top of page

கிறிஸ்துவின் மரணத்துக்குள்ளாக்கும் ஞானஸ்நானம்

 

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக நீங்கள் கிறிஸ்துவுடன் கூட எழுந்தது உண்டானால் கிறிஸ்து தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவை தேடுங்கள்-கொலோ 3-1 இந்த வசனத்தின் முதல் பகுதியில் நீங்கள் கிறிஸ்துவுடன் கூட எழுந்ததுண்டானால். என்கிற பகுதியை பாருங்கள்.நீங்கள் எப்பொழது கிறிஸ்துவோடு எழுந்தீர்கள்?இதன் அர்த்தம் என்ன?

கொலோசேயர் 2-12ல்  ஞானஸ்நானத்திலே அவரோடு  கூட அடக்கம் பண்ணப்பட்ட வர்களாகவும் அதிலே அவரை மரித்தோரிலிருந்து எழுப்பிய தேவனுடைய சாயலில் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடு கூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.இங்கு தான் நாம் கிறிஸ்துவோடு கூட நாம் எழுந்தோம்.அதாவது ஞானஸ்நானம் எடுக்கும் போது பழைய பாவத்துக்கு மரித்து அதாவது கிறிஸ்துவோடு அடக்கம் பண்ணப்பட்டு புதிய ஜீவனுள்வர்களாய் அதாவது புதிதான ஆவியுள்ளவர்களாய்  கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தது போல நீங்களும் எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.

 

அதாவது தேவனுக்கு சத்துருக்களாக இருக்கையில் அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவரோடே ஒப்புரவாக்கப்பட்டோம்.  ரோமர் 5-9.

அவருடைய மரணத்தின் சாயலில் இணைக்கபட்டவர்களானால் அவருடைய உயிர்தெழுதலின் சாயலிலும் இணைக்கபட்டிருப்போம்.  ரோமர் 6-5.

 

ஞானஸ்நானம் என்பது கிறிஸ்துவின் மரணத்தின் சாயலிலும் அவருடைய உயிர்த்தெழுதலின் சாயலிலும் நம்மை இணைத்து கொள்வது. அதாவது அவருடைய மரணத்தின் சாயலில் பங்குள்ளவர்களாய் நம்மை இணைத்து கொள்வது. இதை தான் ரோமர் 6-4 ல் அவருடைய மரணத்துக்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினால் கிறிஸ்துவோடு கூட அடக்கம் பண்ணப்பட்டோம் என்று பவுல் எழுதுகிறார்.

 

அதாவது இதை இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால் ஞானஸ்நானம் எடுக்கும் போது நம்முடைய உள்ளான மனுஷனில் ஒரு ஆவிக்குறிய மாற்றம் உண்டாகிறது.  ரோமர் 6-6 ன் படி பாவத்துக்கு ஊழியம் செய்யாதபடிக்கு அதாவது நம்முடைய பழைய பாவ சரீரம் ஒழிந்துபோகும் பொருட்டாக நம்முடைய பழைய மனிதன்  இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்டான். பாவத்துக்கு மரித்த மனிதன் பாவத்துக்கு நீங்கி விடுதலை ஆக்கப்பட்டு இருக்கிறானே என்று ரோமர் 6-7 ல்  தெளிவாக கொஞ்சம் ஆழமாய் சொல்லப்பட்டு இருக்கிறது.அதாவது பாவம் செய்த ஆத்துமா சாகும் என்று வேதம் சொல்கிறது.பாவத்துக்கு மரித்தவர்களாகிய நம்மை அவரோடே கூட உயிர்ப்பித்தார்.ஞானஸ்நானம் என்பது நம் உள்ளான மனுஷன்  உயிர்ப்பிக்க கூடிய அனுபவம் தான். உள்ளான மனுஷனுகுள்ளே பரிசுத்த ஆவியினாலே ஏற்படுத்தப்பட கூடிய மறுரூபம்.பழைய மனுஷனின் செய்கைகள் அழிக்கப்படாமல் மேலும் பழைய மனுஷன் மரிக்காமல் புதிய ஜீவனுள்ளவர்களாக எழும்ப முடியாது.

 

கொலோசேயர் 3-10 ன் பழைய மனிதனுடைய செய்கைகளைக் களைந்து போடும் மாற்றம் தான் இந்த தண்ணீர் முழுக்கு ஞானஸ்நானம்.

 

எபேசியர் 2-7 ல் கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவருரோடு கூட எழுப்பி உன்னதங்களில் அவரோடே கூட உட்கார செய்தார்.

விசுவாசத்தினாலே பாவத்துக்கு மரித்து நீதிக்கு பிழைத்திருக்கும் படி நம்மை எழுப்பி விண்ணுலகில் அவருடைய கூட உட்கார வைத்தார்.இங்கு தான் உன்னதங்களில் அதாவது பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்கும் ஆசீர்வாதத்தை பெற்று கொள்கிறோம்.அதனால் தான் இயேசு  கிறிஸ்து, யோவான் 3-5 ல் ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான் என்று சொல்லியிருக்கிறார். மாற்கு 16 -16 ல் விசுவாசமுள்ளவனாகிஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான் விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்படுவான்.என்ற எச்சரிப்பின் சத்தம் அநேகர் காதில் விழவில்லை. ஏனென்றால் இயேசு கிறிஸ்து சொன்னது போல அநேகர் வசனத்தை கேட்டும் கேளாதவர்களாகவும்,கண்டும் காணாதவர்களாகவும்,உணர்ந்தும் உணராதவர்களாகவும் இருக்கிறார்கள்.ஞானஸ்நானம் பெறுவது நிச்சயமாக பெந்தேகோஸ்தே சபையின் உபதேசம் அல்ல.மத்தேயு 28-19 ன் படி இது இயேசுவின் கட்டளை.ஏனென்றால் அவர் சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷத்தை அறிவித்து ஞானஸ்நானம் கொடுக்கும்படி கட்டளையிட்டார்.

 

 ஞானஸ்நானம் என்பது  தேவனோடு பண்ணக்கூடிய ஒரு நல் மனசாட்சியின் உடன்படிக்கை என்று வேதம் சொல்கிறது. ஞானஸ்நானம் மூலம் தேவனோடு உடன்படிக்கை பண்ணும் இந்த சத்தியம் அநேகர் அறிந்து கொள்ள முடியாதபடிக்கு அவர்கள் மனக்கண்கள் குருடாக்கப்பட்டிருக்கிறது.இன்றைக்கு அநேக புறமதத்தினர் இயேசுவை ஏற்று கொண்ட பிறகு தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம் பெற்று கொள்கிறார்கள். ஆனால் அநேக கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் கட்டளைக்கு கீழ்படியாமல் சத்தியத்தை மறுதலிக்கிறார்கள்.பலர் வெறும் கடமைக்காக ஞானஸ்நானம் எடுக்கிறார்கள்.அநேக சபைகள்  ஞானஸ்நானத்தின் உண்மையான சத்தியத்துக்குள் ஜனங்களை நடத்தாமல் எண்ணிக்கைக்காகவும், சபையில் இணைவதற்காகவும் மதம் மாற்றுவதற்காகவும் கொடுக்கிறார்கள்.  இயேசு கிறிஸ்து கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபிக்க வரவில்லை.

 

ஞானஸ்நானம் பெறுவதற்கு முன் ஞானஸ்நானத்தை குறித்த சத்தியங்களை தெளிவாக விளங்கி கொள்வதில்லை. எனவே தான் வெறும் பாரம்பரியமாக ஞானஸ்நானம் எடுத்தவர்களில் உள்ளான தெய்வீக மாற்றம் காணப்படுவதில்லை.

நீங்கள் சத்தியத்தை தெளிவாக அறிந்து கொண்டு உங்களை முழுவதுமாக அற்பணித்து வசனத்தை விசுவாசித்து ஞானஸ்நானம் பெறும் போது புதிதாக பிறக்கும் அனுபவத்தை பெற்று கொள்வீர்கள்..

 

 தண்ணீரில் மூழ்குவது  என்பது கிறிஸ்துவோடு அடக்கம் பண்ண கூடிய ஒரு நிகழ்வு.தண்ணீரில் இருந்து வெளியே வருவது உயிரோடு எழும்புவதற்கு ஒப்பனையான ஒரு நிகழ்வு,அடக்கம் பண்ண படுவது பழைய மனிதனின் சாயல் அதாவது பழைய சுபாவங்கள் மரிப்பது. உயிர்த்தெழுவது  என்பது புதிய மனிதனாய் பிறப்பது.மரிக்காமல் ஒருவன் நிச்சயமாக உயிர்த்தெழ முடியாது! மரித்தவன் தானே மறுபடியும் பிறக்க முடியும். இன்றைக்கு ஞானஸ்நானம் எடுப்பவர்கள் பழைய பாவ வாழ்க்கைக்கு மரிப்பதில்லை, பிறகு எப்படி புதிதாக பிறக்க முடியும்? அடக்கம் பண்ணபடுவது என்பது மண்ணானவனுடைய சாயல் அதாவது முந்தின ஆதாமின் கிழ்படியாத கிரியைகள் அடக்கம் பண்ணப்படுவது, உயிரோடு எழும்புவது என்பது பிந்தி ஆதாமாகிய வானவராகிய கிறிஸ்துவின் சாயலை பெற்று கொண்டவர்களாய் பழையன கழிந்து புதிய சிருஷ்டியாய் மாறுவது.

 

அதாவது கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்தானம் பெற்றவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேர்களும் கிறிஸ்துவை தரித்து கொண்டீர்களே என்று பவுல் கலாத்தியர் 3-27 ல் எழுதுகிறார்.

 

பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும்   களைந்து போட்டு தன்னை சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய் பூரண அறிவடையும்படி  புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனை தரித்துக்கொண்டீர்களே.  கொலோ3-9,10

 

கிறிஸ்துவின் சாயலை உங்கள் உள்ளான மனிதனில்  தரித்து கொள்ளும் மறுரூபம் ஞானஸ்நானத்தின் மூலம் நடக்கவில்லை என்றால் அது நிச்சயமாக கிறிஸ்துவுக்குள்ளான ஞானஸ்தானம் இல்லை. அது வெளிப்புறமான மாம்ச அழுக்கை நீக்கும் வெறும் சடங்காச்சாரமான ஞானஸ்நானமே.   இந்த ஆழமான சத்தியம் உங்களுக்கு புரியவில்லை என்றால் எபேசியர் 4 ம் அதிகாரம் 22-24 ல் சொல்லப்பட்ட வசனங்களிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

 

அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,  உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,  மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள். எபேசியர் 4:22-24

 

பிரியமானவர்களே அன்றைக்கு எகிப்திய அடிமைத்தனத்தில் இருந்த இஸ்ரவேல் ஜனங்கள் பஸ்கா ஆட்டு குட்டியின் இரத்தத்தினாலே  பாதுகாக்கப்பட்டு எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு செங்கடல் வழியாக அவர்கள் கானான் தேசத்துக்குள் பிரவேசித்தார்கள்.

 

இப்படியிருக்க சகோதரரே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்றிருக்கிறேனென்றால், நம்முடைய பிதாக்களெல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும் சமுத்திரத்தின் வழியாய் நடந்துவந்தார்கள்.

எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள். 1 கொரிந்தியர் 10:1,2

 

அதே மாதிரி இயேசுவின் இரத்தத்தினாலே மீட்கப்பட்ட நாம் கிறிஸ்துவுக்குள்ளான ஞானஸ்நானத்தின் வழியாக தான் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க  முடியும் என்பது சத்தியம். அதனால் இயேசு கிறிஸ்து,ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் என்று எச்சரித்தார்.

 

பழைய ஏற்பாட்டில் நோவாவும் அவருடைய குடும்பத்தினர் 8 பேரும் தண்ணீரினால் காக்கப் பட்டார்கள் என்ற சம்பவம் ஞானஸ்நானத்துக்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது.

 

அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர் மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள். இதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது.  1 பேதுரு 3:20,21

 

சொல்லப்பட்ட கடைசி வசனத்தின் கடைசி பகுதியை கவனித்தீர்களா?நாம் கிறிஸ்துவின் மரணத்துக்குள்ளாகும்படியான ஞானஸ்நானத்தினாலேஅவர் உயிர்த்தெழுதலுக்கும் பங்குள்ளவர்களாகிறோம். கிழே சொல்லப்பட்ட வசனத்தை கவனமாக படியுங்கள்

 

கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?

மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம். ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.  ரோமர் 6-3-5

 

புரியவில்லையென்றால் மறுபடியும் படியுங்கள்.

இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் மீட்கப்பட்ட அனைவரும் ஞானஸ்நானம் என்கிற நாம் சத்தியத்துக்கு கீழ்ப்படிந்து தான் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியும் என்பதை வேதம் தெளிவாக காட்டுகிறது.

 

கர்த்தராகிய இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் எடுத்து கரையேறின போது பரிசுத்த ஆவியானவர் புறாவைப் போல ரூபம் கொண்டு அவர் மேலே இறங்கினார். அதே சமயத்தில் வானம் திறக்கப்பட்டு பிதாவானவர் இவர் என் நேச குமாரன் என்று சொல்வதைப் பார்க்கலாம். இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் என்ற நீதியை நிறைவேற்றின போது  பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.அதே மாதிரி அப்போஸ்தலர் 8 ம் அதிகாரம் கடைசிப் பகுதியில் ஆவியானவரின் கட்டளையின்படி பிலிப்பு எத்தியோப்பிய மந்திரியின் இரதத்தில் ஏறி இயேசு கிறிஸ்துவைப் பற்றி போதித்து அதன் பிறகு தண்ணீர் உள்ள இடத்துக்கு வந்த போது பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். அந்த மந்திரி ஞானஸ்நானம் பெற்ற உடனேயே ஆவியானவர் பிலிப்புவை கொண்டு போய்விட்டார். அதாவது பிலிப்பு மந்திரியின் கண்களுக்கு மறைந்து போனார்.இதிலிருந்து ஞானஸ்நானம் என்கிற கட்டளையின் முக்கியத்துவத்தை  விளங்கி கொள்ளலாம்.  எனவே வேதாகமத்தில் சொல்லப்பட்ட இயேசுவின்  கட்டளைகளுக்கு கீழ்படிவோம்.

 

வேதாகமத்தை வாசித்து சத்தியத்தை அறிந்து கொள்வோம்.

 

என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது, நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும். நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார். யோவான் 12:48,49

 

கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல. கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன். 2 யோவான் 1:9

 

அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை. 1 யோவான் 2:4.   ஆமென், ஆமென்.

bottom of page