நீ வெட்கபடாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு. 2 தீமோத்தேயு 2:15
நாம் வெட்கப்படாத ஊழியக்காரனாய் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சந்திக்கவேண்டும். சந்திப்பின் நாளிலே ஆண்டவர் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு முன்பாக நம்மைப் பார்த்து உன்னை உண்மையுள்ள ஊழியனாக தெரிந்து கொண்டேன், நீயோ உண்மை இல்லாதவனாய் உலகில் வாழ்ந்தாயே என்று கூறுவார் என்றால் அது எவ்வளவு பெரிய தலை குனிவாகவும் வெட்கமாகவும் இருக்கும்?!
நான் தேவனுக்காக நன்றாக ஊழியம் செய்தேன் என்று நாம் சொல்லலாம் ஆனால் கர்த்தர் நம்மை குறித்து உண்மையும் உத்தமுமான ஊழியக்காரனே என்று அழைக்க முடியுமா? சந்திப்பின் நாளிலே அவர் திருமுகத்தை தைரியமாக பார்க்க முடியுமா? அன்றைக்கு அநேகர் தலைகுனிந்து அவருக்கு முன்பாக நிற்பார்கள். ஒரு வேளை அவர் நம்மை பார்த்து அக்கிரம சிந்தைகாரனே என்று சொன்னால் ஆயுள் முழுவதும் ஊழியம் செய்த நமக்கு எப்படியிருக்கும்.
யூதாஸ் காரியோத் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினால் அழைக்கப்பட்ட ஒரு அற்புதமான ஒரு ஊழியக்காரன். இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவனாய் தேர்ந்தெடுக்கப்பட்டவன்.அவன் அழைப்பு உண்மையானதே. ஆனால், பரிசேயர் சதுசேயரோடு மறைவான நட்பு வைத்திருந்தான், அவன் பண ஆசையினிமித்தம் தவறானவர்களோடு இணைந்து தன் அழைப்பில் உண்மையற்றவனாய் மாய்மாலக்காரனாக நடித்தே தன் வாழ்க்கையை ஓடி முடித்தான். முப்பது வெள்ளிக்காசு அவனுடைய கண்கள் குருடாகி விட்டது. பணத்துக்காக ஆசைப்பட்டு இயேசுவை முத்தமிட்டு காட்டிக்கொடுத்தான். மூன்றரை வருடங்கள் ஆண்டவரோடு வாழ்ந்தாலும் முடிவிலே அவனுடைய உண்மை நிலை வெளிப்படுத்தப்பட்டது.
இன்றைக்கு அநேகர் பணத்துக்காக கள்ள போதகர்களோடும் அரசியல்வாதிகளோடும் பணத் தேவைக்காக மறைவாக நட்பு வைத்திருக்கின்றனர். இவர்களோடு கொண்ட நட்பினால் பலர் உலகத்துக்கு ஒத்து போய்விடுகிறார்கள்.
அன்றைக்கு அந்த விலையேறப்பெற்ற அந்த பரிமள தைலத்தை மரியாள் இயேசுவின் பாதத்தில் ஊற்றிய போது இந்த தைலத்தை 300 பணத்துக்கு விற்று தரித்திரருக்கு கொடுத்திருக்கலாமே என்று யூதாஸ் காரியோத்து சொன்னான். இவனது பேச்சை கேட்டவர்கள் இவன் சிறந்த ஆவிக்குரியவன் மற்றும் பரந்த மனப்பான்மை உள்ளவன் என்று சொல்லி இருப்பார்கள். ஆனால் அவனுடைய வாழ்க்கையின் முடிவு எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றியது. ஆனால் இன்றைக்கு அநேகருடைய பிரசங்கத்தையும் ஆராதனையையும் ஊழியங்களையும் பார்த்து இவர்கள் ஆவிக்குரியவர்கள் என்று சொல்லலாம். ஆனால் அவர்களின் அந்தரங்கமான வாழ்க்கையின் மறு பக்கம் பண ஆசைக்கும் வீண்புகழ்சிக்கும் உலக ஆசை இச்சைகளுக்கும் அடிமையாகி யூதாசை போல மாய்மாலமாகத் தான் இருக்கிறது. இவர்கள் ஒருவேளை தங்களை நிதானித்து அறிவார்கள் என்றால் தங்கள் வழிகளிலிருந்து மனம் திரும்புவார்கள்.
பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது என்று வேதம் சொல்கிறது. அந்த பண ஆசையினாலே அநேகர் தேவன் மேலே உள்ள விசுவாசத்தை விட்டு விலகி பணத்தின் மேலும் உலக காரியங்களில் மேலும் தங்கள் விசுவாசத்தை வைக்கிறார்கள், இறுதியில் தங்களை தாங்களே உருவ குத்திக்கொள்கிறார்கள். தேவனுக்கும் உலக பொருளுக்கும் ஊழியம் செய்ய முடியாது. தேவனுக்கு ஊழியம் செய்யும் போது வெளியரங்கமான வாழ்வில் ஒரு மாய்மால முகமுடியையும் அந்தரங்கத்தில் பண ஆசை என்ற முகமூடியும் அணிந்து இருப்பீர்கள் என்றால் தேவனுக்கு முன்பாகப் வெட்கப்பட்டு போய் விடுவீர்கள்.
எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது, ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார். லூக்கா 16-13
பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். 1 தீமோத்தேயு 6-10
பிரியமான ஊழியக்காரனே நீ எங்கே இருக்கிறாய்? ஆதியில் தேவன் மேல் கொண்ட அன்பை இழந்து தேமாவை போல உலகத்தின் மேல் ஆசை வைத்து விலகி போய் கொண்டிருக்கிறாயா? உலக ஆசாபாசங்கள்,உலக இன்பங்கள்,உலக வேஷங்கள் உலகத்தின் நவநாகரீகங்கள் உன் ஆவிக்குறிய வாழ்க்கையில் நுழைந்து விட்டதா? உன்னை சுயபரிசோதனை செய்து பார்! இரண்டு எஜமானுக்கு அதாவது தேவனுக்கும் பணத்துக்கும் ஊழியம் செய்ய முடியாது! சந்திப்பின் நாளிலே உன்னை அழைத்த எஜமானனுக்கு முன்பாக நிற்க போகிறாய் என்பதை மறந்து விடாதே.