top of page

தேவனோடு ஊழியம்
வேதாகமத்தில் அநேக பரிசுத்தவான்கள் தேவனோடு நடந்தார்கள் அவர்கள் தேவனோடு நடந்தபடியால் தேவனை சார்ந்து வாழ்ந்தார்கள். தேவனை சார்ந்து வாழ்ந்தபடியால் தேவன் சொல்கிறதை மாத்திரம் செய்தார்கள். அப்போஸ்தலர் நடபடிகளை வாசிக்கும் போது அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் ஆளுகை செய்யப்பட்டு அவரோடு ஊழியம் செய்தார்கள்.
இன்றைக்கு தேவனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் தேவனுக்காக ஊழியம் செய்கிறவர்கள் பலர், ஆனால் தேவனோடு ஊழியம் செய்கிறவர்கள் சிலர் தான். அமெரிக்கா தேசத்தில் ஒருவர் ஆண்டவருக்காக பெரிய அளவில் ஊழியம் செய்தார் அவருடைய ஊழியத்தை எல்லாரும் புகழ்ந்தார்கள் ஒரு நாள் ஒரு தேவ தூதன் கை நிறைய குப்பையை இவருக்கு கொடுக்கும்படியான தரிசனத்தை கண்டார் உடனே அவர் பயந்து போய் தேவ சமூகத்தில் ஜெபித்த போது நீ ஓய்வே இல்லாமல் ஊழியம் செய்தது உண்மை தான் ஆனால் நான் சொன்னதை செய்தாயா என்று கேட்டாராம். உடனே ஆண்டவரே என்னை மன்னியும் இனிமேல் நீர் செய்ய சொன்னதை மாத்திரம் செய்வேன் நீர் சொல்லாததை நான் செய்ய மாட்டேன் என்று கண்ணீரோடு தன்னை ஒப்பு கொடுத்தாராம். (அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். மாற்கு 16:20) இன்றைக்கு தேவனோடு தேவனை சார்ந்து நாம் ஊழியம் செய்யும் போது தேவன் கிரியை செய்வார். அப்படி பட்ட ஊழியங்களில் தான் தேவ மகிமை காணப்படும்.
இன்றைக்கு அநேக ஊழியங்களில் கர்த்தர் இல்லவே இல்லை. எனவே தான் அந்த ஊழியங்கள் உலகத்துக்கு ஒத்த வேஷமாகவும் வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாகவும் இருக்கிறது. அநேக ஊழியக்காரர்களுக்கு அவர்களே எஜமானர்களாக இருக்கிறார்கள் எனவே தேவ சித்தம் அவர்கள் வாழ்க்கையிலும் ஊழியங்களிலும் இல்லை, இயேசு கடலின் மேல் நடந்து வந்த போது பேதுரு ஆண்டவரை நோக்கி நான் ஜலத்தின் மேல் நடந்து உம்மிடத்தில் வர கட்டளையிடும் என்றான்.
இன்றைக்கு ஊழியம் செய்கிற நாம் ஆண்டவரிடம் இந்த காரியத்தை செய்யும் படி கட்டளையிட்டால் செய்கிறேன் என்று கேட்டிருக்கிறோமா?பிரியமான ஊழியக்காரனே நம்முடைய ஊழியத்தில் நம் சுய இச்சையின் படியும் சுய நீதியின் படியும் அநேக காரியங்களை செய்து கொண்டிருப்பதால் நம் ஊழியங்கள் வீழ்ச்சியடைந்த நிலையில் இருக்கிறது.உங்கள் எஜமானனாகிய இயேசு உங்கள் அருகில் இருந்தால் நிச்சயமாக உங்கள் சுய இஷ்டப்படி ஒன்றையும் செய்ய முடியாது. இன்றைக்கு ஆண்டவரை நோக்கி சொல்லும் ஆண்டவரே செய்கிறேன் என்று அவருடைய பாதத்தில் அவருக்காக காத்திருக்கிற ஊழியக்காரர்கள் எத்தனை பேர்.இன்றைக்கு நாம் தேவனை வேலைகாரனாக்கி எஜமான் ஸ்தானத்தில் உட்கார்ந்து கொண்டு ஆண்டவரே இதை செய்யும் என்று அவருக்கே கட்டளை கொடுக்கிறோம்.பரலோக எஜமானாகிய தேவனுடைய தோட்டத்தில் வேலைக்காரனாயிருக்கிற நீங்கள் அவருடைய அனுமதி இன்றி ஒரு புல்லை கூட பிடுங்க முடியாது.ஒரு மரத்தை கூட நட முடியாது.ஆனால் ஒரு உலக எஜமான் தோட்டத்தில் ஒரு வேளை உன் இஷ்டப்படி செய்யலாம்.அன்றைக்கு ஆதாமும் ஏவாளும் தேவனுடைய தோட்டத்தில் தேவன் சொன்னதை செய்யாமல் தங்கள் சுய இச்சையின் படி செய்ததால் தேவனுடைய மகிமையை இழந்து தோட்டத்தை விட்டு துரத்தப்பட்டார்கள். சாத்தான் இயேசுவிடம் வந்து கல்லை அப்பமாக்கி சாப்பிடு, தூதர்கள் உன்னை காக்கும்படிக்கு தேவாலயத்திலிருந்து குதி, ராஜியங்களின் மேன்மையை காண்பித்து என்னை பணிந்து கொண்டு இவைகளை பெற்று கொள் என்று கூறிய போதெல்லாம் இயேசு அப்பாலே போ என்று அவனை துரத்தினார். ஏனென்றால் அவர் எப்பொழுதும் பரிசுத்த ஆவியானவரால் நிறைந்து பிதாவோடு தொடர்பு கொண்டவராக இருந்தார்.
இன்றைக்கு பல ஊழியக்காரர்கள் தெரிந்தோ தெரியாமலோ மனித புகழ்சிக்காகவும் பணத்துக்காகவும் மனிதர்கள் மூலமாக சாத்தான் கொடுக்கும் ஆலோசனைகளையும் திட்டங்களையும் செய்து கொண்டிருக்கிறார்கள். அன்றைக்கு தேவனோடு இணைந்து ஊழியம் செய்த சீஷர்கள் உடையிலிருந்தும் நிழலிலிருந்தும் வல்லமை புறப்பட்டு போய் அநேகரை சுகப்படுத்தியது. ஸ்தேவான் கல்லரியப்பட்ட போது அவனுக்காக தேவன் வானத்தை திறந்தார் ஏனென்றால் அவர்கள் தங்கள் எஜமானன் என்ன செய்ய சொல்கிறார் என்பதை அறிந்து கொள்வதற்காக அவர்கள் உபவாசத்தோடும் ஜெபத்தோடும் தேவ சமூகத்தில் காத்திருந்து அவர் செய்ய சொன்னதை செய்தார்கள்.இன்றைக்கு உங்கள் ஊழியத்தில் தேவன் உங்களோடு இருக்கிறாரா?தேவன் உங்களோடு இருந்தால் அவரது கட்டளையை மீறி உங்களால் ஒன்றையும் செய்து விட முடியாது என்பதை புரிந்து கொண்டீர்களா? பேசுகிறவர்கள் நீங்களல்ல பரிசுத்த ஆவியானவரே உங்களிமிருந்து பேசுவார் என்று இயேசு சொன்னார்.என் பிரசங்கமும் பேச்சும் பரிசுத்த ஆவியினால் உண்டாயிருக்கிறது.
மேலும், பரிசுத்த ஆவியானவரே வாக்குக்கடங்கா பெருமூச்சுகளோடு உங்களோடு இணைந்து வேண்டுதல் செய்வார் என்று பவுல் எழுதுகிறார். உங்களுடைய சுயபலத்தாலும் சுய ஞானத்தாலும்,சுய சித்தத்தின் படியே செய்யப்படும் ஊழியங்களிலும் பிரசங்கங்களிலும் ஜெபங்களிலும் தேவ வல்லமை இல்லாததற்கு முக்கிய காரணம் நீங்கள் செய்யும் ஊழியத்தில் தேவன் உங்களோடு இல்லை பரிசுத்த ஆவியானவர் எங்கே உண்டோ அங்கு விடுதலை உண்டு உங்கள் பலத்தினாலும் அல்ல உங்கள் பராகிரமத்தினாலும் அல்ல தேவனுடைய ஆவியினாலே எல்லாம் கூடும்.மனுஷரால் கூடாதது தான் ஆனால் தேவனால் எல்லாம் கூடும்.அன்றைக்கு சீஷர்கள் மேல்வீட்டரையில் தேவனுடைய வல்லமையை பெற்று கொண்டது முதல் அவர்களுடைய ஊழியத்தில் பரிசுத்த ஆவியானவரோடு இணைந்து ஊழியம் செய்தார்கள்.அவர் போ என்றால் போனார்கள்,அவர் செய் என்றால் செய்தார்கள்.அவர் போகாதே என்று தடை செய்த போது போகாமலிருந்தார்கள்.ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல(யோவான் 15-20)என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.(யோவான் 14-28) என்று இயேசு சொன்ன வார்த்தைகளை விளங்கி கொண்டீர்களா?என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது என்று இயேசு சொன்ன வார்த்தையின்அர்த்தத்தை தயவு செய்து அறிந்து கொள்ளுங்கள்.நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார். தேவன் அவருடனே கூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார். அப்போஸ்தலர் 10:38.
இன்றைக்கு ஊழியத்தில் தேவன் நம்மோடு இருக்கிறாரா?தேவன் நம்மோடு இருக்கிறார் என்றால் தேவன் செய்ய சொன்னதை நாம் செய்து கொண்டிருக்கிறோமா என்பதை நிதானித்து அறிவோம்? ஊழியத்தில் இயேசுவின் அடிச்சுவடுகளை பின்பற்றி நடக்க நம்மை ஒப்பு கொடுப்போம்,அதற்காக அழைக்கப்பட்டிருக்கிறோம். அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும். 1 யோவான் 2:6 ஆமென்.



bottom of page