top of page

உலகத்திற்கு கொடுக்கப்பட்ட அழியாத பரிசுகள்

சகோ. எட்வின் கார்டர் (சோஹார் -  ஓமான்) 

 

  1. இயேசுவின் இரத்தம் [ 1யோவான் 1:7 ]

  2. இயேசுவின் தழும்புகள் [ 1பேதுரு 2:24 ]

  3. இயேசுவின் பிறப்பு [ லூக்கா 2:14 ]

  4. இயேசுவின் சிலுவை [ கலா 2:20, 5:24, எபேசியர் 2:16 ]

  5. இயேசுவின் மாமிசம் [ எபிரெயர் 10:19 ]

  6. இயேசுவின் மரணம் [ ரோமர் 5:8,10 ]

முன்னுரை:

இன்று உலகத்தில் ஒருவரை ஒருவர் திருப்திப்படுத்தும்படியாக பலவிதமான பரிசுகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வதைப் பார்க்க முடிகிறது. இப்படியாக இவர்கள் பரிமாறிக் கொள்கிற பரிசுகளின் மதிப்பைப் பார்ப்பீர்களானால் மனுஷன் எப்படி அழிந்து போகிறானோ அதேபோல இவர்களின் பரிசும் அழிந்து மறைந்து போவதை நம்மால் பார்க்க முடிகிறது. அதாவது இவர்களின் உள்ளம் எப்படியிருக்கிறதோ அதேபோலத்தான் இவர்களின் பரிசும் காணப்படுகிறது. இந்த சம்பவம் எதைக் காட்டுகிறது என்றால் மனுஷர்களுடைய அன்பு மாயையானது என்பதே வலியுறுத்துகிறது.

ஆகவேதான் தேவன் தீர்க்கதரிசியாகிய ஏசாயாவைக் கொண்டு இப்படியாக எழுதுகிறார்,

மாம்சமெல்லாம் புல்லைப் போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப் போலவும் இருக்கிறது.

கர்த்தரின் ஆவி அதின் மேல் ஊதும் போது புல் உலர்ந்து பூ உதிரும் என்று ஏசாயா 40:6,7 ல் குறிப்பிடப்பட்டுள்ளதை நாம் அறிகிறோம். இந்த வசனம் என்ன சொல்லுகிறது, என்றால் மனுஷர்கள் கொடுக்கிற பரிசை குறித்து ஒருபோதும் மேன்மைப்பாராட்டாதிருங்கள். இவைகள் எல்லாம் ஒருபோதும் நிலையான மகிழ்ச்சியை தரமுடியாது என்பதை மறந்து விடாதீர்கள்.

ஆனால் நம்முடைய பரலோக தந்தைக் கொடுக்கிற பரிசு எப்படியிருக்கிறது என்றால்,

தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் – யோவான் 3:16. பாருங்கள் பிதா தம்முடைய குமாரனையே இந்த பொல்லாத பாவம் நிறைந்த உலகத்தை மீட்பதற்காக பரிசாக கொடுத்துவிட்டார். இதைவிடவும் விலையுயர்ந்த ஒரு பரிசை நாம் பூவுலகத்தில் எங்கும் பார்க்க முடியாது, பரலோகத்திலும் காண முடியாது. மேலும் வேதம் சொல்லுகிறது, பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? – மத்தேயு 7:11. இப்படியாக, பிதாவாகிய தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசு கிறிஸ்து மூலமாய் இப்பிரபஞ்சத்திற்கு கொடுத்த பரிசுகளை வேத விளக்கங்களுடன் பின்வருமாறு பார்க்கலாம்,

 

1.  முதல் பரிசு: இயேசுவின் பிறப்பு

இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்த போது எப்படித் துதித்தார்கள் என்றால்,

உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும் பூமியிலே சமாதானமும் மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி தேவனைத் துதித்தார்கள் என்று லூக்கா 2:14 ஆம் வசனத்தில் அறிகிறோம்.

அப்படியென்றால்? இயேசு கிறிஸ்து மனித அவதாரம் எடுத்து வருவதற்கு முன்பாக தேவனுக்கு அதாவது பிதாவுக்கு எந்தவொரு மகிமையும் மனுஷரால் கிடைக்கவில்லை என்று அறிகிறோம். அதுமட்டுமல்லாமல் இதனால் மிகவும் கோபத்தோடு காணப்பட்ட பிதாவினால் ஜனங்களிடத்தில் பிரியமாய் இருக்க முடியவில்லை. இதனிமித்தம் உலகம் எப்படியிருக்கிறது என்றால் சமாதானம் இழந்து காணப்பட்டது, அதாவது ஜனங்கள் மத்தியில் எப்பொழுதும் சாவும் குழப்பமும் மற்றும் சமாதானமின்மையுமே காணப்பட்டது. என்றுதான் சொல்ல வேண்டும்.

கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களைத் தெரிந்து கொண்டதின் அவசியம் இவர்கள் தன்னை மகிமைப்படுத்துவார்கள், இவர்கள் மூலமாய் அன்னிய ஜனங்கள் மத்தியில் தம்முடைய நாமம் மகிமைப்படும் என்பதாக ஆனால் என்ன நடந்தது, இவர்கள் நிமித்தம் தேவனுடைய நாமம் எல்லா இடத்திலும் தூஷிக்கப்பட்டது அதாவது மிகவும் பரிசுத்த குலைச்சலானது என்று நாம் பழைய ஏற்பாட்டை வாசிக்கும் போது அறிய முடிகிறது.

அதுமட்டுமல்லாமல் தேவனுக்கும் ஜனங்களுக்கும் இடையில் பெரிய இடைவெளி காணப்பட்டது, மேலும் ஜனங்கள் மத்தியில் பட்சபாதம் காணப்பட்டது. கர்த்தருக்கு ஊழியம் செய்ய வேண்டுமானால் அதற்கென்று ஒரு குறிப்பிட்ட கோத்திரம் பிரிக்கப்பட்டிருந்தது, அதுமட்டுமல்லாமல் ஜனங்களின் பாவமும் அதிகரித்துக் கொண்டே சென்றதால் இவர்கள் கர்த்தருக்கு வெறுப்பாகவும், சத்துருவாகவும் மாறிபோனார்கள் என்று பார்க்கிறோம்.

ஆகவேதான் கர்த்தராகிய இயேசு இரட்சகராக மனுஷ அவதாரம் எடுத்து இந்த உலகத்திற்கு கடந்து வந்தார், முதலாவது அவர் செய்த காரியம், சந்தோஷம் இல்லாமல் பாவ இருளில் மூழ்கி இருந்த ஜனங்களுக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று என்று வேதம் சொல்லுகிறது.

எப்படியென்றால், அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்ட போது மிகுந்த  ஆனந்த சந்தோஷமடைந்தார்கள் – மத்தேயு 2:10. எந்தவொரு தீர்க்கதரிசியாலும் எந்தவொரு போதகராலும் மற்றும் எந்தவொரு தேவ மனுஷராலும் தரமுடியாத சமாதானத்தை கிறிஸ்துவின் பிறப்பு தந்தது என்று சொன்னால் அது மிகையாகாது, இதை நன்றாக அறிந்த பிதா தம்முடைய ஊழியக்காரன் ஏசாயாவின் மூலம் தீர்க்கதரிசனமாக சொன்ன காரியம் என்னவென்றால், அவருடைய நாமம் அதாவது இயேசு கிறிஸ்துவின் நாமம் சமாதானப்பிரபு என்று அழைக்கப்படும் என்று ஏசாயா 9:6 ல் கர்த்தருடைய வெளிப்பாட்டை நாம் அறிய முடிகிறது.

எனக்குப் பிரியமான ஜனங்களே இயேசு யாருடைய வீட்டில் எல்லாம் பிறக்கிறாரோ அவர்களுடைய வீட்டில் எல்லாம் மிகுந்த சந்தோஷமான மற்றும் சமாதானமான சூழ் நிலைகள் உருவாகும் என்பதை மறந்து விடாதீர்கள். பாருங்கள் கலக்கத்தோடு காணப்பட்ட மரியாளுடைய வீட்டில் இயேசு கிறிஸ்து பிறந்த போது மிகவும் சமாதானமான சூழ் நிலை காணப்பட்டது என்று நாம் அறிய முடிகிறது.

வேதம் சொல்லுகிறது, துன்மார்க்கனுக்கு சமாதானம் இல்லையென்பதாக ஆனால் துன்மார்க்கன் தன்னுடைய வாழ்க்கையில் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு ஒரு இடத்தை ஆயத்தமாக்குவானானால் நிச்சயமாக அவன் இரட்சிப்பை பெற்றுக் கொள்வான் என்பதில் சிறிதும் சந்தேகமேயில்லை.

 

2.  இரண்டாவது பரிசு: இயேசுவின் இரத்தம்

இன்று ஜனங்கள் தங்களுடைய பாவத்தைப் போக்குவதற்காக பலவிதமான இடங்களைத் தேடி செல்வதுண்டு இன்னும் சிலர் பலவிதமான நீர் நிலைகளில் புனித குளியல் என்று சொல்லிக் கொண்டு பலவிதமான பரிகாரங்களை செய்வதை நாம் பார்க்க முடிகிறது.

அதுமட்டுமல்லாமல், பழைய ஏற்பாட்டில் ஜனங்கள் தாங்கள் செய்த பாவத்தினிமித்தம் பலவிதமான பலிகளை, ஆசாரியர்கள் கொண்டு செலுத்துவதுண்டு. இதனால் இவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டதா என்று பார்ப்பீர்களானால் நிச்சயமாகவே இல்லவே இல்லை ஏனென்றால் வேதம் சொல்லுகிறது, கடாக்கள் ஆட்டுக்குட்டிகள் இவைகளுடைய இரத்தத்தின் மேல் கர்த்தருக்கு பிரியம் இல்லை என்பதாக. வேதத்தில் இத்தகைய பகுதியை நாம் பின்வருமாறு வாசிக்கலாம்

காளைகள் ஆட்டுக்குட்டிகள் கடாக்களுடைய இரத்தத்தின் மேல் எனக்குப் பிரியமில்லை – ஏசாயா 1:11 [ பிப ]. எப்படியென்றால் இவர்கள் செலுத்துகிற பலியை மாத்திரமல்ல இப்படிப்பட்ட பலிகளைச் செலுத்த வருகிற ஜனங்களிடத்திலும் கர்த்தர் பிரியமாயிருக்க வில்லை. எப்படியென்றால் இவர்கள் பாவ அழுக்கின் நிமித்தம், உள்ளங்கால் தொடங்கி உச்சதலைமட்டும் அதிலே சுகமேயில்லை அது காயமும் வீக்கமும் நொதிக்கிற இரணமுமுள்ளது அது சீழ் பிதுக்கப்படாமலும் கட்டப்படாமலும் எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது என்று ஏசாயா தீர்க்கதரிசி, ஏசாயா 1:6 ல் எழுதி வைத்திருக்கிறார்.

இப்படிப்பட்ட அசிங்கத்துடன் இருக்கும் ஜனங்கள் கர்த்தரை எப்படி நெருங்க முடியும். ஏனென்றால் பரிசுத்தமில்லாமல் கர்த்தரை ஒருவரும் தரிசிக்க முடியாது. எனவே முதலில் பாவத்தின் நிமித்தம் ஏற்பட்ட நோயை குணமாக்க வேண்டும். அப்பொழுதுதான் கர்த்தருடைய சந்நிதியை இவர்கள் மிதிக்க முடியும்.

ஆகவேதான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த பாவ அழுக்கை எந்த ஒரு தண்ணீரினாலும் கழுவ முடியாது என்பதை அறிந்து தம்முடைய இரத்தத்தை இவர்களுக்காக சிந்த முடிவு செய்தார். எனவே தம்முடைய இரத்தத்தை அந்த கோர சிலுவையில் ஒவ்வொரு மனிதனுக்காக சிந்தினார் என்று பார்க்கிறோம்.

நாம் தேவனோடு ஒப்புரவாக வேண்டுமானால் நம்முடைய வாழ்க்கையில் கர்த்தர் கிரியை செய்ய வேண்டுமானாலும் நம்முடைய சாபங்கள் ஆசீர்வாதமாய் மாற்றப்படவேண்டுமானாலும் நாம் செய்ய வேண்டிய காரியம் நமக்காக சிந்தப்பட்ட இந்த இயேசு கிறிஸ்துவின் உடன்படிக்கையின் இரத்தத்தை நம்முடைய வாழ்க்கையில் பூச வேண்டும். அப்பொழுதுதான் நாம் கத்தருடைய பிள்ளைகளாக இந்த உலகத்தில் வாழ முடியும்..

வேதம் சொல்லுகிறது, முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள் என்று எபேசியர் 2:13 ல் வாசிக்கிறோம்.

எனக்குப்பிரியமான ஜனங்களே யாருடைய வீட்டில் எல்லாம் இரத்தம் இல்லையோ அவர்களுடைய வீட்டிலுள்ள மனிதர்களையெல்லாம் சங்காரதூதன் சங்காரம் பண்ணுவான் என்பதை மறந்து விடாதீர்கள். ஏனென்றால் இரத்தம் சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது – எபிரெயர் 9:22

3.  மூன்றாவது பரிசு: இயேசுவின் தழும்பு

வேதம் சொல்லுகிறது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தழும்புகளால் குணமானீர்கள் – 1பேதுரு 2:24 [ பிப ]. எதற்காக இந்த தழும்புகளை இயேசு கிறிஸ்து ஏற்றுக் கொண்டார் தம்முடைய மகத்துவமான சரீரத்தில் அதாவது பாவத்தின் கறை இல்லாத தம்முடைய உடம்பில் பலவிதமான தழும்புகளை ஏற்றுக் கொண்டார்.

எப்படியென்றால், நம்முடைய கைகள் செய்த பாவத்தினிமித்தம் அவருடைய கைகளில் ஆணிகள் பாய்ச்சப்பட்டன. நம்முடைய கால்களை அப்பாவி ஜனங்களை எட்டி உதைப்பதற்கும் விபச்சாரம் போன்ற பாவங்களை செய்வதற்கும் பயன்படுத்தியதின் விளைவாக கர்த்தருடைய கால்கள் சிலுவையில் அறையப்பட்டு அசையாதப்படிக்கு முடக்கி வைக்கப்பட்டன. நம்முடைய சிந்தையின் மூலம் செய்த பாவத்தினிமித்தம் அவருடைய தலைகளில் முள்மூடி கிரீடங்கள் பதிக்கப்பட்டன அனேகருடைய பாவத்தை உணவாக சாப்பிட்டு நம்முடைய வயிற்றை நிரப்பியதின் விளைவாக அவருடைய விலாவில் குத்தப்பட்டன. அதுமட்டுமல்லாமல் வாரினால் பல தடவைகள் அடிக்கப்பட்டு தம்முடைய சரீரத்தையே கிழிக்கும்படியாக தம்மை ஒப்புக் கொடுத்தார்.

எதற்காகவென்றால் நாம் பரிபூரணமாக குணமடைய வேண்டும் அதாவது பாவ நோயின் தழும்புகள் முழுமையாக மறைய வேண்டும் என்பதற்காக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சரீரங்களில் ஏராளமான தழும்புகளை ஏற்றுக் கொண்டார் என்று வேதம் சொல்லுகிறது.

இத்தகைய காரியத்தை ஏசாயா தீர்க்கதரிசி இவ்வாறாக எழுதுகிறார், மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக் கொண்டு நம்முடைய துக்கங்களைச் சுமந்தார் நாமோ அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் என்று ஏசாயா 53:4,5 சொல்லுகிறது.

நம்முடைய குழந்தைகளுக்கு ஒரு சிறிய தழும்புபட்டு விட்டாலோ அல்லது நமக்கு பிரியமானவர்களுக்கு சிறிய தழும்புகள் ஏற்பட்டுவிட்டாலோ நாம் மிகவும் துடித்துப் போகிறோம். ஆனால் நம்முடைய பிதாவோ தம்முடைய மகனை நொறுக்கும்படியாக அதாவது எல்லா இடங்களிலும் தழும்புகளைப் பெறும்படியாக பாவியான ஜனங்களிடத்தில் ஒப்புக் கொடுத்தார் எதற்காக தம்முடைய கரங்களினால் உண்டாக்கப்பட்ட ஜனங்களுக்கு எந்தவொரு சூழ் நிலையிலும் பாவத்தழும்புகளும் பாவ நோய்களும் இருந்து விடக்கூடாது.

இத்தகைய காரியத்தை மட்டும் நாம் மனதில் வைத்துக் கொண்டு மறுபடியும் நம்முடைய ஆண்டவருக்கு தழும்புகள் வராதபடி வாழக் கற்றுக் கொள்வோம். வேதம் சொல்லுகிறது,ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர் அனேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டு வந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருக்கிறது – எபிரெயர் 2:10. இயேசு நமக்காக ஏற்றுக் கொண்ட தழும்புகளை நோக்கிப் பாருங்கள் அப்பொழுது குணமாகாத நோய்களும் குணமாகும் என்பதில் சிறிதும் சந்தேகமேயில்லை.

4.  நான்காவது பரிசு: இயேசுவின் சிலுவை

இயேசு கிறிஸ்து சுமந்த சிலுவையின் மகிமை என்ன என்பதை பின்வருமாறு பார்க்கலாம்

சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவ பெலனாயிருக்கிறது என்று பவுல் 1 கொரி 1:18 ல் சிலுவை எப்படிப்பட்டது என்பதை அழகாக எழுதி வைத்திருக்கிறார்.

ஆகவேதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, இந்த சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரமாய் இருக்க மாட்டான் என்று எழுதி வைத்திருக்கிறார். சிலுவையை சுமக்காத ஒரு மனுஷனும் உண்மையான கிறிஸ்தவனாய் இருக்க மாட்டான். எப்படியென்றால் அப்.பவுல் கலாத்திய சபைக்கு எழுதும் போது, சிலுவையின் இரகசியத்தை அழகாக வெளிப்படுத்துகிறார்.

கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள் என்று கலாத்தியர் 5:24 ல் வாசிக்கிறோம்.

எனவே கிறிஸ்துவுக்குள் நாம் வாழ வேண்டுமானால் நிச்சயமாக இந்த சிலுவை நம்முடைய வாழ்க்கையில் மிகவும் அவசியமாய் இருக்கிறது என்று உணர முடிகிறது.

அடுத்ததாக, சிலுவையில் நாம் அறையப்படும் போது என்ன நடக்கிறது என்று பின்வருமாறு பார்க்கலாம். பவுல் எழுதுகிறார், கிறிஸ்துவுடனே கூடச் சிலுவையிலறையப்பட்டேன் ஆயினும் பிழைத்திருக்கிறேன் இனி நான் அல்ல கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார் – கலாத்தியர் 2:20 [ முப ]

எனவே கிறிஸ்து வெளிப்பட வேண்டும் அதாவது கிறிஸ்துவின் சிந்தையை வெளிப்படுத்த வேண்டும் மற்றும் இயேசுவுக்காக உண்மையாக வாழ வேண்டும் என்று விரும்புகிறவர்கள் முதலாவதாக தன்னுடைய பழைய மனுஷனை சிலுவையில் அறைய வேண்டும். அப்பொழுதுதான் கிறிஸ்து நம்முடைய வாழ்க்கையில் பிறப்பார்.

அப்படியில்லாதபட்சத்தில் நாம் எப்பொழுதும் கிறிஸ்துவின் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய் வாழுகிறவர்களாய் காணப்படுவோம் என்பதை மறந்து விடாதீர்கள்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் இந்த உலகத்தில் வாழ்ந்த போது நம்மெல்லாருக்காகவும் பாவ சிலுவையை தம்முடைய மரணம் மட்டும் சுமந்து சென்றார் எதற்காக அனேகரை இந்த பாதை வழியாக நித்திய ஜீவனுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக.

சிலுவையை காதில், கழுத்தில் மட்டும் அணிந்தால் போதாது நம்முடைய வாழ்க்கை முழுவதும் சுமக்க கற்றுக் கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் நாம் பிதாவுக்கு பிரியமாக வாழ முடியும்.

எல்லா ஜனங்களையும் இயேசு கிறிஸ்து எப்படி தேவனுக்கு ஒப்புரவாக்குகிறார் என்பதை வேதம் சொல்லுவதை பார்க்கலாம். பகையைச் சிலுவையினால் கொன்று அதினாலே இருத்திரத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார் – எபேசியர் 2:16.

நமக்கு உண்மையான இளைப்பாறுதல் எப்பொழுது வருகிறது என்றால் நாம் சிலுவையின் நிழலில் ஒதுங்கும் போது மட்டுமே என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்.

கிறிஸ்துவை நோக்கிப் பயணம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய வழி எதுவென்றால் அது சிலுவை வழியாகும் என்பதை மறந்து விடாதீர்கள். சிலுவை வழி என்பது பஞ்சு மெத்தையை போன்றது என்று ஏமாந்து விடாதீர்கள், இந்த வழி முழுவதும் முட்களும் கற்களும் நிறைந்தே காணப்படும். ஆகவே எப்படிப்பட்ட வழி வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

 

5. ஐந்தாவது பரிசு: இயேசுவின் மாமிசம்

பழைய ஏற்பாட்டில் கர்த்தருடைய சந்நிதியில் நுழைவதற்காக இஸ்ரவேல் ஜனங்கள் பலவிதமான மிருகங்களின் மாமிசத்தை கர்த்தருக்கு பலியாக செலுத்த வேண்டும். இந்த மாமிசத்தின் வழியாகத்தான் ஜனங்கள் சாலமோன் கட்டிய ஆலயத்திற்குள் நுழைந்தனர் என்று பார்க்கிறோம். ஆனால் இத்தகைய மாமிசத்தின் மேல் கர்த்தர் பிரியமாய் இருக்கவில்லை.

இதன்மேல் தேவனுக்கு வெறுப்புதான் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் இப்படிப்பட்ட மாமிசம் இஸ்ரவேல் ஜனங்களுக்கு மாத்திரமே அனுமதிக்கப்பட்டது. ஆனால் புறஜாதிகளுக்கு பலிபிடத்திற்கு செல்லவே அனுமதி சீட்டு கொடுக்கப்படவில்லை. இப்படிப்பட்ட பாவ சடங்குகளை மற்றும் பட்சபாதத்தை மாற்றுவதற்காக கர்த்தர் தனக்கென்று ஒரு சரீரத்தை ஆயத்தப்படுத்தினார். அதுதான் பரிசுத்த பிள்ளையாகிய இயேசு கிறிஸ்துவின் சரீரம் அதாவது அவருடைய மாமிசம் என்றும் சொல்லலாம்.

வேதமும் இந்த மாமிசம் ஏன் நமக்கு அவசியம் என்பதை அழகாக விளக்குவதை பார்க்கலாம்,

ஆகையால் சகோதரரே நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாமிசமாகிய திரையின் வழியாய் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டு பண்ணினார் – எபிரெயர் 10:19. இந்த மாமிசத்தின் வழியாக யாரெல்லாம் நுழைகிறார்களோ அவர்களுக்கு மாத்திரமே ஜீவனுள்ள ஒரு வாழ்க்கையும் ஜீவனுள்ள ஊழியமும் கொடுக்கப்படுகிறது. ஏனென்றால் வேதம் இத்தகைய காரியத்தை ஜீவனுள்ளது என்று சொல்கிறது, ஏனென்றால் அன்றைய நாட்களில் ஜனங்களுக்காக செலுத்தப்பட்ட மிருகங்களின் மாமிசத்தில் ஜீவனில்லை அதாவது ஒரு தடவை அடிக்கப்பட்டு விட்டால் பின்னர் அவைகளை மண்ணில்தான் புதைக்க வேண்டும்.

ஆனால் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மாமிசமோ அதாவது சரீரமோ சிலுவையில் அடிக்கப்பட்டு அடக்கம் பண்ணப் பட்ட போதிலும் மூன்றால் நாளில் உயிரோடு மரணத்தை ஜெயித்து எழுந்தார் என்று பார்க்கிறோம். ஆகவேதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சரீரத்தைக் குறித்து நானே ஜீவ அப்பமாய் இருக்கிறேன் [ யோவான் 6:48 ] அதுமட்டுமல்லாமல் மேலும் இயேசு அவர்களை நோக்கி ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான் என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான் என்று யோவான் 6:35 ல் சொல்லுகிறார்.

மேலும், என் மாமிசம் மெய்யான போஜனமாயிருக்கிறது என் மாமிசத்தைப் புசித்து என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவன் என்னில் நிலைத்திருக்கிறான் நானும் அவனில் நிலைத்திருக்கிறேன்.

என் மாமிசத்தைப் புசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் எண்டு கடைசியாக, வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே இது உங்கள் பிதாக்கள் புசித்த மன்னாவைப் போலல்ல அவர்கள் மரித்தார்களே இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார். யோவான் 6:55-58.

இன்று நாம் உலக மாமிசங்கள் வாழ்கிற இந்த பொல்லாத பிரபஞ்சத்திலிருந்து தப்பித்துக் கொள்ள் வேண்டுமானால் எப்பொழுதும் இந்த ஜீவனுள்ள அப்பமாகிய இயேசு கிறிஸ்துவை ஒவ்வொரு நாளும் ருசி பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் அவர் வரும் வரை நாம் ஜீவனுள்ளவர்களாய் இருந்து அவரோடு கூட பரலோகத்திற்கு செல்ல முடியும்.

இயேசு சொல்லுகிறார், நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாமிசமே என்றார் – யோவான் 6:51 [ பிப ]

6.  கடைசியாக: இயேசுவின் மரணம்

வேதம் சொல்லுகிறது, நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல் வைத்த தமது அன்மை விளங்கப்பண்ணுகிறார் – ரோமர் 5:7,8

முதலாவதாக இயேசுவின் மரணம் எதை வெளிப்படுத்துகிறது என்றால் தேவன் தாம் உண்டாக்கின ஜனத்தை எவ்வளவாய் நேசிக்கிறார். பாருங்கள் நாம் பாவியாக இருந்த போதிலும் நம்மை எவ்வளவாய் நேசிக்கிறார் என்பதற்கு இயேசுவின் மரணமே ஒரு சிறந்த உதாரணம் ஆகும்.

நாம் நம்பி கொண்டிருக்கிற உலக ஜனங்கள் இதை செய்வார்களா? நம்முடைய ஆவிக்குரிய ஊழியக்காரர்கள் இதை செய்ய முன்வருவார்களா? அல்லது நம்முடைய பெற்றோர், சகோதரர்கள், சகோதரிகள், கணவன், மனைவி, பிள்ளைகள் இதை செய்ய முன்வருவார்களா? இதற்கான பதில் இல்லவே இல்லை.

அடுத்ததாக, இயேசுவின் மரணம் வெளிப்படுத்திய காரியத்தை பின்வருமாறு பார்க்கலாம், வேதம் சொல்லுகிறது, நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில் அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே – ரோமர் 5:10

இயேசுவின் மரணம் பாவத்தின் நிமித்தம் தேவனுக்கு பகைவர்களாய் மாறிப் போன நம்மை நீதிமான்களாக மாற்றி தேவனுக்கு பிரியமான பிள்ளைகளாக வாழச் செய்கிறது, அதாவது தேவனுக்கும் நமக்கும் இடையில் இருந்த பாவ சுவரை உடைத்தது என்று சொல்லலாம்.

ஆகவே நாம் இயேசுவோடுகூட ஆளுகை செய்ய வேண்டுமானால் அதாவது மரித்தவர்களாய் இருக்கிற நாம் உயிரோடு பிழைத்து வாழ வேண்டுமானால் நாம் இயேசுவோடு கூட சிலுவையில் மரிக்க வேண்டும். அப்படியில்லாத பட்சத்தில் நமக்கு ஜீவனுள்ள வாழ்க்கை நிச்சயமாக கிடைக்காது என்பதை மறந்து விட வேண்டாம்.

இத்தகைய காரியத்தை பின்வரும் வசனங்கள் நமக்கு தெளிவாக வெளிப்படுத்துவதை பார்க்கலாம்,

வாசிக்க ரோமர் 6: 2 -11 [ நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்து கொள்ளும்படிக்கு அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ் நானத்தினாலே கிறிஸ்துவுடனே கூட அடக்கம்பண்ணப்பட்டோம் ]

எனக்குப் பிரியமான தேவ ஜனங்களே நமக்கு தேவன் கொடுத்திருக்கிற இப்படிப்பட்ட அழியாத பரிசுகளினால் நம்முடைய வாழ்க்கை என்கிற வீட்டை அலங்கரித்துக் கொள்வோம். இப்படிப்பட்ட பரிசுகள் யாருடைய வாழ்க்கையில் எல்லாம் காணப்படுகிறதோ அவர்களுடைய வீட்டில் மாத்திரம் எப்பொழுதும் வெளிச்சத்தைப் பார்க்க முடிகிறது, இத்தகைய பரிசையல்லாமல் மனுஷர் தரும் அழிந்து போகிற பரிசுகளை விரும்புவீர்களானால் நிச்சயமாக நம்முடைய வீட்டில் பிரகாசத்தைப் பார்க்க முடியாது.

தேவன் தாமே நம் ஒவ்வொருவரையும் இந்த அழியாத பரிசுகளினால் நம்மை ஆசீர்வதிக்க வேண்டும் என்று ஜெபித்து இந்த செய்தியை உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.

bottom of page