top of page

சகல சத்தியத்துக்குள் நடத்துவார் 

 

அந்த நாட்களுக்குப்பின் நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன். நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஐனமாயிருப்பார்கள். எபிரேயர் 8:10.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு சிலுவையில் பெற்று தந்த விலைமதிக்கமுடியாத இரட்சிப்புக்கு அடுத்ததாக நமக்கு கொடுத்த பரிசு பரிசுத்த ஆவியானவர்.சத்திய ஆவியாகிய அவர் வரும் போது சகல சத்தியத்துக்குள்ளும் உங்களை நடத்துவார் என்றார்.எசேக்கியல் 36-27 ல் உங்கள் உள்ளத்தில் என் ஆவியை வைத்து என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களை கைக் கொள்ளவும் அவைகளின் படி செய்யவும் பண்ணுவேன் என்று பழைய ஏற்பாட்டிலே தேவன் தன்னுடைய வாக்குதத்தத்தை முன் குறித்தார்.

இன்றைக்கு பரிசுத்த ஆவியானவர் நமக்கு கொடுக்கப்பட்ட முக்கிய நோக்கம்  சத்தியத்துக்கு கீழ்படிந்து வார்த்தையில் நிலைத்திருந்து கனி கொடுக்கும்படிக்காகவே. ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால் அவன் மிகுந்த கனிககளை கொடுப்பான் என்று இயேசு சொன்னார்.அன்றைக்கு மேல் வீட்டறையிலே பரிசுத்த ஆவியானவரால் நிரப்பபட்ட சீஷர்கள் முடிவுபரியந்தம் பரிசுத்த ஆவியானவரால் நடத்தபட்டார்கள், ஸ்தேவான் கல்லெறியப்பட்ட போது கூட தன்னை கல்லெறிந்தவர்களை மன்னிக்கும் படி தேவனிடம் பரிந்து பேசி இயேசுவின் மாதிரியை காண்பித்தான், இன்றைக்கு நம் வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவர்  கொடுக்கபட்ட முக்கியமான நோக்கத்தை விட்டு விட்டோம். இன்றைக்கு விசுவாசிகளிடம் ஊழியக்காரர்கள் அந்நிய பாஷை பேசுகிறீர்களா? நகையை கழற்றி விட்டீர்களா தசமபாகம் கொடுக்கிறீர்களா? என்ற காரியத்தை தான் முன் வைக்கிறார்கள்.ஏதாவது ஒரு ஊழியக்காரன் உங்களிடம் கனி கொடுக்கிறீர்களா? பரிசுத்தமாக வாழ்கிறீர்களா? சத்தியத்துக்கு கீழ்படிகிறீர்களா?என்று கேட்டதுண்டா?ஆவிக்குறிய வாழ்க்கையில் நமக்கு மிக மிக முக்கியமானது சகல சத்தியத்துக்குள்ளும் நடத்தபடுவதே. எவன் தேவனுடைய ஆவியினாலே நடத்தபடுகிறானோ அவன் தேவனுடைய புத்திரனாய் இருக்கிறான்(ரோமர் 8-14)என்று பவுல் எழுதுகிறார், சத்திய ஆவியாகிய அவரால் நிரப்பபட்டு அவருடைய வசனத்துக்குள் நடத்தப்படும் போது அவனுடைய கிரியைகள் தேவனுக்குள்ளாய் செய்யபடும்படிக்கு ஒளியினிடத்திற்குவருகிறான். (யோவான்3-21) என்று இயேசு சொன்னதை விளங்கி கொண்டீர்களா?

 

இன்றைக்கு உங்களிடம் இருக்கும் ஆவி உங்களை சத்தியத்துக்கு நேராக நடக்க ஏவுகிறதா? அல்லது சத்தியத்துக்கு செவியை விலக்கும்படிக்கு உலகத்துக்கு ஒத்த வேஷம் தரிக்க சொல்கிறதா?? தேவனால் உண்டாயிராதவன் நாங்கள் போதிக்கும் தேவனுடைய வார்த்தைகளுக்கு செவி கொடுப்பதில்லை. இதிலிருந்து சத்திய ஆவி இன்னெதென்றும்வஞ்சக ஆவி இன்னெதென்றும்அறிந்திருக்கிறோம் (1யோவான் 4-6) என்று யோவான் எழுதுகிறார்.  என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது, நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும். யோவான் 12:48 என்று இயேசு சொன்ன எச்சரிப்பை தயவு செய்து உதாசினப்படுத்தாதீர்கள் சந்திப்பின் நாளிலே கிறிஸ்துவின் நியாயாசனத்துக்கு முன்பாக நாம் நிற்கும் போது கீழ்படியாத வசனங்களின் நிமித்தம் நியாயம் தீர்க்கபடுவோம் என்ற பயம் இன்றைக்கு நாம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும்.

இன்றைக்கு பரிசுத்த ஆவியால் நிரப்பபடுகிறேன் என்று சொல்லுகிற நீங்கள் பரிசுத்த ஆவியால் நடத்தபடுகிறேன் என்று ஏன் சொல்வதில்லை? பரிசுத்தாவியானவர் நம்மை நடத்தும் போது வசனத்துக்கு கீழ்படிந்து சத்தியத்துக்குள் நடத்தும் படி தூண்டுவார் ஆனால் இன்றைக்கு நாம் பரிசுத்த ஆவியானவரால் ஆளுகை செய்யப்படவில்லை.நம்முடைய சுயநீதியும்  உலகத்தின் ஆவியும் தான் நம்மை ஆளுகை செய்கிறது. மனிதன் உருவாக்கின சபை பாரம்பரிய சட்டங்கள் வசனத்துக்கு புறம்பாக இருந்தாலும் அதை நாம் அறிந்திருந்த போதிலும் அதற்கு கீழ்படிய வைராக்கியமாக இருக்கிறோம்.இதன் மூலம் இயேசுவின் உபதேசத்தை தள்ளி அவருடைய வசனத்துக்கு கீழ்படியாமல் இருக்கிறோம்.தேசத்தின் சட்ட திட்டங்களுக்கு பயப்படுகிற நாம் வசனத்துக்கு பயப்படுவதில்லை.(என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார், ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன். ஏசாயா 66-2).

பரிசுத்த ஆவியால் நடத்தபடுகிற யாவருக்கும் பாவத்தை குறித்தும் நீதியை குறித்தும் நியாயதீர்ப்பை குறித்தும் ஒரு பயம் இருக்கும் அவர்கள் தான் யோசேப்பை போல பாவத்துக்கு விலகி ஓடுவார்கள்.ஆனால் இன்றைக்கு ஆவியிலே நிரம்பி அந்நிய பாஷை பேசுவதில் நாம் திருப்தி அடைந்து விட்டோம். நீதியின் மேல் பசி தாகம் இல்லை, இருதயத்தில் சுத்தமாயிருக்க வேண்டும் என்பதில் விருப்பம் இல்லை, சத்தியத்தில் நடக்க வேண்டும் என்பதில் வைராக்கியம்  இல்லை.ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் பரலோக ராஜியத்தில் பிரவேசிக்க மாட்டான் என்று இயேசு சொன்னார்.பரிசுத்த ஆவியால் சகல சத்தியத்துக்குள் நடத்தப்பட்டு மனம் புதிதாகி...புதிதாக பிறந்த குழந்தையை போல புதிய சிருஷ்டியாக மாறாதவர்கள் பரலோக ராஜியத்தில் பிரவேசிக்க முடியாது என்பதை  புரிந்து கொள்ள வேண்டும். (ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள். 1 பேதுரு 1:22).

இதை தான் இயேசு கிறிஸ்து மாயக்காரனே பாத்திரத்தின் வெளிப்புறம் சுத்தமாகும்படிக்கு முதலாவது பாத்திரத்தின் உட்புறத்தை கழுவு என்றார் இன்றைய சபைகள் ஜனங்களை வெளிப்புறமாக சுத்திகரித்து கொண்டிருக்கின்றன. அவர்கள் வெளிபுறமான பரிசுத்த அலங்காரத்தோடே தேவனை தொழுது கொள்கிறார்கள்.ஆனால் தேவனோ உள்ளான பரிசுத்த அலங்காரத்தை விரும்புகிறார்.தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்ற அமைதலுள்ள ஆவியும் மனத்தாழ்மையும்இன்றைக்கு நம்மிடம் இல்லை.ஆனால் பரிசுத்தாவியால் சகல சத்தியத்துக்குள் நடத்தபடுகிறவனுடைய உள்ளான மனுஷன் கழுவப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு புறம்பான மனுஷன் கனி கொடுக்கிறவனாய் இருப்பான்.

நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். தீத்து 3:5.

பரிசுத்த ஆவியானவரே நம்மை இயேசுவின் இரத்தத்தினால் கழுவி சகல சத்தியத்துக்குள் நடத்தி நம்மை கிறிஸ்துவின் சாயலான புதிய மனுஷனாக நிலை நிறுத்துகிறார்.ஒரு மனிதனிடம்  எந்த ஆவி ஆளுகை செய்கிறது என்பதை அவன் இருதயத்தின் நிறைவினால் பேசும் பேச்சுகளின் மூலமாகவும்,அவன் கிரியைகளையும் செயல்களையும் வைத்து நிதானித்து அறிந்து கொள்ளலாம்.அதே மாதிரி நம்மை நாமே நிதானித்து அறியும் போது சத்திய ஆவி எது வஞ்சக ஆவி எது என்றும் மேலும் நாம் யாரால் ஆளுகை செய்யப்படுகிறோம் என்பதையும் அறிந்து கொள்வீர்கள்.

(பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள். நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான். 1 யோவான் 3:7. தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், எனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது. அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான். 1 யோவான் 3:9.

அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை. பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை. 1 யோவான் 3:6.

அன்றைக்கு இஸ்ரவேல் ஜனங்களை சுற்றியிருந்த இருள் நீங்கும்படியாக இரவில் பரிசுத்த ஆவியானவர் அக்கினி ஸ்தம்பமாக அவர்களை வழி நடத்தினார். இன்றைக்கும் அந்தகார இருளிலிருந்து ஆச்சரியமான ஒளிக்கு நம்மை நடத்தும்படிக்கு பிதாவினால் முன் குறிக்கப்பட்டு கர்த்தராகிய இயேசுவால் பொழிந்தருளப்பட்ட பரிசுத்த ஆவியானவரே நம்மை ஆளுகை செய்யும்படி நம்மை முழுமையாக ஒப்பு கொடுப்போம். முற்காலத்தில், நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ, கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள். வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்.ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்.  எபேசியர் 5:8,9.  ஆமென்.

bottom of page