top of page

அதிக ஆக்கினை

 

என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக. யாக்கோபு 3-1.

 

இன்றைக்கு எத்தனை  ஊழியக்காரர்களுக்கு இந்த வசனத்தை குறித்து பயமும் நடுக்கமும் ஏற்படுகிறது. நம்முடைய எஜமானன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வர போகிறார்.நம்முடைய கிரியைகளுக்கான பலனை சந்திப்பின் நாளிலே நாம் பெற்று கொள்ள போகிறோம் கிறிஸ்துவின் நியாயாசனத்துக்கு முன்பாக நாம் நிற்க வேண்டும் என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. இன்றைக்கு  தங்கள் பெயருக்கு முன்பாக Pastor,Reverant Bishop என்று  ஜனங்கள் தங்களை அழைக்கும் படியாக பதிவிடுகிறார்கள். ஆனால் அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து அநேகர் போதகராகாதிருங்கள் என்ற வசனத்தின் எச்சரிப்பை யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை. இன்றைக்கு தங்களை தாங்களே போதகராக ஆக்கி கொண்டவர்கள் உண்டு.  ஜனங்களாலே போதகரானவர்களும் உண்டு.தேவனாலே அழைக்கப்பட்டு போதகரானவர்களும் உண்டு. என் சித்தத்தின் படி செய்யாமல் என் நாமத்தினாலே அற்புத அடையாளங்களை செய்தவர்கள் அநேகர் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று கூப்பிடும் போது அக்கிரம செய்கைகாரர்களே என்னை விட்டு தூர போங்கள் என்று சொல்வேன் என்று இயேசு எச்சரித்தார் (பார்க்க மத் 7-21-23) இந்த வசனத்தில் இயேசு குறிப்பிட்ட அநேகர் என்ற வார்த்தையை புரிந்து கொண்டீர்களா? இப்பொழுது அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து அநேகர் போதகராகாதிருங்கள் என்ற வசனத்தில் அப்போஸ்தலனாகிய யாக்கோபு குறிப்பிட்ட அநேகர் என்ற வார்த்தையை தயவு செய்து விளங்கி கொள்ளுங்கள்.  இதிலிருந்து அநேக போதகர்கள் கைவிடப்படுவார்கள் அதாவது ஆக்கினையை அடைவார்கள் என்று எச்சரிக்கப்பட்டாலும் வசனத்தில் சொல்லப்பட்ட எச்சரிப்பை குறித்து யாருக்கும் பயமில்லை.

 

தேவனுடைய வேலையை செய்வது தான் உலகத்திலே உன்னதமான பணி.  இன்றைக்கு பலர் தேவனால் அழைக்கப்பட்டு அவருடைய அபிஷேகத்தை பெற்றவர்களாய் வல்லமையாக அவருடைய ஊழியத்தை செய்து தேவனை மகிமைபடுத்துகிறார்கள்.தேவனால் அழைக்கபடாமல்அல்லது தேவன் தங்களை அழைத்த அழைப்புக்கு மாறாக சபையை ஸ்தாபித்து நடத்துகிறவர்கள் பலர்.  அடுத்ததாக சுவிசேஷ ஊழியத்தை செய்யும்படியாக அழைக்கப்பட்ட பலர் வருமானத்துக்காக சபையை உருவாக்கி நடத்தி கொண்டிருக்கின்றனர் (ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்.  இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை.

2 பேதுரு 1-10) ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.எபேசியர் 5-17.

தன் எஜமானடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்.

லூக்கா 12-47.மேல் சொல்லப்பட்ட எச்சரிப்பின் வசனங்களை கவனமாக அறிந்து கொள்ளுங்கள்.

 

பரிசுத்த ஆவியானவர் வரும் போது  பாவத்தை குறித்தும் நீதியை குறித்தும் நியாயதீர்ப்பை குறித்தும் உலகத்தை கண்டித்து உணர்த்துவார் என்று இயேசு சொன்னார்.ஆனால் இன்றைய ஊழியக்காரர்கள் சபையில் பாவத்தை குறித்து கண்டித்து உணர்த்துவதில் தயக்கம் காட்டுகிறார்கள். ஆனால் ஜனங்களின் பாவத்தை கண்டித்து உணர்த்தாவிட்டால் நமக்கு ஆக்கினை தீர்ப்பு என்று ஆண்டவர் எச்சரிக்கிறார்.

(மனுபுத்திரனே, உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவலாளனாக வைத்தேன்,நீ என் வாயினாலே வார்த்தையைக்கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக.

 

சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கமான வழியில் இராதபடிக்கு எச்சரிக்கும்படியாகவும், அவனை உயிரோடே காக்கும்படியாகவும், அதை அவனுக்குச் சொல்லாமலும், நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்தத் துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்திலே சாவான், அவன் இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன்.

 

நீ துன்மார்க்கனை எச்சரித்தும், அவன் தன் துன்மார்க்கத்தையும் தன் ஆகாத வழியையும் விட்டுத் திரும்பாமற்போவானாகில், அவன் தன் துன்மார்க்கத்திலே சாவான், நீயோவென்றால் உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய். எசேக்கியேல் 3:17-19)

 

பிரியமானவர்களே ஊழியம் செய்கிற உங்களிடம் கணக்கு கேட்கப்படும் என்று கர்த்தர் எச்சரிப்பதை தயவு செய்து உதாசினப்படுத்தாதீர்கள். சத்தியத்தை சத்தியமாக பிரசங்கிக்காமல்,பாவத்தை கண்டித்து உணர்த்தாமல் ஜனங்களுக்கு ஒத்த வேஷம் தரித்து அவர்களை பாவ வழியிலிருந்து திருப்பாமல் சத்தியத்தின் படி நடத்தாமல் எண்ணிக்கைக்காக ஊழியம் செய்கிறவர்களை பார்த்து எஜமான், அக்கிரம செய்கை காரர்களே என்னை விட்டு அகன்று போங்கள் என்று சொல்லும் போது அது எவ்வளவு கொடியதாக இருக்கும்.

 

ஆதலால் ஜனங்களுக்கு எப்படியோ ஆசாரியனுக்கும் அப்படியே, அவர்கள் வழிகளின்படி நான் அவர்களை விசாரித்து, அவர்கள் கிரியைகளின்படி அவர்களுக்குப் பலனளிப்பேன்.

ஓசியா 4-9 என்று ஆண்டவர் எச்சரிக்கிறார். இன்றைக்கு மற்றவர்களுக்கு சத்தியத்தை போதிக்கிற ஊழியக்காரர்கள் போதிக்கும் சத்தியத்துக்கு தாங்களே கீழ்படிவதில்லை.மற்றவர்களுக்கு போதிக்கிற நீ உனக்கு தானே போதியாமல் இருக்கலாமா(ரோமர் 2-21) என்று பவுல் எச்சரிக்கிறார்.

எனவே நாம் போதிக்கும் சத்தியத்துக்கு நாம் கீழ்படிகிறோமா என்று நம்மை நாமே நிதானித்து பார்த்து முதலாவது அதற்கு கீழ்படிவோம். அடுத்ததாக நம் அழைப்பை உறுதி செய்து கொள்வோம்.அழைத்த அழைப்பில் உறுதியாக நடப்போம் ஊழியக்காரனுக்கே அதிக ஆக்கினை வைக்கப்பட்டிருக்கிறது என்ற எச்சரிப்பை உதாசினப்படுத்தாமல் பயத்தோடும் நடுக்கத்தோடும் தேவ சித்தப்படி ஊழியம் செய்ய நம்மை ஒப்பு கொடுப்போம்.

(நீ வெட்கபடாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு. 2 தீமோத்தேயு 2:15)

மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன். 1 கொரிந்தியர் 9-27.

ஆமென்.

bottom of page