top of page

ஊழியக்காரர்களை வீழ்சியடைய செய்யும் மனித புகழ்ச்சி

 

அவர்கள் தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாக விரும்பினார்கள்-யோவான் 12-43 கடைசி நாள்களில் சாத்தான் ஊழியம் செய்பவர்களின் இருதயத்தை பெருமையினால் நிறைத்து அவர்களை கீழே தள்ளும் படி பயன்படுத்தும்  அக்கினியாஸ்திரம் மனித புகழ்ச்சி.

 

இன்றைக்கு  ஊழியம் செய்கிறவர்களை புகழ்ந்து பேசி அவர்களை தேவன் விரும்பாத பெருமையினால் வீழ்ச்சியடைய செய்யும் படி  சபைகளில் மனிதர்களை சாத்தான் எழுப்புகிறான். (எல்லா மனுஷரும் உங்களைக்குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ. (லூக்கா 6:26,)

 

என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொன்ன இந்த வார்த்தையை விளங்கி கொண்டீர்களா?  இன்றைக்கு அநேக ஊழியக்காரர்கள் மனிதபுகழ்ச்சி என்ற போதைக்கு அடிமையாயிருக்கிறார்கள்.பல ஊழியக்காரர்கள்,  தங்களை உயர்த்தி கொள்ளும்படியாகவும் மனிதர்கள் தங்களை புகழும்படியாகவும்பல காரியங்களை  இணையதளங்களில் வெளியிடுகிறார்கள் அதாவது அவர்களே தங்களை பிரபலப்படுத்துகிறார்கள். இவர்கள் இயேசு சொல்ல சொன்ன அப்பிரயோஜனமான ஊழியக்காரன் என்பதற்கு  எதிரான தங்கள் சுயத்தை சிலுவையில் அறையாத வீண் புகழ்சியை விரும்பும் மேட்டிமை சிந்தையுள்ள ஊழியக்காரர்கள். இவர்கள் தங்களை உயர்த்தி கொள்ள தேவ சித்தத்தை விட்டு தங்கள் சுயசித்தம் செய்து கொண்டிருப்பவர்கள் சந்திப்பின் நாளிலே இயேசுவை பார்த்து உம் நாமத்தினாலே அநேக காரியங்களை செய்தோம் என்று சொல்வார்கள் இயேசு அவர்களை பார்த்து ஒருக்காலும் உங்களை அறிவேன்,அக்கிரம செய்கைகாரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்று சொல்லுவேன் என்றார்.தேவன் பெருமையுள்ளவனுக்கு நேற்றும் இன்றும் என்றும் எதிர்த்து நிற்கிறார் என்பதை ஊழியக்காரர்கள் மறந்தாலும் சாத்தான் ஒருகாலும் மறப்பதில்லை. ஏனென்றால்? அதே பெருமையினாலே தானே அவன் கீழே தள்ளப்பட்டான்.முதல் ஆராதனை வீரனான அவன் பெருமையினாலே பிசாசாய் முடிவடைந்தான்.இன்றைய நாள்களில் அநேக ஊழியக்காரர்கள் தங்களை பிஷப் என்று பிரகடனப்படுத்தி கொள்கிறார்கள்.மேலும் தாங்கள் பதவியேற்பதை இணையதளத்தில் பதிவிட்டு தங்களை விளம்பரப்படுத்தி கொள்கிறார்கள். மேலும், அதற்கு கீழே ஒரு கூட்டம் ஏதோ அவர் உலகத்தையே ஆதாயப்படுத்தி கொண்டது போல் அவரை புகழ்ந்து தள்ளுகிறார்கள். இதில் சிலர் தேவனுக்கே மகிமை என்று பதிவிடுகிறார்கள்.

 

பிரியமான ஊழியக்காரர்களே நீங்கள் பிஷப் ஆனதற்கு பரலோகம் நிச்சயம் சந்தோஷப்படாது ஒரு பாவி மனம் திரும்பி தேவனுடைய ராஜ்ஜியத்தில் சேர்க்கப்படும் போது தான் பரலோகம் சந்தோஷப்படும்.. நீங்கள் பிஷப் மற்றும் ரெவரெண்ட் ஆவதற்கோ கார்டினல் அல்லது  டாக்டர் பட்டத்தை போட்டு கொண்டு நான் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறேன் என்று உங்களை உயர்த்தி கொள்ளுவதற்கோ ஆண்டவர் உங்களை அழைக்கவில்லை. இதற்காக சிலுவையில் அவர் தன் இரத்தத்தை சிந்தி ஜீவனை கொடுக்கவில்லை.அன்றைக்கு பவுல் அழைத்த மூப்பருக்கும் இன்றைய பளபளக்கும் அங்கி போட்ட பிஷப்புக்கும் வித்தியாசம் உண்டு ஆயிரக்கணக்கான ஆத்துமாக்களை கிறிஸ்துவுக்கு நேராக வழி நடத்திய மிஷனரிமார்கள் வட இந்தியாவில் பாதுகாப்பற்ற சுகாதாரமற்ற சூழ்நிலையில் தங்கள் குடும்பத்தினரை இழந்து தங்கள் பிள்ளைகளை மறந்து இன்னும் கிறிஸ்துவுக்காக தன் எஞ்சிய வாழ்க்கையை அற்பணிப்பேன் என்று சொல்லி எஜமான் விரும்பிய பணியை எந்த விளம்பரமுமின்றி  மறைந்திருந்து செய்கிறார்கள். இத்தகய அப்பிரயோஜனமான ஊழியக்காரர்களைதான் சந்திப்பின் நாளிலே தேவன் உயர்த்துவார். இந்த உலகத்தில் ஊழியத்தில் சிறியவர்கள் என்று எண்ணபடுகிற இவர்கள் பரலோக ராஜ்ஜியத்தில் பெரியவர்களாக எண்ணப்படுவார்கள்.ஊழியக்காரர்களே! தேவன் உங்களை உண்மையும் உத்தமுமான ஊழியக்காரனே என்று சொல்ல வேண்டுமென்றால் மனிதனால் புகழப்படுவதற்காக நீங்கள் செய்யும் காரியங்களை உடனடியாக நிறுத்துங்கள்உங்களை நீங்களே புகழ்ந்து கொள்ளாமல் நீங்கள் தேவனால் மாத்திரம் புகழப்படவேண்டும் என்பதில் ஜாக்கிரதையாக இருங்கள் பிரசங்க பீடத்திலும் இணையதளங்களிலும் உங்களை பற்றி பெருமையாக பேசாதீர்கள் எதை செய்தாலும் அதை தேவனுடைய மகிமைக்காக  செய்யுங்கள். (தன்னை தானே புகழுகிறவன் உத்தமனல்ல,கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்.2 கொரி 10-18) மேலும் சத்தியத்தின்படி செய்கிறவனின் கிரியைகள் தேவனுக்குள்ளாய் செய்யப்படுகிறது(யோவான்3-21) என்று இயேசு சொன்னார்.அடுத்ததாக கலாத்தியர் 5-26 ல் வீண் புகழ்ச்சியை அதாவது வீண் பெருமையை தேடாதீர்கள் என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. (நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே, அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு 6-2 )

 

மேற் சொல்லப்பட்ட வசனத்தில் இயேசு கிறிஸ்து மாயக்காரர்கள் ஆலயத்தில் தாரை ஊதுவதை குறிப்பிடுவதை கவனித்தீர்களா. தேவன் தன் மூலமாக செய்த கிரியைகளை ஏதோ தான் செய்ததாக ஆலயங்களிலும் வீதிகளிலும் தேவன் அனுமதிக்காமல் பிறருக்கு தெரியப்படுத்துகிறவர்களை மாயக்காரர்கள் என்று இயேசு அழைக்கிறார். மேலும், தங்களை பற்றி தாரை ஊதிய இவர்கள் தங்கள் பலனை இந்த உலகத்திலே பெற்று கொண்டார்கள் பரலோகத்தில் இவர்களுக்கு பலன்  ஒன்றுமில்லை என்று இயேசு சொன்னதை கவனித்தீர்களா?.

 

இன்றைக்கு அநேக ஊழியக்காரர்கள் மற்றும் விசுவாசிகளிடம் காணப்படுவது மாயமாலமான தாழ்மை அதாவது தாழ்மையுள்ளவன் போல நடித்தது கொண்டிருக்கிறார்கள்.இவர்கள் ஊழியத்தில் புறக்கணிக்கப்படும் சூழ்நிலை வரும் போது தான் இவர்கள் இருதயத்திலிருக்கும் மேட்டிமை மற்றும் நான் பெரியவன் என்கிற பெருமை வாயின் வழியாகவும் கிரியைகள் வழியாகவும் வெளிப்படுவதை காணலாம். முதிர்ந்த ஊழியக்காரர்கள் கூட இந்த மாயமாலமான தாழ்மையினால் நிறைந்திருக்கிறார்கள் பரலோக தரிசனங்களை பார்த்த பவுல் நான் பரிசுத்தவான்கள் எல்லாரிலும் சிறியவன் என்று தன்னை தாழ்த்துகிறான்.(எபே3-8) இயேசுவோ அடிமையை போல சீஷர்களின் கால்களை கழுவி இது தான் நான் உங்களுக்கு காட்டும் தாழ்மையின் மாதிரி என்றார்.மேலும் அவர் நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன், என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். மத்தேயு 11-29.என்றார்.

 

நம் எஜமானனாகிய இயேசு கிறிஸ்துவின் மனத்தாழ்மை என்கிற நுகத்தை ஏற்று கொண்டு அவர் அடிச்சுவடை பின்பற்றுகிறவனே தன்னை அப்பிரயோஜனமான ஊழியக்காரன் என்பான் அவன் தான் தன்னை மறைத்து தன் எஜமானனை வெளிப்படுத்துவான். அவனே உண்மையும் உத்தமுமான வேலைக்காரன்.ஆமென்.

bottom of page