உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக

 

 

சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன், உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக. யோவான் 14:27.

 

உலகம் கொடுத்த சமாதானத்தை பெற்றவர்கள்  இன்றைக்கு சோர்ந்து போனார்கள்.  தேசங்களில் நடக்கும் கொடிய நோயின் விளைவுகளை பார்த்து பயந்து கலங்கி நிற்கின்றார்கள். ஆனால் இன்றைக்கு உலகத்தில் காரிருள் சூழ்ந்து கொண்டிருக்கிறது அநேகர் சூழ்நிலைகளை பார்த்து சோர்ந்து போய் கொண்டிருக்கின்றார்கள் இயேசு கிறிஸ்துவோ என்னுடைய சமாதானத்தை வைத்து விட்டு போகிறேன் என்று சொன்னார் ஆனால் அதற்கு  அடுத்ததாக உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக என்றார். ஏனென்றால் பூமியின் மேல் உபத்திரவம் வருகிறது என்பதை அன்றைக்கே குறிப்பிட்டு பேசினார்.உலகத்தில் உபத்திரவம் உண்டு திடன் கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.

 

ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.மத்தேயு 24:7 என்று சொன்ன இயேசு கிறிஸ்து இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம் என்று சொன்ன வார்த்தையை கவனித்தீர்களா?

கடந்த நாள்களில் பல தேசங்களில் அநேக பூமியதிர்சிகளை நாம் பார்த்து விட்டோம். சுனாமியினாலே அநேகர் உயிரிழந்தார்கள். உலகம் முழுவதும் அநேக தேசங்களில் இயற்கையின் கோபத்தால் அநேகர் மரித்து போனார்கள். கேரளாவில் மழையின் வெள்ளத்தால் அநேகர் உயிரிழந்தார்கள், அநேகர் வீடுகளை இழந்தார்கள், சென்னையில் மழையினாலே சென்னை நகரமே மூழ்கி போனது. இதுவெல்லாம் தேவன் நமக்கு கொடுத்த எச்சரிக்கை. ஆனாலும் நாம் உணர்வடையவில்லை. பொல்லாத வழிகளை விட்டு மனம் திரும்பவில்லை. இயேசு கிறிஸ்து எச்சரித்த ஒரு காரியம் என்னவெனில்,  ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போகுமட்டும் உணராதிருந்தார்கள், அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.  (மத்தேயு 24:39).

 

இவ்வளவு சம்பவங்கள் நடந்த பின்பும் நாம் உணர்வடையவில்லை!, மனம் திரும்பவில்லை!,  தேவனை முழு மனதோடு தேடவில்லை!, அவரை விட்டு விட்டு உலக பொருள்களை நேசிக்க ஆரம்பித்தோம்!  உலகத்தின் மேல் அன்பு கூர்ந்தோம். தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களை செய்தோம்! ஆனால் இப்பொழுது இந்த கொள்ளை நோய் உலகத்தையே நிர்மூலமாக்கி விட்டது.

 

உலகத்தை நம்பினவர்கள் பயந்து போய் நிற்கின்றனர்.(அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள். மத்தேயு 24:33) என்று வசனம் நம்மை எச்சரிக்கிறது.

 

இன்றைக்கு கரோனா என்ற கொள்ளை நோய் உலகத்தையே தலைகீழாய் கவிழ்த்து போட்டது. தேசங்கள் நம்பியிருந்த பொருளாதாரம் சரிந்து விட்டது.

பூமியின் மேல் வரும் ஆபத்துகளுக்கு பயந்து எதிர்பார்க்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்து போகும் என்று இயேசு சொன்னார்.

 

மனுஷகுமாரன் வரும் போது பூமியில் விசுவாசத்தை காண்பாரோ என்று இயேசு எச்சரித்தார். இந்த பயங்கரமான சூழ்நிலையில் சோர்ந்து போகாதபடிக்கும் தேவன் மேல் உள்ள விசுவாசத்தை இழந்து போகாதபடிக்கு உங்கள் இருதயத்தை பாதுகாத்து கொள்ளுங்கள். ஏனென்றால் விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமாயிருப்பது கூடாத காரியம்.

 

எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும். நீதிமொழிகள் 4:23.

 

தேசங்களில் நடக்கும் காரியங்களை பார்த்து உங்கள் இருதயம் பயபடாமலும் கலங்காமலும் இருந்து உங்கள் விசுவாசத்தை காத்து கொள்ள வேண்டுமென்றால் உங்கள் எல்லா காவலோடும் உங்கள் இருதயத்தை பாதுகாத்து கொள்ளுங்கள்.

 

ஒரு அரண்மனையை பாதுகாக்கிறவர்கள் அதன் வாசல்களை தான் பாதுகாப்பார்கள். ஏனென்றால் வாசல் வழியாக யாரும் உள்ளே நுழைந்து விட கூடாது. அதே மாதிரி ஒரு மனிதனுடைய இருதயத்தின் வாசல் அவனுடைய வாய்,கண்,செவி மற்றும் சிந்தை.

கர்த்தாவே என் வாய்க்கு காவல் வையும், என் உதடுகளின் வாசலை காத்து கொள்ளும் என்று சங்கீதம் 141-3 ல் தாவீது சொல்கிறான்.வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டு வரும், அவைககளே மனுஷனை தீட்டுபடுத்தும் என்று இயேசு சொன்னார்.

அவர்கள் உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாயிருக்கிறது.(சங் 59-12)

அடுத்ததாக கண் சரீரத்தின் விளக்கு,  கண் தெளிவாயிருந்தால் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும். கண் கெட்டதாயிருந்தால் சரீரம் முழுவதும் இருளாக இருக்கும்.

அடுத்ததாக, செவியினாலே ஆவியானவர் சொல்லும் ஆலோசனை களை கேட்பதில்லை. மாறாக மனுஷன் சொல்வதற்கும்  பிசாசு சொல்வதற்கும் செவி கொடுக்கிறோம். உலக ஆசை இச்சைகளை பார்க்கிறோம், கேட்கிறோம். அவைகளை உள் வாங்கி கொள்கிறோம். நம்முடைய இருதயத்தை உலக ஆசை இச்சைகளினால் நிரப்புகிறோம்.

 

இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது..

உபாகமம் 6:6 என்று தேவன் கட்டளையிட்டார் ஆனால் நம் இருதயமோ தேவனுக்கு பகையான உலக சிநேகத்தால் ஆளுகை செய்யப்பட்டு உலகத்தை நேசிக்கிறது. ஆகவே உலகத்தில் நடக்கும் இந்த பாழ்க்கடிப்புகளினால் இருதயம் கலங்கி போகிறது.

இன்றைக்கு உலகத்தை சிநேகித்து உலக ஆசை இச்சைகளினால் இருதயத்தை நிரப்பி கொள்ளுகிறதினால் அநேகருடைய இருதயம் இருளடைந்திருக்கிறது. இப்படி பட்ட இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகள் புறப்பட்டு வரும். அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்தரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. ரோமர் 1:21.

 

எப்படியெனில், இருதயம் மகா கேடுள்ளதாக அதாவது கெட்டு போகும்.  கெட்ட மரத்தில் நல்ல கனியை பறிக்க முடியாது.இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.

உலக ஆசை இச்சைகளால் நிறைந்திருக்கிற இவர்களது இருதயம் சூழ்நிலைகளை  பார்த்து சோர்ந்து போகும்.

உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள் மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். லூக்கா 21:34 என்று இயேசு சொன்னார்.

 

ஆனால் தங்கள் இருதயத்தை  பரிசுத்தமாய் காத்து கொள்கிறவனின் உள்ளத்திலிருந்து ஜீவ தண்ணீருள்ள நதிகள் ஓடும். அவன் அழிந்து போகிற பூமியை பார்க்க மாட்டான் பரலோகத்திலுள்ள மேலானவைகளை தேடுவான். எந்த சூழ்நிலையிலும் இயேசு கிறிஸ்து கொடுத்த சமாதானத்தினால் நிரம்பியிருப்பான்.

தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது. ரோமர் 14-17.

 

இப்பொழுது புரிந்து கொண்டீர்களா பரிசுத்த ஆவியினால் உண்டாகும் சமாதானத்தையும்  சந்தோஷத்தையும் எந்த சூழ்நிலையும் உங்களிடமிருந்து பறித்து கொள்ள முடியாது. அன்றைக்கு உபத்திரவத்திலேயும் ஸ்தேவான் பரிசுத்தாவியினால் நிறைந்தவனாய் வானத்தை அண்ணாந்து பார்த்து பிதாவையும் அவர் வலது பாரிசத்தில் இயேசு கிறிஸ்துவையும் தரிசித்தான் அவன் ஒருபோதும் கலக்கமடையவில்லை பயப்படவில்லை ஏனென்றால் அவர் தேவ பிரசனத்தினால் நிறைந்தவனாய் தேவ சமாதானத்தை உடையவனாக இருந்தான்.

 

நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.  பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.

ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. கொலோசெயர் 3:1-3.

 

எனவே இந்த கடைசி நாள்களில் தேசங்களின் நடக்கும் பயங்கரங்களினால் உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருக்கும்படிக்கு  எல்லா காவலோடும் உங்கள் இருதயத்தை காத்து கொள்ளுங்கள்.

 

ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள். 2 பேதுரு 3 - ஆமென்.