top of page

ஆண்களுடைய உடையை பெண்கள் அணியக் கூடாதா?

 

உபாகமம் 22 ம் அதிகாரம் 5 ம் வசனத்தில் பெண் ஆண்களுடைய உடையையும் ஆண் பெண்களுடைய உடையையும் அணியக் கூடாது என்று வேதம் சொல்கிறது.முதலாவது இந்த வசனம் எதற்காக யாருக்காக எப்படி பட்ட சூழ்நிலையில் சொல்லப்பட்டது என்பதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைக்கு பெண்கள் அணியும் சில உடைகளுக்கு  எதிராக சில ஊழியக்காரர்கள் இந்த வசனத்தை பயன்படுத்துகின்றனர்.

 

குறிப்பாக குமரி மாவட்டத்தை சேர்ந்த அநேக சபைகளில் வெளிப்புறமான பாரம்பரிய காரியங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். மீசை வைத்தால் ஊழியக்காரனாக அங்கிகரிக்க மாட்டார்கள், வெள்ளை உடை அணியவில்லையென்றால் பிரசங்கம் பண்ண அனுமதிக்க மாட்டார்கள், கையில் மோதிரம் போட்டிருந்தால் கழற்ற சொல்லி விடுவார்கள். இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் இல்லாத பாரம்பரியங்களை சபையில் கடைபிடிக்க சொல்கிறார்கள்.

மேல் சொல்லப்பட்ட உடை விஷயத்தில்  வைராக்கியமாக இருக்கும் ஊழியக்காரர்கள் அதே அதிகாரத்தின் 12ம் வசனத்தில் நீ தரித்து கொண்டிருக்கிற மேல் சட்டையின் நான்கு ஓரங்களிலும் தொங்கல்களை  உண்டு பண்ணுவாயாக என்ற வசனத்தின் படி   தொங்கல்களை உண்டு பண்ணி தாங்களும் கடைப்பிடித்து தங்கள் சபை ஜனங்களையும் கடைபிடிக்க சொல்வார்களா?

 

இன்றைக்கு பல தேசங்களில் வேறுபட்ட பழக்க வழக்கங்கள் கலாச்சாரங்கள் மற்றும் சூழ்நிலைகள் இருக்கிறது.குளிர் தேசங்களில் மைனஸ் வெப்ப நிலை இருக்கும் பகுதிகளில் புடவை அணிய முடியாது.அங்கு போகும் போது குளிர் தாங்கும் படிக்கு ஆண்களை போல தான் உடை அணிகிறார்கள். சில  தேசங்களில் ஆண்களின் உடையும் பெண்களின் உடையும் ஒரே மாதிரியாக இருக்கிறது.சில தேசங்களில் பெண்களின் உடை இன்னொரு தேசத்தில் ஆண்களுடைய உடையாக இருக்கிறது.இப்படி தேசத்துக்கு தேசம் மாறுபட்ட  கலாச்சாரம் இருக்கிறது.உதாரணமாக கேரளாவில் சில பகுதிகளில் பெண்கள் லுங்கி அணிந்து பிளவுஸ் அணிந்திருப்பார்கள். அங்கு போகும் நீங்கள் சுவிசேஷம் அறிவிப்பீர்களா அல்லது உடையை மாற்ற சொல்வீர்களா?

 

இயேசு கிறிஸ்து நம்முடைய கலாச்சாரத்தை மாற்ற வரவில்லை.நம்மை மாற்றும் படியாக வந்தார்.நாம் மனம் திரும்பி இரட்சிக்கப்படும் படியாக வந்தார். கனி கொடுங்கள் அப்பொழுது பிதா மகிமைபடுவார் என்றார். அவரை போல அவரது சாயலாக மாறும் படியாக நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்று பவுல் சொன்னார் அதற்காக அவர் அணிந்தது போல உடை அணிய வேண்டுமா? ஆனால் சில ஊழியக்காரர்கள் உங்களின் வெளிப்புறத்தையே மாற்றுவதற்கு படாத பாடு படுகின்றனர்.

என்றைகாவது இந்த பிரசங்கிகள் உங்களை பார்த்து இயேசுவை போல உலகத்துக்கு ஒளியாக இருக்கிறாயா?கனி கொடுக்கிறாயா? தீமையை சகிக்கிறாயா? பரிசுத்தமாக தேவனுக்கு  முன்பாக சாட்சியாக வாழ்கிறாயா என்று உங்களை பார்த்து கேட்டிருக்கிறார்களா?.

தேவன் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தோல் உடையை கொடுத்தார். எனவே முதன் முறையாக தேவன் மனிதனுக்கு கொடுத்த தோல் உடையை எல்லாரும் அணிய வேண்டும் என்று சொன்னாலும் சொல்வார்கள்.

 

ஆலயத்துக்கு போகும் போது நம் நடையை காத்து கொள்ள வேண்டும். பரிசுத்த அலங்காரத்தோடே அதாவது உள்ளேயும் வெளியேயும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.நம்முடைய உடை பிறருக்கு இடறலை உண்டு பண்ண கூடாது. தேவன் நம்மை பார்த்து கொண்டிருக்கிறார் என்ற உணர்வு நமக்கு இருக்குமானால் நாம் தகுதியான உடையை அணிவோம்.

ஆலயத்திலும் சரி பொது இடத்திலும் சரி ஒரு பெண் உடை விஷயத்தில் தேவனுக்கு பிரியமானவளாய் இருக்க வேண்டும்.

 

ஒரு முறை ஒரு போதகர்,தன் சபையில் ஒரு பெண்,சுடிதார் அணிந்து கொண்டு  வந்ததற்காக அந்த பெண்ணை எல்லாருடைய முன்னிலையிலும் திட்டினார்.

புடவை அணிந்து வர வேண்டும் என்று கட்டளையிட்டார்.சுடிதார் அணிந்து விட்டு வந்தால் communion தர மாட்டேன் என்றார்.ஒரு ஊழியக்காரர் சுடிதார் ஆபாசமான ஆன உடை என்று சொல்கிறார்.அதாவது புடவையை விட சுடிதார் உடலின் எல்லா பகுதியையும் மறைக்கும் உடையாகும்.பிரச்சனை என்னவென்றால் நம்முடைய பார்வை சரியில்லை.நம்முடைய கண் தெளிவாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும்.

 

ஒரு முறை ஒரு சபையில் பிரசங்கம் பண்ண வந்த ஒரு போதகர் பிரசங்கத்தின் நடுவே Pant shirt அணிந்திருந்த ஒரு பெண்ணை திட்ட ஆரம்பித்தார்.எல்லாருக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது.

ஆராதனை முடிந்தவுடன் பார்த்தால் அந்த பெண் 5 ம் வகுப்பு படிக்கும் சின்ன பெண்.உடனே அந்த போதகர் தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டார்.

 

உங்க பிள்ளைகளை school க்கு அனுப்பினால் இரட்டை சடை பின்னி school க்கு வர சொல்வார்கள்.மயிரை பின்னுதல்... என்ற உபதேசத்தின் படி அது தவறு தானே.

School uniform சுடிதார் தானே.உங்கள் எண்ணங்களின் படி சுடிதார் தகுதியான  உடை அல்லவே.அநேக Engineering கல்லூரிகளில் ஆண்களை போல பெண்களும் Pant shirt போடும்படியாக சீருடை வைத்திருக்கிறார்கள்.ஆண்களுடைய உடையை எப்படி பெண்கள் அணியலாம்? Science படித்தால் மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று வேதாகமத்துக்கு புறம்பாக போதிப்பார்கள்.

வேலைக்கு அனுப்பினால் பெரும்பாலான வேலைகளில் ஆண்களின் உடை மாதிரி பெண்கள் உடை அணிய வேண்டிய சூழ்நிலை.

ஆண்களின் உடையை பெண்கள் அணிய கூடாது என்பது உங்கள் உபதேசத்தின் படி தவறான காரியம்.எனவே உங்க பிள்ளைகளை வீட்டிலே வைத்து கொள்ளுங்கள்.அவர்கள் சமயலறையில் இருப்பது தான் உங்கள் கொள்கைப்படி சரியானது.

 

சிலபோதகர்கள் தங்கள் சபைகளில் மருந்து எடுக்க கூடாது மேலும் அது அடிப்படை விசுவாசத்துக்கு எதிரானது என்று சபையில் போதிக்கிறார்கள். ஆனால் அவர்கள் பிள்ளைகள் எந்த மருத்துவ சம்பந்தமான படிப்பும் படிக்க கூடாது என்று சொல்ல மாட்டார்கள்.மருத்துவ அறிவியல் பற்றிய ஞானத்தை மனிதனுக்கு கொடுத்தது தேவன் தானே. இன்றைய நாள்களில் இவர்களது கொள்கை விபரீதத்தினால் பல குடும்பங்களில் வீம்புக்காக மருந்து எடுக்காமல் இருந்த பலர் மரணமடைந்திருக்கிறார்கள்.இது தேவ நாமத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருக்கிறது.மனுஷரால் கூடாதது தேவனால் கூடும் என்ற விசுவாச வார்த்தையின் படி மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்களை, அவர்களுக்காக ஜெபித்த போது தேவன் சுகமாக்கியிருக்கிறார்.

 

இன்றைக்கு ஜனங்களை வெளிப்புறமான பாரம்பரியத்துக்குள்ளாகவும் தங்கள் சபை சட்ட திட்டத்துக்குள்ளாகவும் நடத்தும் ஊழியக்காரர்கள் வேதாகமத்தில் சில வசனங்கள் எதற்காக எந்த காலக்கட்டத்தில் எந்த சூழ்நிலையில் யாருக்காக சொல்லப்பட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.லூக்கா 24-45 ன் படி வேத வாக்கியங்களை அறிந்து கொள்ளும்படி அவர்கள் மனதை தேவன் திறப்பாராக.

அந்த நாள்களில் அஸ்தார்த் என்ற கடவுளை வணங்குகிற ஆண்களும் பெண்களும் தங்கள் உடைகளை ஒருவருக்கொருவர் மாற்றி அணிந்து கொண்டு அந்த தெய்வத்தை ஆராதித்தார்கள்.

அந்த நாள்களில் இச்சையின் நிமித்தமாக அருவருப்பை நடப்பிக்கும் படி ஆண்களும் பெண்களும் பிறர் அணிந்த வியர்வை கலந்த உடையை அணிந்து கொண்டார்கள்.தாவீதும் யோனத்தானும் தங்கள் அணிந்திருந்த வஸ்திரங்களை  ஒருவருக்கொருவர் மாற்றி அணிந்து கொண்டு உடன்படிக்கை பண்ணி கொண்டார்கள் இதற்கு ஆவிக்குறிய அர்த்தம் உண்டு.

மன நோயால் பாதிக்கப்பட்ட சில ஆண்கள், பெண்கள் அணிந்த உள் ஆடையை திருடி அணிந்து கொள்வார்கள் அதற்கு  Transvetism. என்று பெயர். அந்த நாள்களில் கானானிய பெண்கள் ஆண்கள் அணிந்த உடைகளை இச்சையின் நிமித்தம் அணிந்து கொண்டார்கள்.

சீர்திருத்த காலத்துக்கு முன்பாக இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் கலாச்சாரத்தின்படியும் ஒழுங்கின்படியும் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் தேவன் பல ஆலோசனைகளையும் கட்டளைகளையும் கொடுத்திருந்தார். அந்த நாள்களில் கொடுக்கப்பட்ட பல ஆலோசனைகள் யூத பாரம்பரியத்தையும் யூத கலாச்சாரத்தையும் சார்ந்து கொடுக்கப்பட்டது. பிற இனத்தவர்களின் அருவருப்பானகாரியங்களை இஸ்ரவேல் ஜனங்களை கைக்கொள்ள கூடாது என்ற நோக்கத்துக்காகவும் தேவன் அவர்களுக்கு  ஆலோசனைகளை கொடுத்தார்.

 

இன்றைய நாள்களில் சில அதிக பிரசங்கிகள் இந்த ஆலோசனைகளை பிடித்து கொண்டு அது எந்த நோக்கத்துக்காக சொல்லப்பட்டது   எதற்காக சொல்லப்பட்டது என்பதை அறியாமல் ஜனங்களை நிர்பந்தம் பண்ணி குழப்பி விடுகிறார்கள்.

 

இன்றைக்கு செவிலியர்கள்,விமானத்தில் பணிபுரிகிறவர்கள் போலீஸ் மற்றும் பல வேலைகளை செய்கிற பெண்களின் சீருடைகள் ஆண்கள்  அணியும் உடையின் மாதிரியே தான்.ஊழியக்காரர்களே உங்க கொள்கைப்படி  அது தவறானால் இப்படிபட்ட வேலைக்கு பெண்கள் போகக்கூடாதா? தேவன் அவர்களை அனுமதிக்க மாட்டாரா அல்லது நீங்கள் அனுமதிக்க மாட்டீர்களா? வேதாகமத்தின் படி தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்ற அலங்காரம் இருதயத்தில் மறைந்திருக்கும் சாந்தமும் அமைதலுள்ள ஆவியும்.

மாயக்காரனே வெளிப்புறம் சுத்தமாகும் படி பாத்திரத்தின் உட்புறத்தை முதலாவது  சுத்தமாக்கு என்று அந்த நாள்களில் வெளிப்புறமான பாரம்பரியத்தை முக்கியப்படுத்தி கொண்டிருந்த வேதபாரகர்களை பார்த்து தான் இயேசு கிறிஸ்து இப்படியாக கடிந்து கொண்டார். அவர்களை பார்த்து தான் குருடருக்கு வழிக்காட்டும் குருடர்களே என்றார். எனவே   இந்த கடைசி நாள்களில் ஜனங்களை உங்கள் பாரம்பரியத்துக்கு நேராக நடத்தாமல் சத்தியத்துக்கு நேராக நடத்துங்கள். இயேசு கிறிஸ்து சொன்னப்படி உங்கள் பாரம்பரியத்தினால் தேவ வசனங்களை அவமாக்காதீர்கள். ஆமென்.

bottom of page