top of page
ஒருவன் எனக்கு ஊழியம் செய்தால்....
 
ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான். ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார் யோவான் 12:26.
இன்றைக்கு எல்லாரும் ஒருவன் ஊழியம் செய்தால் பிதாவானவர் கனம் பண்ணுவார் என்ற வார்த்தையை மாத்திரம் பிரதானமாக சொல்லி ஊழியம் செய்கிறவர்கள் எல்லாரும் பிதாவினால் ஆசீர்வதிக்கபடுவீர்கள் என்கிறார்கள். ஆனால் அதற்கு முன்பு இயேசு சொன்ன இரண்டு காரியங்களை பற்றி பேசுவதேயில்லை.  

ஒருவன் எனக்கு ஊழியம் செய்தால் என்னை பின்பற்ற கடவன் என்று இயேசு சொன்னார்.
இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால்  மத் 16-24 ல் இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: (ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.
மத்தேயு 16-24) (தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல என்றார். மத்தேயு 10-38).

முதலாவதாக ஊழியக்காரன் தன் எஜமானனுக்கு பாத்திரவானாய் இருக்க வேண்டும்.இன்றைக்கு அநேக ஊழியக்காரர்கள் ஊழியம் செய்கிறார்கள் ஆனால் அவர்கள் சிலுவையை சுமப்பதற்கு ஆயத்தமில்லை.நம்முடைய சுய வாழ்க்கை சிலுவையில் அறையப்பட்டால் தான் கிறிஸ்து மகிமையோடு நமக்குள் வெளிப்பட முடியும்.நம் சுயம் சிலுவையில் அறையப்பட வேண்டுமென்றால் நாம் சிலுவை சுமக்க வேண்டும்.  (கிறிஸ்துவுடனே கூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்.கலாத்தியர் 2:20)  சிலுவை சுமப்பது நம்மை அதாவது நம் சுயத்தை நொறுக்குவது மாத்திரமல்ல நம்மை வெறுமையாக்கவும் செய்கிறது.
 
இன்றைக்கு  சுயத்தை வெறுத்து தன்னை வெறுமையாக்கினவர்கள் மாத்திரமே இயேசுவை உண்மையாக பின்பற்றுகிறவர்கள். இவர்கள் தான் தங்களிடம் இருக்கும் கிறிஸ்துவின் மகிமையால் பூமிக்கு உப்பாய் உலகத்துக்கு வெளிச்சமாய் இருப்பார்கள்.
 
இன்றைக்கு சபைகளில் நான் பெரியவனா நீ பெரியவனா என்று சண்டை போடுவதற்கு தங்கள் சுயத்தை சிலுவையில் அறையாத மூப்பர்களும் ஊழியக்காரர்களும் தான் காரணம். ஒருவருக்கொருவர் அன்பாயிருக்க வேண்டியவர்கள் எதிரிகளாக இருக்கிறார்கள். வேதாகமத்தின் அடிப்படை சத்தியத்துக்கு கூட இவர்களால் கீழ்படிய முடியாததற்கு காரணம் கிறிஸ்துவை போல இவர்கள் தங்களை வெறுமையாக்காததே.
 
இன்றைக்கு இவர்களது குறைகளை சுட்டி காட்டும் போது அவர்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை. தங்கள் சுயத்தை சிலுவையில் அறையாத இவர்கள் பாவத்தை குறித்தும் நீதியை குறித்தும் நியாயதீர்ப்பை குறித்தும் கண்டித்து உணர்த்தும் பரிசுத்தாவியானவருக்கு எதிர்த்தே நிற்கிறார்கள். கிறிஸ்துவின் சாயல் இல்லாத இவர்கள் தங்களை தாங்களே உயர்த்தி கொள்கிறார்கள்.ஆனால் இவர்கள்  ஊழியம் ஒருகாலும் மகிமையடைவதில்லை.
 
அடுத்ததாக இயேசு சொன்ன காரியம் நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான். என்றார்.யோவான் 17-14 ல் இயேசு பிதாவை நோக்கி  நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன், நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல, ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது.  யோவான் 17:14 என்றார்.
 
இன்றைக்கு தேவனுடைய ராஜ்ஜியத்தை விட்டு விட்டு தங்களுடைய ராஜ்ஜியத்தையே அநேகர் கட்டி கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் அவர்கள் உலகத்திலும் பணத்திலும் பொருளாசையிலும் ஆசை வைப்பது தான். இவர்கள் உலகத்தில் இருப்பதால்  தேவனோடு கொண்டிருக்கும் உறவிலிருந்து விலகி செல்வதால் தேவனுடைய சித்தத்தை விட்டு விலகி தங்கள் பேர் புகழுக்காக உலகத்துக்கு ஒத்த வேஷம் தரித்து சுயசித்தம் செய்கிறார்கள். கொலோசெயர் 3-1,2 ல் உலகத்தில் உள்ளவைகளையல்ல கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் மேலானவைகளை  தேடுங்கள் என்று பவுல் எழுதுகிறார்.
 
எனவே அழிந்து போகிற உலக ஆசை இச்சைகளை தேடாமல் காணப்படாத நித்தியமானவைகளை தேடுகிறவர்களே தேவனுடைய ராஜ்ஜியத்தை கட்டமுடியும். இப்படிப்பட்ட ஊழியக்காரர்கள் மாத்திரமே இயேசுவுக்காக உண்மையும் உத்தமுமாக ஊழியம் செய்வார்கள்.இவர்களை தான் பிதா கனம் பண்ணுவார். ஆமென்.
bottom of page