ஊழியம் பணத்தை சார்ந்து அல்ல.?!
அதின் தலைவர்கள் பரிதானத்துக்கு நியாயந் தீர்க்கிறார்கள். அதின் ஆசாரியர்கள் கூலிக்கு உபதேசிக்கிறார்கள். அதின் தீர்க்கதரிசிகள் பணத்துக்குக் குறிசொல்கிறார்கள். ஆகிலும் அவர்கள் கர்த்தரைச் சார்ந்துகொண்டு: கர்த்தர் எங்கள் நடுவில் இல்லையோ? தீங்கு எங்கள் மேல் வராது என்கிறார்கள்.மீகா 3:11.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அடிசுவடை பின்பற்றும் படி நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். இயேசு ஊழியம் செய்த போது, அவர் ஊழியத்தில் தன் சுய லாபத்துக்காகவும் சுயமகிமைக்காகவும் எதையும் செய்யவில்லை வனாந்திரத்தில் அவர் மிகுந்த பசியாக இருந்த போது கற்களை அவர் அப்பமாக்கி சாப்பிடவில்லை ஆனால் சில நாள்கள் கழித்து ஜனங்களுக்காக ஐந்து அப்பத்தை ஐயாயிரம் பேருக்கு பங்கிட்டு கொடுத்தார் பல நேரங்களில் ஒரு நபருக்காக பல மைல்கள் நடந்து சென்று சுகமாக்கினார் ஆனால் இன்றைக்கு சில ஊழியக்காரர்கள் கூட்டத்தில் பேச வேண்டுமானால் ஒரு நாளைக்கு இவ்வளவு தர வேண்டும் என்று ரேட் பேசுகிறார்கள்.
ஒரு விசுவாசி ஒரு ஊழியக்காரரை தங்கள் வீட்டில் ஜெபக்கூட்டம் நடத்தும் படி அழைத்தார் அதற்கு அந்த ஊழியக்காரர் நான் வருகிறேன் ஆனால் நீங்கள் இவ்வளவு ரூபாய் தர வேண்டும் என்றார். இன்றைக்கு அநேக ஊழியக்காரர்களை பணம் தான் வழி நடத்துகிறது அவர்கள் தேவன் இருக்க வேண்டிய இடத்தில் பணத்தை வைத்து விட்டார்கள்.
அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார். 1 கொரிந்தியர் 9-14.
நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களாயிருக்கிறபடியினாலே, என் நாமத்தினிமித்தம் உங்களுக்கு ஒரு கலசம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை அடையாமல்போவதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.மாற்கு 9-41.
பிரியமானவர்களே, ஒரு முழு நேர ஊழியக்காரன் ஊழியம் செய்வதிலிருந்து அதாவது காணிக்கை மூலமாகவோ,சபை மூலமாகவோ அல்லது தான் சார்ந்திருக்கும் ஸ்தாபனங்கள் மூலமாகவோ அவனது தேவைகள் சந்திக்கப்படுகிறது.அவர்கள் தங்கள் ஊழியத்தில் தங்கள் எஜமானுடைய திட்டத்தையும் சித்தத்தையும் அறிந்து அதை மாத்திரம் செய்யும் பொழுது அவனுக்கு ஒரு குறைவும் வராது தேவன் ஒரு ஊழியக்காரனுக்கு இந்த காரியத்தை செய் என்று சொல்லும் போது அவன் அவர் செய்ய சொன்னதை செய்யும் போது அதன் தேவையை அவர் நிச்சயம் சந்திப்பார். ஆனால் தேவன் செய்ய சொல்லாததை செய்து கொண்டு தேவைகள் சந்திக்கப்படாமல் கடனில் இருக்கும் ஊழியக்காரர்கள் அநேகர் தான் அழைத்த ஊழியக்காரர்களின் தேவைகளை சந்திக்க தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்.ஆனால் அந்த ஊழியக்காரன் தேவனுக்கு உண்மையில்லாதவனாக தன் சுய சித்தம் செய்யும் போது குறைவுகளை சந்திக்கிறான்.
வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள், இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள். மத்தேயு 10-8.
இயேசு கிறிஸ்து வரங்களையும் அதிகாரங்களையும் கொடுத்து சீஷர்களை அனுப்பும் போது இலவசமாக பெற்றீர்கள் இலவசமாக கொடுங்கள் என்றார். பிரியமான ஊழியக்காரர்களே வரங்களையும் அதிகாரங்களையும் பெற்று கொண்டு தேவ சித்தம் செய்யாத ஊழியக்காரர்களை நோக்கி இயேசு அக்கிரம செய்கை காரர்களே என்று நியாயம் தீர்ப்பதை புரிந்து கொண்டீர்களா? இவ்வளவு பணம் தந்தால் தான் நான் பிரசங்கம் பண்ண வருவேன் என்று பணத்துக்காக ஊழியம் செய்வதை தயவு செய்து நிறுத்துங்கள். ஊழியம் என்பது வியாபாரம் அல்ல……. நீங்கள் ஊழியத்துக்கு செல்லும் போது அவர்கள் கொடுப்பதை வாங்கி கொள்ளுங்கள் ஒரு வேளை குறைவாக காணிக்கை கொடுத்தாலும் சந்தோஷமாக வாங்கி கொள்ளுங்கள் ஏனென்றால் ஐந்து அப்பத்தை ஐயாயிரம் பேருக்கு பங்கிட்டு கொடுத்த தேவனால் அந்த குறைவான பணத்தை பல மடங்கு பெருக பண்ண முடியும் என்பதை விசுவாசியுங்கள். தயவு செய்து பணத்தை சார்ந்து ஊழியம் செய்யாதீர்கள் மனித புயபலத்தை நம்புகிறவன் சபிக்கப்பட்டவன்.மேலும் கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான் என்று வேதம் சொல்கிறது.
பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். 1 தீமோத்தேயு 6-10.
பணத்தை இச்சித்து அதை பெற்று கொண்ட கேயாசி சாபத்தை பெற்று கொண்டான் இயேசுவோடு இருந்த யூதாஸ் பணத்தை இச்சித்ததினால் இயேசுவையே காட்டி கொடுத்து அதன் பின் தற்கொலை செய்து கொண்டான். ஊழியத்துக்கு பணம் தேவை தான் ஆனால் அந்த பணம் உங்களை அழைத்த தேவன் மூலமாக உங்களுக்கு வர வேண்டும்.
பிரியமானவர்களே ஊழியத்தில் நீங்கள் உங்களை அழைத்த தேவனை சார்ந்து ஊழியம் செய்கிறீர்களா?அல்லது பணத்தை சார்ந்து அதற்காக மனிதர்கள் மேல் நம்பிக்கை வைத்து ஊழியம் செய்கிறீர்களா?உங்களை நிதானித்து பாருங்கள். உண்மையும் உத்தமுமாய் தேவன் சொன்னப்படி ஊழியம் செய்யுங்கள். பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும். ஆமென்.