top of page

விவாகரத்து என்கிற மீறுதல்

  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Instagram

ன்றைக்கு பல கிறிஸ்தவ குடும்பத்தினர் இயேசு கிறிஸ்து சொன்ன கட்டளைகளை மீறி விவாகரத்து செய்கின்றனர்.

 

இது பாவம் என்பதை உணராதிருக்கின்றனர்! விவாகரத்து  பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது என்பதை அறியாமல் இருக்கின்றனர்.

பலர் இச்சையினாலே வேறு பெண்ணை திருமணம் செய்ய விரும்பி தேவனுக்கு முன்பாக உடன்படிக்கை செய்து திருமணம் செய்த தன் முதல் மனைவியை விவாகரத்து செய்கின்றனர்.

 

1 தீமோத்தேயு 3-2 ல் சபையின் மூப்பர்கள் மற்றும் ஊழியம் செய்பவர்கள் ஒரே மனைவியை உடைய புருஷர்களாக இருக்க வேண்டும் என்று வேதம் சொல்கிறது.

 

ஆனால் இப்படி வசனத்துக்கு கீழ்படியாதவர்கள் தான் இன்றைக்கு சபையின் மூப்பர்களாகவும் ஊழியங்களில் பொறுப்பாளர்களாகவும் இருக்கின்றனர்.

 

இவர்கள் எப்படி வாலிப பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக இருக்க முடியும்?

 

  • இப்படி இயேசுவின் கட்டளைக்கு எதிராக செயல்படுவது தேவ நீதியா? இது மீறுதல் அல்லவா?

  • உலகத்தார் செய்வது போல கிறிஸ்துவை உடையவர்களாகிய நாம் செய்யலாமா?

 

தேவ வசனத்துக்கு எதிராக உலகத்தார் செய்வது போல செய்கிறவர்கள் தானே உலகத்துக்கு ஒத்த வேஷம்  தரிப்பவர்கள். இவர்கள் ஒரு புறம் தேவனை மாத்திரம் நேசிக்கிறோம் என்று பொய் சொல்லி விட்டு மறுப்புறம்  உலகத்தை நேசிக்கிறவர்கள்.

 

உன் வழிகளிலெல்லாம் என்னை நினைத்து கொள் என்று தேவன் சொன்னார்.

ஆனால் இவர்கள் தங்களது வழிகள் செம்மையாகவே இருக்கிறது என்று  நினைக்கிறார்கள். ஆனால் அது அவர்களுக்கு மரண வழிகள் என்பதை அறியாமல் போகிறார்கள். மனிதனுக்கு செம்மையாக தோன்றுகிற வழிகள் மரண வழிகள் என்று வேதம் சொல்கிறது.

 

விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான். யாக்கோபு 4-4

 

விவாகரத்தை குறித்து இயேசு என்ன சொன்னார் என்பதை கவனமாக படியுங்கள்.

 

தன் மனைவியைத் தள்ளிவிடுகிற எவனும், தள்ளுதற்சீட்டை அவளுக்குக் கொடுக்கக்கடவன் என்று உரைக்கப்பட்டது. 

நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; வேசித்தன முகாந்தரத்தினாலொழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன், அவளை விபசாரஞ்செய்யப்பண்ணுகிறவனாயிருப்பான்; அப்படித் தள்ளிவிடப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்.  மத்தேயு 5:31,32

 

 

தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணுகிறவன் விபசாரஞ்செய்கிறான், புருஷனாலே தள்ளப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறான். லூக்கா 16-18.

 

 

அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே, பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே. ஆகையால் ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்குத் துரோகம்பண்ணாதபடிக்கு, உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.   தள்ளிவிடுதலை நான் வெறுக்கிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்; அப்படிப்பட்டவன் கொடுமையினால் தன் வஸ்திரத்தை மூடுகிறான் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; ஆகையால் நீங்கள் துரோகம்பண்ணாமல் உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். மல்கியா 2:15,16

 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இரண்டு காரணங்களுக்காக விவாகரத்து செய்யலாம் என்று சொன்னார் முதலாவது கணவனோ மனைவியோ மரித்த பிறகு இல்லையென்றால் அவர்கள்  விபச்சார அல்லது வேசித்தனம் செய்தால் ஒழிய  எந்த ஒரு காரியத்திற்கும் விவாகரத்து செய்ய முடியாது செய்யவும் கூடாது என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கட்டளை.

 

பரிசேயர்கள் இயேசுவிடம் மனைவியை தள்ளி விடுவது நியாயமா என்று கேட்ட போது, அவர் பிரதியுத்தரமாக: மோசே உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறது என்ன என்று கேட்டார்.  அதற்கு அவர்கள்: தள்ளுதற்சீட்டை எழுதிக்கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே உத்தரவுக்கொடுத்திருக்கிறார் என்றார்கள்.  இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: உங்கள் இருதயகடினத்தினிமித்தம் இந்தக் கட்டளையை உங்களுக்கு எழுதிக்கொடுத்தான். 

 ஆகிலும், ஆதியிலே மனுஷரைச் சிருஷ்டித்த தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார்.  இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்; இவ்விதமாய் அவர்கள் இருவராயிராமல் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள். ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.  மாற்கு 10:3-9

 

 2 யோவான் 9 ல் கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திராமல் மீறி நடப்பவன் எவனும் தேவனை உடையவன் அல்ல சொல்லப்பட்டிருக்கிறது.

 

இன்றைக்கு இயேசு கட்டளையிட்ட காரியத்தை தெரிந்தும் பல குடும்பத்தினர் தங்கள் பிள்ளைகளுக்கு விவாகரத்து  செய்கின்றனர். அடுத்ததாக பல ஊழியக்காரர்கள் தவறான ஆலோசனையை கொடுக்கின்றனர். இவர்கள் வசனத்துக்கு மாறாக இப்படி விவாகரத்து செய்தவர்களுக்கு மறுமணம் செய்து வைக்கின்றனர், இது ஒரு கீழ்படியாமை மாத்திரமல்ல பாவம். இப்படி செய்பவர்கள் நிச்சயம் தேவனுக்கு கணக்கு கொடுக்க வேண்டும்.

 

 விவாகம்பண்ணிக்கொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் புருஷனை விட்டுப்பிரிந்து போகக்கூடாது.   பிரிந்துபோனால் அவள் விவாகமில்லாதிருக்கக்கடவள், அல்லது புருஷனோடே ஒப்புரவாகக்கடவள்; புருஷனும் தன் மனைவியைத் தள்ளிவிடக்கூடாது.  1 கொரிந்தியர் 7:10,11

 

 மனைவியானவள் தன் புருஷன் உயிரோடிருக்குங்காலமளவும் பிரமாணத்தினால் கட்டப்பட்டிருக்கிறாள்; தன் புருஷன் மரித்தபின்பு தனக்கு இஷ்டமானவனாயும் கர்த்தருக்குட்பட்டவனாயுமிருக்கிற எவனையாகிலும் விவாகம்பண்ணிக்கொள்ள விடுதலையாயிருக்கிறாள். ஆகிலும் என்னுடைய அபிப்பிராயத்தின்படி அவள் அப்படியே இருந்துவிட்டால் பாக்கியவதியாயிருப்பாள். 1 கொரிந்தியர் 7:39,40.

மேல் சொல்லப்பட்ட வசனத்தை நன்றாக படித்து புரிந்து கொள்ளுங்கள்.

 

நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.

யோவான் 13-34 என்று இயேசு சொன்ன கட்டளைக்கு  கணவன் மனைவியும் கீழ்படியவில்லையென்றால்  அவர்கள் யாருக்கு கீழ்படிந்து கொண்டிருக்கிறார்கள். கிறிஸ்துவின் கட்டளைகளுக்கு கீழ்படியாத கிறிஸ்துவின் ஆவி இல்லாதவர்கள் அவருடையவர்களல்ல என்று வேதம் சொல்கிறது. தேவ சமூகத்தில் தேவனால் இணைக்கப்பட்டவர்களை தேவ கட்டளைகளுக்கு மாறாக பிரிக்கும் படி  துணிகரமாக பின்புலத்தில் செயல்படுகிறவர்கள்  யாரால் ஆளுகை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை பகுத்தறியுங்கள்.

 

 வேதாகமத்தில் கணவன் மனைவி என்கிற உறவை சபைக்கும் மணவாளனுக்கு முள்ள உறவுக்கு ஒப்பிட்டு சொல்லப்பட்டிருக்கிறது.

 

இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.  இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன். 

 

எப்படியும், உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்; மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள்.  எபேசியர் 5:31-33

 

அப்படியென்றால் அந்த உறவு தேவனுடைய பார்வையில் எவ்வளவு உயர்ந்தது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவருடைய திருமண வாழ்க்கையிலும் அவர்களுடைய வயது ஆக ஆக இருவருக்குமிடையே உள்ள அன்பும் கூடிக்கொண்டே போக வேண்டும். கிறிஸ்துவுக்குள் நாம் இருப்பது போல நம்முடைய அன்பு கிறிஸ்துவின் மேல் அதிகரித்து கொண்டு போவது போல ஒரு கணவன் மனைவிக்கு இடையேயான அன்பும் அதிகரித்துக்

கொண்டே போக வேண்டும். 

 

வெளிப்படுத்தின விசேஷசம் 2 ம் அதிகாரத்தில் ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று தேவன் சொல்கிறார், அதை குறையாக காண்கிறார். மேலும், மனம் திரும்ப சொல்கிறார்.  அதேமாதிரி இன்றைக்கு பல குடும்பங்களில் கணவன் மனைவியிடையே உள்ள அன்பு தணிந்து கொண்டே போகிறது.

 

இன்றைக்கு பல கணவன்கள் மனைவிகள் தங்கள் காரியங்களை வெறும் கடமைக்காகவே செய்கிறார்கள்.

 

ஒரு குடும்பத்தில் அன்பு குறைந்து போயிற்று என்றால் அதாவது ஒருவருக்கொருவர் தங்களை தாழ்த்தி தங்களுக்குண்டான காரியங்களில் விட்டு கொடுத்து வாழ்கிற வாழ்க்கை இல்லையென்றால் அவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் கிறிஸ்து அவர்களிடையே இல்லை. அவர்களிடையே கிறிஸ்துவின் அன்பு இல்லை.மேலும் அந்த குடும்பம் பரிசுத்த ஆவியின் நிறைவில் இல்லை என்றே சொல்ல வேண்டும். உங்களுக்கு அருளப்பட்ட ஆவியினாலே தேவ அன்பு உங்கள் இருதயத்தில் ஊற்றப்படுகிறது அது உங்களை வெட்கப்படுத்தாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அன்பு சகலத்தையும் தாங்கும் சகலத்தையும் சகிக்கும், அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது, அன்பு அயோக்கியமானதை செய்யாது, சினமடையாது.  அன்பில்லாதவன் தேவனை அறியான்.  காண்கின்ற சகோதரனிடத்தில் அன்பு கூறாதவன் காணாத தேவனிடத்தில் எப்படி அன்பு கூறுவான். ஒரு குடும்பத்தில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அன்பு கூறவில்லை என்றால் காணாத தேவனிடத்தில் எப்படி அன்பு கூறுவார்கள்? ஒருவன் என்னில் அன்பு கூர்ந்தால் என் கற்பனைகளை கைக்கொள்வான் என்று இயேசு சொன்னார். இன்றைக்கு கணவன் மனைவி வசனத்தை கேட்கிறார்கள்? ஆனால் அதன்படி செய்வதில்லை. இவர்கள் தங்களை தாங்களே வஞ்சிக்கிறார்கள்.

அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.  யாக்கோபு 1:22

 

இன்றைக்கு உலகத்தார் மாதிரி  கிறிஸ்தவ குடும்பங்கள் எளிதாக விவாகரத்து செய்கின்றனர். ஏனென்றால், இவர்கள் கர்த்தருடைய கற்பனைகளுக்கு கீழ்படிந்து ஒருவரை ஒருவர்  நேசிப்பதில்லை. குடும்பத்துல நீ பெரியவனா நான் பெரியவனா என்கிற சுயப்பெருமை இருக்கிறது. தங்கள் சுயத்தை சிலுவையில் அறையாதவர்கள்.  கர்த்தர் எப்பொழுதும் பெருமைக்கு எதிர்த்து நிற்கிறார். தெய்வபயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள் என்று வசனம் சொல்கிறது. 

 

மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்கு கீழ்ப்படியுங்கள்.  கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார். ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறது போல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும். புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,  எபேசியர் 5:21-25

 

இன்றைக்கு அநேக குடும்பத்தில் தேவனுடைய கற்பனைகளுக்கு எதிர்மாறாக நடந்து கொள்கிறார்கள். சில குடும்பத்தில் மனைவி புருஷனுடைய ஸ்தானத்தில் இருந்து அதிகாரத்தை கையில் எடுத்து கொள்கிறாள், திருமணம் முடிந்த பிறகு வசனத்தின் படி நடக்காமல்  பெற்றோர் கொடுக்கும் தவறான ஆலோசனைக்கு கீழ்படிந்து  புருஷருக்கு எதிர்த்து நிற்கிற மனைவிகள் ஏராளம். பெரும்பாலும் குடும்பங்களில் பிரிவினை மற்றும் பிரச்சனைகளை விதைப்பதற்கு சாத்தான் பயன்படுத்துவது பெண்களை தான். இந்த விஷயத்தில் ஏவாள் வீழ்ந்தது போல இவர்களும் எளிதாக அவனது வலையில் வீழ்ந்து விடுகிறார்கள். இவர்கள் மூன்றாம் நபரின் ஆலோசனையை கேட்டு சிக்கலில் மாட்டி கொள்கிறார்கள், இவர்களை பிசாசு எளிதாக வஞ்சித்து விடுகிறான். ஏவாளை போல பிசாசின் குரலை கேட்டு எளிதாக பிசாசின் கண்ணியில் விழுந்துவிடுகிறார்கள்.

 

எனவே தான் பெண்கள் சபையில் பேசக்கூடாது, புருஷர் மேல் அதிகாரம் செலுத்த கூடாது என்று பவுல் ஆலோசனையாக சொல்லியிருக்கலாம்.

 

உபதேசம்பண்ணவும் புருஷன்மேல் அதிகாரஞ் செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை. அவள் அமைதலாயிருக்கவேண்டும். 1 தீமோத்தேயு 2-12

 

தங்கள் மனைவிகளின் தவறான ஆலோசனைகளை கேட்டதால் பல ஊழியக்காரர்கள் தங்கள் ஊழியத்தில் வீழ்ச்சியடைந்து போயிருக்கிறார்கள்.புருஷனுக்கு மனைவி கிரிடமாக இருந்தாலும் சிலருடைய வீழ்சிக்கு பெண்களே காரணமாக இருக்கிறார்கள்.

மாமியாரோ,மாமனாரோ பெற்றோரோ யாராயிருந்தாலும்தேவனுடைய வசனங்களுக்கு உட்பட்டு தான் கணவன் மனைவிக்கு ஆலோசனை சொல்ல வேண்டும்.

 

ஒரு கணவன் மனைவிக்கு தேவ வசனத்துக்கு விரோதமாக தவறான ஆலோசனை சொல்லி அவர்களை பிரித்து விட்ட ஒருவருடைய மகள் தன் கணவனை இழந்து பிரிந்திருக்கிறார். இன்றைக்கு தேவனுடைய கற்பனைகளை மீறி தேவனுடைய உடன்படிக்கைக்கு எதிராக எதை விதைக்கிறீர்களோ அதையே உங்கள் பிள்ளைகளுடைய வாழ்க்கையில் அறுப்பீர்கள்.

 

ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன். 1 கொரிந்தியர் 11

 

 புருஷனுக்கு கிறிஸ்து தலையாயிருக்கிறார். அதாவது புருஷன்  கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்க வேண்டும்.கிறிஸ்துவின் ஆளுகையின்

மாதிரி அந்த புருஷன் மூலமாக குடும்பத்தில் இருக்க வேண்டும்.

இயேசு பரலோகத்திலிருந்து வந்தும் தன்னை தானே தாழ்த்தி சீஷர்களின் கால்களை கழுவினார். இந்த  தாழ்மையின் மாதிரியை அதாவது அடிசுவடை பின்பற்றாமல் நான் பெரியவன் நீ எனக்கு அடிமை என்று  சொல்லி மனைவிகளை அடிமைத்தனத்தில்வைத்திருக்கிற கிறிஸ்துவின் அன்பு இல்லாத புருஷர்கள் ஏராளம்.

 

வேலைத்தலத்தில் தங்களை கடினமாக நடத்துகிற எஜமானனை பொறுமையோடு சகிக்கிற புருஷர்கள் தங்கள் மனைவி செய்கிற தவறுகளை பொறுத்து கொள்வதில்லை. மனைவிகளை கனம் பண்ணுங்கள், மனைவிகளை கசந்து கொள்ளாதிருங்கள் என்று வேதம் சொல்கிறது.

இன்றைக்கு ஊழியம் செய்கிற அநேகர் தங்கள் மனைவிகளோடு பேசுவது இல்லை?! முதலாவது வீட்டில் ஊழியம் செய்யட்டும், அதாவது மனைவி மேல் அன்பு கூறட்டும். அதை செய்யாமல் சபையில் வந்து நான் அன்பானவன் என்று நடிப்பவர்கள் ஏராளம்..... குடும்பத்தில் சாட்சியோடு ஜீவிக்க முடியவில்லையென்றால்  தயவு செய்து ஊழியம் செய்யாதீர்கள்.

 

ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்? 1 தீமோத்தேயு 3-5

 

புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள். ஆதியாகமம் 2:24

 

சொந்த மாம்சத்தை பகைத்தவன் எவனுமில்லை, கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்க மாட்டாதே! சூரியன் அஸ்தமாவதற்கு முன்பே உங்கள் கோபம் தணியக்கடவது. இன்றைக்கு கோபம் என்கிற மாம்ச கிரியையினாலே தேவ நீதியை மீறி குடும்பத்தை பிரித்தவர்கள் அநேகர்.

 

இன்றைக்கு மனைவியை அடிக்கிற இழிவான செயலை அநேக விசுவாசிகள் செய்கின்றனர். இவர்கள் எப்படி பக்தியுள்ள சந்ததியை உருவாக்குவார்கள்.பல குடும்பங்களில் மனைவிகளும் புருஷருக்கு எதிர்த்து நிற்கிறார்கள்.

 

கிறிஸ்துவின்  தாழ்மையும்  தன்னைப் போல பிறரை நேசிக்கும்  அன்பும் குடும்பத்தில் இல்லை என்பதால் பல குடும்பத்தினர் விவாகரத்து வரை கடந்து போகிறார்கள். தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்க கடவன் என்று சொல்லப்பட்ட வசனத்துக்கு யாரும் பயப்படுவதில்லை.தேவனுக்கு முன்பாக  உடன்படிக்கை செய்துகொண்ட கணவன் மனைவியை அவர்களது குடும்பத்தார் எளிதாகப் பிரித்து விடுகிறார்கள். இது எவ்வளவு பெரிய பாவம்.இன்றைக்கு தேவனுடைய கற்பனைகளுக்கு பயப்படாமல் உலகத்துக்கு ஒத்த வேஷம் தரித்து கொண்ட ஊழியக்காரர்கள் விவாகரத்துக்கு துணை போகிறார்கள்.

மேலும் தேவனுடைய கற்பனைகளுக்கு மாறாக இச்சையினாலே வேறு ஒருவரை திருமணம் செய்யும் நோக்கத்தில் தேவனோடு செய்த உடன்படிக்கையை மீறி தன் மனைவியை விவாகரத்து செய்தவர்களுக்கு  திருமணமும் செய்து வைக்கிறார்கள்.

 

 தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணுகிறவன் விபசாரஞ்செய்கிறான், புருஷனாலே தள்ளப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறான்.  லூக்கா 16:18

 

ஏனெனில், தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு விரோதமான எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரப்போகிறது. எபிரேயர் 2-2

 

 வேதாகமத்தின் சட்ட திட்டத்தின் படி தான் நம்  குடும்ப வாழ்க்கை இருக்க வேண்டும்.உலக பிரகாரமான சில காரியங்களில் adjust செய்தால் தான் வாழ முடியும் என்று உலகத்தார் சொல்வார்கள்.

மனிதன் மூலமாக  பிசாசு பேசுகிற குரலை கேட்டு தேவனுடைய கிருபையை இழந்து போனவர்கள் அநேகர். உலகத்தார்  போல வாழ நாம் அழைக்கப்பட்டவர்கள் அல்ல!

 

காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. பிரசங்கி 12-13

 

ஆமென்.

bottom of page