top of page

கடைசி கால நிகழ்வுகள் சம்பவிக்கும் போது

ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார். லூக்கா 21-36.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உலகத்தின் கடைசி நாள்களில் என்ன சம்பவிக்கும் என்பதை சொல்லி விட்டு அதன் பின் விழித்திருந்து ஜெபியுங்கள் என்றார்.


பிரியமானவர்களே, கர்த்தராகிய இயேசு சொன்ன கட்டளையின் படி இப்போதாவது தேவ சமூகத்தில் காத்திருந்து ஜெபிப்பதற்கு முதலிடம் கொடுப்போம். கரோனா என்ற கொடிய நோய் வந்த பிறகு ஒவ்வொரு WhatsApp ல் உள்ள ஒவ்வொரு குழுவும் நிரம்பி வழிகிறது. சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட பதிவுகள், ஏராளமான video க்கள், பெரும்பாலும் கிறிஸ்தவர்கள் இந்த அடிமைதனத்தில் சிக்குண்டு கிடக்கிறார்கள். ஊழியக்காரர்களுக்கு கூட கடைசி கால சம்பவங்கள் மற்றும் நிகழ்வுகளை குறித்த பயம் இல்லை. இணைய தளத்தில் பதிவுகள் நிரம்பி வழிவது எதை குறிக்கிறது என்றால் முன்பை விட அநேக நேரம் இணைய தளத்தில் தங்கள் நேரத்தை செலவிடுகிறார்கள். தேவனை விட சூழ்நிலைகளை பெரிதாக பார்க்கிறார்கள். இன்றைய சூழ்நிலைகளில் நாம் விழித்திருந்து ஜெபிக்கும் காலம் ஆனால் இன்னும் நாம் அரணுக்கு திரும்பவில்லை?! பிசாசு இணையதளங்கள் மூலம் நம்முடைய நேரத்தை திருடுகிறான், வீணாக்குகிறான், சூழ்நிலைகளை காட்டி உங்களை சோர்ந்து போக செய்கிறான் (ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.லூக்கா 18-8).

 

இயேசு சொன்ன வார்த்தையை குறித்து எச்சரிக்கையாக  இருங்கள் சூழ்நிலைகளை பார்த்து பயந்து உங்கள் விசுவாசத்தை இழந்துவிடாதீர்கள். தேசங்களில் நடக்கும் பாழ்க்கடிப்புகளை பற்றி நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் அதற்காக முழு நேரத்தையும் இணையதளங்களில் செய்திகளை அறிந்து கொள்வதற்காகவும் அதை உடனே Forward பண்ணுவதற்காகவும்  செலவிட வேண்டாம்.

பின்பு, அவர் சீஷர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக் கண்டு, பேதுருவை நோக்கி: நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா?
மத்தேயு 26-40.

எனவே பிரியமானவர்களே, காலத்தை பிரயோஜனப்படுத்தி கொள்ளுங்கள்.இனி காலம் செல்லாது.ஆயத்தப்படுங்கள். குடும்பத்தை ஆயத்தப்படுத்துங்கள், சபை ஜனங்களை ஆயத்தப்படுத்துங்கள், நினையாத நாளில் மனுஷ குமாரன்  வருவார் என்று சொல்லப்பட்டதை நினைத்து பயத்தோடும் நடுக்கத்தோடும் கறையற்றவர்களாகவும் பிழையற்றவர்களாகவும் அவர் சந்நிதியில் நிற்க பாத்திரவான்களாக காணப்படுங்கள்.

ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன், நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய். வெளிப்படுத்தின விசேஷம் 3-3.


இதில் சொல்லப்பட்ட வார்த்தையை கவனியுங்கள் சத்தியத்தை கைக்கொண்டு மனம் திரும்பு என்கிற  ஆயத்தபடு சத்தியம் நம் செவிகளில் ஒலிக்கட்டும். பாவத்திலிருந்து மனம் திரும்பி வந்த இளைய குமாரன் தகப்பனின் வீட்டிற்குள் பிரவேசித்தான். தன் சகோதரனை குற்றம் சாட்டிய மூத்த குமாரன் தன் தகப்பன் வீட்டில் இருந்த போதிலும் தகப்பன் வருந்தி அழைத்தும் போகவில்லை.இயேசு சொன்ன உவமையின் கடைசி பகுதியை புரிந்து கொண்டீர்களா? நான் பாவி என்று தேவ சமூகத்தில் அறிக்கையிட்ட ஆயக்காரன் நீதிமானாய் திரும்பி போனான். நான் ஆவிக்குறியவன் என்று தன்னை உயர்த்தி கொண்ட பரிசேயன் பாவியாகத்தான் திரும்பி போனான்.

என்னை பின்பற்றுகிறவன் ஜீவ ஒளியை அடைந்திருப்பான் என்று இயேசு சொன்னப்படி ஒளியில்லாமல் அதாவது வெளிச்சம் இல்லாமல் பரலோக ராஜியத்துக்குள்   பிரவேசிக்க முடியாத அந்த ஐந்து புத்தியில்லாத கன்னிகைகளை போல இருக்க வேண்டாம்.


தேவ சமூகத்தில் காத்திருங்கள், விழித்திருங்கள். பரிசுத்த ஆவியானவர் என்ன சொல்கிறார் எதற்காக ஜெபிக்க சொல்கிறார் என்பதற்காக காத்திருங்கள். பரிசுத்த ஆவியானவரே வேதனை உண்டாக்கும் வழிகள் என்னிடம் உண்டா என்று என் இருதயத்தையும் என் சிந்தனைகளையும் ஆராய்ந்து பார்த்து நித்திய வழிகளில் என்னை நடத்தும் என்று தாவீது ஜெபித்தப்படி ஜெபியுங்கள்.

 

அடுத்ததாக, அழியும் ஆத்துமாக்களுக்காக கதறி அழுது ஜெபியுங்கள்.  நீங்கள் நினையாத வேளையில் அவன் வந்து, உங்களைத் தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாதபடிக்கு விழித்திருங்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லாருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள் என்றார். மாற்கு 13-36-37.இதில் நான் உங்களுக்கு சொல்லுகிறதை எல்லாருக்கும் சொல்லுகிறேன் என்று இயேசு சொன்னதை குறித்து எச்சரிக்கையாக  இருங்கள்.

இந்த கடைசி நாள்களில் தேவ சமூகத்தில் அதிக நேரத்தை செலவிடுவோம். உணர்வடைவோம்.உயிர்பிக்கப்படுவோம்.தேவனை அறியும் அறிவால் நிரப்பபடும்படியாக மான்கள் நீரோடை வாஞ்சித்து கதறுவது போல அவர் சமூகத்தை நித்தமும் வாஞ்சிப்போம்.
 
 கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள், அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள். சங்கீதம் 105-4.

இதோ வாசற்படியிலே நின்று தட்டுகிறேன் ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு கதவைத் திறந்தால் அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன் அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். வெளிப்படுத்தின விசேஷம் 3-20.

என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற பாக்கியவான். நீதிமொழிகள் 8-34. ஆமென்

bottom of page