ஆத்தும திருடர்கள்
இன்றைக்கு அநேக ஊழியக்காரர்கள் ஜனங்களை தேவனுக்கு நேராக திருப்புவதற்கு பதிலாக தங்கள் சபைக்கு நேராக திருப்புகின்றனர் தங்கள் சபையை நிரப்புவதற்கு அதாவது எண்ணிக்கைக்காக பணத்தை தண்ணீராக செலவிடுகின்றனர்.
தமிழ்நாட்டில் பல நகரங்களில் ஊழியர்களுக்கிடையே யார் பெரியவன் என்பதில் போட்டா போட்டி Pastor களை விட நாங்கள் பெரியவர்கள் என்று அநேகர் தங்களை Bishop ஆக்கி கொண்டார்கள் அநேகர் Bishop ஆனவுடன் அநேக சின்ன சபைகளை தங்களுடன் இணைத்து கொள்ளும் முயற்சியில் தீவிரமாக இறங்கி விட்டார்கள். மேலும், ஏற்கனவே சபைகள் உள்ள இடத்தில் கிளை சபைகள் என்ற பெயரில் சபைகளை உருவாக்கி பிற சபைகளுக்கு செல்லும் ஆத்துமாக்களை அழைத்து செல்கிறார்கள். சமீபத்தில் குமரி மாவட்டத்தில் பெரிய சபைகளை நடத்தும் ஊழியக்காரர்கள் கிராமங்களுக்குள் தங்கள் ஆட்களை அனுப்பி தங்கள் சபைக்கு வருமாறு வருந்தி அழைக்கிறார்கள், அந்த கிராமத்து ஜனங்கள் நாங்கள் இங்குள்ள சபைக்கு போகிறோம் என்று என்று சொன்னாலும் ஒருமுறை வந்து பாருங்கள் என்று வற்புறுத்தி அவர்களை வாகனத்தில் அழைத்து செல்கின்றனர் பல வருடங்கள் எதிர்ப்புகள் மத்தியில் கஷ்டப்பட்டு ஊழியம் செய்து சம்பாதித்த ஆத்துமாக்கள் தங்கள் சபையிலிருந்து அபகரிக்கப்பட்டதை அறிந்த ஏழை ஊழியக்காரர்கள் கண்ணீர் விடுகிறார்கள்.
அடுத்ததாக வெளிநாடுகளிலிருந்து வந்த சிலர் தாங்கள் சம்பாதித்த பணத்தை கொண்டு தங்கள் சுய திருப்திக்காக சபையை ஆரம்பித்து நடத்துகிறார்கள். இவர்கள் சபையில் பிரியாணி போன்ற உணவுகள் பரிமாறப்படுவதால் எங்கள் சபையிலிருந்து அநேக ஏழை ஜனங்கள் அங்கு போய்விட்டார்கள் என்று ஒரு ஊழியக்காரர் கவலையோடு சொன்னார். மேலும் அவர் கூறியதாவது இவர்கள் ஏன் சபை ஆரம்பித்து கிறிஸ்துவை ஏற்று கொண்டவர்களை கூட்டி செல்கிறார்கள். கிறிஸ்துவை அறியாதவர்கள் மத்தியில் ஊழியம் செய்யலாமே?ஏன் கிறிஸ்தவர்கள் அதிகம் இருக்கும் குமரி மாவட்டத்தை நோக்கி வந்து அநேக சபைகள் இருக்கும் இடத்தில் சபையை கட்டி மற்ற சபைக்கு போகிறவர்களை அழைத்து செல்கிறார்கள். இது நிச்சயமாக தேவனுடைய சித்தமல்ல.இவர்கள் தங்கள் சுயசித்தத்தையும் சுய ஆசையையும் நிறைவேற்றுகிறார்கள் என்றார். இன்றைக்கு அரசியல்வாதிகள் தங்கள் கூட்டங்களுக்கு பிரியாணி பொட்டலம் கொடுத்து அழைத்து செல்வது போல இவர்களும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் என்று வருத்தப்பட்டார். தேவனால் அழைக்கப்பட்ட ஒரு ஊழியக்காரன் இயேசுவின் நாமத்தினால் ஊழியம் செய்து ஆதாயப்படுத்திய ஆத்துமாக்களை ஆசை வார்த்தைகளை சொல்லி நயம் காட்டி அழைத்து செல்வது தேவ நீதியா? இது தேவனுக்கு பிரியமான ஊழியமா? இயேசுவை அறியாத எவ்வளவோ ஜனங்கள் மத்தியில் ஊழியம் செய்யாமல் இரட்சிக்கப்பட்டு பிற சபைக்கு போகிற ஜனங்களை உங்கள் சபைக்கு அழைத்து செல்ல தேவன் நிச்சயம் அனுமதிப்பதில்லை. (மேலும் அவருடைய செய்தியை அறியாதிருந்தவர்கள் காண்பார்களென்றும், கேள்விப்படாதிருந்தவர்கள் உணர்ந்துகொள்வார்களென்றும் எழுதியிருக்கிறபடியே, நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டாதபடிக்கு கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன். ரோமர் 15:20,21)
மேல் சொல்லப்பட்ட வசனத்தின் படி நீங்கள் ஊழியம் செய்கிறீர்களா என்பதை நிதானித்து அறியுங்கள்.
நாங்கள் கஷ்டப்பட்டு ஊழியம் செய்கிறோம் பல கிராமங்களுக்குள் போய் அநேகரை இரட்சிப்புக்குள் நடத்தி சபையில் சேர்த்திருக்கிறோம் எங்களது தேவையை சந்திப்பதற்கே எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது சபைக்கு வருகிறவர்களுக்கு உணவு கொடுப்பதற்கு எங்களுக்கு திராணியில்லை எங்களால் இரட்சிப்புக்குள் நடத்தபட்டவர்களை ஆசை வார்த்தை சொல்லி திருடி கொண்டு போய்விட்டார்கள் என்று வெளிப்படையாகவே ஒரு ஊழியக்காரர் கவலையோடு சொன்னார்.
பிரியமான ஊழியக்காரர்களே, உங்கள் பணபலத்தை வைத்து கொண்டு ஊழியம் என்ற பெயரில் விளையாடாதீர்கள். எதிர்ப்புகளின் மத்தியில் உண்மையும் உத்தமுமாய் ஊழியம் செய்யும் ஏழை ஊழியக்காரனின் கண்ணீருக்கு தேவன் பதில் கொடுத்தால் நீங்கள் நிலை நிற்க முடியாது. எண்ணிக்கைக்காக ஆத்துமாக்களை திருடும் வேலையை உடனடியாக கைவிடுங்கள்.
இன்றைக்கு நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதை ஏதாவது ஒரு வழியில் அறுப்பீர்கள். எந்த ஒரு சபையிலிருந்தும் ஆத்துமாக்களை திருடி அந்த சபையை சிதறடிக்காதீர்கள்.ஊழியக்காரனாக வேண்டும் என்ற சுய இச்சைக்காகவோ அல்லது உங்கள் சபையை பெரிதாக்க வேண்டும் என்ற சுய பெருமைக்காகவோ அல்லது எந்த காரணத்துக்காவது கர்த்தருடைய சபை உடைக்கபடுவதற்கு காரணமாகாதீர்கள். அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக.
யாக்கோபு 3-1 என்ற வசனம் உங்களுக்கு எச்சரிக்கையாயிருக்கட்டும்.
இன்றைக்கு தேவனால் சுவிசேஷகராக அதாவது சுவிசேஷ ஊழியத்துக்காக அழைக்கப்பட்ட அநேகர் தேவ சித்தத்துக்கு புறம்பாக சபையை ஆரம்பித்து போதகராகி விட்டார்கள். போதகர்களாக அழைக்கப்பட்ட அநேகர் வீண் புகழ்சிக்காக தங்களை பிஷப் ஆக்கி கொண்டார்கள்.
-
ஊழியத்தில் உங்கள் பதவியும் அதிகாரமும் பரலோகத்திலிருந்து கொடுக்கப்பட்டதா?
-
அல்லது மனிதர்களால் கொடுக்கப்பட்டதா?
-
அல்லது நீங்களே உருவாக்கி கொண்டதா?
-
உங்கள் ஊழியத்தில் தேவன் கொடுத்த தரிசனம் என்ன?
-
நோக்கம் என்ன?
என்பதை சரியாக அறிந்து கொண்டீர்களா? (ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.எபேசியர் 5-17.)
பிரியமான ஊழியக்காரர்களே, எஜமானுடைய தோட்டத்தில் மாம்சமும் மனசும் விரும்பினவைகளை செய்யாதிருங்கள். தேவன் செய்ய சொல்லாததை தயவு செய்து செய்யாதீர்கள்.அவர் எந்த இடத்தில் ஊழியம் செய்ய சொல்கிறாரோ அந்த இடத்தில் மாத்திரம் ஊழியம் செய்யுங்கள்.என் சித்தத்தின் படி செய்யாத ஊழியக்காரன் பரலோக ராஜியத்தில் பிரவேசிப்பதில்லை என்று இயேசு சொன்னது நினைவிருக்கட்டும்.
தன் எஜமானடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான். லூக்கா 12-47 என்று இயேசு சொன்ன எச்சரிப்பின் வசனங்கள் உங்கள் செவிகளில் ஒலித்து கொண்டே இருக்கட்டும்.
அன்றைக்கு ஆதி அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஆவியினால் நிறைந்து அவர் எங்கு போக சொல்கிறாரோ எதை செய்ய சொல்கிறாரோ எதை பேச சொல்கிறாரோ அதை மாத்திரம் செய்தார்கள்,எனவே அவர்களது ஊழியம் மகிமையாக இருந்தது அவர்கள் ஒருகாலும் இழிவான ஆதாயத்துக்காக ஊழியம் செய்யவில்லை. அவர்கள் முழுக்க முழுக்க தேவன் செய்ய சொன்னதை அதாவது அவரது சித்தத்தை செய்தார்கள் அதனால் ஆயிரக்கணக்கான ஜனங்கள் இரட்சிக்கப்பட்டார்கள்.இன்றைக்கும் உங்களுடைய ஊழியத்தில் பரிசுத்த ஆவியானவர் எதை செய்ய சொல்கிறாரோ அதை மாத்திரம் செய்ய உங்களை ஒப்பு கொடுங்கள்.ஒருகாலும் உங்கள் சுயமகிமைக்காகவோ சுய திருப்திக்காகவோ ஊழியத்தில் எந்த காரியத்தையும் செய்யாதீர்கள்.ஊழியத்தில் நாம் செய்யும் செயல்களின் நோக்கத்தை தேவன் அறிவார்,அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை என்பதை மறந்துவிடாதீர்கள். ஆமென்.
போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறெ அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.
ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால்,
அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும். நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியிலே வெளிப்படுத்தப்படும். அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும். 1 கொரிந்தியர் 3:11-13. ஆமென்