top of page

உன் வஸ்திரம் கறைபடிந்திருக்கிறது…

 

ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள். 2 பேதுரு 3-14.

 

தேவனுடைய நாள் சீக்கரமாய் வருகிறது எனவே கறையற்றவர்களாகவும் பிழையற்றவர்களாகவும் அவர் சந்நிதியில் காணப்படும் படி  ஜாக்கிரதையாயிருங்கள் என்ற வசனத்துக்கு எத்தனை பேர் நடுங்குகிறீர்கள். இன்றைக்கு  ஊழியம் செய்கிறவர்களும் விசுவாசிகளும் தங்கள் பாவங்களினாலும் மீறுதல்களினாலும் கறைபடிந்த வஸ்திரத்தை உடையவர்களாக காணப்படுகிறார்கள். மேலும், தங்கள் மேலுள்ள கறையை அறியாமல் உணராமல் இருக்கிறார்கள்.

சகரியா 3 ம் அதிகாரத்திலே யோசுவா அழுக்கு வஸ்திரம் தரித்தவனாய் தூதனுக்கு முன்பாக நின்று கொண்டிருந்தான். தேவன் தமக்கு முன்பாக நிற்கிறவர்களை நோக்கி: இவன்மேலிருக்கிற அழுக்கு வஸ்திரங்களைக் களைந்துபோடுங்கள் என்றார். பின்பு அவனை நோக்கி: பார் நான் உன் அக்கிரமத்தை உன்னிலிருந்து நீங்கச் செய்து, உனக்குச் சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன் என்றார். சகரியா 3:4.

 

உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப்பிரிவினை உண்டாக்குகிறது, உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது. ஏசாயா 59-2.

 

நீங்கள் மிகுதியாய் ஜெபம் பண்ணினாலும்கேளேன்-உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது என்று கர்த்தர் சொல்கிறார். மேலும், உங்கள் உதடுகள் பொய்யை பேசி உங்கள் நாவுகள் நியாயக்கேட்டை வசனிக்கிறது.(ஏசாயா 59-2) என்று கர்த்தர் எச்சரிக்கிறார்.

 

இன்றைக்கு துன்மார்க்கனுடைய பாவத்தை கண்டித்து உணர்த்தாதபடி பாவத்தை குறித்தும் நீதியை குறித்தும் நியாய தீர்ப்பை குறித்தும் ஜனங்களை கண்டித்து பிரசங்கிக்காத ஊழியக்காரர்கள்  ஜனங்களின் துன்மார்க்கத்தினிமித்தம் இரத்தக் கறை படிந்தவர்களாக நிற்கின்றனர். சத்தியத்தை சத்தியமாக போதித்தால் ஜனங்கள் சபைக்கு வர மாட்டார்கள்  என்று எண்ணிக்கைக்காக ஊழியம் செய்யும் சுய நலமுள்ள  போதகர்களே ஜனங்களின் பாவ வழிகளை எச்சரிக்காவிட்டால் அவன் தன் பாவத்தில் சாகும் போது அவன் இரத்த பழியை உங்களிடம் கேட்பேன் என்று எசேக்கியல் 3 ம் அதிகாரத்திலே தேவன் எச்சரிக்கிறார். இப்பொழுது புரிகிறதா யாக்கோபு 3-1 ல் சொல்லப்பட்ட அதிக ஆக்கினையை அடைவோமென்று உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக.

 

ஊழியக்காரர்களே ஊழியம் உங்களுக்காக அல்ல.தேவனுக்காக.சபை உலகத்துக்காக அல்ல பரலோகத்துக்காக. சபையின் தலை நீங்களல்ல கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே.  ஊழியம் என்பது உங்கள் ராஜியத்தை கட்டி உங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ள அல்ல. தேவனுடைய ராஜியத்தை கட்டுவதற்காக மாத்திரமே.

 

தேவன் பேசினார் என்று சபையில் பேசப்பட்ட பொய்யான அல்லது பெருமையான மற்றும் வீணான வார்த்தைகள் குறித்து நியாய தீர்ப்பின் நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும். மற்றவர்களை அவதூறாய் பேசின வீணான வார்த்தைகள் தான் இருதயத்திலிருந்து புறப்பட்டு வரும்.அதுவே உங்களை தீட்டு படுத்தும் என்று இயேசு சொன்னார். உன் வார்த்தைகளினாலே நீ குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய்.உன் வார்த்தைகளினாலே நீ நீதிமான் என்று தீர்க்கப்படுவாய். நம்மிடம் குறைகளை வைத்து கொண்டு நாம் எத்தனை பேரை நியாயம் தீர்த்தோம். இன்றைக்கு தேவனுக்கு பிரியமில்லாமல் பேசின வார்த்தைகளினாலே கறைபடிந்தவர்களாக காணப்படுகிறோம்.

 

இன்றைக்கு, நம்மை நாமே உயர்த்தும் படி மாம்சமும் மனசும் விரும்பினவைகளை செய்து உலகத்துக்குறியவைகளை சபையில் கொண்டு வந்து உலகத்தால் தங்களை கறைபடுத்தின ஊழியக்காரர்கள் அநேகர். தேவனை நம்புவதை விட்டு விட்டு பணத்துக்காக ஜனங்களை தன் பக்கம் திருப்பும் படி சுய விளம்பரங்களை செய்து தங்களை உயர்த்தி கொள்ளும் ஊழியக்காரர்கள் பலர்,(அதின் ஆசாரியர்கள் கூலிக்கு உபதேசிக்கிறார்கள். அதின் தீர்க்கதரிசிகள் பணத்துக்குக் குறிசொல்கிறார்கள். ஆகிலும் அவர்கள் கர்த்தரைச் சார்ந்துகொண்டு: கர்த்தர் எங்கள் நடுவில் இல்லையோ? தீங்கு எங்கள் மேல் வராது என்கிறார்கள். மீகா 3:11)

 

தீர்க்கதரிசியும் ஆசாரியனும் மாயக்காரராயிருக்கிறார்கள், என் ஆலயத்திலும் அவர்களுடைய பொல்லாப்பைக் கண்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா 23:11

அவர்கள் என்னை அசட்டை பண்ணுகிறவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானம் இருக்குமென்று கர்த்தர் சொன்னாரென்று சொல்லுகிறதுமல்லாமல், தங்கள் இருதயத்தின் கடினத்திலே நடக்கிற யாவரையும் நோக்கி: உங்கள்மேல் பொல்லாப்பு வராதென்றும் சொல்லுகிறார்கள். எரேமியா 23:17

நான் அவர்களோடு பேசாதிருந்தும் அவர்கள் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.எரேமியா 23-21

 

மாம்சத்தால் கறைப்பட்டிருக்கிற வஸ்திரத்தை வெறுத்து தள்ளுங்கள் என்று கர்த்தர் எச்சரிக்கிறார்.ஊழியம் செய்கிறவர்களே உலகத்தால் கறைப்படாதபடிக்கு உங்களை காத்து கொள்வதே மாசில்லாத உண்மையான தேவபக்தி என்று வேதம் சொல்கிறது. உலகத்துக்கும் பரலோகத்துக்கும் ஊழியம் செய்ய முடியாது. தேவனுடைய ஊழியக்காரன் என்று சொல்லி கொண்டு உலக மனிதர்களை போல சபையில் அரசியல் பண்ணி கொண்டு தேவ சித்தத்தையும் தேவ திட்டத்தையும் செய்யாத பொல்லாத காரியத்தை விட்டு உடனடியாக மனம் திரும்புவோம்.

 

தேவனாலே மாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?யோவான் 5:44.

 

இன்றைக்கு தேவனால் வரக்கூடிய மகிமைக்கு ஊழியம் செய்யாமல் மனிதர்கள் உங்களை புகழும் படி ஜனங்களை தேவனை நோக்கி திருப்புவதற்கு பதிலாக உங்களை நோக்கி திருப்புகிறீர்கள்.

இன்றைக்கு அநேக சபைகளில் இயேசு இல்லை.ஊழியக்காரர்கள் தான் எஜமான் ஸ்தானத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.சபைக்கு கிறிஸ்து தலையாயிருக்க வேண்டும்.ஆனால் இங்கு அப்பிரயோஜனமான ஊழியக்காரர்களே தலையாயிருக்கிறார்கள்.ஆலயத்திலும் பெரியவர் வெளியே இருக்கிறார்.

 

பிரியமானவர்களே, உங்கள் வஸ்திரம் கறைப்பட்டிருக்கிறது. பரிசுத்தமான கல்யாண வஸ்திரம் இல்லாமல் விருந்து சாலைக்குள்ளே நீங்கள் பிரவேசிக்க முடியாது. தேவன் உங்களுக்கு கடைசி தருணத்தை தருகிறார். நீ உடுத்திக் கொள்வதற்கு வெண் வஸ்திரங்களையும் வாங்கி கொள் ஏன்கிறார்,(வெளி3-18) பிரியமானவர்களே, நீங்கள் தான் உங்கள் கறை படிந்த வஸ்திரத்துக்கு பதில் வெண் வஸ்திரங்களை வாங்க வேண்டும். அதற்காக கிரயம் செலுத்துங்கள். உபவாசத்தாலும் ஜெபத்தினாலும் அவர் சமூகத்தில் கதறி அழுது பெற்று கொள்ளுங்கள். தேவன் எவ்வளவோ தடவை உங்களை எச்சரித்தும் நீங்கள் உங்களை நிதானித்து அறியவில்லை. தேவனிடம் திரும்ப வில்லை. அன்றைக்கு அந்த கெட்ட குமாரன் மனம் திரும்பி பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு விரோதமாகவும் பாவம் செய்தேன். இனி மேல் உம்முடைய குமாரன் என்று சொல்வதற்கு பாத்திரனல்ல என்று சொன்ன போது தகப்பன் தன் வேலைக்காரர்களை நோக்கி உயர்ந்த வஸ்திரங்களை இவனுக்கு உடுத்துங்கள் என்றார். உயர்ந்த வஸ்திரம் என்பது பரிசுத்தமான வஸ்திரத்தை குறிக்கிறது. இந்த உபத்திரவங்களுக்காக திறப்பில் நின்று ஜெபிப்பதற்கு முன்பாக ஊழியக்காரர்களாகிய நாம் முதலாவது நம்மை சுய பரிசோதனை செய்து கொள்வோம்.

 

எனவே கறையற்றவர்களாகவும் பிழையற்றவர்களாகவும் அவர் சந்நிதியில் காணப்படும்படி செய்த தவறுகளுக்கு மனம் திரும்பி தேவனிடம் வெண் வஸ்திரங்களை வாங்கி கொள்ள உங்களை ஒப்பு கொடுங்கள். இனி காலம் செல்லாது. எனவே காலத்தை பிரயோஜனப்படுத்தி கொள்ளுங்கள். ஆமென்.

bottom of page