
தன்னை தானே உயர்த்தும் ஆவி
எப்பொழுதெல்லாம் உங்களை உயர்த்தி கொள்ளும் படியான ஒரு எண்ணம் உங்களை ஆளுகை செய்ய முற்படும் போது அதற்கு உடனே விலகி ஓடி விடுங்கள்.சாத்தான்,நான் வானத்துக்கு ஏறுவேன்.தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன் என்றான் (பார்க்க ஏசாயா14-13)
ஆனால், இயேசுவோ நான் தேவனுக்கு சமமாயிருக்கும் ஸ்தானத்திலிருந்து மனுஷ ரூபமெடுத்து சிலுவையின் மரண பரியந்தம் கீழ்படிந்து தன்னை தாழ்த்தினார்.மேலும் அடிமையை போல சீஷர்களின் கால்களை கழுவுவேன் என்றார். இன்றைக்கு தன்னை தானே உயர்த்தி கொள்ளும் ஆவி அநேக ஊழியக்காரர்களிடமும் விசுவாசிகளிடமும் இருக்கிறது.
இத்தகய ஆவியை உடைய ஊழியக்காரர்கள் தங்கள் ஊழியத்தையும் விசுவாசிகள் கூட தங்கள் ஜீவனத்தின் பெருமையையும் இணையதளங்களில் பதிவிடுகிறார்கள். இப்படி தங்களை பெரியவனாக்க தங்களை பற்றி தாரை ஊதும் படியான ஆவியை உடையவர்கள் எதனால் இதை செய்கிறார்கள் என்பதை பகுத்தறிய கற்று கொள்ளுங்கள்.
இயேசு கிறிஸ்து; ஒருவன் எனக்கு ஊழியம் செய்கிறவனானால் என்னை பின்பற்ற கடவன்(யோவான் 12-26) என்றார். இப்பொழுது உங்களை நிதானித்து அறியுங்கள். உங்களை எந்த ஆவி ஆளுகை செய்கிறது என்று!. ஏனென்றால், கிறிஸ்துவின் ஆவி இல்லாதவன் அவருடையவனில்லை என்று ரோமர் 8-9 ல் பவுல் எழுதுகிறார்.
எல்லா மனுஷரும் உங்களை குறித்து புகழ்ச்சியாய் பேசும் போது உங்களுக்கு ஐயோ என்று இயேசு எச்சரித்தார். இந்த [ ஐயோ] வை பெற்று கொள்ளும்படியாக அநேகர் தங்களை தாங்களே உயர்த்தி கொள்கிறார்கள். இயேசுவை பிசாசு சோதிக்கும் போது கூட அவரை உயர்த்தும்படியாக பெருமையான காரியங்களை செய்ய தூண்டினான் இயேசு அதற்கு இணங்கவில்லை அவர் முழுக்க முழுக்க பிதாவையே மகிமைபடுத்தினார், அவரது சித்தத்தையே செய்தார்.
சந்திப்பின் நாளிலே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை பார்த்து உண்மையும் உத்தமுமான ஊழியக்காரனே என்று சொல்ல வேண்டும் என்ற எண்ணம் ஊழியம் செய்கிற ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.
மத்தேயு 25-23 ல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உண்மையும் உத்தமுமான ஊழியக்காரனே உன் எஜமானுடைய சந்தோஷத்தில் பிரவேசி என்று சொல்வதை பார்க்கலாம். தன்னை தானே புகழுகிறவன் உத்தமனல்ல கர்த்தராலே புகழப்படுகிறவனே உத்தமன் என்று 2 கொரி 10-18 ல் பவுல் எழுதுகிறார். மேலும், மேன்மை பாராட்டுகிறவன் கர்த்தரை குறித்தே மேன்மை பாராட்ட கடவன் என்று பவுல் குறிப்பிடுகிறார். தன்னை தானே புகழுகிறவன் உத்தமனல்ல என்ற வசனத்துக்கு நம்மால் ஏன் கீழ்படியமுடியவில்லை.
பிரபலமாயிருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்ய விரும்ப மாட்டான். இன்றைக்கு ஊழியத்தில் சுய மகிமையை தேடுகிற காரியங்கள் ஒவ்வொன்றையும் தேவன் பார்த்து கொண்டிருக்கிறார். மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருக்கிறபடியால் மனுஷர் நம்மை உயர்த்தும் படி நாம் செய்த ஒவ்வொரு காரியத்தையும் அவர் அறிவார் சந்திப்பின் நாளிலே கர்த்தாவே கர்த்தாவே நாங்கள் உமது நாமத்தினாலே தானே இவைகளெல்லாம் செய்தோம் என்று சொல்லும் போது அக்கிரம சிந்தை காரர்களே என்னை விட்டு அகன்று போங்கள் என்று சொல்லும் போது எவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்பதை சிந்தித்து பாருங்கள். வாழ் நாள் முழுவதும் கிறிஸ்துவின் பெயரில் ஊழியம் செய்த போதிலும் பரலோகம் நம்மை புறக்கணிக்கும் போது எவ்வளவு வேதனையாக இருக்கும். அன்றைக்கு பிசாசும் வீண்பெருமையினாலே தன்னை உயர்த்த விரும்பினதால் தன் ஸ்தானத்தை இழந்து கீழே தள்ளப்பட்டான்.
இதிலிருந்து நாம் பாடம் கற்று கொள்ளவில்லையென்றால் நம்மை போல முட்டாள்கள் யாரும் இருக்க முடியாது.
ஒன்றையும் வாதினாலாவது, வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.பிலிப்பியர் 2-3
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன் என் நுகத்தை உங்கள் மேல் ஏற்று கொள்ளுங்கள் என்றார். இன்றைக்கு கிறிஸ்து விரும்பும் மனத்தாழ்மை நம்மிடம் இருக்கிறதா என்பதை நாம் ஆராய்ந்து பார்ப்போம். ஊழியத்தில் ஒவ்வொரு செயல்களிலும் கிறிஸ்துவை மகிமைபடுத்தும் படிக்கு செய்தோமா அல்லது மனித புகழ்சியை நாடி நம்மை உயர்த்துவதற்காக செய்தோமா என்பதை சுய பரிசோதனை செய்து கொள்வோம்.
தேவனுக்கு கொடுக்க வேண்டிய கனத்தையும் மகிமையையும் நாம் திருடியிருந்தால் நாம் மன்னிப்பு கேட்போம். மனம் திரும்புவோம். அவர் பெருமையுள்ளவனுக்கு எதிர்த்து நிற்கிறார் என்ற வசனத்தை குறித்து மிகுந்த எச்சரிக்கையோடு செயல்படுவோம். இருதயத்தில் பெருமையை வைத்து கொண்டு மனிதர்கள் முன்பாக தாழ்மையானவனாக காட்டி கொள்ளும் மாயமாலமான மனத்தாழ்மைக்கு விலகி ஓடுவோம்.
அடுத்ததாக, தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எச்சரித்ததை குறித்து கவனமாக இருங்கள். எனக்கு தான் எல்லாம் தெரியும் நாங்கள் தான் சத்தியத்தின் நடக்கிறோம் என்று உங்களை உயர்த்தி கொள்ளாதீர்கள்……. நீங்கள் சத்தியத்தின் படி நடத்தபடுவதற்கு காரணம் பரிசுத்த ஆவியானவர் தானே?! கிருபையினாலே விசுவாசத்தை கொண்டு இரட்சிக்கபட்டீர்களே! இது முழுக்க முழுக்க தேவனுடைய ஈவு இதில் எதற்காக ஆவிக்குறிய பெருமை.
அன்றைக்கு இயேசுவோடு இருந்த சீஷர்களுக்கு கூட பெரியவனாகும் ஆவி இருந்தது தங்களுக்குள்ளே யார் பெரியவன் என்பதை குறித்து அவர்களுக்குளே வாக்குவாதம் உண்டானது.
இயேசு அவர்களை நோக்கி உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது, உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்.என்றார். (மத்தேயு 20-26)
அடுத்து, பரலோக ராஜியத்தையும் சீஷர்கள் விட்டு வைக்கவில்லை அங்கும் யார் பெரியவனாயிருப்பான் என்று கேட்க தொடங்கினார்கள். அதற்கு இயேசு இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான் என்றார். (மத்தேயு 18-4)
தன்னை தானே தாழ்த்துகிறவன் மனித புகழ்ச்சிக்காக எதையும் செய்ய மாட்டான்.
இப்பொழுது நீங்கள் இதுவரை செய்ததை நிதானித்து பாருங்கள்!!! நீங்கள் தேவனுக்காக செய்த காரியங்களை வீண் புகழ்ச்சிக்காக உலகமே அறிந்து கொள்ளும் நோக்கத்தில் செய்தீர்களா? தேவனை ஆராதிக்கும் படி உருவாக்கப்பட்ட லூசிபர் தன்னை உயர்த்தி கொண்டு இறுதியில் பிசாசாய் முடிவடைந்து பாதாளத்துக்கு சென்றான். மனுகுலத்தை காக்கும்படிக்கு பரலோகத்திலிருந்து வந்த இயேசு கிறிஸ்து ஒரு அடிமையை போல சீஷர்களில் கால்களை கழுவி சிலுவையின் மரணபரியந்தம் தன்னை தாழ்த்தி பிதாவின் சிங்காசனத்தில் அவரோடே கூட உட்கார்ந்தார். இப்பொழுது தீர்மானம் எடுங்கள் நீங்கள் யாருடைய அடிச்சுவடை பின்பற்ற விரும்புகிறீர்கள்? யாராய் மாற விரும்புகீறீர்கள்? ஒருவன் எனக்கு ஊழியம் செய்தால் நான் இருக்கும் இடத்தில் அவனும் இருப்பான் என்று இயேசு சொன்னார்.
நீங்கள் கிறிஸ்துவுடனே எழுந்ததுண்டானால் கிறிஸ்து தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் மேலானவைகளை தேடுங்கள் பூமியிலுள்ளவைகளை அல்ல மேலானவைகளை நாடுங்கள் என்று கொலோசேயர் 3-1-3 ல் பவுல் எழுதுகிறார். கிறிஸ்து இன்றைக்கு பரலோகத்தில் இருக்கிறார். இன்றைக்கு நாம் நாடுவது உலகத்தின் மகிமையா?பரலோகத்தின் மகிமையா?
இன்றைக்கு யாருடைய மகிமையை தேடுகிறோம்? தேவனுடைய மகிமையையா?! அல்லது நம்முடைய ஊழியத்தை குறித்த சுய விளம்பரத்தினால் கிடைத்த மனிதர்கள் முலம் வரும் மகிமையையா? (தேவனாலேமாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்? யோவான் 5-44)
உலகத்தார்கள் பூமியில் உள்ளவைகளையே தேடுகிறார்கள் அவர்கள் தங்களை சதாகாலமும் பெரியவர்களாக்கவே விருப்பம் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் அவர்களிடம் இருப்பது உலகத்திலிருப்பவனுடைய பெருமையின் ஆவி.ஆனால் உலகத்திலிருப்பவனை விட பெரியவரின் ஆவியை உடையவன் கிறிஸ்து தனக்கு வைத்திருக்கும் மேலானவையான நித்திய ஜீவனை நோக்கி பார்ப்பான். உலகத்தில் தன்னை உயர்த்தும்படியான ஆசை இச்சைகளுக்கு விலகி ஓடுவான் ஏனென்றால் அவனுக்கு நன்றாகவே தெரியும்...
உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம் தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான் என்று சந்திப்பின் நாளிலே அவனை பார்த்து ஆண்டவர் சொல்வார்.. உண்மையும் உத்தமுமான ஊழியக்காரனே என் மகிமைக்காக மாத்திரம் ஊழியம் செய்தாய்...என் சந்தோஷத்துக்குள் பிரவேசி என்பார். ஆமென்.