pastor-22.jpg
தேவனுடைய குரலை கேட்கும் உண்மையான தீர்க்கதரிசிகள்
 
தீர்க்கதரிசனமானது ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை. தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள். 2 பேதுரு 1-21.
 
இன்றைக்கும் அநேக தேவனுடைய குரலை கேட்கிற  உண்மையான தீர்க்கதரிசிகள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு போதும் தங்களை வெளிப்படுத்துவதில்லை. மத்தேயு 7ம் அதிகாரத்தில் அநேகர் இயேசுவை நோக்கி உமது நாமத்தினால் தீர்க்கதரிசனம் உரைத்தோம் என்று சொன்னவர்களை பார்த்து உங்களை நான் அறியவில்லை, அக்கிரம செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்று இயேசு சொல்வதை காணலாம். தேவ சித்ததின் படி ஊழியம் செய்யாத அவர்களை பார்த்து அக்கிரம செய்கைகாரரே என்று இயேசு குறிப்பிடுகிறார்.
 
இன்றைக்கு ஊழியக்காரர்கள் முக்கால்வாசி பேரும் தங்களை தீர்க்கதரிசி என்று சொல்லி கொண்டு தேசத்தை பற்றியும் அரசியல் தலைவர்களை பற்றியும் இயற்கை சீற்றங்கள் பற்றியும் பேசின தீர்க்கதரிசனங்களை இணையதளங்களில் பதிவிடுகிறார்கள்.
 
சில நாள்களுக்கு முன்பாக Election ல் மோடி அவர்கள் ஜெயித்தவுடன் ஒருவர் மோடி தான் மீண்டும் வருவார் என்று கர்த்தர் தன்னிடம் பேசினதாக அவர் கூறிய தீர்க்கதரிசனங்களை புதிதாக பதிவிட்டிருந்தார்.
 
ஒரு காரியம் நடந்த பிறகு இப்படி பதிவிடுவதில் யாருக்கு என்ன பிரயோஜனம்.உங்களிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன்.நீங்கள் பேசின தீர்க்கதரிசனங்களை தேவன் இணையதளத்தில் பதிவிட சொன்னாரா?உங்களை பிரபலப்படுத்துவதற்காக தீர்க்கதரிசனம் என்ற வரத்தை கையில் எடுக்கிறீர்கள், இவைகளை இணையத்தளங்களில் வெளியிட்டு உங்களை பெருமைபடுத்தி கொள்கிறீர்கள்,  நீங்கள் வெளியிட்ட சில நிறைவேறாத தீர்க்கதரிசனங்களை பதிவிட்டு புறமதத்தினர் கிண்டல் செய்கின்றனர். இதன் மூலம் இயேசுவின் நாமம் தூசிக்கப்படுகிறது.
 
போதகர்களே நீங்கள் உங்கள் சபை ஜனங்களுக்கு தேவன் பேசியதை உங்கள் சபையில் மாத்திரம் சொல்லுங்கள். தேவன் அனுமதிக்காதபட்சத்தில் தயவு செய்து இணையதளத்தில் பதிவிடாதீர்கள். ஒரு தீர்க்கத்தரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும்போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை, அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான், அவனுக்கு நீ பயப்படவேண்டாம். 
 
உபாகமம் 18-22 ஏனெனில் கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். மாற்கு 13-22.இயேசு கிறிஸ்து சொன்ன கடைசி காலத்தின் அடையாளங்களில் ஒன்று கள்ள போதகர்கள் கள்ள தீர்க்கதரிசிகள். இவர்களை கனிகளினால் அறிந்து கொள்ளுங்கள் என்றார். ஆனால் ஜனங்களோ அவர்களது ஆவிக்குறிய வரங்களை வைத்து அவர்களை மகிமைபடுத்தி அவர்களை உயர்த்தி அவர்களை தேவனுடைய ஸ்தானத்தில் வைத்து விடுகிறார்கள். வேதாகமத்தில் கர்த்தர் அவருடைய தீர்க்கதரிசிகள் மூலம் சொன்ன காரியங்களை  மாற்றியிருக்கிறார். ஜனங்களின் கண்ணீரின் ஜெபம் தேசத்தின் மேல் வரவிருந்த அழிவுகளை, நியாயதீர்ப்புகளை மாற்றியிருக்கிறது. ஆகவே தேவன் சொன்ன காரியம் ஏன் நடக்கவில்லை என்று வாக்குவாதம் பண்ணாமல் பொறுமையோடு இருங்கள்.
 
ஒரு காரியத்துக்காக நாம் ஜெபிக்கும் போது தேவன் நம் ஜெபத்துக்கு மாறாக அதை அனுமதிப்பார் என்றால் அதில் ஒரு நோக்கம் உண்டு. எனவே காலத்துக்கு முன்பாக எதையும் தீர்க்காதிருங்கள்,யாரையும் குறை சொல்லாதீர்கள். தேவன் என்ன செய்ய போகிறார் என்று பொறுமையோடு காத்திருங்கள். வேதாகமத்தில் ஏசாயா தீர்க்கதரிசி எசேக்கியா ராஜாவிடம் உன் வீட்டு காரியங்களை ஒழுங்குபடுத்து நீ மரிக்க போகிறாய் என்று கர்த்தர் சொல்கிறார் என்று சொன்னவுடன் எசேக்கியா ராஜா தேவனை நோக்கி கண்ணீரோடு வேண்டுதல் செய்த போது தேவன் அதை கேட்டு அவனுக்கு 15 வருடங்களை கூட்டி கொடுத்தார். அதே மாதிரி நினிவே பட்டணத்தை அழிக்க போவதாக தேவன் சொன்ன போதிலும் ஜனங்களின் கண்ணீரை பார்த்து தேசத்தின் மீது கட்டளையிட்ட நியாயதீர்ப்பை நீக்கினார்.தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ மனுஷருக்குப்பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசுகிறான்.
 
1 கொரிந்தியர் 14-3 அப்போஸ்தலர் 2 ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட கடைசிகாலத்தின் வாக்குதத்தமே தீர்க்கதரிசன வாக்குதத்தம். கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்கதரிசனஞ்சொல்;லுவார்கள். உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள். உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள். அப்போஸ்தலர் 2:17
 
இன்றைக்கு அநேகர் தீர்க்கதரிசன அபிஷேகத்தாலும் தீர்க்கதரிசன வரங்களினாலும் நிரப்பபடுகின்றனர்.பிரச்சனை என்னவென்றால் இவர்கள் பெருமையினால் தங்களை தாங்களே உயர்த்தி கொண்டு தேவ சித்ததிற்கு விரோதமாக  வேறு சபையை ஸ்தாபித்து தங்கள் அழைப்புக்கு மாறாக  தலைவராகிவிடுகின்றனர்.எனவே இவர்கள் மங்கி போய்விடுகின்றனர்.(அந்தத் தீர்க்கதரிசிகளை நான் அனுப்பாதிருந்தும் அவர்கள் ஓடினார்கள், அவர்களோடே நான் பேசாதிருந்தும் அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.எரேமியா 23-21)
 
அநேகர் பணத்துக்காகவும் ஊழியத்துக்காகவும் தங்களை உயர்த்தி கொள்வதற்காகவும் தீர்க்கதரிசனம் சொல்கின்றனர்.அநேர் குறி சொல்கிற ஆவியை உடையவர்களாக இருக்கின்றனர். எனவே ஊழியக்காரர்களையும் தீர்க்கதரிசிகளையும் அவர்கள் கனிகளினால் அறிந்து கொள்ளுங்கள். இயேசு அணிந்து கொள்ள சொன்ன சாந்தமும் மனத்தாழ்மையும் அவர்கள் செயல்பாடுகளிலும் பேச்சிலும் இருக்கிறதா? தெய்வீக அன்பினால் நிறைந்திருக்கிறார்களா? என்பதை பகுத்தறியுங்கள்.( உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள், அவர்கள் உங்களை வீண்பெருமை கொள்ளும்படி செய்கிறார்கள், கர்த்தருடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா 23-16)

உண்மையான இயேசுவின் அடிச்சுவடுகளை பின்பற்றுகிற தீர்க்கதரிசிகளை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.அவர்களின் ஆவியின் கனிகளால் அவர்களை நிதானித்து அறியுங்கள்.அவர்கள் மூலமாக கர்த்தர் உங்களோடு பேசுவார்.அது மாத்திரமல்ல உங்களோடும் கர்த்தர் வர போகும் காரியங்களை குறித்து அறிவிப்பார். தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள். 1 தெச  5-20 என்று வேதம் சொல்கிறது. தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்: நீதிமொழிகள் 29-18 என்று வேதம் சொல்கிறது.
 
சபையில் தேவன் இரண்டாவது ஏற்படுத்திய ஊழியம் தீர்க்கதரிசன ஊழியம்.(1 கொரி 12-28) எனவே ஊழியக்காரர்களே சபையில்  தேவனுக்கு பயந்து ஜீவிக்கும் உண்மையான தீர்க்கதரிசிகளை அடையாளம் கண்டு அவர்களை ஜெப ஊழியங்களில் பயன்படுத்துங்கள். ஆபிரகாமினின் மனைவியாகிய சாராளை அபகரித்து கொள்ளும்படி முயன்ற அபிமெலேக்கிடம் தேவன் அவன் ஒரு தீர்க்கதரிசி என்று எச்சரிக்கிறார்,(அந்த மனுஷனுடைய மனைவியை அவனிடத்திற்கு அனுப்பிவிடு. அவன் ஒரு தீர்க்கதரிசி. நீ பிழைக்கும்படி அவன் உனக்காக வேண்டுதல் செய்வான். நீ அவளை அனுப்பிவிடாதிருந்தால், நீயும் உன்னைச் சேர்ந்த யாவரும் சாகவே சாவீர்கள் என்று அறிவாயாக என்று சொப்பனத்திலே அவனுக்குச் சொன்னார். ஆதியாகமம் 20-7)

பழைய ஏற்ப்பாட்டில் ஆரோனை மோசேக்கு தீர்க்கதரிசியாக தேவன் நியமித்தார்.( கர்த்தர் மோசேயை நோக்கி: பார், உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன். உன் சகோதரனாகிய ஆரோன் உன் தீர்க்கதரிசியாயிருப்பான். யாத்திராகமம் 7-1)
 
மோசேக்கு கூட ஆரோனை தீர்க்கதரிசியாக தேவன் நியமித்தார்.அன்றைக்கு ராஜாக்கள் தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்ள தேவனுடைய தீர்க்கதரிசிகளை நாடினார்கள்.தேவன் ராஜாக்களிடம் பேச தன் தீர்க்கதரிசிகளை அனுப்பினார்.

எனவே தீர்க்கதரிசன ஊழியங்கள் தேவனால் ஏற்படுத்தப்பட்டது.மேலும் உண்மையான தீர்க்கதரிசிகள் தேவ ச மூகத்தில் காத்திருக்கிறவர்களாகவே இருப்பார்கள்.அவர்கள் ஜனங்களுக்காக கதறி அழுவார்கள்.(பார்க்க 2 இராஜாக்கள் 8-11,12)அவர்கள் தேவன் வெளிப்படுத்த சொன்ன காரியங்களை மாத்திரம் வெளியே சொல்வார்கள்.தங்களை பெருமைபடுத்தவோ தங்களை உயர்த்தி கொள்ளவோ ஒரு பொழுதும் விரும்பமாட்டார்கள்.எல்லாவற்றுக்கும்  மேலாக அவர்கள் சபையில் அடங்கியிருப்பார்கள்.
 
(கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள், அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள், உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.  அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள், மத்தேயு 7:15.16)ஆமென்.