ஊழியக்காரர்களே அரசாங்க ஆணைக்கு எதிராக சுயமாக செயல்படாமல் தேவ ஆலோசனையை நாடுங்கள்.
எங்கும் பிதாவை தொழுது கொள்ளும் காலம் வருகிறது. யோவான் 4-21 என்று இயேசு சொன்னபடி எங்கும் தேவனை ஆராதிக்கலாம். ஆனாலும் சபை கூடுதலை விட்டு விடாதிருங்கள் என்று வேதம் தெளிவாக சொல்கிறது.
இந்தியாவில் வரும் ஞாயிற்று கிழமை ஜனங்கள் கூடக்கூடாது என்று அரசாங்கம் கட்டளையிட்டிருக்கிறது.அவர்கள் சொல்லும் காரணம் தேசங்களை செயலிழக்க வைக்கும் இந்த கொடிய நோய் பரவாமல் தடுக்கப்படும் படிக்கு... என்ற காரணத்தை முன் வைக்கிறார்கள். இது உண்மை தான் இதை மறுப்பதற்கில்லை. ஆனால் இது எந்த அளவுக்கு இந்தநோயை கட்டுபடுத்தும் என்பது நமக்கு போக போக தான் தெரியும் இந்த நோய்க்கு ஆயிரக்கணக்கானவர்கள் மரித்திருக்கிறார்கள், லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கு இன்னும் மருந்து கண்டு பிடிக்கபடவில்லை எல்லா தேசங்களும் இந்த நோயின் தாக்கம் தீரும் வரை ஜனங்களை ஒன்று கூடாதீர்கள் என்று கட்டளையிட்டிருக்கிறார்கள். ஏனென்றால் ஜனங்கள் ஒன்று கூடும் போது இந்த நோய் அநேகருக்கு பரவுகிறது வயதானவர்கள் இந்த நோயின் தாக்கத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் மரித்து விடுகின்றனர்.
எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்கு கீழ்ப்படியக்கடவன், ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை,உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது. ரோமர் 13:1.
மேலான அதிகாரமுள்ள ராஜாவுக்கானாலுஞ்சரி, தீமைசெய்கிறவர்களுக்கு ஆக்கினையும் நன்மைசெய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் உண்டாகும்படி அவனால் அனுப்பப்பட்ட அதிகாரிகளுக்கானாலுஞ்சரி, கீழ்ப்படியுங்கள். 1 பேதுரு 2-14.
அதிகாரங்கள் தேவனால் ஏற்படுத்தப்பட்டது. எனவே அதிகாரத்துக்கு கீழ்படிந்திருக்க வேண்டும் என்று வேதம் சொல்கிறது. நாங்கள் ஞாயிற்று கிழமையில் ஆராதனை நடத்துவோம் என்று அதிகாரத்துக்கு எதிர்த்து நின்று பிரச்சனைகளை பெரிதாக்கி விட வேண்டாம். இணையதளங்களில் அரசாங்கத்துக்கும் ஆளுகிறவர்களுக்கும் எதிராக வீணான வார்த்தைகளை பதிவிட்டு விசுவாசிகளின் கோபத்தை தூண்ட வேண்டாம். (மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்க மாட்டாதே யாக் 1-20) சனிக்கிழமை ராத்திரி கூட நாம் தேவனை அதிக நேரம் ஆராதிக்க முடியும்.அல்லது அவரவர் வீடுகளில் அன்றைய தினம் தேவனை ஆராதிக்கலாம்.
நமக்கு தேவன் மேல் அவ்வளவு வைராக்கியம் இருக்குமென்றால் தேவ வசனத்துக்கு கீழ்படிகிறதிலும் அவருக்கு சாட்சியாய் வாழ்வதிலும் வைராக்கியமாக இருப்போம்.
(அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள், ஆவியிலே அனலாயிருங்கள், கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள். நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள், உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள், ஜெபத்திலே உறுதியாய்த்தரித்திருங்கள். ரோமர் 12:11,12 என்று பவுல் குறிப்பிடுவதை புரிந்து கொண்டு உபத்திரவத்தில் பொறுமையோடு செயல்படுங்கள்.தயவு செய்து வீம்புகளில் மேன்மை பாராட்டாதீர்கள். மிகவும் கவனமாகவும் ஞானமாகவும் நடந்து கொள்ளுங்கள்.
அரசாங்கம் இயேசுவை ஆராதிக்க கூடாது என்று சொல்லவில்லை. ஒரு வேளை இயேசுவை தொழுது கொள்ள கூடாது என்று சொன்னால் தானியேலை போல நாம் எதிர்த்து நின்று தான் ஆக வேண்டும். ஒரு வேளை ஆளுகிறவர்கள் வேண்டுமென்றே தந்திரமாக கிறிஸ்தவர்கள் ஞாயிற்று கிழமையில் தேவனை ஆராதிக்க கூடாது என்ற எண்ணத்தில் இதை செய்திருப்பார்களென்றால் சர்வ வல்ல தேவனுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். அவர்கள் தங்கள் அதிகாரங்களை விட்டு விட்டு ஓடும்படி நம் தேவனால் கிரியை செய்ய முடியும் என்பதை ஒவ்வொரு ஊழியக்காரனும் விசுவாசியும் மறந்துவிட வேண்டாம். நம் ஆண்டவர் நினைத்தால் நமக்கெதிராக இவர்கள் செய்த அநீதிகளின் நிமித்தம் தேசமே அசைக்கப்படும் இவர்களுக்கெதிராக நாம் எதிர்த்து நிற்பது தவறான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும். ஆவிக்குறியவன் எல்லாவற்றையும் நிதானித்து அறிகிறான்.
ஆராதனை நிரந்தரமாக தடை செய்யும்படிக்கு நாமே காரணமாகி விட வேண்டாம்.
நம் தேவன் பரம அதிகாரங்களை உடையவர் அவர் ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தர். அவர் ராஜாக்களை தள்ளி ராஜாக்களை ஏற்படுத்துகிறவர் என்னாலே ராஜாக்கள் ஆளுகை செய்கிறார்கள் என்று சொன்னவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ராஜாக்களுக்கெல்லாம் அதிபதி என்று வெளி 1-5 ல் சொல்லபட்டிருப்பதை நினைவில் கொள்ளுங்கள். தேசத்தை ஆளுகிறவர்கள் அநியாயம் செய்யும் போது அவர்கள் மேல் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய நியாய தீர்ப்பு பயங்கரமாக வரும் ஏனென்றால்? அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை எனவே யாரும் தப்ப முடியாது.
எனவே மாம்சத்தோடும் இரத்தத்தோடும் போராட வேண்டாம். (ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. எபேசியர் 6:12) அந்தகாரத்தின் பிடியில் இருக்கும் லோகாதிபதிகளோடும் அதிகாரத்தில் கிரியை செய்யும் பொல்லாத ஆவிகளோடும் நமக்கு போராட்டம் உண்டு என்பதை மறந்து விட வேண்டாம். ஒரு வேளை நாம் தவறான முடிவெடுத்து அதிகாரங்கள் சபைகளுக்குள் வரும்படி சூழ்நிலையை நாமே ஏற்படுத்த வேண்டாம்.
நாளைக்கு நாட்டு மக்கள் நம்மை பார்த்து இவர்கள் அரசாங்க கட்டளைக்கு கீழ்படியாததால் தான் இந்த நோய் இப்படி பரவினது என்று குற்றம் சுமத்தும் படியான பழிச்சொல் நம் மீது ஏற்படாத படி கவனமாக இந்த சூழ்நிலைலை எதிர் கொள்வோம்.ஞாயிற்று கிழமை 2 மணி நேரம் ஆராதிக்கிற நாம் சனிக்கிழமை அல்லது மற்றொரு நாளில் 4 மணி நேரம் அதாவது இரட்டத்தனையான நேரம் தேவனை ஆராதிக்கலாமே. அடுத்ததாக நம்முடைய பிரச்சனைகளை சர்வ வல்ல தேவனுக்கு தெரியப்படுத்துவோம் அவரை நோக்கி கூப்பிடுவோம் அவர் நமக்காக அறியாததும் எட்டாததுமான பெரிய காரியங்களை செய்வார் என்று விசுவாசிப்போம். ஜெபத்தில் உறுதியாக தரித்திருப்போம். ஆமென்.