top of page

மிஷனரிமார்களின் பிள்ளைகளின் எதிர்காலம் அருட்பணியாளர்களின்  நிலை உங்களுக்குத் தெரியுமா?

இதோ இப்படியும் ஒரு சந்ததி.....

தயவுசெய்து இந்த செய்தியை கொஞ்சம் நேரம் எடுத்து வாசித்துப்பாருங்கள்.... ஒவ்வொரு நாளும் தவறாமல் ஜெபித்துக்கொள்ளுங்கள்.... 

ஒரு மருத்துவரின் மகனோ அல்லது மகளோ கண்டிப்பாக தானும் ஒரு சிறந்த மருத்துவராக பணி செய்யவேண்டும் என்று தான் நினைப்பார். 


ஒரு பொறியாளரின் மகனோ அல்லது மகளோ கண்டிப்பாக தானும் ஒரு சிறந்த பொறியாளராக பணி செய்யவேண்டும் என்று தான் நினைப்பார்.


இதைப்போன்று தான் பெற்றோர்கள் செய்கின்ற பணிதனை பெரும்பாலான பிள்ளைகளும் செய்ய விரும்புகின்றார்கள்.


பெற்றோரும் சந்தோசமாக பிள்ளைகளின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற அத்தனை முயற்சிகளையும் செய்வார்கள் ஆனால், அருட்பணியாளர்களின் (மிஷனரிமார்கள்) பிள்ளைகளில் பெரும்பாலோர் பெற்றோர் செய்கின்ற மகத்தான, தியாகம் நிறைந்த, தேவன் நேசிக்கின்ற பணிதனை செய்ய விரும்புவதில்லை உங்களுக்குத் தெரியுமா?

விடுதிகளில் தங்கி படிகின்ற பிள்ளைகளில் பெருவாரியானவர்கள், தங்கள் பெற்றோர் தூர தேசத்திலோ அல்லது பட்டணத்திலோ தங்கி பணி செய்வதினால் தான் தாங்கள் உல்லாசமாக, சந்தோசமாக, எதிர்காலத்தைக் குறித்த கவலை இல்லாமல் இருக்க முடியும் என்கின்ற நம்பிக்கையால் தனிமை என்கின்ற “காயத்தை” அனுபவித்துக்கொண்டு இருகின்றார்கள். 


ஆனால், அருட்பணியாளர்களின் (மிஷனரிமார்கள்) பிள்ளைகளில் பெரும்பாலோர் பெற்றோர் தூரமான பணிதலங்களில் தங்கி, மாறுபட்ட கலாச்சார மக்களோடு மக்களாக தங்களை இணைத்துக்கொண்டு, கடுமையான இயற்கை பாதிப்புகளின் நடுவில், சுகாதாரமான உறைவிடமோ, உடையோ, உணவோ, தண்ணீரோ, எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் பலவிதமான சரீர பாதிப்புகளின் மத்தியிலும், பிள்ளைகளைக் குறித்த ஏக்கத்தோடு, அழைத்த தேவனின் அன்பு வார்த்தைக்குக் தங்களை பூரணமாக ஒப்புக்கொடுத்த பெற்றோரின் பாசப்பிரிவால் ஏங்கி தங்களுக்குள் ஒரு வெறுமையை உணர்கின்றார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? 

எல்லா பிள்ளைகளும் விடுமுறைக்கு தங்கள் பெற்றோரோடு சந்தோசமாக, உல்லாசமாக பல இடங்களுக்கு சென்று, நேரத்தைக் கழித்துக்கொண்டு இருக்கின்றார்கள். மிக்க மகிழ்ச்சி...


ஆனால், அருட்பணியாளர்களின் (மிஷனரிமார்கள்) பிள்ளைகளில் பெரும்பாலோர் பெற்றோரோடு, விடுமுறை நாட்களில் கூட சேர்ந்து இருக்க முடியவில்லையே என்று ஏங்கி கண்ணீர் விட்டுக் கதறி தவித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?


ஒரு நாளில் தேவன் தான் இந்த அருட்பணியாளர்களை அழைத்தார்.....பலவிதமான தனது பாரங்களை இவர்களோடு தேவாதி தேவனே பகிர்ந்து கொண்டார்....தரிசனங்களை அளவில்லாமல் தந்தார்.....பல மொழி பேசும், பலவிதமான கலாச்சார மனிதர்கள் தேவ அன்பை ருசித்து இரட்சிப்பை பெற்றுக்கொள்ள தேவன் தான் இவர்களைப் பயன்படுத்தி வருகின்றார்.


வாலிப நாட்களில் தங்களை தேவனுக்கு ஒப்புக்கொடுத்தார்கள்..... பல ஆண்டுகள் கடுமையான உழைப்பால் முழு சரீர பெலத்தையும் இழந்தார்கள்..... சத்துருக்களால் பலமுறை அடிக்கப்பட்டு,துன்புற்று வேதனைகளை அனுபவித்து இருக்கின்றார்கள்.  சில நேரங்களில் தங்கள் குடும்ப உறவுகளையும் மரிக்க கொடுத்தும் இருக்கின்றார்கள்.  ஆனாலும், அன்பு நேசரின் பெலத்தோடு ஒரு கூட்டம் ஜனத்தை சாபத்திலிருந்து மீட்டு, அன்பின் வழிக்கு கொண்டு வந்தும்விட்டார்கள். 


இந்த நிலையில் உள்ளவர்களுக்கு என் பங்கு என்ன?


கர்த்தர் தானே இவர்களை அழைத்தார் அவரே எல்லாம் பார்த்துக்கொள்வார் என்று ஒதுங்கிக்கொள்ளப்போககின்றேனா....... ?


இந்த அருட்பணியாளர்களுக்கு நான் மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட பணத்தை காணிக்கையாக அனுப்புகின்றேன் என்று திருப்திப்பட்டுக் கொள்ளப்போககின்றேனா.......? 
இவர்களுக்காக ஜெபித்துக் கொள்கின்றேன் என்று லேவியன்/ஆசாரியன் போல பக்கமாய் விலகி போகப்போகின்றேனா.......? 


அல்லது.....இயேசு கிறிஸ்து சொன்ன வார்த்தைகளை நன்கு புரிந்துகொண்டு அந்த அருட்பணியாளர்களுக்கு மாத்திரம் அல்ல, அவர்களின் குடும்பத்திற்கும் நானே பொறுப்பு என்று வைராக்கியம் காட்டப்போகப்போகின்றேனா.......?


இதோ இயேசு சொல்லுகின்றார்...... மத்தேயு 25 :

31. அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார்.

 

32. அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாக பிரிக்கிறது போல அவர்களை அவர் பிரித்து,

 

33. செம்மறியாடுகளைத் தமது வலது பக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடது பக்கத்திலும் நிறுத்துவார்.

 

34. அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.

 

35. பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன் என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன் என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்;

 

36. வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார்.

 

37. அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவர்களாகக் கண்டு உமக்குப் போஜனங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவர்களாகக் கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்?

 

38. எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக்கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்?

 

39. எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும், காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள்.

 

40. அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.

உங்களால் முடிந்ததை இப்படிப்பட்டவர்களுக்காக, அவர்கள் குடும்பங்களுக்காக, அன்புப் பிள்ளைகளுக்காக  செய்து பாருங்கள், கண்டிப்பாக கர்த்தர் உங்கள் குடும்பங்களை உயர்த்துவார்...... உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவாய் சந்திப்பார். உங்களைப் பெலப்படுத்துவார். பரலோகத்தில் உங்கள் பொக்கிஷம் மிகுதியாய் இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

எனது பிள்ளை இப்படியாக ஏங்கி, கண்ணீரோடு நிற்பதைப்பார்த்து நான் சும்மா இருக்க முடியுமோ....... யாரோ ஒரு மிசனரியின் பிள்ளை தானே என்று என்னால் இதை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியுமோ.... இதை நன்றாக புரிந்துகொண்டும், நான் நன்றாக இருக்கவேண்டும், என் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தவறாமல் ஜெபிக்கும் என் விண்ணப்பம் இப்போது என்னை சுயநலவாதியாகவே எனக்குக் காட்டுகின்றது. நிச்சயமாகவே இந்த விண்ணப்பம் எனக்கு அருவருப்பாகவே இருக்கின்றது.

 

மாறாக, கர்த்தாவே, நான் திருப்தியாக இருப்பது போலவே உமது ஊழியர்களும், உம்முடைய அழைப்பைப் பெற்று தன்னலமின்றி, தியாகமாக பணி செய்கின்ற அத்தனை அருட்பணினயாளர்களும், அவர்தம் குடும்பங்களும் பாதுகாப்பாக, குறைவின்றி நிறைவோடு, சந்தோசமாக, பூரணமான பெலத்தோடு  வாழ உதவி செய்வீராக. நானும் என்னால் முடிந்ததை அவர்களுக்கு கொடுத்து தாங்க எனக்கும் உதவி செய்யும் என்கின்ற இந்த ஜெபம் கர்த்தர் விரும்புகின்ற, முழுமையான ஜெபமாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

நேரம் எடுத்து இதை நீங்கள் நேசித்து, வாசித்தமைக்கு என் நன்றிகள்..... இப்படி இன்றைக்கு அருட்பணியாளர்கள் குறித்து ஒரு பாரத்தைக் கொடுத்த கர்த்தருக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம் உண்டாவதாக.....                  

 

நம்முடைய பிறந்த நாள் திருமண நாள் போன்ற முக்கியமான நாள்களில் இந்த மிஷனரி பிள்ளைகளை சந்தோஷப்படுத்துங்கள். தன்னை போல பிறனை நேசி என்று ஆண்டவர் சொன்னாரே. கிராம ஊழியம் செய்பவர்கள் மற்றும் மிஷனரிகளின் பிள்ளைகளுக்கு உங்கள் பிள்ளைகளுக்கு என்ன பரிசு பொருள்களை அன்பளிப்பாக கொடுப்பீர்களோ அதை போல அவர்களுக்கும் செய்யுங்கள். அவர்களுடைய படிப்பு தேவைகளை சந்தியுங்கள்.நம்முடைய  பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக எவ்வளவு பிரயாசம் எடுக்கிறோம். ஊழியம் செய்பவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக ஜெபிப்போம். அவர்கள் தேவையை சந்திப்போம். கர்த்தருக்காக தங்கள் ஜீவனையும் பாராமல் குடும்பத்தினர்களை பிரிந்து பாதுகாப்பற்ற சூழ்நிலைகளில் ஊழியம் செய்யும் இவர்களது பிள்ளைகளின் தேவைகளை சந்திப்பதும் கர்த்தருக்கு கொடுப்பதற்கு சமானம்.

 

தயவு செய்து இதை ஒரு ஊழியமாக செய்யுங்கள். கிறிஸ்துவின் மேல் உள்ள அன்பின் நிமித்தம் இதை சந்தோஷத்தோடு செய்யுங்கள்.உங்கள் சபைகளில் அறிவியுங்கள் ஆமென்.

bottom of page