top of page

நீயோ தேவனுடைய மனுஷனே...பிரியமானவனே

 

(இவைகளிலே கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்கிறவன் தேவனுக்குப் பிரியனும் மனுஷரால் அங்கிகரிக்கப்பட்டவனுமாயிருக்கிறான். ரோமர் 14:18.)

 

ஊழியம் செய்கிற நம்முடைய உள்ளந்திரியங்கள் தேவனுக்கு பிரியமுமாயிருக்க வேண்டும். நம்மை சுற்றி இருப்பவர்கள் நம்முடைய வாயின் வார்த்தைகளை வைத்து இவன் தேவனுடைய மனுஷன் என்று அங்கிகரிக்கிறார்கள்,இருதயத்தின் நிறைவினாலே தானே நம்முடைய வாய் பேசும்.தேவனுடைய ஊழியக்காரன் தேவனுடைய வாயாய் இருக்கிறான், ஊழியக்காரனுடைய வாயிலிருந்து தேவனுடைய வார்த்தையை ஜனங்கள் எதிர்பார்க்கிறார்கள். நீயோ தேவனுடைய மனுஷனே உன் இருதயம் பரிசுத்த ஆவியினாலே நிரப்பபட்டு தேவ வார்த்தைளை உன் வாய் பேசட்டும். நீ தேவனுடைய வாயாய் இருக்கிறாய் உன் இருதயத்தின் எண்ணமும் வாயின் வார்த்தைகளும் அவர் சமூகத்தில் பிரியமாக இருக்கட்டும். (எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும். நீதிமொழிகள் 4-23. நீதிமானுடைய வாய் ஜீவஊற்று: நீதிமொழிகள் 10-11.)

 

சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப்  பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும், 
கொலோசெயர் 1:10  இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. மத்தேயு 5:16 புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்களை உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.  1 பேதுரு 2:12.

 

கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும் என்று போதிக்கிற நாம் நம் வீட்டிலும் வெளியிலேயும் நம்முடைய கனியற்ற அந்தகார கிரியைகளை ஜனங்கள் கண்டு தேவ நாமத்தை தூசிக்கும் படியாக நடந்து கொள்வது தேவனுக்கு எவ்வளவு அபகீர்த்தியை உண்டாக்கும்.நாம் செய்யும் ஊழியத்தை விட நம் சாட்சி முக்கியமல்லவா?இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா? ரோமர் 2-21 என்று பவுல் சொன்னதை நாம் நினைவு கூறுவோம். வரங்களையும் கிருபைகளையும் நமக்கு கொடுத்த தேவன் நமக்கு முக்கியமானவராக இருந்தால்...தேவன் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார் என்ற காரியத்துக்கு எவ்வளவு பயத்தோடும் நடுக்கத்தோடும் நாம் செயல்படுவோம்.

 

இன்றைக்கு மனிதர்களை பிரியப்படுத்துகிற நாம் எந்த அளவுக்கு தேவனுக்கு பிரியமாக வாழ்கிறோம். நீ மிகவும் பிரியமானவன். ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது, நான் அதை அறிவிக்க வந்தேன். தானியேல் 9-23 என்று தானியேலிடம் கர்த்தருடைய தூதன் சொல்வதை விளங்கி கொண்டீர்களா?அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்குமுன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டி கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்.1 யோவான் 3-22 என்ற வசனத்தின் படி தேவனுக்கு பிரியமானதை செய்கிறவர்கள் தேவனிடத்தில் வேண்டி கொள்வதை பெற்று கொள்கிறார்கள்.இன்றைக்கு அநேகர் தேவனுக்கு ஊழியம் செய்கிறார்கள் மேலும் ஊழியத்துக்கு ஏராளமான பணத்தை கொடுக்கிறார்கள்.ஆனால் அவர்கள் வேலையிலும் தொழிலிலும் உண்மையற்ற நிலையிலே இருக்கிறார்கள்.இந்த நாள்களில் உண்மையாக வாழ முடியாது என்று சொல்கிறவர்கள் அநேகர்.உலகத்துக்கு ஒத்த வேஷம் தரிக்கும் போது தேவனுக்கு உண்மையாக வாழ முடியாது. (என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன்.1 தீமோத்தேயு 1-12  மேலும், உக்கிராணக்காரன் உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவசியமாம்.1 கொரிந்தியர் 4-2) 
 

 

தேவன் முதலாவது ஆபேலை அங்கிகரித்தார் அதனால் தான் அவனது காணிக்கை அங்கிகரிக்கப்பட்டது.நீங்கள் ஏராளமான பணத்தை கொடுத்து தேவனை ஒருகாலும் திருப்திபடுத்த முடியாது.நீங்கள் அதிகமாக ஊழியம் செய்ததால் மாத்திரம் அவருக்கு பிரியமாக இருக்க முடியாது. (உங்கள் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள். 


கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல. கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்;. 
2 யோவான் 1:8,9)இன்றைக்கு அநேகர் இயேசுவுக்காக பல காரியங்களை வைராக்கியமாக செய்தாலும் மறுபக்கம் அவர் சிலுவையில் நமக்காக பெற்று தந்த விலையேறப் பெற்ற விலை மதிக்கமுடியாத நித்திய ஜீவனை பெற்று கொள்ளாமல் போவது எவ்வளவு பரிதாபமானது.

 


எனவே இந்த கடைசி நாள்களில்  நாம் செய்யும் ஊழியத்தை விட தேவன் நமக்கு மிக மிக முக்கியமானவர் என்பதை அறிந்து கொள்வோம். அவர் முக்கியமானவர் என்றால் அவரது கட்டளை முக்கியமானது.மேலும் அவர் பெற்று தந்த பரிசாகிய இரட்சிப்பும் நித்திய ஜீவனும் மிகவும்  முக்கியமானது. எனவே இந்த நாள்களில்  அவரை பிரியப்படுத்தும் படி நம்மை ஒப்பு கொடுப்போம்.தேவனே இன்றிலிருந்து என் செயல்கள் என் நடக்கைகள் எல்லாம் உம்மை பிரியப்படுத்தும் படி மாறட்டும்.நான் செய்யும் ஊழியத்தை விட நீர் எனக்கு மிகவும் முக்கியமானவர் என்பதை நான் அறிந்து கொண்டேன்.

 

என்ன தான் ஊழியம் செய்தாலும் என்னிடம் கனியில்லையென்றால் பரலோகம் என்னை புறக்கணிக்கும் என்பதை விளங்கி கொண்டேன்.நாம் தேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டும்.ஆனால் அதைவிட சாட்சியுள்ள ஜீவியம் மிக மிக முக்கியம்.எனவேஇன்னும் உம்மை அறியும் அறிவில் வளர எனக்கு உதவி செய்யும்.மேலும் தேவனே நீர் என்னை பார்த்து எனக்கு பிரியமானவன் என்று சொல்லும் படியாக என் நடக்கைகள் மாறட்டும். உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன், உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக. சங்கீதம் 143-10 ஆமென்

bottom of page