God has not called you to fight or argue!
சண்டை போடுவதற்கோ வாக்குவாதம் பண்ணுவதற்கோ தேவன் உங்களை அழைக்கவில்லை !
சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று , நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். 1 கொரிந்தியர் 1-10
சபையில் தேவனுடைய காரியங்களுக்காகபொறுப்பில் இருக்கும் நமக்குள் ஏன் வாக்குவாதங்கள்,பிரிவினைகள், சண்டைகள்.
சபையில் ஒரு காரியத்தை குறித்து சண்டை பபோடுவதால் சபைக்கு வெளியே இருப்பவர்கள் எப்படி உள்ளே வருவார்கள்.
சபையின் முக்கிய பொறுப்பாளர்களாகிய நாம் சண்டை போட்டு கொண்டிருப்பதை அறியும் வாலிபர்கள் சிறு பிள்ளைகள் எப்படி பக்திவிருத்தியடைவார்கள்.
இன்றைக்கு சபைகளில் நடக்கும் சண்டைகள் Media க்களில் பரப்பபட்டு இயேசுவின் நாமத்துக்கு அபகீர்த்தியை உண்டாக்குகிறது.இன்றைக்கு இயேசு உங்களுக்கு சமாதானம் தருவார் என்று நாம் எப்படி வெளியே சொல்ல முடியும்.
பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா? 1 கொரிந்தியர் 3
சபையில் ஒரு சின்ன காரியத்துக்கு ஒரு மனம் இல்லை ஐக்கியம் இல்லை சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம். நான் பெரியவனா நீ பெரியவனா என்கிற சுயத்துக்கு மரிக்காத நிலைமை. பரலோகத்திலிருந்து வந்த இயேசு கிறிஸ்து ஒரு அடிமையை போல தன்னை தாழ்த்தி சிஷர்களின் கால்களை கழுவி இதே மாதிரியை நீங்களும் பின்பற்றுங்கள் என்றார்.
நான் சாந்தமும் மனத்தாழ்மையாக இருக்கிறேன்.என் நுகத்தை ஏற்று கொள்ளுங்கள் என்றார்.
ஊழியம் செய்கிற நாம் அவருடைய மனத்தாழ்மை என்கிற நுகத்தை ஏற்று கொள்ள வேண்டும்.அன்பு என்கிற மார்கவசத்தை அணிந்து கொள்ள வேண்டும்,அன்பு சகலத்தையும் தாங்கும் சகலத்தையும் சகிக்கும், அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது, அன்பு சினமடையாது, அன்பில்லாதவான் தேவனை அறியான் என்று வேதம் சொல்கிறது.
இப்படி ஒருவருக்கொருவர் அன்பில்லாதவர்களாய் சண்டை போட்டு கொண்டிருந்தால் நாம் எப்படி பரலோகம் போக முடியும். நாம் எப்படி பிறரை கிறிஸ்துவுக்குள் நடத்த முடியும்?
நாம் எப்படி பக்தியுள்ள சந்ததிகளை உருவாக்க முடியும்?
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எதற்காக தன் ஜீவனை கொடுத்தார். இந்த பூமியிலே அவர் வந்து தன்னுடைய இரத்தத்தை சிந்தி நீங்களும் நானும் பரலோகத்துக்கு போவதற்கு வழியை ஏற்படுத்தினார், நாமோ அதை மறந்து விட்டு இன்றைக்கு பூமியில் உள்ள காரியங்களுக்காகவும் சபை காரியங்களுக்காகவும் சண்டை போட்டுக் கொண்டிருப்பது தேவனை எவ்வளவு தூக்கப்படுத்தும்.
உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது, உங்கள் அவயவங்களில் போர்செய்கிற இச்சைகளினாலல்லவா? யாக்கோபு 4-1
சபையில் தேவனுடைய காரியங்களுக்காக சண்டை போட்டு கொண்டிருப்பதை தேவன் பார்த்து கொண்டிருப்பார் என்று நினைக்கிறீர்களா?
ஒருவருக்கொருவர் அன்புள்ளவர்களாயிருங்கள்.எல்லாரோடும் சமாதானமாயிருங்கள் என்று வேதம் சொல்கிறது.சமாதானம் பண்ணுகிறவர்கள் தேவனுடைய பிள்ளைகள் என்று இயேசு சொன்னார். இப்படி சத்தியத்துக்கு கீழ்படியாமல் சண்டை போடுவதற்கு கூடி வருவது தேவனுக்கு பிரியமானதா? சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும். ரோமர் 2-8. ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையம்படிக்கு நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும். 2 கொரிந்தியர் 5-10
இதில் சொல்லப்பட்ட நன்மை என்பதை சரியாக அறிந்து கொள்ளுங்கள். உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிற ராஜரிக பிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மை செய்வீர்கள். யாக்கோபு 2:8
நன்மை செய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள். யோவான் 5-28
இயேசு சொன்ன இந்த சத்தியத்தை குறித்து பயம் இல்லையா? உங்கள் குடும்பத்திலும் சபையிலும் வாக்குவாதம் பண்ணி கொண்டு சண்டை போடுவதை உடனடியாக நிறுத்துங்கள்.
உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னைத் தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும். யாக்கோபு 1:26
ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய், அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார். மத்தேயு 12-37
பிரியமானவர்களே தேவனுக்கு ஊழியம் செய்கிறேன் என்று சண்டை போட்டு கொண்டு வாக்குவாதம் செய்து கொண்டு நரகத்துக்கு போவதை விட ஊழியம் செய்யாமல் பரலோகத்துக்கு போவது நலமாயிருக்கும்.