top of page

என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் வேண்டாம்

சகோதரி. அனு ஃபெஸ்லின்

அன்பான வாசகர்களுக்கு இன்றான மெய் தேவனாகிய நம் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். அவரே நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவாராக. ஒருமுறை ஒரு வாலிபன் இயேசுவிடம்  வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்; அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார். அவன் அவரை நோக்கி: எவைகளை என்று கேட்டான். அதற்கு இயேசு: கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரம் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச் சாட்சி சொல்லாதிருப்பாயாக; உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக; உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பவைகளையே என்றார். அந்த வாலிபன் அவரை நோக்கி: இவைகளையெல்லாம் என் சிறு வயது முதல் கைக்கொண்டிருக்கிறேன்; இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன என்றான். அதற்க்கு இயேசு உனக்கு உண்டானவைகளை விற்று தரித்திரருக்கு கொடு என்றதுமே அவன் மிகுந்த ஆச்தியுள்ளவனாய் இருந்த படியால் ஓடி போய்விட்டான் [மத்தேயு 19:16-20.]. கற்பனைகள் நிறைவை தருவது இல்லை. ஆனால் கற்பனைகள் அடிப்படையாக நாம் பின்பற்ற வேண்டியவை. கிறிஸ்தவன் வாழ்வில் தேவையான  இரண்டு காரியங்கள்.

  • செய்ய வேண்டியவற்றை குறித்து நல்ல அறிவு

  • அதை கீழ்ப்படிய ஒரு கவனமான மனசாட்சி

கீழ்ப்படிதல் இல்லாமல் நித்திய இரட்சிப்பு இல்லை என்பது தான் வேதத்தின் கருப்பொருள். எது செய்ய வேண்டும் இல்லை எதை செய்ய கூடாது என்று அறியாமல் கீழ்ப்படிதலை நாம் கற்றுக்கொள்ள முடியாது.

 

இஸ்ரவேல் ஜெனங்கள் எகிப்த்து தேசத்தில் 430 ஆண்டுகள் அடிமைகளாய் இருந்தார்கள். அங்கு இருந்த காலத்தில் தங்கள் தேவன் ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன் யாக்கோபின் என்று அறிந்திருந்தாலும் அந்த தேவன் எப்படிபட்டவர் அவர் எல்லா தெய்வங்களையும் போல ஒரு தேவனா அவர் வித்தியாசமானவரா என்பதெல்லாம் தெரியாது. எகிப்திலே அடிமைகளாய் இருந்த ஜெனங்களை, நம்பிக்கை அற்று இருந்த ஜெனங்கள் கண்கள் காணும்படி அந்த எகிப்த்திய ஜெனங்களை இந்த ஆபிரகாமின்  தேவன் பத்து வாதைகளால் சோதித்து அவர்கள் வழிபட்ட தண்ணி சாமி, தவளை சாமி, பேன் சாமி, வண்டு சாமி, மாட்டு சாமி போன்ற சாமிகளை விட இந்த சாமி தான் பெரியவர் என்பதை காண்பித்து அவர்களை வெளியே அழைத்து கொண்டு வந்தார்.

 

     சாதாரணமாக இப்படி தேவனுடைய விசேஷ தன்மைகளை / அற்புதங்களை கண்டு வந்தவர்கள் கொஞ்ச காலம் ஆகும்போது நாம் நம்பி வந்தது உண்மையா ? இல்லை நாம் ஒருவேளை தெரியாமல் நாம் வந்து விட்டோமா உண்மையாகவே இந்த தெய்வம் நம்மை நடத்துமா? நாம் நம்பின பழைய தெய்வங்கள் நம்மை நடத்தாதா  என்றெல்லாம் சந்தேகம் வரும். இப்படியே இந்த இஸ்ரவேல் ஜெனங்களுக்கும் மூன்று மாதங்கள் நடந்து வந்த போது அந்த தேவ வல்லமையை குறித்து சந்தேகம் வந்து நம்மை அடிமைத்தனத்தில் இருந்து அழைத்து வந்த தெய்வம் யார்? அவர் எப்படிபட்டவர் என்று குழப்பம் வந்தது. மற்ற தெய்வங்களுக்கும் இந்த தெய்வத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் போனது. தேவன் செய்த அற்புதங்கள் மறந்து போனது. இந்த சூழ்நிலையில் தான் தேவன் மோசேயை அழைத்து இந்த ஜெனங்களுக்கு தன்னை குறித்து சொல்லுகிறார்.

இன்று ஒருவேளை நமக்கும் இந்த தேவன் எப்படிபட்டவர் என்ற சந்தேகம் இருக்குமானால் இந்த செய்தி நமக்கு ஒருதெளிவை தரும் என்பதில் சந்தகம் இல்லை. இதை தெளிவு படுத்தவில்லை என்றால் நம் புது நம்பிக்கையோடு பழைய நம்பிக்கையும் கலந்து நம் விசுவாசம் கலப்படமாகிவிடும் என்பதால் தேவன் அவர்களுக்கு தெளிவு படுத்துகிறார்.

 

தேவன் இந்த கற்பனைகளை கொடுத்த விதம்.

 

கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஜனங்களிடத்தில் போய், இன்றைக்கும் நாளைக்கும் அவர்களைப் பரிசுத்தப்படுத்து; அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்து, மூன்றாம் நாளைக்கு ஆயத்தப்பட்டிருக்கக்கடவர்கள்; மூன்றாம் நாளில் கர்த்தர் சகல ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகச் சீனாய்மலையின்மேல் இறங்குவார்[யாத் 19:10, 11] என்று சொன்னார். தேவனை தரிசிக்க பரிசுத்தம் தேவை. நம் வாழ்வில் பரிசுத்தம் இல்லை என்றால் தேவனை தரிசிப்பேன் என்று கற்பனை காணலாமே தவிர தேவனை தரிசிக்க முடியாது. அது ஒரு பழைய ஏற்ப்பாடு கற்பனை தான் அது எனக்கு பொருந்தாது எந்த்ரூ நினைக்கும் அன்பு உள்ளங்கள் எபிரெயர் 12:14. யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாய் இருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே. என்ற இந்த வசனத்தை கவனமாக வாசித்து அதன் அர்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும். இது வேதம் கூறும் சத்தியம்.

 

தேவனை தரிசிக்க மாத்திரம் அல்ல, தேவ வார்த்தையை உண்மையாய் கேட்க்க வேண்டும் என்றால் நமக்கு பரிசுத்தம் தேவை. ஜனங்கள் தேவனை தரிசிக்கவில்லை என்றாலும், தேவன் மோசே மூலம் அந்த ஜனங்களுக்கு பேசுவதால் அந்த ஜனங்களும் பரிசுத்தமாய் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

 

நாமும் ஆலயத்திற்கு வரும்போது தேவன் நம்மோடு பேச வேண்டும் என்று விரும்பினால் பரிசுத்த அலங்காரம் தேவை. இதை அறிந்த சங்கீதக்காரன் பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்[சங்கீதம் 29:2] என்று ஆலோசனை சொல்லுகிறார். கர்த்தருக்காய் ஆயத்தமாகி அவரை தரிசிக்க காத்திருக்கும் ஜனங்களை குறித்து தாவீது சொல்லும்போது உமது பராக்கிரமத்தின் நாளிலே உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரமுமுள்ளவர்களாயிருப்பார்கள்[சங்கீதம் 110:3] என்று சொல்லுகிறார். அவர் வரும் அந்த பராக்கிரமத்தின் நாளில் நாம் அந்த கூட்டத்தில் இருக்க வேண்டும் என்றால் பரிசுத்த அலங்காரம் நமக்கு தேவை. நாம் அந்த கூட்டத்தில் இருப்போமா என்பதை நாமே நிதானித்து அறியலாம்.

 

நாம் இந்த கட்டளைகளுக்கு கீழ்ப்பட்டவர்களா ?

 

     இயேசுவே இந்த உலகத்தில் வந்தபோது மத்தேயு 5: 17, 18 நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

ஒரு பள்ளி மாணவன் ஒருவன் எல்லா தேர்வுகளிலும் மற்றவர்களை பார்த்து எழுதி மதிப்பெண் பெறுவது வழக்கம். அந்த வகுப்பில் மேற்ப்பார்வையில் இருக்கும் ஆசிரியர்கள் எவ்வளவு கண்டித்தும் அவன் கேட்ட பாடில்லை. அவனுக்கு தண்டனைகளை எல்லாம் குறித்து சொல்லி மிரட்டியும் பலன் இல்லை. தலைமை ஆசிரியரிடம் கொண்டு சென்று தண்டிக்கபடுவாய் என்றாலும் அவன் அப்போதைக்கு திருந்தினாலும் முழுதும் திருந்த முடியவில்லை. ஒவ்வொரு தேர்விலும் புது புது யுக்த்திகளை கையாண்டான். சற்று நாட்களில் அந்த பள்ளியில் ஒரு புதிய தலைமை ஆசிரியர் பதவி ஏற்றார். அவர் மாணவர்களிடம் அன்பாக இருந்தார். எங்கு வைத்து மாணவர்களை பார்த்தாலும் அவர்களை அன்பாய் விசாரிப்பார். மாணவர்களை நன்கு ஊக்குவிப்பார். இப்போது தேர்வு வருகிறது. எப்போதும் ஏமாற்றும் அந்த மாணவன் இப்போது ஏமாற்றவில்லை. ஒழுங்காக படித்து தேர்வு எழுதுகிறான். அதை கண்ட ஆசிரியர்களுக்கு எல்லாம் ஒரே ஆச்சரியம். ஒருநாள் அந்த மாணவனை ஒரு ஆசிரியர் கூப்பிட்டு அவன் மாற்றத்திற்கு காரணத்தை கேட்டார். அந்த மாணவன் சொன்னான், எல்லாரும் என்னை தவறாக நினைத்தபோதும், என்னை பலர் மிரட்டி நான் தவறானவன் என்று என்னை வெறுத்த போதும், இந்த தலைமை ஆசிரியர் என்னை அன்பாய் விசாரித்தார். என்னை அன்பாக நேசிக்கும் ஆசிரியருக்கு முன்பாக நான் வெட்கத்தோடு தலைகுநிந்தவனாக தவறு செய்துவிட்டு பொய் நிற்க எனக்கு மனம் இல்லை. எனவே நான் என்னையே மாற்றி கொண்டேன் என்று சொன்னானாம்.

 

அன்பானவர்களே, சட்டம் ஓன்று தான். எப்படி அதற்கு கீழ்ப்படிகிறோம் என்பது தான் முக்கியம். தேவன் ஆதி முதல் அந்தம் வரை எதிர்பார்ப்பது ஓன்று தான். கீழ்ப்படிதல், பரிசுத்தம், அன்பு, ஒழுக்கம். இதை நாம் பின்பற்ற பல வழிகளில் தேவன் நமக்கு தெரியப்படுத்தினார். நாம் கடைபிடிக்க வேண்டும். தண்டனைக்கு பயந்து அல்ல. அன்பிற்கு கீழ்ப்படிந்து கடைபிடிக்க வேண்டும்.

 

இரண்டு பகுதிகளாக இந்த கற்பனைகளை கொடுக்கிறார்.

  • தேவனுக்கு நேரான மனிதனின் கடமைகள்

  • மனிதர்களுக்கு நேரான மனிதனின் கடமைகள்.

முதல் நான்கு கற்பனைகள் தேவனுக்கு நேரானவைகளாக கொடுத்தார். அடுத்த ஆறு கற்பனைகளையும் மனிதனுக்கு நேரானதாக கொடுத்தார்.

 

இந்த நாளில் தேவனுக்கு நேரான கடமைகளான முதல் நான்கு கற்பனைகளில் முதன்மையான கற்பனையையும் அதிலே தேவன் நமக்கு கற்று தருகிறவைகளையும் நாம் தியானிக்கலாம்.

 

என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம் (Choice of the true God)

 

யாத் 20: 1 – 3 தேவன் பேசிச் சொல்லிய சகல வார்த்தைகளுமாவன: உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.

 

ராஜாக்கள் தங்கள் கட்டளைகளை எழுதும் முன்னர் தங்கள் முகவரியை தங்கள் அதிகாரத்தை தெரிவிப்பது வழக்கம். உலகத்தை படைத்த, எல்லா அதிகாரமும் படைத்த நம் தேவன் அப்படியே தன்னை அறிமுகம் செய்வதை நாம் பார்க்கலாம். ராஜாக்கள் தங்கள் பெயர் சொல்லி சொல்லும் காரியங்களுக்கு ஜனங்கள் அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அதுபோல் பயத்துடன் ஜனங்கள் தேவ வார்த்தைகளை கேட்க வேண்டும் என்று தன்னை அறிமுகம் செய்கிறதை பார்க்கிறோம்.

 

     உபாகமம் 28:58. உன் தேவனாகிய கர்த்தர் என்னும் மகிமையும் பயங்கரமுமான நாமத்திற்குப் பயப்படும்படிக்கு, ...

 

மோசே சொல்லும்போது அவருடைய நாமம் மகிமையும் பயங்கரமுமான நாமம் என்று சொல்லுகிறார்.

 

            உன்னை அடிமைத்தனத்திலிருந்து புறப்பட பண்ணின தேவன் நானே என்று அறிமுகம் செய்கிறார். நீ எந்த அற்புதங்களை கண்டு என்னை நம்பி விடுதலை பெற்றாயோ அந்த தேவன் தான் நான். நீ எப்படி ஒரு எதிர்பார்ப்போடு எகிப்தை விட்டு வந்தாயோ அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுகிற தேவன் தான் நான். அவரே மகிமைக்கு கனத்திற்கு பாத்திரர். நேற்று அவர் நம் சிருஷ்டிகர். இன்று நம்மை ஆளும் பிரபு, நாளை அவர் வரப்போகும் நீதி அரசர். எனவே இந்த கட்டளைகள் எல்லாரும் பயப்பட கூடிய நாமம் உள்ள நம் தேவன் கொடுத்ததால் சகல பயத்தோடும் நடுக்கத்தோடும் அதை கடை பிடிக்க வேண்டும் என்பதை தேவன் விரும்புகிறார்.

 

என்னை அன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.

God has made a biggest grammar mistake. அவர் இஸ்ரவேல் ஜெனங்கள் எல்லாருக்குமாக சொல்லும் வார்த்தையை உனக்கு என்று சொல்லுகிறார். ஆதியாகமம் 19 ம் அதிகாரத்தில் இஸ்ரவேல் ஜனங்களுக்கு மோசே மூலம் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு என்று சொன்ன தேவன் இங்கே உனக்கு என்று சொல்லுகிறார்.

     கட்டளைகள் ஒவ்வொருவருக்கும் தனியாய் கொடுக்கப்பட்டது. அதை வைத்து நாம் மற்றவர்களை அறிவிறுத்துவதை விட நாம் அதை பின்பற்ற முற்பட வேண்டும். உங்களுக்கு என்று அவர் சொல்லியிருந்தால், நாம் எல்லாரையும் போல தான் நானும் என்ற காரணத்தை சொல்லி கட்டளைகளை பின்பற்றாமல் போயிருக்கலாம். எனவே தான் தேவன் சொல்லும்போது உனக்கு என்று சொல்லுகிறார்.

     கிறிஸ்தவ உலகம் இன்று மாயையான உலகம் என்று சொல்லும் நாம் அதன் மாயை தன்மையை, அதில் நம் பங்கை சோதித்தறிய  விரும்புவது இல்லை. கர்த்தருடைய வார்த்தைகளை நாம் கேட்கும்போது அதை ஏற்றுக்கொண்டு நாம் பின்பற்றுவதை விட, இப்படி எல்லாம் வசனம் இருந்தும் இந்த மனுஷன் ஏன் இப்படி பண்ணுகிறான் என்று மனதிலே எண்ணம் கொண்டு நாம் மற்றவர்களை போதிக்க முற்படுகிறோம். ஆனால் ஒரு நொடி கூட அது என் வேலை அல்ல, தேவன் பார்த்துகொள்ளுவார். எல்லாவற்றையும் விட என் ஆத்தும இரட்சிப்பு முக்கியம் என்ற எண்ணம் நமக்கு வருவது இல்லை. இயேசு மலை பிரசங்கத்தில் சொல்லும்போது மத்தேயு 7:1-5 நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். 2. ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். 3. நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? 4. இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?  5. மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.

            வேத வசனங்கள் நமக்கு தனிப்படையாய் சொல்லப்பட்டவை என்பதை நினைவு கூர்ந்து அதை பின்பற்ற நம் மனதை ஆயத்தபடுத்துவோம்.

 

வேறே தேவர்கள்.

மத் 4:10 - உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

     வேறே தேவர்கள் என்ற உடன் உலகத்தில் வேறே தேவர்கள் இருக்க நம் தேவனை மாத்திரம் ஆராதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு விட கூடாது. தேவனுடைய சிருஷ்டிப்புகளில் அவர் மகிமை விளங்க, அந்த சிருஷ்டிப்புகளை எல்லாம் தெய்வமாக்கி வணங்க கூடாது என்பதை தான் சொல்லுகிறார். பிலிப்பியர் 3: 19. அவர்களுடைய முடிவு அழிவு. அவர்களுடைய தேவன் வயிறு,… உடனே வயிறாய் வழிபடுவதற்கு அல்ல. வயிறையே பெரிதாக நினைத்து வாழ்ந்தால் வயிறு தான் தெய்வம். ஆலயத்திருக்கு போகாமல் இருப்பார்கள் ஆனால் ஒரு வேளை கொஞ்சம் சாப்பாடுக்கு தாமதம் ஆகிவிட்டால் இருக்க முடியாது. அப்படி இருக்குமானால் நம் தேவன் வயிறு தான். Makeup போட நேரம் இல்லாமல் ஆலயத்திற்கு போகவில்லை என்றால் நம் தேவன் makeup தான்.

     நாம் வெளிவேஷம் தரித்து மற்ற மனிதர்களுக்கு முன்பாக பரிசுத்தம் காட்டலாம். ஆனால் தேவன் நம் இருதயத்தை ஆராய்ந்து அறிகிறார். அவருக்கு மறைவானது ஒன்றும் இல்லை. நம் பேச்சுக்களை அவர் கவனித்து கேட்ப்பார். - மல் 3: 16.  எனவே நாம் எந்த தேவனை ஆராதிக்கிறோம் என்பதை சிந்தித்து உணர்ந்து எல்லாம் சிருஷ்டித்த மெய் தேவனாம் கர்த்தாதி கர்த்தரை இராஜாதி இராஜாவை ஆராதிப்போம்.

     என்னை அன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாய் இருக்க வேண்டாம் என்று சொல்லும்போது, உன் ஆராதனை எனக்கு உரியதாய் இருக்கட்டும், உன் பேச்சு எனக்கு உரியதாய் இருக்கட்டும், உன் செயல்கள் எனக்கு உரியதாய் இருக்கட்டும், உன் சிந்தனை எனக்கு உரியதாய் இருக்கட்டும், உன் நேரங்கள் எனக்கு உரியதாய் இருக்கட்டும், உன் ஆராதனைகள் எனக்கு உரியதாய் இருக்கட்டும் என்று கர்த்தர் சொல்லுகிறார். என்னை அன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாய் இருக்க வேண்டாம் என்று சொல்லும்போது உன் நம்பிக்கை நான் மாத்திரமாக இருக்கட்டும், உன் அன்பு நான் மாத்திரமாக இருக்கட்டும், உன் இருதயத்தின் யோசனை நான் மாத்திரமாக இருக்கட்டும், இதை எல்லாம் எனக்கும் வேறே எதோ ஒன்றிற்கும் பங்கு போடா வேண்டாம் என்று தேவன் விரும்பி இதை சொல்லுகிறார்.

     அன்பானவர்களே நம்மை நாமே சற்று சோதித்து பார்ப்போமா? இயேசுவிடம் வந்த அந்த வாலிபன் எல்லா கற்பனையையும் தான் கைகொள்ளுவதாக நம்பினான். அவனுக்கு தன் தவறை உணர்த்தும்படியாக இயேசு அவன் ஆஸ்தியை விற்று தரித்திரருக்கு கொடுக்க சொன்னபோது மனமற்றவனாய் பின்வாங்கி போவிட்டான், அவன் நம்பிக்கு தேவன் மேல் இல்லாமல் தன் ஆஸ்தி மேல் இருந்ததை நாம் அறியலாம். நமக்கும் தேவன் உணர்த்தும் காரியங்களை விட்டு தேவனையை மகிமை படுத்தி வாழ்வோம். அவரே என்றும் துதிக்கப்பட தக்கவர். ஆமென்! அல்லேலூயா!!

bottom of page