top of page

தேவனோடு சஞ்சரிக்கும் உன் நேரத்தை திருடன் திருடி  விட்டான் 

நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.
எபேசியர் 5-16.


அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்.
மாற்கு 13-33.


இன்றைக்கு நமக்கு கொடுக்கப்பட்ட முக்கியமானதில் ஒன்று  நேரம் நாம் முடிவு பரியந்தம் நிலைநிற்கும்படியாக இரட்சிப்பை காத்து கொள்ள வேண்டுமென்றால் நமக்கு கொடுக்கப்பட்ட நேரத்தை தேவனுக்குறிய மேலான காரியங்களில் செலவிட வேண்டும். ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும் ஒரு ஆரம்பமும் முடிவும் உண்டு அந்த முடிவு தான் முக்கியமானது.வாழ்க்கையின் முடிவில் அந்த மனிதன் தன் நேரத்தை எப்படி செலவழித்தான் என்பதன் பலன் அவனுக்கு தெரிய வரும்.அவன் சுயாதீனம் முடிவுக்கு வரும்.சூரியனுக்கு கிழே தான் பட்ட பிரயாசம் வீண் என்ற உண்மையை அன்றைக்கு தான் அறிந்து கொள்வான் என்னுடைய காலங்கள் உம் கரத்தில் இருக்கிறது என்று சங்கீதகாரன் சொல்கிறான். கர்த்தருக்கு காத்திருப்பவர்கள் புது பெலனை பெற்று கொள்வார்கள்,அவர்கள்  சோர்ந்து போவதில்லை அவர்கள் இளைப்படையவில்லைஎன்று வேதம் சொல்கிறது. இன்றைக்கு தேவ ஜனங்கள் வேதாகமத்தை தியானிக்காதபடிக்கு தேவசமூகத்துக்கு போய் ஜெபிக்காதபடிக்கு அவர்களது நேரத்தை பிசாசானவன் திருடி விட்டான் ஜனங்களின் நேரத்தை திருடுவதற்கு பிசாசானவன் பயன்படுத்துவது இணையத்தளங்களை அதாவது சமூக வலைத்தளங்களை அவனது ஒரே நோக்கம் ஜனங்களை சோர்ந்து போக செய்து இறுதியில் வீழ்ச்சியடைய செய்வது தான், பல மணி நேரமாக  Phone மூலமாக இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் நேரத்தை செலவிடும் மனிதன் இறுதியில் சோர்ந்து போய் விடுகிறான்.

ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்தான்.அவன் எடுத்து கொள்ளப்பட்டான்.இன்றைக்கு ஊழியர்கள் தேவ பெலனை பெற்று கொள்ளாதபடிக்கு தேவ சித்தத்தை அறியாதபடிக்கு இணையதளங்களில் மூழ்கி கிடக்கிறார்கள். இன்றைக்கு தேவனோடு சஞ்சரிக்காதபடிக்கு தங்கள் நேரங்கள் திருடபடுவதை அநேகர் அறிந்து கொள்ளவில்லை.


வாலிப பிள்ளைகள் வாலிப காலத்தில் தன் சிருஷ்டிகரை நினைக்காதபடிக்கு phone மூலமாக உலகத்துக்கு அடிமையாகிவிட்டார்கள் சமூக வலைத்தளங்களில் மயங்கி கிடக்கும் அநேக குடும்பத்தில் கணவன் மனைவி மற்றும் பிள்ளைகள் பெற்றோர்களிடையே அன்பின் ஐக்கியம் இல்லை.இதனால் அநேக குடும்பங்களில் பிரிவினைகள் சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை பிசாசானவன் உலகத்தின் ஆளுகைக்குள் கொண்டு வந்து விட்டான். இன்றைக்கு விசுவாசிகளும் ஊழியக்காரர்களும் தேவனோடு சஞ்சரிக்கும் மிக முக்கியமான நேரத்தை இழந்து போய்விட்டார்கள்.

சமீபத்தில் ஊழியக்காரர்கள் இருக்கும் ஒரு Whatsapp group ல் இரவு முழுவதும் வேதத்தை குறித்து விவாதம் பண்ணி கொண்டிருக்கிறார்கள் அடுத்த நாள் காலையிலிருந்து மீண்டுமாய் ஆரம்பித்து விடுகிறார்கள், இறுதியில் ஒருவரை ஒருவர் தூசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். பரிசுத்தவான்கள் ராஜியத்தில் பங்கடையும் படி அழைக்கப்பட்டவர்களின் சில பதிவுகள் மிகவும் தரங்கெட்ட நிலையில் இருக்கிறது.தேவ சமூகத்தில் காத்திருந்து ஜெபிக்க வேண்டிய ஊழியக்காரனுக்கும் விசுவாசிகளுக்கும் இரவு நேரத்தில் இணையத்தளத்தில் என்ன வேலை???.  இன்றைக்கு அநேக ஊழியக்காரர்களும் விசுவாசிகளும் அதிகாலை வரை இணையதளங்களில் தங்கள் நேரத்தை வீணாக்கி கொண்டிருக்கிறார்கள் அன்றைக்கு ஜெபத்தோடும் உபவாசத்தோடும் தேவ சமூகத்தில் காத்திருந்து  ஊழியம் செய்த ஆதி அப்போஸ்தலர்கள் வல்லமையாக ஊழியம் செய்தார்கள்.அவர்கள் உடைக்கும் நிழலுக்கும் தேவ வல்லமை கொடுக்கப்பட்டது. ஏனென்றால்? அவர்கள் உலகத்தை விட்டு பிரிந்தெடுக்கப்பட்டவர்களாய் தேவனோடு சஞ்சரித்தார்கள்,பரிசுத்த ஆவியானவரால் நிறைந்து அவரால் வழி நடத்தப்பட்டார்கள். பவுல் சொன்னது போல அவர்கள் உலகத்தின் ஆவியை பெறாமல் தேவனால் தங்களுக்கு அருளப்பட்டவைகளை  அறியும்படியாக தேவனிடத்திலிருந்து புறப்படுகிற ஆவியை பெற்றிருந்தார்கள்,1 கொரி 2-12.  இவர்களை பார்த்து தான் இயேசு நான் உலகத்தான் இல்லாதது போல இவர்களும் உலகத்தார்கள் அல்ல என்று பிதாவிடம் பேசினார். உலகம் அந்த சத்திய ஆவியானவரை காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரை பெற்று கொள்ள மாட்டாது என்று இயேசு சொன்னதை இப்போதாவது புரிந்து கொண்டீர்களா?யோவான் 1-10 ல் அவர் உலகத்தில் இருந்தார். உலகம் அவர் மூலமாக உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை என்பதை தயவு செய்து விளங்கி கொள்ளுங்கள். (உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள். ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.1 யோவான் 2-15.

 

பிரியமானவர்களே உலகம் அவரால் எனக்கு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது என்று பவுல் சொன்னது போல ஏன் உங்களால் சொல்ல முடியவில்லை. தேவ சமூகத்தில் தரித்திராமல் நிச்சயமாக உங்களால் சாட்சியுள்ள வாழ்க்கை வாழ முடியாது. நம் ஆவி ஆத்துமா பெலன் கொள்ள வேண்டுமானால் வேத தியானமும் ஜெபமும் மிக மிக முக்கியமானது. பிசாசு ஏன் உங்கள் நேரத்தை தந்திரமாக அபகரிக்கிறான் என்று இப்பொழுது புரிந்து கொண்டீர்களா?தயவு செய்து உங்கள் நேரங்கள் எப்படி செலவிடப்படுகிறது என்பதை  நிதானித்து அறியுங்கள். மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது.   அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான். மத்தேயு 13:45,46.

 

பிரியமானவர்களே விலையுயர்ந்த முத்தை  பெற்று கொண்ட மனிதனை போல தேவன் நமக்கு கொடுத்த காலத்தை பிரயோஜனப்படுத்தி கொள்ளுங்கள்.தேவ சமூகத்தில் உங்கள் நேரத்தை செலவிடுங்கள். உங்கள் நாசியின் சுவாசம் நிற்கும் போது நீங்கள் இந்த உலகத்தில் பிரயாசப்பட்டு சேர்த்தவைகளெல்லாம் யாருடையதாகும் என்று எண்ணி பாருங்கள்.  மேலும் உங்களுக்கு கொடுக்கப்பட்ட வாழ்க்கையில் விலையேறப்பெற்ற நேரத்தை தேவ சமூகத்தில் செலவிடாமல் இம்மைக்காகாகவும் பொழுது போக்குக்காகவும் உலகத்தோடு செலவு செய்தீர்களென்றால் சந்திப்பின் நாளிலே எல்லா ஜனங்களை காட்டிலும் பரிதபிக்கபட்டவர்களாக ஆவீர்கள்.

நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள் பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.  ஏனென்றால்?? நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. 


நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்.  கொலோசெயர் 3:1-4. ஆமென்

bottom of page