top of page

சபைகள் மீண்டும் திறக்கப்பட்டால்?!!

 

நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஐனப்படுத்திக்கொள்ளுங்கள்.         

எபேசியர் 5-16

 

இன்னும் சில வாரங்களில் சபைகள் அரசாங்கத்தின் வழிகாட்டுதலின் படி திறக்கப்பட போகிறது,  நாமும்  கவனமாகவும் எச்சரிக்கையாகவும் சபைகளை நடத்துவோம். நம்மால் இந்த நோய் பரவாதப்படிக்கு எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியம். குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் சபைகள் கூட வேண்டும் என்று அரசாங்கம் கட்டளையிட்டால் அதற்கு கீழ்படிவது நல்லது. ஒரு வேளை அதிமான எண்ணிக்கையில் ஜனங்கள் கூடினால் அதை Photo எடுத்து அரசாங்கத்துக்கு தெரிவித்து உங்கள் சபை மூட வேண்டிய சூழ்நிலை வரலாம்.

 

அடுத்ததாக, Communion போன்ற காரியங்களில் நாங்கள் ஒரே பாத்திரத்தில் தான் பானம் பண்ணுவோம் என்று நோயை பரப்புவதற்கு காரணமாகி விட வேண்டாம். இந்த மோசமான சூழ்நிலையில் Cup's களில் Cummunion கொடுக்கலாம். நாங்கள் விசுவாசத்தில் வல்லவர்கள் என்று வீம்புகளில் மேன்மை பாராட்ட வேண்டாம். நீங்கள் விசுவாசத்தில் ஆபிரகாமாக இருக்கலாம், தீங்கு எங்களை அணுகாது என்று சொல்லலாம், ஆனால் ஒவ்வொருவருடைய விசுவாசத்தின் அளவு வேறுபட்டது என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். இப்படி தான் மருந்து எடுக்க கூடாது என்ற கொள்கையை அநேகர் மேல் திணித்து அநேகர் இயேசுவுக்காக மருந்து எடுக்க மாட்டோம் என்று வைராக்கியமாக இருந்து கடைசியில் நோயின் தாக்கம் அதிகமாகி கடைசியில் மரித்திருக்கிறார்கள். இதனிமித்தம் அநேக பெண்கள் தங்கள் கணவனை இழந்திருக்கின்றனர், பிள்ளைகள் தங்கள் பெற்றோரை இழந்திருங்கின்றனர்.

 

சமீபத்தில் கேரளாவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் நாங்கள் மருந்து எடுப்பதில்லை. இயேசு எங்களை சுகமாக்குவார் என்று சிகிற்சைக்கு வர மறுக்க இறுதியில் போலீஸ் வர வேண்டிய சூழ்நிலை வந்தது. இவைகள் புறஜாதி மத்தியில் இயேசுவின் நாமத்துக்கு அபகீர்த்தியை உண்டாக்குகிறது. மனுஷரால் கூடாதது தேவனால் கூடும். மருத்துவர்களால் கைவிடப்பட்ட அநேகர் இயேசுவின் நாமத்தில் ஜெபித்த போது தெய்வீக சுகத்தை பெற்று கொள்கின்றனர். எனவே இந்த சூழ்நிலையில் தேவனை பரீட்சை பார்க்காதீர்கள். ஊழியக்காரர்களே நீங்களும் உங்கள் பாரம்பரிய சபை கொள்கைகளில் ஜனங்களை வைராக்கியமாக நடத்தாதீர்கள்,தேவனுடைய கட்டளைகளில் வைராக்கியத்தை காட்ட சொல்லுங்கள்.

 

சிலர் கால்களை கழுவி தான் Communion கொடுக்கிறார்கள். இந்த மாதிரி நோய் பரவும் சூழ்நிலையில் ஒருவருக்கொருவர் கால்கள் கழுவுவதை தவிர்க்கலாம். ஆண்டவர் காட்ட சொன்ன மனத்தாழ்மை சபையில் மாத்திரம் காட்டுவதற்காக அல்ல எல்லா இடங்களிலும் உங்கள் நடக்கைகள் மூலமாக மனத்தாழ்மை வெளிப்பட வேண்டும். சபையில் கால் கழுவி நாங்கள் இயேசுவை போல கால்களை கழுவுகிறோம் என்று பெருமை பேசுகிறவர்கள் தங்கள் பக்கத்து வீட்டு காரர்களிடமும் மேலும் உடன் பிறந்தவர்களிடம் கூட பல வருடங்களாக பேசுவதில்லை. வேலைத்தலங்களிலும் குடும்பத்திலும் இயேசு சொன்ன நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன் என்ற அவரது நுகத்தை ஏற்று கொண்டு அவரது தாழ்மையை வெளிப்படுத்தாமல் வெறும் பாரம்பரியமாக கால்களை கழுவி கொண்டிருப்பதில் ஒரு பிரயோஜனமில்லை.

 

கரோனா நோயின் தாக்கத்துக்கிடையே சபை திறக்கப்படும் காலத்துக்குள் வந்து விட்டோம். எனவே  கவனமாகவும் எச்சரிக்கையோடும் சபைகளை நடத்துங்கள். நாளைக்கு சபையிலிருந்து நோய் பரவினது என்ற குற்றசாட்டுக்கு ஆளாகி இயேசுவின் நாமம் தூசிக்கப்படும்படியான சூழ்நிலைக்கு ஆளாக வேண்டாம். சில ஊழியக்காரர்கள் பிரசங்க மேடையில் ரொம்ப emotional ஆகிவிடுகிறார்கள் ஜனங்களையும் Emotional ஆக்கி விடுகிறார்கள். எல்லாவற்றையும் ஆண்டவர் பார்த்து கொள்வார் என்று துணிகரமாக சில காரியங்களை செய்து கடைசியில் மாட்டி கொள்வார்கள்.இப்பொழுது கூட ஆராதனை தடை செய்யப்பட்ட நிலையில் சிலர்  ஆராதனையை வீடுகளில் நடத்தி கொண்டிருக்கின்றனர். நம்முடைய வைராக்கியத்தை தேவனுடைய வசனத்துக்கு கீழ்படிவதில் காட்டுவோம். கிறிஸ்துவின் அன்பையும் தாழ்மையையும் வெளிப்படுத்துவதில் உங்கள் வைராக்கியம் இருக்கட்டும். இந்த நோயின் காரணமாக ஒரு அவசர நிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் நாங்கள் இப்படி தான் செய்வோம் கீழ்படிய மாட்டோம் என்று ஆராதித்த சில ஊழியக்காரர்கள் கடந்த நாள்களில் கைது செய்யப்பட்டனர். மேலும்அவர்கள் மேல் வழக்கு  பதியப்பட்டிருக்கிறது. இந்த காரியம் அந்த பகுதியில் இருக்கும் மக்கள் நம் மீது கசப்பையும் வெறுப்பையும் உண்டாக்கும் படி அமைந்து விட்டது.

 

இதோ நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும். ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்மல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். ஆமோஸ் 8-11.

ஆராதிக்க முடியாமல் சபைகள் அடைக்கப்பட்டதை எச்சரிக்கையாக எடுத்து கொள்ளுங்கள். இனியும் இப்படிபட்ட சூழ்நிலை வராது என்று என்ன நிச்சயம்? எனவே ஊழியக்காரர்களே, இனிமேலும் ஜனங்கள் உங்களையும் சபையையும் சார்ந்து இருக்கும் படியாக நடத்தினது போதும். ஜனங்களை தேவனுக்கு நேராக நடத்துங்கள். எந்த சூழ்நிலையிலும் அதாவது இனிமேல் சபைகள் அடைக்கப்பட்டால் ஜனங்கள் வீடுகளில் எப்படி ஆராதிக்க வேண்டும் எப்படி வசனத்தை தங்கள் குடும்பத்தினருக்கு போதிக்க வேண்டும் எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதை கற்று கொடுங்கள். பல சபைகளில் ஜனங்கள் ஊழியக்காரர்களை சார்ந்து இருக்க பழகி விட்டார்கள். சில சபைகளில் தேவன் இருக்கும் ஸ்தானத்தில் ஊழியக்காரரை வைத்து மகிமைபடுத்துகிறார்கள். இயேசு கிறிஸ்து ஊழியக்காரர்களை அப்பிரயோஜனமான ஊழியக்காரன் என்று சொல்ல சொன்னார்

 

(அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்த பின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார். லூக்கா 17-10)

 

ஊழியக்காரன் ஜனங்களை தேவனுக்கு நேராக நடத்ததும் படி அழைக்கபட்டவன், ஆனால் இப்பொழுது  எல்லாம் தலை கீழாக மாறிவிட்டது.

இனி வரும் நாள்கள் எப்படி இருக்கும் என்று தெரியாது. ஆனால் ஒன்று நிச்சயம் வசனம் கேட்க கூடாத பஞ்சகாலம் நிச்சயமாக வரும். இயேசுவின் பெயரை சொல்ல கூடாது என்று அரசாங்கமே சொல்லும். வசனத்தை பிரசங்கிக்கும் இணையதளங்கள் முடக்கப்படும் அல்லது எல்லாம் சென்சார் செய்யப்படும். இணைய தளத்தில் உள்ள வேதாகமங்கள் தங்கள் கொள்கைகளுக்கேற்ப மாற்றப்படும். அல்லது இணையதளங்களில் உள்ள வேதாகமங்கள் அகற்றப்படும் ஏனென்றால் 5 G அலைகற்றையின் மூலம் இணையதளங்கள் எல்லாம் சாத்தானின் ஆளுகைக்குள் சென்று விடும். அப்பொழுது வசனம் கேட்க கூடாத சூழ்நிலை வரும். அப்பொழுது வீடுகள் தோறும் அப்பம் பிட்கும் காலம் வரும்.எனவே இனி வரும் நாள்களில் வீடுகளில் குடும்பமாக ஆராதிக்க பழகி கொள்ளுங்கள், அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் தான் வேத வசனத்தை போதிக்க வேண்டும். உங்கள் பிள்ளைகள்   தேவனால் போதிக்கப்பட்டிருப்பார்கள் என்ற வசனத்தின் படி  உங்கள் பிள்ளைகள் தேவ சமூகத்தில் காத்திருந்து சாமுவேலை போல தேவனுடைய குரலை கேட்கும் படிக்கும் தேவ பிரசனத்தில் தரித்திருக்கும்படிக்கும் வழி நடத்துங்கள்.

 

இன்றைக்கு இணையதளங்களில் உள்ள கள்ள உபதேசங்களை படித்து பலர் வஞ்சிக்கப்பட்டு போகிறார்கள். மேலும் பிறரையும் வஞ்சிக்கிறார்கள். இவர்கள் பரிசுத்தாவியானவரின் ஆளுகைக்குள் இல்லை, சந்தேகத்துக்கிடமான உபதேசங்களை விட்டு விலகுங்கள். ஏதாவது சந்தேகம் இருந்தால் உங்க ஊழியக்காரரிடம் கேளுங்கள். அவர் நடத்தும் வேதாகம வகுப்புகளில் கலந்து கொள்ளுங்கள். இணையதளங்களில் தேவையில்லாத பிரசங்கங்களை  தவிர்த்து விடுங்கள்.  Bible study என்றபெயரில் அநேக கள்ள போதகர்கள் தீவிரித்து வருகிறார்கள்.

 

(நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். கலாத்தியர் 1-8) என்று பவுல் சொன்னதை வளங்கி கொண்டீர்களா?

நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள். நீங்களே பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு வேதாகமத்தை தியானம் பண்ண பழகி கொள்ளுங்கள்.

இந்த கடைசி நாள்களில் கர்தராகிய இயேசு கிறிஸ்து அனுப்பிய பரிசுத்த ஆவியானவரின் ஆலோசனையையும் வழி நடத்துதலையும் சார்ந்து வாழ பழகி கொள்ளுங்கள்.

 

நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை. அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது. அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக. 1 யோவான் 2-27. ஆமென்.

bottom of page