top of page
ஆவிகள் தேவனால் உண்டானவைகளா என்று பகுத்தறியுங்கள் ???!!
பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். யோவான் 4:1.
தேவனை அறிந்தவன் போதிக்கபடுகிற தேவ வசனத்துக்கு செவி கொடுக்கிறான்.தேவனால் உண்டாயிராதவன் செவி கொடுப்பதில்லை.இதனால் சத்திய ஆவி இன்னதென்றும் வஞ்சகஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம்.என்று 1 யோவான் 4-6 ல் சொல்லப்பட்டிருக்கிறது..அன்புள்ள எவனும் தேவனை அறிந்திருக்கிறான்,அன்பில்லாதவன் தேவனை அறியான். (தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், எனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது. அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான். இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும். நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல.1 யோவான் 3:9,10 ) தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான், நீங்களும் தேவனால் உண்டாயிராதபடியினால் செவிகொடாமலிருக்கிறீர்கள். (யோவான் 8:47) என்று இயேசு சொன்னார். அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும். நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம். 1 யோவான் 2:5.
இன்றைக்கு அநேகர் நான் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன் என்று சொல்கிறார்கள், ஆனால் இவர்கள் அடுத்தவர்களிடம் பகையையும் வெறுப்பையும் காண்பிக்கிறார்கள், இவர்கள் பேசும் வார்த்தைகள் மிகவும் மோசமாக இருக்கிறது, இவர்கள் தன் நாவை அடக்காமல் தங்கள் இருதயத்தை வஞ்சிக்கிறவர்கள். ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்களை பகைக்கிறவர்களை நேசியுங்கள் என்றார். ஆனால் இவர்களோ குடும்பத்திலும் சபைகளிலும் சண்டை போட்டு கொண்டு மறுபக்கம் பிரசங்க மேடையில் பிரசங்கிக்கிறார்கள். இவர்கள் இருளிலே இருக்கிறார்கள் என்று வேதம் சொல்கிறது.( ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான். தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான். அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை. 1 யோவான் 2:10.
வசனத்துக்கு கீழ்படிகிறவனிடத்தில் தேவ அன்பு பூரணப்பட்டிருக்கும் என்ற வார்த்தையின்படி ஆவிகளை பகுத்தறியுங்கள். ஒருவனிடம் தேவ அன்பு இருந்தால் அவன் தன்னை போல பிறனை நேசிப்பான், தன்னை பகைக்கிறவனை சிநேகிப்பான், தன்னை நிந்திக்கிறவனுக்கு எதிர்த்து பேசாமல் அவனுக்காக ஜெபம் பண்ணுவான், தன்னை சபிக்கிறவர்களை ஆசீர்வதிப்பான், இது தான் இயேசு காட்டிய சிலுவையின் பாதை.அவர் காட்டிய அடிசுவடுகளின் மேல் நடக்கிறவன் மாத்திரமே உண்மையான சீஷன்.
இன்றைக்கு அநேகர் தீமைக்கு சரிகட்டுவேன் என்று சொல்கிற பழிவாங்கும் ஆவியை உடையவர்களாக இருக்கிறார்கள்,பழி வாங்குதல் எனக்குறியது என்று தேவன் சொல்கிறார். தீமையை வெறுப்பதே கர்த்தருக்கு பயப்படும் பயம்.நீதி 8-13.ஒருவன் தீமையை வெறுக்காமல் தேவனுக்கு ஊழியம் செய்ய முடியாது. தீமையையை செய்து கொண்டு தேவனுடைய பிள்ளைகளாக இருக்க முடியாது, நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்நம் ஏது?ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன். தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்? 1 யோவான் 4:20.
இன்றைக்கு தேவனுடைய பிள்ளைகள் என்று வேஷம் போட்டு கொண்டிருக்கிற பொய்யர்களை வசனத்தின் படி அடையாளம் கண்டு கொள்ளுங்கள். எவர்கள் தேவனுடைய ஆவியினால் நடத்தபடுகிறார்களோ அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.ரோமர்-8-1உங்களுக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியால் தேவ அன்பு உங்கள் இருதயத்தில் ஊற்றபடுகிறது என்று ரோமர் 5-5ல் பவுல் எழுதுகிறார்.பரிசுத்த ஆவியானவர் வரும் போது சகல சத்தியத்துக்கும் நடத்தபடுவீர்கள். எங்கும் சாட்சியாய் நடப்பீர்கள் என்று இயேசு சொன்னார்.
பரிசுத்த ஆவியில் நிரம்புகிறேன் என்று சொல்கிறவர்களிடம் ஆவியின் கனி இருக்கிறதா என்று ஆராய்ந்து அறியுங்கள். ஆவியின் கனியில் பிரதானமானது மாயமற்ற அன்பே...... அன்பு சகலத்தையும் தாங்கும் சகலத்தையும் சகிக்கும்.அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது. அன்புக்கு பொறாமையில்லை, அன்பு தன்னை புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதை செய்யாது, தற்பொழிவை நாடாது, தீங்கு நினையாது, சினமடையாது.
இயேசு கிறிஸ்து கள்ள போதகர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளை அவர்கள் கனிகளினால் அடையாளம் கண்டு கொள்ளுங்கள் என்றார். இன்றைக்கு அவர்களது வெளிப்புறமான தோற்றத்தையும் வரங்களையும் வைத்து அவர்களை ஆவிக்குறியவர்கள் என்று எண்ணி ஏமாந்து போகிறோம். இவர்கள் ஆவியின் கனிக்கு முதலிடம் கொடுக்காமல் தேவ வசனத்தை விட ஜனங்களை பாரம்பரியத்துக்கு நேராக நடத்துகிறார்கள். உதாரணமாக இயேசு உன் சகோதரனுடன் உனக்குள்ள குறையை சரி செய்து விட்டு காணிக்கை போடு என்றார். இவர்களோ தசமபாகம் கொடுக்காவிட்டால் நரகத்துக்கு போவீர்கள் என்பார்கள். இயேசு கிறிஸ்து பாத்திரத்தின் வெளிப்புறம் சுத்தமாகும் படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு என்றார். அதாவது உள்ளான பரிசுத்தமே முதலாவது என்றார். இவர்களோ வெளிப்புறமாக புறம்பாக நீதிமானாய் காட்டுவதற்காகவே முதலிடம் கொடுக்கிறார்கள். இயேசு மேலும் கூறுகையில் நீதிமான்கள் என்று புறம்பே காட்டுகிறீர்கள்.உள்ளத்திலோ மாயத்தாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்து வெள்ளையடிக்கபட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள் என்றார். அன்பில்லாதவன் தேவனை அறியான் என்று வேதம் சொல்கிறது.இன்றைக்கு தேவனை அறியாமல் வேத வசன அறிவினாலே நிறைந்து இருக்கும் இவர்கள் அன்பிலே பூரணமற்றவர்களாக இருக்கின்றனர் இவர்கள் ஒருவருக்கொருவர் தூசித்து சண்டையிட்டு கொள்கின்றனர்.
இன்றைக்கு ஆவிக்குறிய போர்வையில் மறைந்திருக்கும் மாயமாலமானவர்களை பகுத்தறியுங்கள்!!!. இவர்களை அடையாளம் கண்டு கொள்ளவில்லையென்றால் நீங்கள் வஞ்சிக்கபட்டுவிடுவீர்கள். தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான். மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள். 1 யோவான் 3:15.
கிறிஸ்து நமக்காகத் தம்மைத் தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்பு கூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள். எபேசியர் 5:2.
கிறிஸ்து நம்மீது அன்பு கூர்ந்து நாம் மீட்கபடும்படியாக நமக்காக தன் ஜீவனையே கொடுத்தது போல நாமும் ஒருவருக்கொருவர் அன்புள்ளவர்களாக நடந்து கொள்வோம். இயேசுவின் அன்பை நம் வாழ்க்கையிலும் செயல்களிலும் வெளிப்படுத்துவோம். அவர் தம்முடைய ஜீவனை நமக்காக கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம். நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். 1 யோவான் 3:16.
நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார். யோவான் 13-35.ஆமென்.
bottom of page