top of page

தேவனுக்கு கீழ்படியாமல் பிசாசை துரத்தாதீர்கள்

 

ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். யாக்கோபு 4-7.


பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள். எபே 4-27.தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்படியாமல் உங்களிடம் குறைகளை வைத்து கொண்டு பிசாசை துரத்த போகாதீர்கள் வசனத்தின் படி தேவனுக்கு கீழ்படிந்து பிசாசை எதிர்த்து போரிடுங்கள். ஒரு முறை ரகசிய பாவத்தில் அடிமையான ஒரு ஊழியக்காரர் ஒரு பிசாசை விரட்ட தொடங்கினார் பிசாசு போக மறுத்தது. இவர் தொடர்ந்து போராடினார், கடைசியில் அந்த பிசாசு அவரது  பாவங்களை சொல்ல ஆரம்பித்தது.அந்த ஊழியக்காரருக்கு ரொம்ப அவமானமாகிவிட்டது.


ஒரு முறை ஒரு ஊழியக்காரர் பிசாசு பிடித்து வாய் பேச முடியாமல் இருந்த ஒருவருக்காக ஜெபிக்க சென்றார், இவர் ஜெபித்த போது அந்த பிசாசு அவரை விட்டு ஓடி போனது.ஆனால் அடுத்த நாள் அந்த ஊழியக்காரரின் மகனை பிடித்து விட்டது. அவன் வாய் பேச முடியாத ஊமையனாகி போனான்.இவர் எவ்வளவு ஜெபித்தும் அது அவனை விட்டு போகவில்லை.கடைசியில் ஒரு ஊழியக்காரர் தன் சபையில் அவனை கொண்டு போய் உபவாசத்தோடு ஜெபித்த போது  அந்த பிசாசு அவனை விட்டு விலகினது அதே மாதிரி விடுதலையின் ஊழியத்தில் அனுபவமில்லாத ஒரு வாலிபன் ஒரு வீட்டில் பிசாசு பிடித்த ஒருவருக்கு ஜெபிக்க சென்ற போது பிசாசு அவனை பிடித்தது அன்றிலிருந்து அவனுக்கு நடக்கமுடியவில்லை.ரொம்ப பலவீனமாகி படுத்த படுக்கையாகிவிட்டான் பல மாதங்கள் அதே நிலை நீடித்தது.அநேகர் ஜெபித்தும் குணமடையவில்லை அதன் பிறகு விடுதலையின் ஊழியத்தை செய்த ஒருவர் வந்து ஜெபித்த போது பூரண விடுதலையை பெற்று கொண்டான்.

மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள். வெளிப்படுத்தின விசேஷம் 12-11

 

இன்றைக்கு அநேக ஊழியக்காரர்கள் தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல் குடும்பத்திலும் வெளியேயும் சாட்சியில்லாமல் பிசாசுகளை துரத்த போய் பிரச்சனைகளில் அகப்பட்டு கொள்கிறார்கள்.ஊழியக்காரர்களே விசுவாசிகளே உங்கள் வாழ்க்கையில் சாட்சியில்லாமல் பிறரிடம் குறைகளை வைத்து கொண்டு இருளின் அதிகாரங்களுக்கு விரோதமாக யுத்தம் பண்ண போகாதீர்கள். உங்கள் ஊழியத்திலும் சபைகளிலும் நீங்கள் செய்யும் காரியங்களில் முதலாவது தேவனுக்கு கீழ்படியுங்கள் நீங்கள் உங்கள் வாழ்க்கையிலும் ஊழியத்திலும் தேவனுக்கு கீழ்ப்படியாத பட்சத்தில் பிசாசின் பலவீனப்படுத்துகிற வல்லமைகள் உங்களை மேற் கொள்ள கூடும்.

 

அடுத்ததாக நீங்கள் ஊழியம் செய்ய போவதற்கு முன்பாக முதலாவது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் இயேசுவின் நாமத்தையும் இயேசுவின் இரத்தத்தையும் பயன்படுத்தி பாதுகாத்து கொள்ளுங்கள். தேவன் பிசாசுகளை மேற்கொள்ள உங்களுக்கு அதிகாரத்தை தர வேண்டுமென்றால் முதலாவது உங்கள் நாவை காத்து கொள்ளுங்கள். என் நாவினால் பாவஞ்செய்யாதபடிக்கு நான் என் வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்குமட்டும் என் வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன்  சங்கீதம் 39-1 என்று தாவீது சொல்வதை புரிந்து கொண்டீர்களா? நாம் நம்முடைய நாவை காத்து கொள்ள வேண்டுமென்றால் முதலாவது நம்முடையஇருதயத்தை காத்து கொள்ள வேண்டும்.இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் இருதயத்தில் கசப்பையும் கோபத்தையும் வைத்து கொண்டு நாவினால் பிறரை தூசித்து பாவம் செய்து கொண்டு ஒருகாலும் பிசாசின் கிரியைகளுக்கு எ எதிராக போரிடாதீர்கள். ஏனென்றால்? நீங்கள் பேசும் வீணான வார்த்தைகளே உங்களை தீட்டுப்படுத்தும் என்று இயேசு சொன்னார் தீட்டானதை நீங்கள் உங்களிடமிருந்து எடுத்து போடாதவரைக்கும் தேவன் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. (உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புவிக்கவும், உன் பாளயத்திற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார், ஆகையால் அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக்கண்டு, உன்னைவிட்டுப் போகாதபடிக்கு, உன் பாளயம் சுத்தமாயிருக்கக்கடவது. உபாகமம் 23-14.)

 

ஏன் இன்றைய சபைகளில் விடுதலை இல்லை தெரியுமா? சபைகளில் தேவன் விரும்பும் பரிசுத்தம் இல்லை.ஊழியக்காரர்களிடம் காணப்படும் பெருமை மற்றும் மேட்டிமையினால் தேவன் அவர்கள் பட்சத்தில் இல்லை தேவன் பெருமையுள்ளவனுக்கு எதிர்த்து நிற்க்கிறார். நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். எபேசியர் 6-11.

 

இன்றைக்கு இருளின் அந்தகார தீய ஆவிகளுக்கு எதிராக போரிடுவதற்கு முன்பு தேவன் அருளும் ஆயுதங்களை அதாவது படைக்கலன்களை நீங்கள் பெற்றிருக்கிறீர்களா என்று உங்களை  ஆராய்ந்து பாருங்கள் தேவனுடைய ராஜியம் பேச்சிலே அல்ல பெலத்திலே உண்டாயிருக்கிறது. பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் இல்லாமல் மேலும் அவர் சொன்ன சர்வாயுதவார்கத்தை பெற்று கொள்ளாமல்  பிசாசின் ராஜியத்துக்கு எதிராக போராடாதீர்கள். உங்களிடமுள்ள விசுவாசத்தையும் பரிசுத்தத்தையும் மனத்தாழ்மையுள்ள  சாட்சியுள்ள வாழ்க்கையும் பார்த்து பிசாசு அதிகம் பயப்படுவான் மற்றப்படி அந்நிய பாஷை பேசுவதையோ சத்தமிடுவதையோ பார்த்து அவன் பயப்படுவதேயில்லை. (தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள் ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். 1 பேதுரு 5-8,)இந்த வசனத்தில் பிசாசு கெர்சிக்கிற சிங்கத்துக்கு ஒப்பிட்டு சொல்லப்பட்டிருக்கிறான்.

 

அன்றைக்கு தானியேலை கெர்சிக்கிற சிங்க கெபியிலே போட்ட போது அவனை தேவன் பாதுகாத்தார்.ஏனென்றால் தேவனுக்கு முன்பாக அவன் குற்றமற்றவனாக காணப்பட்டான். (சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்குத் தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார். ஏனென்றால்? அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன். ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றான். தானியேல் 6:22.) தேவனுக்கு முன்பாக நான் குற்றமற்றவனாக காணப்பட்டேன். மேலும், ராஜாவுக்கு முன்பாக நான் நியாய கேடு செய்ததில்லை என்ற தானியேலின் சாட்சியை கவனித்தீர்களா? இன்றைக்கு அநேகர் தேவனுக்கு முன்பாக பாவம் செய்து கொண்டு பிசாசுக்கு விரோதமாக போரிடுவதால் பிசாசின் தாக்குதல்கள் தங்கள் வீடுகளில் கடந்து வருகிறது உலகத்துக்கு ஒத்த வேஷம் தரித்து கொண்டு வசனத்துக்கு கீழ்படியாமல் பிசாசுக்கு முன்பு போய் கையை நீட்டாதீர்கள்.

 

பிரியமானவர்களே நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம்.தேவனுக்கு கீழ்படிந்து அவருக்கு முன்பாக கறையற்றவர்களாகவும் பிழையற்றவர்களாகவும் குற்றமற்றவர்களாகவும் நம்மை நிலை நிறுத்துவோம். தேவனுடைய சர்வாயுதவர்கத்தை தரித்து கொள்வோம். பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான். ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான். பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். 1 யோவான் 3-8 பாவத்தை செய்து கொண்டு தேவனுடைய ராஜியத்துக்காக நாம் ஊழியம் செய்ய முடியாது என்பதை உணர்ந்து கொள்வோம். ஆமென்.

bottom of page