top of page
கிறிஸ்துவின் ஒளி உங்களில் பிரகாசிக்கட்டும்_edited.jpg

கிறிஸ்துவின் ஒளி உங்களில் பிரகாசிக்கட்டும்.

முற்காலத்தில், நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ, கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள். வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள். எபேசியர் 5:8

 

இயேசு தன்னை பற்றி கூறும் போது நான் உலகத்தில் இருக்கையில் உலகத்துக்கு ஒளியாய் இருக்கிறேன் என்று கூறினார்.

 

(நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார். யோவான் 9:5)

 

ஆனால் இயேசு இந்த உலகத்தை விட்டு சென்ற போது உலகத்துக்கு வெளிச்சமாய் நம்மையே நியமனம் செய்தார்.

 

(நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள், மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.  மத்தேயு 5:14)

 

இயேசு வெளிப்படுத்தின ஒளியானது,சில உபதேசங்களோ அல்லது போதனைகளோ அல்லது கிரியைகளோ அல்ல. அது புதிய உடன்படிக்கை சத்தியம் கூட அல்ல. தன்னுடைய ஜீவியத்தையே ஒளியாக பிரகாசித்த இயேசுவினுடைய ஜீவியத்தில் இருந்து தான் தெய்வீக சுபாவங்கள் நமக்கு ஒளியாக வீசியது.

 

நம்மில் ஒருவராகிலும் தனிப்பட்ட விதத்தில் தேவனுடைய ஒளியை அதாவது ஜீவியத்தை பூரணமாய் வெளிப்படுத்த முடியாது. ஆனால், நம்முடைய சரீரங்களின் இயேசுவின் மரணத்தை நாம் சுமந்தால் மாத்திரமே இயேசுவின் ஜீவனை நாம் வெளிப்படுத்தி விட முடியும்.

 

 

புதிய ஏற்பாட்டில் இரண்டு முறை தேவனை ஒருவனும் ஒருகாலும் கண்டதில்லை என எழுதப்பட்டிருக்கிறது. முதன் முதலாக நமக்கு தேவனைப் பற்றி இயேசுவே வெளிப்படுத்தினார்.

 

இயேசு தன் கரங்களை ஒரு குஷ்டரோகியை தோளோடு வைத்து அணைத்துக்கொண்ட போது, தேவன் எப்படிப்பட்டவர் என்று வெளிப்படுத்தினார். அவர் காசுக்காரர்களை ஆலயத்தில் இருந்து துரத்தியபோதும் தேவன் எப்படிப்பட்டவர் என்பதை வெளிப்படுத்தினார். இவ்வாறாக என்னைக் கண்டவன் பிதாவை கண்டான் என்று இயேசு தன் சீடர்களிடம் திட்டமாக கூறினார். அந்த இயேசுவோ இப்பொழுது பரலோகத்துக்கு சென்று விட்டார்.

 

பிதாவை இயேசுவினிடத்தில் சீஷர்கள் கண்டதைப் போலவே நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்பாய் இருந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருப்பதையும் நம் சபையில் தேவன் இருப்பதையும் இன்றும் ஜனங்கள் காண முடியும்.

 

தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை. நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்பு கூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார். அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும். 1 யோவான் 4:12

 

சபையில் நம்மை கவனித்துப் பார்ப்பவர்களுக்கு கிறிஸ்து எப்படிப்பட்டவராய் இருப்பார் என்பதை நம் மூலமாக அறியக்கூடியதாக இருக்க வேண்டும். இவ்வாறு நம் ஜீவியத்தின் மூலமாக இயேசுவின் ஜீவனை நாம் வெளிச்சமாக பிரதிபலிக்க தவறி இருந்தால் நம்முடைய பிரதான அழைப்பிலிருந்து தவறிவிட்டோம்.

 

நாங்கள் தினமும்வேதம் வாசிக்கிறோம். உபவாசித்து ஜெபிக்கிறோம். ஆவியோடும் உண்மையோடும் ஆராதிதக்கிறோம் என்று சொல்லுகிறவர்களிடம் கூட ஒரு உண்மையான சகோதர சிநேகம் இல்லை. அவர்கள் பிறரை பகைக்கிறவர்களாகவும் பிறரை துச்சமாக எண்ணுகிறவர்களாகவுமே இருக்கிறார்கள். அவர்கள் இருதயத்திலிருந்து ஜீவ தண்ணிருள்ள நதிகளுக்கு பதிலாக இன்னும் கோபம் கசப்பு பகைமை வைராக்கியம்,தூஷணம் போன்ற காரியங்கள் தான் புறப்பட்டு வருகிறது.வேதாகமத்தின் படி அவர்கள் இருளில் இருந்து இருளுக்கு நடக்கிறார்கள் என்பதை அறியாமல் இருக்கிறார்கள். அவர்கள் முற்றிலும் தங்களை தாங்களே நிதானித்து அறியாத கண் சொருகிப்போன குருடர்களாக இருக்கிறார்கள்.

 

தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். 2 கொரிந்தியர் 4:4

 

மேற் சொல்லப்பட்ட வசனத்தின் படி அவ்விசுவாசிகள் மாத்திரமல்ல,விசுவாசிகள் கூட மனக்கண் குருடாக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

 

தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான். இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான்.  1 யோவான் 2:11

 

 

இவர்கள் தங்கள் அந்தரங்கத்தில் மறைந்திருக்கிற கோபம்,கசப்பு,பகைகள், விரோதங்கள் மற்றும் மாயமாலமான பெருமை பற்றிய உணர்வே இல்லாமல் தங்களை பரிசுத்தவான்கள் என்று எண்ணுகிறவர்கள்.

 

இவர்கள் இன்னமும் தன்னிடமிருக்கும் நான் என்கிற சுயத்துக்கு மரிக்காதவர்கள். தங்கள் சுயத்தை சிலுவையில் அறையாதவர்கள். இவர்கள் தங்களுடைய சுயநீதிக்கு தீவிரமாக கீழ்படிகிறபடியினால் தேவனுடைய நீதிக்கு கீழ்படியாமல் போனவர்கள்.  இவர்கள் கிறிஸ்துவின் ஒளியின் ஆயுதங்களை தரித்து கொள்ளாமல் இருளில் இருப்பவர்கள்.

 

ஒளியில் இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனை பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான். 1 யோவான் 2-9

 

உதாரணமாக ஒரு வீட்டில் கணவனும் மனைவியும் மேலும் மற்றவர்களும் தங்கள் சுயத்துக்கு மரித்தால் மாத்திரமே சமாதானமும் சந்தோஷமும் அவர்களை ஆளுகை செய்ய முடியும். அந்த வீட்டில் நெருக்கங்களும் துன்பங்களும் உபத்திரங்களும் சோதனைகளும் எத்தனை அழுத்தமாய் இருந்த போதும் அது அவர்களின் சமாதானத்தை பாதித்து விடாது. அதற்கு பதிலாக மரணம் எங்களிலும் கிறிஸ்துவின் ஜீவன் உங்களிலும் கிரியை செய்கிறது என்றே கெம்பிரமாக சொல்ல முடியும். ஆம் இதுவே நம் ஒவ்வொருவருக்கும் உள்ள அழைப்பு ஆகும்.

 

ஒரு ஆவிக்குறிய மனிதன், மற்ற விசுவாசிகள் தங்கள் ஜீவியத்தில் ஒரு பொருட்டாய் எண்ணாத பகுதிகளிலும் வெளிச்சம் பெற்றவனாய் தன்னை கழுவிக்கொண்டு தொடர்ச்சியாக தன்னை நியாயம் தீர்த்து வாழ்ந்திடுவான். ஆவிக்குறியவன் தன்னை தானே நிதானித்து அறிகிறான்.

 

ஒரு ஆவிக்குறிய மனுஷன் தான் தேவனுக்கு வலிமை உள்ளவனாய் விளங்குவதற்கு தடையா இருக்கக்கூடிய எல்லா காரியங்களுக்கும் தன் உள்ளான ஜீவியத்தில் ஒவ்வொரு நாளும் மரித்திட வேண்டும் என்கிற உண்மையை உணர்ந்தவனாய் இருப்பான். அவனுடைய ஜீவிய பாதை அனுதினமும் சிலுவை சுமக்கும் பாதையாய் மாறி தன் சரீரத்தில் இயேசுவின் மரணத்தை எப்பொழுது சுமந்து திரியும் நிலைக்கு வந்து விடுவான்.  ஆவிக்குறிய மனிதன் எந்த மனுஷனுக்கு முன்பாகவும் தன்னை தாழ்த்துவதற்கு ஆயத்தம் உள்ளவனாய் இருப்பான்.

 

ஒரு ஆவிக்குறிய மனிதன், இளையவனோ அல்லது முதியவனோ யாரிடமும் மன்னிப்பு கேட்பதற்கு தயங்குவதில்லை  ஏனென்றால் மனைவியிடமோ, சகோதரரிடமோ அல்லது பிறரிடமோஅவன் தன்னால் பாதிக்கப்படும்படி நடந்திருந்தால் அவனுடைய ஜெபத்தை ஊழியத்தையும் ஒருபோதும் தேவன் அங்கீகரிக்க மாட்டார் என்பதை அறிந்திருக்கிறான்.

 

எனவே யாராலும் ஒருவருக்கு தான் தீங்கு செய்து விட்டதாக உணர்ந்தால் பலிபீடத்தில் தன் காணிக்கையை வைத்து விட்டு அந்த நபரோடு ஒப்புறவாகி பின்பு வந்து தன் காணிக்கையை தேவனுக்கு செலுத்துவான்.

 

மேலானவைகளையும் உள்ளான அந்தரங்கங்களையும் கண்ணோக்கி பார்த்து வாழ்கிற ஒரு ஆவிக்குறியவன் அதாவது இயேசுவின் ஒளியை பெற்ற ஒரு மனுஷன் தானாகவே வெளியரங்கமாய் உள்ளவைகளையும் கண்ணோக்கி பார்த்து ஜீவிப்பான்.

அவன் எல்லாவற்றையும் நிதானித்து அறிவான்.அவன் சந்திப்பின் நாளிலே நியாயம் தீர்க்கப்படான்.

 

கிறிஸ்து நமக்காகத் தம்மைத் தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள். எபேசியர் 5:2
 

ஆமென்.

bottom of page