊழியம் செய்கிறேன் என்ற சுய பெருமை அவரிடம் இருந்தது.

 

தேவன் அவருக்கு ஒரு தரிசனத்தை காண்பித்தார்.அதில் தேவனுக்கு முன்பாக நியாயாசனத்துக்கு முன்பாக நின்று கொண்டிருந்தார். தேவன் அவரிடம் சொன்னார்நீ உன்னிடத்தில் உள்ள குறையை உணராமல்  எல்லாரையும் குற்றம் சுமத்தி தூசித்துக்கொண்டே இருந்தாய். 

 

யாக்கோபு 4 ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட  நியாயாதிபதி ஸ்தானத்தில் உட்கார்ந்து கொண்டு நியாயப்பிரமாணத்துக்ககே நியாயாதிபதியாக இருந்தாய். எனவே நீயே உன்னை குறித்து நியாயம் தீர்ப்பு செய்து கொண்டாய் என்று சொன்னாரார்.  இவருக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

 

தேவன் அவரிடம்,நீ 100 சதவிதம் எனக்கு கீழ்படிந்து என்னுடைய சித்தப்படி ஊழியம் செய்திருக்கிறாயா? என்று கேட்ட பொழுது, அவர் இல்லை என்று பதில் சொன்னார்.

அப்படியானால் நீ உன்னிடத்தில் குறையை வைத்துக் கொண்டுபிறரை குற்றவாளி என்று தீர்த்தபடியினாலே அந்த நியாயத் தீர்ப்பை உன் மேல் குவித்து கொண்டாய்.அந்த நியாய தீர்ப்பு இப்பொழுது உன் தலையின் மேல் இருக்கிறது.  நீ பேசின வார்த்தையினாலே நீ குற்றவாளி என்று தீர்க்கப்பட்டாய்.நான் உன்னை மன்னிக்க முடியாது. ஏனென்றால் நீ பிறருக்கு எப்படி அளந்தாயோ அப்படியே உனக்கும் அளக்கப்பட்டது.

 

நான் பிறருக்கு பரிந்து பேசினது போல "பிதாவே இவர்களுக்கு மன்னியும் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே" என்று ஒரு வேளை நீ அவர்களை மன்னித்து அவர்களுக்காக பரிந்து பேசி ஜெபித்திருப்பாயானால், என்னால் உன்னை மன்னித்திருக்க முடியும். என்று சொன்னார்.இவர் பயந்து நடுங்கி தன் நிலையை உணர்ந்து தேவனிடம் மன்னிப்பு கேட்டார். அன்றிலிருந்து பிறரை குறை கூறுவதை நிறுத்தி விட்டாராம்.

 

ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின் படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள், நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின் படியே உங்களுக்கும் அளக்கப்படும். மத்தேயு 7:2

 

ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி. போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை, நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.  ரோமர் 2:1

 

 உங்களில் பாவம் இல்லாதவன் முதலாவது கல்லெறிய கடவன் என்று இயேசு சொன்ன வார்த்தையின் நோக்கத்தை  உணர்ந்து கொள்வோமானால், தண்டனையிலிருந்து தப்பித்து கொள்வோம்.

 

ஆவிக்குறியவன் தன்னை தானே நிதானித்து அறிகிறான் என்று வேதம் சொல்கிறது. முதலாவது நம்மை நாமே சுய பரிசோதனை செய்து பார்ப்போம்.

 

சாத்தானுக்கு ஒரு பெயர் உண்டு. வெளிப்படுத்தின விசேஷம் 12வது அதிகாரத்திலே.. சகோதரர் மேல் இரவும் பகலும் குற்றம் சாட்டுகிறவன். ஆனால் இயேசு கிறிஸ்துவோ தன்னை சிலுவையில் அறைந்தவர்களின் மன்னிப்புக்காக பரிந்து பேசினார். 

 

தன்னை காட்டிக் கொடுக்கப் போகிறவனை  சிநேகிதனே என்று அழைத்தார்.  இன்றைக்கு நாம் எந்த ஆவியை உடையவர்களாக இருக்கிறோம் என்பதை சிந்தித்து பார்ப்போம்.

 

பிறரை குற்றம் சுமத்திக் கொண்டு நியாயம் தீர்த்துக் கொண்டே இருப்போமானால் "நாம் எதை விதைக்கிறோமோ அதை அறுப்போம்" என்கிற ஒரு கண்ணியில் சாத்தான் உங்களை சிக்க வைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை மறந்து போகாதீர்கள்.

இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன? நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே.  ரோமர் 14:10

 

பிறனை அவமதிக்கிறவன் பாவஞ்செய்கிறான்:  நீதிமொழிகள் 14:21

 

இன்றைக்கு பொது வெளியில் அல்லது இணையதளங்களில் பிறரை கேவலப்படுத்தி பேசுகிறீகளென்றால்நீங்கள் பாவம் செய்கிறீர்கள்.

 

 உன் வாயின் வார்த்தைகளினாலே சிக்குண்டாய்.உன் வாயின் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய். என்கிற வசனத்தின் படி நீங்கள் பிசாசினால் பிறரை குற்றவாளிகளாக தூசிக்கும் படி நடத்தப்பட்டு முடிவில் உங்களை குற்றவாளியாக சிக்க வைத்துக் கொண்டிருக்கிறான் என்பதில் எச்சரிக்கையாக இருங்கள்.

 

சரீரத்தை கறைப்படுத்துகிற மேலும் உங்கள் ஆயுள் சக்கரத்தை கொளுத்துகிற,  தூசிக்கிற நாவு உங்களுக்கு கொடுக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாய் இருங்கள்.

 

பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது.  வெளிப்படுத்தினத விசேஷம் 13:5

 

இதே பெருமையின் நாவையும் தூசிக்கிற நாவையும் உடைய அநேகர், பிசாசினால் வீழ்த்தப்படுகிறார்கள்.தேவன் பெருமை உள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார் என்பதை அறியாமல் பலர் தங்களை அறியாமலே பெருமை பேசிக் கொண்டு திரிகின்றனர்.

 

என்னை சுற்றி நிற்கும் எதிரிகளுக்கு முன்பாக நான் வீழ்ந்து போகாதபடிக்கு அதாவது நான் பாவம் செய்யாதபடிக்கு என் நாவை  அடக்கி வைப்பேன் என்று தாவீது சொல்லுகிறான்.

 

என் நாவினால் பாவஞ்செய்யாதபடிக்கு நான் என் வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்குமட்டும் என் வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றேன்.  சங்கீதம் 39:1

 

அக்கிரமத்தை நடப்பிக்கும்படி உங்கள் நாவை அசுத்தத்திற்கு அடிமையாய் ஒப்புக்கொடாமல் பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் நாவை நீதிக்கு அடிமையாய் ஒப்புக்கொடுங்கள் என்று ரோமர் 6 ம் அதிகாரத்தில் பவுல் சொல்கிறார்.

 

உன் மாம்சத்தைப் பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே, அது புத்திபிசகினால் செய்தது என்று தூதனுக்குமுன் சொல்லாதே, தேவன் உன் வார்த்தைகளினாலே கோபங்கொண்டு, உன் கைகளின் கிரியையை அழிப்பானேன்?  பிரசங்கி 5:6

 

தன் வாயையும் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்.  நீதிமொழிகள் 21:23

 

ஒருவன் தூசிக்கிற ஆவியினாலும் பெருமையினாலும் பிறரை குற்றப்படுத்துகிற ஆவியினாலும் நிறைந்திருப்பானானால் அவனுடைய இருதயத்தின் நிறைவினாலே அவன் பிறரை தூசித்து குற்றப்படுத்தி கொண்டேயிருப்பான்.

ஆனால் அவன் தன்னை தானே தீட்டு படுத்திக் கொள்ளுகிறான் என்பதை அவன் அறியாமல் இருக்கிறான்.

 

தங்கள் சுய பெருமையினாலே வீழ்ந்து போன அனேக பரிசுத்தவான்கள் உண்டு. இன்றைக்கு பிசாசு அநேகரை வீழ்த்துவதற்கு பயன்படுத்தக்கூடிய ஆயுதம் ஜீவனத்தின் பெருமை என்கிற ஆயுதமாகும்.அவன் தன் பெருமையினாலே வீழ்ந்து போனது போல அதே கண்ணியை அநேக ஊழியக்காரர்களுக்கும் விசுவாசிகளுக்கும் வைத்திருக்கிறான். அதை அறியாமல் அநேகர் அந்த கண்ணியில் அகப்பட்டு கடைசியில் வீழ்த்தப்படுகிறார்கள்.

 

இன்றைக்கு ஆவிக்குரிய சபைகளில் இருக்கக்கூடிய பரிசுத்தவான்கள் கூட தங்களிடம் இருக்கக்கூடிய ஆவிக்குறிய பெருமைனாலே இயேசுவைப் போல பிறருக்காக பரிந்து பேசாமல் பிறரை குற்றப்படுத்தி தூசித்து இறுதியில்  தங்களை கறை படுத்தி கொள்ளுகிறார்கள். இவர்கள் பரிசுத்தவான்கள் என்று தங்களை தாங்களே சொல்லிக் கொண்டாலும் தங்கள் நாவை நீதியின் ஆயுதமாக தேவனுக்கு ஒப்புக்கொடாமல் அநீதியின் ஆயுதமாக பாவத்துக்கு ஒப்பு கொடுப்பதால் தங்கள் பரிசுத்தத்தை இழந்து இறுதியில் வீழ்ந்து போகிறார்கள்.

 

ஒருவனுடைய இருதயத்தின் நினைவுகள் மேலும் அவனுடைய இருதயத்தின் தோற்றங்கள் எப்படி இருக்கிறதோ அப்படியே அவன் பேசுவான். அப்படியே அவன் இருப்பான்.

 

அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ அப்படியே அவன் இருக்கிறான்.

நீதிமொழிகள் 23:7

 

சுத்த இருதயத்தை விரும்புகிறவனுடைய உதடுகள் இனிமையானவைகள்: நீதிமொழிகள் 22:11

 

மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி, அவன் நிலைநிறுத்தப்படுவான், தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே.  ரோமர் 14:4

 

மனம் திரும்பி வந்த இளைய குமாரன் தகப்பனுடைய வீட்டுக்குள் சென்று விட்டான். ஆனால் தேவனுடைய வீட்டில் உண்மையும் உத்தமுமாய் ஊழியம் செய்து கொண்டிருந்த மூத்த குமாரன் அவனை பழித்து பேசினான். அவனை தூசித்தான் அதனால் அவன் வீட்டுக்குள்ளே போக முடியாமல் வெளியே நின்று விட்டான்.

 

அதே மாதிரி தேவன் தன் வேலைக்காக தெரிந்து கொண்ட ஊழியக்காரர்கள் ஒருவேளை தவறு செய்தால் அவர்கள் மனம் திரும்ப அவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்கிறார்.அவர்களை அழைத்த அன்புள்ள தேவன்,தவறு செய்த அவர்களை மீண்டும் நிலை நிறுத்த வல்லவராய் இருக்கிறார். ஆனால் நாமோ அவர்களை தூசித்து குற்றப்படுத்தி இறுதியில் பரலோக வீட்டுக்கு போகாமல் மூத்த குமாரனை போலவே வெளியே நின்று விடுவோம்.

 

உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம்.  1 கொரிந்தியர் 2:7

 

உலகம் தோன்றுவதற்கு முன்பாக தேவன் தனது மகிமைக்காக ஏற்படுத்தின ரகசியமான தேவன் ஞானத்தை பேச அழைக்கப்பட்ட ஊழியக்காரனே!!தேவன் உன் மூலமாய் பேச வேண்டும் என்றால் உன் நாவை பரிசுத்தமாய் காத்துக்கொள்.

 

என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.   சங்கீதம் 19:14

 

ஆமென்

bottom of page