
கள்ளப் போதகர்களால்
சத்திய மார்க்கம் போதிக்கப்படும்
சாத்தான் முதல் சில நூற்றாண்டுகளில் கிறிஸ்தவத்துடன் நேரடியாக மோதி பார்த்தான். ஆனால் ஜெயிக்க முடியவில்லை. இனி நேரடியாக மோதி கிறிஸ்தவம் பரவுவதை தடுக்க முடியாது என்பதை உணர்ந்தவுடன் ஒரு தந்திரம் செய்தான். ஒரு போலி கிறிஸ்தவ மார்க்கத்தை உண்டு பண்ணினான். எங்கு பார்த்தாலும் வேதப்புரட்டர்கள், கள்ள போதகர்கள். இந்த தந்திரம் ஓரளவுக்கு நன்றாக வேலை செய்தது. அதன் பலனை இன்று வரை கிறிஸ்தவம் அனுபவித்து வருகிறது.
ஒரு கப் பாலில், ஒரு துளி விஷம் இருந்தால் அதை கண்டுபிடிக்க முடியாது. அதே போல அழகாக சத்தியத்தை பேசுகிறார்கள். ஆனால் அதில் மறைந்துள்ள கள்ள உபதேசத்தையும் வேதப் புரட்டுகளையும் ஊழியக்கார்களால் கூட அடையாளம் காண முடியாது. இவர்கள் தேவனுடைய வழிகளை புரட்டுவதில் ஓய மாட்டார்கள்.
ஜனங்கள் அறிவில்லாமல் சங்காரமாகிறார்கள்.ஓசியா 4-6
இவர்கள், நீங்கள் கற்றுக்கொண்ட சுவிசேஷத்துக்கு மாறாக போலியான வேறு ஒரு சுவிசேஷத்தை பிரசங்கிப்பார்கள். வேறு ஒரு சுவிசேஷம் இல்லையே என்று பவுல் சொல்கிறார்.
வேறொரு சுவிசேஷம் இல்லையே. சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. கலாத்தியர் 1:7
அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள். 2 கொரிந்தியர் 11:13
சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. 2 கொரிந்தியர் 11:14
இன்றைக்கு இந்த ஒளியின் தூதனுடைய ஆவி அநேகரிடம் கிரியை செய்கிறது. குறிப்பாக சபைகளில் அதிக அளவில் பெண்களிடம் கிரியை செய்கிறது. சில பெண்கள் இந்த ஆவியினாலே ஆளுகை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சொல்லக்கூடிய தீர்க்கதரிசனங்கள் மேலும் பொய்யான காரியங்களளை நம்பி அநேகர் அவர்களிடம் மாட்டிக் கொள்ளுகிறார்கள்.
சில இடங்களில் முழு சபையும் இந்த ஆவியினால் ஆளுகை செய்யப்பட்ட பெண்ணின் ஆளுகைக்குள் இருக்கும். அந்த சபையின் ஊழியக்காரர் இந்த பெண்ணின் ஆலோசனை கேட்டு தான் சபையை நடத்துவார்.
அதுமாத்திரமல்ல, பல ஊழியக்காரர்கள் கூட இந்த ஆவியின் ஆளுகைக்குள் இருக்கிறார்கள். அவர்களிடம் போலியான வரங்கள் கிரியை செய்யும். அவர்களுடைய ஆராதனைகள் மற்றும் பிரசங்கங்களை வைத்து ஜனங்கள், அவர்களை தவறாக பகுத்தறிகிறார்கள். இவர்களது தவறான துர் உபதேசத்தை அநேகர் பின்பற்றுவார்கள். இவர்களை தங்கள் சபையில் அனுமதித்து, அதன் விளைவாக பல வாலிபப் பிள்ளைகள் வஞ்சிக்கப்படுவதற்கு காரணமாயிருப்பார்கள்.
கள்ளத்தீர்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள். அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள். 2 பேதுரு 2:1
அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள். அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும். 2 பேதுரு 2:2
ஆகையால் அவனுடைய(சாத்தானுடைய) ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும். 2 கொரிந்தியர் 11:15
ஆட்டுத்தோலை போர்த்திய ஓநாய்களைப் போல நீதியின் வேஷத்தை தரித்துக்கொண்ட இத்தகைய போலி ஊழியக்காரர்களின் பிரசங்கங்களையும் ஆராதனைகளையும் தீர்க்கதரிசனங்களையும் பார்த்து கவர்ச்சிக்கப்பட்டு இவர்களால் வஞ்சிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் வீண் புகழ்ச்சிக்கு அடிமையா இருப்பார்கள்.இவர்கள் பண ஆசை உள்ளவர்களாக இருப்பார்கள். ஜனங்களையும் பொருளாசை உள்ளவர்களாக மாற்றி விடுவார்கள். இந்தக் கள்ள தீர்க்கதரிசிகள் உங்களுக்கு எண்ண முடியாத பூமிக்குரிய ஆசீர்வாதங்களை தாராளமாகசொல்வார்கள். நீங்கள் அதில் மதி மயங்கி போய்விடுவீர்கள். அப்படி மதி மயங்கிய நிலையில் அவர்களுக்கு தாராளமாக காணிக்கையை கொடுக்க ஆரம்பிப்பீர்கள்.
பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள். பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது. 2 பேதுரு 2:3
அடுத்ததாக இவர்கள் பெருமை உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களது பெருமையினாலே இவர்களை பகுத்தறிந்து கொள்ளுங்கள்.
இவர்கள் எப்பொழுதும் தங்களைப் பற்றியும் தங்கள் ஊழியங்களை பற்றியும் பெருமையாக பேசிக் கொள்வார்கள்.இத்தகய வீண் பெருமையின் ஆவியை உடைய இவர்களை எளிதாக பகுத்தறிந்து விடலாம்.
ஒரு உண்மையான ஊழியக்காரனிடம் சாந்தமும் மனத் தாழ்மையும் இருக்கும். அவரிடம் மறைந்திருக்கும் இயேசுவின் நுகமான மனத்தாழ்மை, தங்களுடைய வாயின் வார்த்தைகளிலும் செயல்களிலும் வெளிப்படும்.
கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள், அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள், உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.
அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள். மத்தேயு 7:15,16
இந்தக் கள்ள உபதேசிகளை அவர்கள் கனிகளினாலே அறிந்து கொள்ளுங்கள் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சுட்டிக்காட்டினார். அவர்களிடம் கனி, அதாவது அவர்கள் சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்கிறார்களா என்று பாருங்கள். வீட்டிலும் வெளியிலும் சாட்சியாய் வாழ்கிறார்களா என்பதை பகுத்தறிவியுங்கள். அவர்கள் உபதேசத்தையோ அல்லது அவர்களுடைய ஊழியங்களையோ வரங்களையோ வைத்து அவர்களை நிதானிக்காதீர்கள்.
இவர்கள் ஒரு பக்கம் தேவனை துதிப்பார்கள். மறுபக்கம் மனிதர்களை சபிப்பார்கள். இவர்களது குறைகளை சுட்டிக் காட்டும் போது இவர்கள் வாயிலிருந்து கோபமான தூஷண வார்த்தைகளும் சாபமான வார்த்தைகளும் புறப்பட்டு வரும்.
துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகது.
யாக்கோபு 3:10
இவர்கள் தாங்கள் செய்த தப்பபிதங்களுக்காக மனஸ்தாபப்பட்டு, மனம் வருந்தி மன்னிப்பு கேட்கவே மாட்டார்கள்.
இவர்கள் யாக்கோபு 4-11 ம் வசனத்தின் படி சகோதரர்களுக்கு விரோதமாய் பேசி, சகோதர்களை குற்றப்படுத்தி நியாயப்பிரமாணத்துக்கு விரோதமாய் பேசி, நியாயப்பிரமாணத்தின் படி செய்கிறவர்களாய் இராமல் அதற்கு நியாயாதிபதிகளாய் மாறி விடுவார்கள்.இவர்கள் மற்றவர்களை மனம் திரும்புங்கள் என்று சொல்வார்கள். ஆனால் இவர்கள் மனம் திரும்பியிருக்க மாட்டார்கள், தங்களை தாங்களே நிதானித்து அறியாத போலியான ஆவிக்குறியவர்கள்.
சாத்தான் முதலில் கெட்டவன் வேஷத்தில் வருவான். அது பலிக்காவிட்டால் அடுத்து ஊழியக்காரன் வேஷத்தில் செயல் படுவான். அவர்கள் கனிகளால் அவர்களை அறிந்து கொள்ளுங்கள்.
புரிந்தவர்கள் பாக்கியவான்கள்.