top of page
நாவின் கீழ் பாவம்
புறம் கூறுகிறவர்களும் அவதூறு பண்ணுகிறவர்களும் மரணத்துகுட்பட்டவர்களாயிருக்கிறார்கள், என்று ரோமர் 1ம் அதிகாரத்தில் பவுல் எழுதுகிறார்.
இன்றைக்கு நாவினாலே பிறருக்கு விரோதமாக பேசி பாவம் செய்கிறவர்கள் அநேகர். இப்படி நாவை அடக்காமல் பிறரை தூசிக்கிறவர்கள் தங்களை கறைபடுத்தி கொள்கிறார்கள். நீங்கள் சாப்பிடுவது உங்களை தீட்டுபடுத்தாது ஆனால் நீங்கள் பிறரை பழித்து பேசி தூசிப்பது உங்களை தீட்டுபடுத்தும் என்று இயேசு எச்சரித்தார், மேலும் நீங்கள் பேசும் வீணான வார்த்தைகள் குறித்து நியாயதீர்ப்பின் நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் என்றார், ஒருவரது பேச்சிலிருந்து அவருடைய இருதயத்தில் நிறைந்திருக்கும் மாயமாலத்தை அறிந்து கொள்ளலாம். பிறருடைய குறையை பேசுகிற நீ முதலாவது உன்னிடத்திலுள்ள குறையை நிதானித்து அறிந்து கொள் என்று வேதம் சொல்கிறது.
இன்றைக்கு அநேகருடைய ஜெபத்துக்கு பதில் கிடைக்காததற்கு முக்கிய காரணம் தங்கள் நாவினால் பாவம் செய்வது தான், பிறரை சபிக்கும் நாவினால் தேவனை ஆராதிக்கலாமா?என்று யாக்கோபு எழுதுகிறார். நீதி மொழிகள் 6 ம் அதிகாரத்தில் கர்த்தர் வெறுக்கும் ஆறு காரியங்களில் ஒன்று சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டு பண்ணுதல். இன்றைக்கு அநேகர் இப்படிப்பட்ட ஆவியை உடையவர்களாக இருக்கின்றனர். இதற்கு இவர்கள் பயன்படுத்துவது தங்கள் நாவை. வேதாகமத்தில் சமாதானம் பண்ணுகிறவர்கள் தேவனுடைய பிள்ளைகள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.அதற்கு மாறாக கோள் சொல்லி பிரிவினைகளை உண்டு பண்ணுகிற தேவனுக்கு பிரியமில்லாத புரட்டு வாயர்களை பகுத்தறிய வேண்டும்.நீதி 8-13 ல் புரட்டு வாயையும் நான் வெறுக்கிறேன் என்று கர்த்தர் எச்சரிக்கிறார். மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்: கோள் சொல்லுகிறவன் பிராண சிநேகிதத்தையும் பிரித்துவிடுகிறான். நீதிமொழிகள் 16-28.
ஒருவர் பேசியதை பிறனிடம் சொல்லி சண்டையை உண்டு பண்ணுகிறவனை கோள் சொல்கிறவன் என்று சொல்வார்கள். (உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக, பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம், நான் கர்த்தர். லேவியராகமம் 19-16)
இத்தகைய கோள் சொல்கிறவர்களை தேவன் எச்சரிக்கிறார், இத்தகய பிரிவினையை உண்டு பண்ணுகிற ஆவியை உடையவர்கள் குடும்பங்களிலும் சபைகளிலும் இருக்கிறார்கள். இவர்களை பகுத்தறியுங்கள். மேலும், இவர்களிடம் கிரியை செய்யும் ஆவியை இயேசுவின் நாமத்தில் விரட்டுங்கள்.இவர்கள் ஒருமனதுக்கு விரோதமாக ஒருவர் சொன்னதையோ அல்லது சொல்லாததையோ பிறரிடம் திரித்து சொல்லி பகைமையை உண்டாக்குவார்கள்.
குடும்பங்களிலும் இவர்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்தில் செயல்படுவார்கள். அதாவது இரண்டு பேர்களை எதிரியாக்கி சண்டை போட வைத்து இருவரையும் ஒருவருக்கொருவர் பேசாதபடி செய்துவிட்டு அந்த இருவரிடம் இவர்கள் மிகவும் ஐக்கியமாக நடந்து கொள்வார்கள். இவர்களது நோக்கம் அவ்விருவரும் ஒன்று சேரக்கூடாது என்பது தான்.
அதே மாதிரி ஊழியத்திலும் ஜெபிப்பதற்கு விரோதமாக இந்த ஆவியை உடையவர்கள் செயல்பட்டு கொண்டிருப்பார்கள், மேலும் உண்மையாய் ஜெபிப்பவர்களிடம் ஒருவரை பற்றி பிறரிடம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி இவர்களை ஒன்று சேர கூடாதபடிக்கு செயல்படுவார்கள்.
பிரியமானவர்களே இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். கணவன் மனைவியை கூட பிரித்து விவாகரத்து வரை கொண்டு போய்விடுவார்கள். இவர்களிடம் அதிக எச்சரிக்கையாக இருங்கள் இத்தகய கோள் சொல்கிற புரட்டுவாயர்களை அடையளம் கண்டு கொண்டு அவர்களை விட்டு விலகுங்கள். ஏனென்றால் இன்றைக்கு பிறர் பேசியதை உங்களிடம் சொல்லும் இவர்கள் நாளைக்கு நீங்கள் பேசியதை பிறரிடம் சொல்லி குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். புறம் கூறுகிறவன் மதிக்கேடன் என்று நீதி 10-38ல் சொல்லபட்டிருக்கிறது.
இன்றைக்கு தங்கள் நாவினால் பிறனுக்கு விரோதமாக புறம் கூறி பாவம் செய்கிறவர்கள் அநேகர்...... புறம் கூறுதல் துர்குணம் என்று பவுல் எழுதுகிறார். தேவனே என் உதடுகளுக்கு காவல் வையும் என்று சங்கீதகாரன் தேவனை நோக்கி அபயமிடுகிறான். என் வாயை கடிவாளத்தினால் அடக்கி வைப்பேன் என்று சொல்கிறான்.
இன்றைக்கு ஊழியத்தில் அநேகர் வீழ்ச்சியடைவதற்கு காரணம் அவர்கள் நாவினால் பிறரை பழித்து பேசி நியாயம் தீர்த்ததே ஆகும். (ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி. போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை, நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம். ரோமர் 2:1.2).சாத்தானை குற்றம் சாட்டுகிறவன் என்று வெளி 12-10 ல் சொல்லப்பட்டிருக்கிறது. பிறரை தூசித்து குற்றப்படுத்தி காயப்படுத்துவது பிசாசின் குணமாகும். வெளி 13-5 ல் பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்கு கொடுக்கப்பட்டது என்று சொல்லபட்டிருப்பதை கவனியுங்கள்.ஓருவன் தன் வாயின் பலனினால் நன்மையை புசிப்பான் என்று வேதம் சொல்கிறது. (அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது, புத்தியாய் நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் விட்டுவிட்டான். சங்கீதம் 36-3.
அவர்கள் உதடுகளின் பேச்சு அவர்கள் பாவமாயிருக்கிறது சங்59-12)ஒரு மனுஷனை அவன் பேச்சிலிருந்து அவன் நல்லவனா கெட்டவனா?அவன் இருதயம் எப்படிபட்டது என்பதை அறிந்து கொள்ளலாம். (நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப்பேச அறியும், துன்மார்க்கருடைய வாயோ மாறுபாடுள்ளது. நீதிமொழிகள் 10:32) (அவர்கள் வாயில் உண்மை இல்லை, அவர்கள் உள்ளம் கேடுபாடுள்ளது, அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவினால் இச்சகம் பேசுகிறார்கள்,சங்5-9).
தேவனுடைய மனுஷனுடைய வாயிலிருந்து தேவனுடைய வார்த்தையை ஜனங்கள் எதிர்ப்பார்பார்கள்இன்றைக்கு அநேகரை தேவன் பயன்படுத்தாததற்கு முக்கிய காரணம் அவர்களது தாறுமாறான பேச்சும் நாவினால் தங்களை தீட்டு படுத்தின கிரியைகள் தான். (கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்? உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே. அவன் தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்குசெய்யாமலும், தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான். சங்கீதம் 15:1-3) மேலும் சங் 10-7ல் துன்மார்கனை பற்றி அவன் வாய் சபிப்பினாலும் கபடத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது.அவன் நாவின் கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு என்று சொல்லப்பட்டிருக்கிறது.(அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது, சங்கீதம் 36:3)
இன்றைக்கு நம்மை ஆராய்ந்து பார்ப்போம். நம்முடைய அவயவமான நாவை நீதிக்குறிய ஆயுதமாக ஒப்பு கொடுக்கவில்லையென்றால் நாம் இன்னும் தேவன் விரும்பும் பரிசுத்தத்தை பெற்று கொள்ளவில்லை எனறு அர்த்தம். அதாவது நாம் மாயமாலமான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.நாம் பரிசுத்தமில்லாமல் தேவனை தரிசிக்கவே முடியாது. எனவே இந்த காரியத்திலிருந்து உடனடியாக மனம் திரும்புவோம்.வசனத்துக்கு கீழ்படிவோம்.பரிசுத்த ஆவியானவரே என் நாவை அடக்க எனக்கு உதவி செய்யுங்கள் என்று ஜெபிப்போம்.அவர் உங்களுக்கு உதவி செய்வார்.
என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக. சங்கீதம் 19-14 ஆமென்.
bottom of page