உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய். 1 தீமோத்தேயு 4:16
இன்றைக்கு சபையில் உபதேசம் பண்ணுகிற ஊழியக்காரர்கள் மூப்பர்கள் விசுவாசிகள் முதலாவது தாங்கள் பேசும் உபதேசங்களுக்கு தாங்களே கீழ்வதில்லை தாழ்மையைப் பற்றி பேசுகிறவர்கள் பெருமையின் ஆவியினாலே நிறைந்திருக்கிறார்கள். பல ஊழியக்காரர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையின் அன்பின் ஐக்கியத்தில் தோல்வி அடைந்தவர்களாகவே இருக்கிறார்கள்.
வாழ்க்கை முழுவதும் மனைவியோடு போராடி கொண்டே இருக்கிறார்கள்!! கோபம் கர்த்தருக்கு விரோதமான பகை என்கிறவர்கள் கோபத்தினாலும் கசப்பினாலும் பலரோடு பேசுவதில்லை, பண ஆசை எல்லா தீங்குக்கும் வேறாயிருக்கிறது என்பவர்கள் தங்கள் ஊழியத்தில் அற்புதத்திற்காக ஆண்டவரையும் பணத்துக்காக மனிதர்களையும் நம்பி தேவ சித்தத்தை செய்வதை விட்டு தங்கள் சுய சித்தத்தை செய்கிறார்கள். சமீபத்தில் ஒரு ஊழியக்காரர் அவரை இணையதளத்தில் கேள்வி கேட்ட ஒருவரை குறித்து நான் உன்னை போலீசில் ஒப்படைத்து விடுவேன். உன் மேல கேஸ் போட்டு உன்னை உள்ளே தள்ளி விடுவேன். நான் உன்னை சும்மா விட மாட்டேன் என்று மிரட்டினார். இது எதைக் குறிக்கிறது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பரம அதிகாரத்தையும் உடையவர், அவர் பேதுருவிடம் நான் ஒரு வார்த்தை சொன்னால் என் பிதா ஏராளமான தூதர்களை எனக்காக அனுப்புவார் என்றார்.
நீ யூதனுடைய ராஜாவானால் சிலுவையிலிருந்து இறங்கி வா என்று அவரை அவமதித்த போது,உலகத்தின் இரட்சிப்புக்காக எல்லாவற்றையும் சகித்தார். அந்த சகிப்புத்தன்மை இன்றைக்கு நம்மிடம் இல்லை.
சபைகளில் பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் என்று வைராக்கியமாக கத்துகிறவர்கள் ஏதோ ஒரு காரியத்தில் பிசாசுக்கு கீழ்படிந்து கொண்டிருக்கிறார்கள்.
சபைகளில் வைராக்கியமாக பாரம்பரியமாக பிறருடைய கால்களை கழுவுகிற நம்மிடம் நான் பெரியவன் என்கிற பெருமை தான் இருக்கிறது.
மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன். 1 கொரிந்தியர் 9-27
இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா? களவுசெய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவுசெய்யலாமா? ரோமர் 2-21
நீ வெட்கபடாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு. 2 தீமோத்தேயு 2-15
மேற் சொல்லப்பட்ட வசனங்களை கவனமாக படியுங்கள்.வசனத்தை போதித்தால் மாத்திரம் போதாது.தேவனுக்கு முன்பாக உத்தமமாய் நிற்க வேண்டுமென்றால்...தேவன் நம்மை உண்மையும் உத்தமுமான ஊழியக்காரனே என் சந்தோஷத்துக்குள் பிரவேசி என்று சொல்ல வேண்டுமென்றால் வசனத்தை போதிக்கிறவர்களாக மாத்திரமில்லாமல் அதற்கு கீழ்படிகிறவர்களாகவும் இருக்க வேண்டும்.
பவுல் தான் பிரசங்கித்த கர்த்தருடைய ஆலோசனைகளுக்கு கீழ்படியும் படிக்கு தேவ பெலனை சார்ந்தவராக இருந்தார்.அதனால் தான் அவர் தைரியமாக இப்படி பிரசங்கம் பண்ண முடிந்தது.நல்ல போராட்டத்தை போராடினேன் ஓட்டத்தை முடித்தேன் என்று சொன்னார்.
கர்த்தரோ எனக்குத் துணையாகநின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியாரெல்லாரும் கேட்கிறதற்காகவும்,என்னைப் பலப்படுத்தினார். சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன். 2 தீமோத்தேயு 4:17
இன்றைக்கு கெர்சிக்கிற சிங்கத்தின் கண்ணியாகிய உலக ஆசை இச்சைகளில் அகப்பட்டு கொண்டிருப்பவர்கள் அநேகர்.இவர்கள் தேவன் புசிக்க கூடாது என்று சொன்ன கனியை போல பார்வைக்கு இன்பவும் இச்சிக்கபட தக்கதான வீண்புகழ்ச்சி,பொருளாசை மற்று பண ஆசையை நாடி வீழ்ச்சியடைந்து போனவர்கள்.
தேவனை சந்திக்கிற பகலின் குளிச்சியான வேளையை போல சந்திப்பின் நாள் ஒன்று உண்டு என்பதை மறந்து போனவர்கள்.
அன்றைக்கு தேவன் அவர்களை பார்த்து நீ எங்கே இருந்தாய் என்று கேட்பார்.நான் இருக்கும் இடத்தில் இருந்தாயா அல்லது உலகத்துக்குறியவனாய் இருந்து கொண்டு எனக்கும் உலக பொருளுக்கும் ஊழியம் செய்தாயா என்று கேட்கும் போது என்ன பதில் சொல்வோம்.
என் வசனத்துக்கு கீழ்படிகிறவன் என் சீஷனாய் இருப்பான் என்று இயேசு சொன்னார். ஒருவன் எனக்கு ஊழியம் செய்தால் என்னை பின்பற்ற கடவன் என்று இயேசு சொன்னதை கவனியுங்கள்.
ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவ" னானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான், ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார். யோவான் 12-26
தேவ சமூகத்தில் காத்திருந்து தேவ வல்லமையை பெற்று கொண்டு தேவ வசனத்துக்கு கீழ்படிந்து போதிக்கிறவன் கேட்கிறவர்களையும் ஆதாயப்படுத்தி கொள்வான்.
தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்துவைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே, எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி, நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றையத்தினம் சாட்சிகளாக வைக்கிறேன். அப்போஸ்தலர் 20:26,27
அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி தம்மைத்தாமே தாழ்த்தினார். பிலிப்பியர் 2-8
நம்மை அழைத்தவராகிய இயேசுவின் கீழ்படிதலை கவனமாக கவனியுங்கள். மற்றவர்களுக்கு போதிக்கிற நாம், கீழ்படிதலில் மிகவும் ஜாக்கிரதையாக இயேசுவின் அடிச்சுவடை பின்பற்றி நம்முடைய இரட்சிப்பை காத்து கொள்வோம்.
ஆமென்