top of page

ஜெபிப்பதற்கு முன்

 

நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன், நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன், உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது. உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள், உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள், ஏசாயா 1:15,16.

 

இன்றைக்கு சபைகளில் ஜனங்கள் கூடி ஜெபிக்கிறார்கள், மேலும் அநேக தேசங்களில் சபைகள் ஒன்று சேர்ந்து தேசத்துக்காகவும் அதன் எழுப்புதலுக்காகவும் தொடர்ந்து ஜெபிக்கிறார்கள் ஆனால் அநேக ஜெபங்களுக்கு தேவன் பதில் கொடுக்காததற்கு காரணம் அவர்களது கிரியைகளின் பொல்லாப்பு என்று கர்த்தர் சொல்கிறார். தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களை செய்து விட்டு மிகுதியாக ஜெபம் பண்ணினாலும் நான் கேட்க மாட்டேன் என்று தேவன் சொல்கிறார்.(துன்மார்க்கருக்குக் கர்த்தர் தூரமாயிருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார். நீதிமொழிகள் 15-29).(உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாக பிரிவினை உண்டாக்குகிறது.உங்கள் பாவங்களே அவர் உங்களுக்கு செவி கொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.ஏசாயா 59-2)

 

இன்றைக்கு அநேக ஊழியக்காரர்களும் விசுவாசிகளும் தங்கள் வாழ்க்கையிலும் ஊழியத்திலும் தேவ நீதியை செய்வதில்லை. தங்கள் சுய நீதியினால் தேவன் எதை செய்ய சொல்கிறாரோ அதற்கு கீழ்படியாமல் தாங்கள் மனசும் மாம்சமும் விரும்பினவைகளை செய்து தேவனுக்கு கீழ்படியாமல் இருப்பதால் தாங்கள் செய்யும் ஜெபத்துக்கு பதில் கிடைப்பதில்லை.

 கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது. தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது.1 பேதுரு 3:12.

 

நீதி செய்யாமல் தீமை செய்கிறவனுக்கு என் முகம் விரோதமாக இருக்கிறது என்று தேவன் சொன்னதை புரிந்து கொண்டீர்களா? மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார். நியாயம் செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.மீகா 6-8.

 

இன்றைக்கு விசுவாசிகளிடமும் ஊழியக்காரர்களிடமும் மனத்தாழ்மை இல்லை அதனால் அவர்களிடம் அன்பின் ஐக்கியம் இல்லை.  எனவே அவர்களிடம் தேவன் எதிர்பார்க்கிற ஒருமனம் காணப்படுவதில்லை. (அல்லாமலும், உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும்.மத்தேயு 18-19) என்று இயேசு சொன்னதிலிருந்து ஏன் நம் ஜெபங்களுக்கு பதில் கிடைக்கவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம். இன்றைக்கு இயேசு காட்டிய மாதிரியாகிய தேவ அன்பும் மனத்தாழ்மையும் ஊழியம் செய்கிறவர்களிடையே இல்லை.இப்படி பட்ட ஊழியக்காரர்கள் எப்படி தங்கள் சபை ஜனங்களுக்கு அன்பின் ஐக்கியத்தையும் மனத்தாழ்மையையும் குறித்து போதிப்பார்கள்?

 நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.யோவான் 13-35.

ஒருவருக்கொருவர் அன்பாயிருங்கள் என்று என்று வாய் கிழிய பிரசங்கிப்பவர்கள் தங்கள் கிரியைகளில் அன்பை காண்பிப்பதில்லை தாழ்மை உள்ளவனிடம் தங்கிடுதே கிருபை என்று பாடுகிறவர்கள் தங்கள் செயல்களில் தாழ்மையை காண்பிக்கிறதில்லை. பிரசங்கிப்பது ஒன்று செய்வது ஒன்று இப்படிபட்டவர்களை தான் பவுல் மற்றவனுக்கு போதிக்கிற நீ உனக்கு தானே போதியாமலிருக்கலாமா(ரோமர் 2-21) என்றார். இயேசுவும் இவர்கள் செய்கிறது போல செய்யாதிருங்கள் இவர்கள் சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள் என்று எச்சரித்தார்.இன்றைக்கு நம்மிடம் ஐக்கியமும் ஒருமனமும் இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று நமக்கு எதிராக பிறர் செய்த தவறுகளை மன்னியாமல் இருப்பது.மேலும் நாம் ஜெபம் பண்ணுவதற்கு முன்பாக பிறர் செய்த தவறுகளை மன்னிக்க வேண்டும் என்று இயேசு போதித்தார்.இன்றைக்கு பிறர் செய்த தப்பிதங்களை மன்னிக்காமல் இருப்பதினால் ஒருவருக்கொருவர் பேசாமல் இருக்கிறோம்.(நீங்கள் நின்று ஜெபம் பண்ணும்போது, ஒருவன் பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்.

நீங்கள் மன்னியாதிருப்பீர்களானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவும் உங்கள் தப்பிதங்களை மன்னியாதிருப்பார் என்றார்.மாற்கு 11-25-26.

மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.மத்தேயு 6-15.

நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.மத்தேயு 18-35.

நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.யாக்கோபு 5-16.

 

இன்றைக்கு எவ்வளவு ஜெபம் பண்ணினாலும் தெய்வீக சுகத்தை பெற்று கொள்ளாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் நம்முடைய குறைகள் தான். இன்றைக்கு  நமக்காகவும் நம் குடும்பத்தினருக்காகவும் தேசத்துக்காகவும் ஜெபிக்கும் நாம் தேவன் சொன்ன இந்த காரியங்களுக்கு கீழ்படிந்திருக்கிறோமா என்பதை நிதானித்து பார்ப்போம். கறையற்றவர்களாகவும் பிழையற்றவர்களாகவும் தேவனுடைய மாசற்ற பிள்ளைகளாக நாம் நிற்கும் படி நம்மை ஒப்பு கொடுப்போம். பிறரோடு நமக்கு  உள்ள குறைகளை சரி செய்யாதபடிக்கு தடையாயிருக்கிற நம் சுயத்தை சிலுவையில் அறைவோம்.நீங்கள் உங்கள் சுய பெருமை மற்றும் அந்தஸ்துகளை வெறுத்து உங்கள் சிலுவையை எடுத்து கொண்டு அவரை பின்பற்றாவிட்டால் அவரது சீஷனாயிருக்க முடியாது.

 

நாம் பிறர் செய்த தப்பிதங்களை மன்னிக்காவிட்டால் நம் பரம பிதாவிடம் இருந்து மன்னிப்பை ஒருகாலும் பெற்று கொள்ள முடியாது. நீங்கள் மற்றவர்களுக்கு எப்படி அளக்கிறீர்களோ அப்படியே நீங்களும் அளக்கப்படுவீர்கள் என்று இயேசு சொன்னதை நினைவில் கொள்ளுங்கள்.என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்.சங்கீதம் 66-18. என்ற வசனத்தின் படி ஜெபிக்கிற நம்முடைய இருதயம் தேவ அன்பினால் நிறைந்திருக்கிறதா அல்லது தேவன் விரும்பாத கசப்பு,கோபம்,பகைகள் வெறுப்புகள் மற்றும் வைராக்கியங்கள் போன்ற தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களினால் நிறைந்திருக்கிறதா என்பதை நிதானித்து அறிவோம். மனம் திரும்புவோம், ஜெபிப்பதற்கு முன் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று தேவன் சொன்ன கட்டளைகளுக்கு கீழ்ப்படிய முதலாவது நம்மை ஒப்பு கொடுப்போம்..ஆமென்.

bottom of page