top of page

அவர் உனக்காக கொடுக்கப்பட்டார்.

 

அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக, ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.

மத்தேயு 1:21.

மேற் சொல்லப்பட்ட வசனம் எல்லா சபைகளிலும் கிறிஸ்து பிறப்பு நாள்களில் சொல்லப்படும் வசனம் அவள் ஒரு குமாரனை பெறுவாள் அவளுக்கு இயேசு என்று பேரிடுவாயாக என்ற வார்த்தை எல்லாருக்கும் நன்றாக தெரியும். ஆனால் கர்த்தருடைய தூதன் சொன்ன அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்கிற உயர்ந்த ஆசீர்வாதத்தை அநேக கிறிஸ்தவர்கள் பெற்று கொள்ளவில்லை. இயேசு  இந்த உலகத்துக்கு வந்த  நோக்கம் நாம் பாவத்திலிருந்து இரட்சிக்கப்பட்டு நித்திய ஜீவனை பெற்று கொள்ளும்படியாக நம் பாவ மன்னிப்புக்காக தன் பரிசுத்த  இரத்தத்தை சிந்தி விலைக்கிரயமாக கொடுக்கப்பட்டார்.

 

இதை தான் ஏசாயா 9-6 ல் நமக்கொரு பாலகன் பிறந்தார் நமக்கொரு பாலகன் கொடுக்கப்பட்டார் என்று வேதம் சொல்கிறது.

 

இன்றைக்கு பாலகன் பிறந்தார் என்ற காரியத்தை நாம் சொல்லி ஆடி பாடி கொண்டாடி கொண்டு அவர் எதற்காக வந்தார் என்பதை மறந்து அவர் மீண்டும் வர போகிறார் என்ற காரியத்தை அறியாமல் இருக்கிறோம்.

 

பிரியமானவர்களே, வஞ்சிக்கப்பட்டு போகாதிருங்கள்!! கிறிஸ்து பிறப்பை கொண்டாடுவதில் தவறில்லை...... எதற்காக கொண்டாடுகிறீர்கள்? அவர் சிலுவையில் பெற்று தந்த விலை மதிக்கமுடியாத இரட்சிப்பை பெற்று கொண்டீர்கள் என்றால் கொண்டாடுங்கள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வந்த நோக்கம் உங்களில் நிறைவேறாமல் கிறிஸ்து பிறப்பை கொண்டாடி கொண்டிருப்பீர்களென்றால் ஒரு பிரயோஜனமில்லை, பாவமன்னிப்பின் நிச்சயத்தையும்  இரட்சிப்பையும் பெற்று கொள்ளாமல் இயேசு பிறந்தார் என்று உலகமே கொண்டாடி கொண்டிருக்கிறது. ஆனால் நமக்காக ஒரே பேறான குமாரன் கொடுக்கப்பட்டார் என்பதற்காக நாம் நியாயதீர்ப்பின் நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் என்கிற பயம் நம்மிடம் இருக்கிறதா?

 

இயேசு கிறிஸ்து யூதர்களிடம் உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளை காண ஆவலாயிருந்தான் என்றார் ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன் என்றார்.(யோவான் 9-56-58).இதை கேட்ட யூதர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.ஆதியிலே வார்த்தை இருந்தது.அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது.அந்த வார்த்தை தேவனாயிருந்தது.அவர் ஆதியிலே தேவனோடு இருந்தார்.சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று.அவரால் அன்றி எதுவும் உண்டாகவில்லை.யோவான் 1-1-2. அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.

ஏனென்றால்? அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது. பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும், அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. கொலோசெயர் 1:15,16. அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.

அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,  இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும். பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். பிலிப்பியர் 2:6-11அவர் உயிர்தெழுந்த போது வனத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்றார்.வெளிப்படுத்தின விஷேசம் 1-5 ல் அவர் பூமியின் ராஜாக்களுக்கெல்லாம் அதிபதி என்று சொல்லப்பட்டிருக்கிறது.அன்றைக்கு இயேசு கிறிஸ்துவின் மார்பில் சாய்ந்திருந்த யோவான் பரலோகத்தில் அவரை பார்த்த போது செத்தவனை போல அவர் காலில் விழுந்தான் அவர் அவனை பார்த்து மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்,நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். (வெளி1:18) என்றார்.

 

இப்பொழுது இயேசு கிறிஸ்து யார் என்பதை விளங்கி கொண்டீர்களா?அவர் நாமத்தை சொன்னால் பரலோகத்தில் உள்ளவர்களின் கால்கள் கூட முடங்கும் பூமியின் கோத்திரத்தார் அவரை பார்த்து புலம்புவார்கள். இன்றைக்கு இயேசு கிறிஸ்துவின் பெயரை சொல்லி கேரல் என்ற பெயரில் உண்டியல் ஏந்தி பிச்சை கேட்கிறீர்களா? ஒரு நாட்டின் தூதருக்கு பிறந்த நாள் கொண்டாட அவருக்கு காசு கொடுங்கள் என்று வீடு வீடாக பணத்தை கேட்பார்களா? உங்க தகப்பனார் பிறந்த நாளை கொண்டாட எல்லாரிடமும் போய் பணம் கேட்பீர்களா? யோசித்து பாருங்கள். இயேசு கிறிஸ்து ராஜாதி ராஜா...கர்த்தாதி கர்த்தர். அவர் இந்த உலகத்தை நியாயம் தீர்க்க நியாதிபதியாக வரப்போகிறார். அவர் பூமியின் நிறைவை உடையவர். அவருக்கு நீங்கள் கொடுக்கும் கனமும் மரியாதையும் இது தானா?

இன்றைக்கு இஸ்லாமியர்களின் நபிகள் பிறந்த நாளுக்கும்,தேசப்பிதா காந்தி பிறந்த நாளுக்கும் மதுக்கடைகள் அடைக்கப்படுகிறது. கிறிஸ்து பிறப்பின் நாளில் ஏன் வரலாறு காணாத அளவு மது விற்கபடுகிறது??. நீங்கள் குடித்து கும்மாளம் போட்டு அவர் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக அவர் வரவில்லை. அவர் பரிசுத்தமானவர், சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் என்று பரலோகத்தில் அவரை துதித்து கொண்டிருக்கிறார்கள்.

 

நான் பரிசுத்தர் ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் மேலும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலும் பரிசுத்தராயிருங்கள் என்று தேவன் சொல்லியிருக்கிறாரே.இன்றைக்கு குடித்து வெறித்து பாவம் செய்து கொண்டு கிறிஸ்து பிறப்பை கொண்டாடி கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் பாவத்தை குறித்தும் நீதியை குறித்தும் நியாயதீர்ப்பை குறித்தும் ஜனங்களை கண்டித்து உணர்த்தாத, ஊழியத்தை ஆதாய தொழிலாக எண்ணும் சுயநலமான ஊழியக்காரர்கள் தான்.சந்திப்பின் நாளிலே கிறிஸ்துவின் நியாயாசனத்துக்கு முன்பாக நிற்க வேண்டும் என்பதை மறந்தவர்கள்.(நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள். பிலிப்பியர் 2:12)மேல் சொல்லப்பட்ட வசனத்தின் எச்சரிக்கையை புரிந்து  கொண்டீர்களா??

 

 அவர் இந்த உலகத்துக்கு வந்த நோக்கம் உங்களில் நிறைவேறவில்லையென்றால் நீங்கள் உங்களையே வஞ்சித்து,  கொண்டிருக்கிறீர்கள். அவர் சிலுவையில் பெற்று தந்த விலையேறப்பெற்ற நித்திய ஜீவனை இழந்து கொண்டிருக்கிறீர்கள்.

 

அடுத்ததாக, பயத்தோடும் நடுக்கத்தோடும் அவர் நாமத்தை பயன்படுத்துங்கள். அவர் நாமத்தை வீணிலே வழங்காதே என்று வேதம் சொல்கிறது. இதோ, மேகங்களுடனே வருகிறார், கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள், பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும்,

வெளி 1:7 ஆமென்...ஆமென்.

bottom of page