இணையதளத்தின் வழியாக வஞ்சிக்கப்பட்ட கள்ள உபதேசம்

 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிலாத்துவிடம் சத்தியத்தை குறித்து சாட்சி கொடுக்கவே நான் இந்த உலகத்துக்கு வந்தேன், சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார். இன்றைக்கு கர்த்தருடைய சத்தத்தை கேட்கும் சத்தியவான்கள் இல்லை.

இணையதளங்களில் காணப்படும் பிசாசினால் ஆளுகை செய்யப்பட்ட வஞ்சிக்கபட்ட உபதேசங்களை கேட்கிறவர்கள் அநேகர். இவர்கள் அந்த வஞ்சிக்கப்பட்ட உபதேசத்துக்கு அடிமையாகி  புறப்பட்டு போய் அநேகரை வஞ்சிக்கிறார்கள். இவர்கள் கற்று கொண்ட சத்தியத்துக்கு புறம்பான கொள்கைகளுக்காக வேத வசனத்தை புரட்டுகிறார்கள்.அதாவது சில வசனங்களை வைத்து கொண்டு வேதாகமத்தின் அடிப்படை சத்தியத்தை புரட்டுகிறார்கள்.

வேறொரு சுவிசேஷம் இல்லையே. சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. கலாத்தியர் 1-7 என்று பவுல் இவர்களை குறித்து எச்சரிக்கிறார்.

 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து...என்னிடம் கற்று கொள்ளுங்கள் என்றார். பரிசுத்தாவியானவர் சகலத்தையும் போதிப்பார் என்றார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைபடுத்துவார் என்றார். பேதுரு இயேசுவை பார்த்து நாங்கள் யாரிடத்தில் போவோம் நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் தானே இருக்கிறது என்றான். இயேசுவோ வேதாகமத்தை ஆராய்ந்து பாருங்கள் நித்திய ஜீவன் உண்டு என்றார். ஆனால் இன்றைக்கு கர்த்தரின் குரலை கேட்காமல் இணையதளங்களில் புல் மேய்ந்து கொண்டிருக்கும் இவர்கள் பிசாசு வைத்திருக்கும் கள்ள உபதேசமாகிய கண்ணியில்  சிக்கி கொண்டனர், போக போக இவர்கள் தாங்கள் கற்று கொண்ட கள்ள உபதேசத்தை வைராக்கியமாக போதித்து அநேகரை வஞ்சித்து இடறப்பண்ணுகிறார்கள். இவர்களை பற்றி இயேசு சொன்னது என்னவெனில் உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள், அவன் உங்கள் மார்க்கத்தானான போது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.   மத்தேயு 23-15

 

கள்ள உபதேசங்கள் பெரும்பாலும் அமெரிக்க தேசத்திலிருந்து தான் புறப்பட்டு வருகிறது. கர்த்தர் கொடுத்த பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டு எழுதப்பட்ட வேத வசனங்களை படிக்காமல் மனிதர்கள் உருவாக்கிய விபரீத கொள்கைகளை படித்து அதற்கு கீழ்படிய  உங்களை தூண்டியவன் யார்??ஆண்டவர் யோசுவாவிடம் இரவும் பகலும் வசனத்தை தியானித்து கொண்டிருப்பாயாக அப்பொழுது உன் வழியை வாய்க்க பண்ணுவாய் என்று சொன்னாரே. ஆனால் இன்றைக்கு மனிதன் உருவாக்கிய வஞ்சக உபதேசங்களை இரவும் பகலும் தியானித்து கொண்டு ஜனங்களை நித்திய ஜீவனை பெற்று கொள்ளாதபடிக்கு தவறாக போதிக்கும் இத்தகய கள்ள பிரசங்கிகளை குறித்து எச்சரிக்கையாகஇருங்கள்.

 

இன்றைக்கு ஜனங்கள் வஞ்சிக்கப்பட்டு நித்திய ஜீவனை பெற்று கொள்ளாதபடிக்கு பிசாசானவன் ஏராளமான கள்ள உபதேசங்களை பரப்புகிறான். அநேக கள்ள போதகர்கள் எழும்பி அநேகரை வஞ்சிப்பார்கள் என்ற தீர்க்கதரிசனம் நிறைவேறும் காலக்கட்டத்துக்குள்ளே வந்து விட்டோம்.

நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். கலாத்தியர் 1-8 என்று பவுல் எச்சரித்ததை மறந்து விட வேண்டாம். கள்ளத்தீர்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள். அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.   2 பேதுரு 2-1

 

நீங்கள் இருக்கும் Whatsapp குழுக்களிலே கள்ள உபதேசத்தை போதிக்கும் கள்ள போதகர்கள் இருக்கிறார்கள்.நீங்கள் போகும் சபைகளிலே இருக்கிறார்கள்.

உங்கள் குடும்பத்துக்குள்ளே இருக்கிறார்கள்.?!  இவர்கள் வேத வசனத்தை புரட்டி ஜனங்களை வஞ்சித்து நித்திய ஜீவனை பெற்று கொள்ளாதபடிக்கு தடை செய்வதால் இவர்களுக்கு சாபமே வைக்கப்பட்டிருக்கிறது.

 

வேதாகமத்தை புரட்டி ஜனங்களை வஞ்சிக்கும் அநேகருடைய குடும்பங்களிலும் பிள்ளைகள் வாழ்க்கையிலும்  குறைவுகளும்சாபங்களும் கடந்து வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த கள்ள உபதேசத்தை பரப்பி அநேகரை வஞ்சித்த  ஒருவர் ஒரு பயங்கரமான விபத்தில் கோரமாக மரணமடைந்தார். இவரது மரணத்தை இரண்டு வருடங்களுக்கு முன்பாக ஒருவர் வேதாகமத்தை புரட்டும் இவர் மேல் தேவனுடைய நியாயதீர்ப்பு வரப்போகிறது என்று தீர்க்கதரிசனமாக சொல்லியிருந்தார். 2 பேதுரு 3-16 ல் பேதுரு பவுலை பற்றி  சொல்லும் போது அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது. கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள். அதாவது தேவ வசனங்களை புரட்டும் போது தங்களுக்கு தாங்களே ஆக்கினையை வருவித்து கொள்கின்றனர். எப்படியெனில் இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். ஒருவன் இந்த தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.  வெளிப்படுத்தின விசேஷம் 22:18,19 அதிக ஆக்கினையை அடைவோம் என்று உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக என்ற வசனத்தை இப்பொழுது புரிந்து கொண்டீர்களா?

 

இன்றைக்கு தேவனால் அழைக்கபடாதவர்கள் எல்லாம் போதகராகி விட்டார்கள். ?!! 

அநேகர் இணையதளங்கள் முலமாக வசனங்களை தங்கள் இஷ்டத்துக்கு சுய வியாக்கியானம் என்ற பெயரில் புரட்டுகிறார்கள். மேலும்,  இணையதளங்கள் மூலமாக  வஞ்சிக்கபட்ட   இவர்கள் கிறிஸ்துவை அறிந்து இரட்சிக்கபட்டவர்களை மாத்திரம் குறி வைத்து சென்று அவர்களிடம் சில கேள்விகளை கேட்டு அவர்களை நிலை குலைய செய்து இறுதியில் தங்கள் உபதேசங்களை போதிக்கிறார்கள். இதற்காக நாள் முழுவதும் இணையதளங்களில் தங்கள் நேரங்களை செலவிடுகிறார்கள்.இவர்கள் தேவனை விட தங்கள் உபதேசத்தை நேசித்து அதன் மேல் வைராக்கியமாக இருக்கிறார்கள்.பிசாசின் பிடியில் அகப்பட்ட இவர்கள் மனம் திரும்புவது கூடாத காரியம்.

கள்ள தீர்க்கதரிசியாகிய எலிமாவை பார்த்து பவுல்,  எல்லாக் கபடமும் எல்லாப் பொல்லாங்கும் நிறைந்தவனே, பிசாசின்மகனே, நீதிக்கெல்லாம் பகைஞனே, கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதில் ஓயமாட்டாயோ? அப்போஸ்தலர் 13-10 என்று கடிந்து கொண்டார். இப்படி பட்ட கள்ள போதகர் ஒருவரிடம் இவைகளை யார் உங்களுக்கு சொல்லி கொடுத்தார்கள் என்று கேட்ட போது...  இணையதளத்திலிருந்து படித்து தெரிந்து கொண்டேன் என்றார்.!!

 

இன்றைக்கு தெய்வத்துவத்தின் முப்பரிமாணமான பிதாவையும் குமாரனையும் பரிசுத்த ஆவியானவரையும் மறுதலிக்கிற கள்ள உபதேசங்கள் மேலும்  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கர்த்தத்துவத்தை மறுதலிக்கிற கள்ள உபதேசங்கள் தீவிரித்து வருகிறது.

பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர். பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள் என்று 1 யோவான் 5:7 ல் சொல்லப்பட்ட வேதாகமத்தின் அடிப்படை சத்தியத்துக்கு விரோதமாக பேசும் கள்ள உபதேசிகளை பகுத்தறிந்து அவர்களை விட்டு உடனடியாக விலகுங்கள். அடுத்ததாக,  கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல. கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.

பரிசுத்த ஆவியானவரும் பிதாவானவரும் இயேசு தான் என்றும் இயேசு தேவன் அல்ல அவர் ஒரு தீர்க்கதரிசி தான் என்று தவறாய் போதிக்கும் இப்படி பட்டவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.

 

ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால்,  அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்.  2 யோவான் 1:9,10

இப்படி பட்ட கள்ள உபதேசிகளை உங்கள் வீட்டில் ஏற்று கொண்டால் நீங்கள் வஞ்சிக்கப்படுவீர்கள்.

பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்தி கிறிஸ்து என்று 1 யோவான் 2-22 ல் சொல்லப்பட்டதை குறித்து எச்சரிக்கையாக இருங்கள். தெய்வத்துவத்தை பற்றி ஆராய்ந்து அறிய எந்த மனுஷனாலும் கூடாதது.மனித உறவின் அடிப்படையில் பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரை தங்கள் குறைந்த அறிவினால் ஆராய முற்பட்டு  தெளிந்த புத்தியை இழந்து போனவர்கள் அநேகர். அநேக பெரிய ஊழியக்காரர்கள் கூட தெய்வத்துவத்தின் முப்பரிமாணத்தை பற்றி தவறாக போதிக்கிறார்கள். வேத வசனங்கள் பற்றி உங்களுக்கு தெரியவில்லை என்றால்  தெரியாது என்று சொல்லி விடுங்கள்.தேவன் ஒருவரா  என்றால் ஆம் என்று சொல்லி விடுங்கள்,தேவன் பிதா குமாரன் பரிசுத்தாவியானவர் என்ற மூன்று பரிமாணங்களில் இருக்கிறாரா? என்றால் அதற்கும் ஆம் என்று சொல்லுங்கள். கர்த்தராகிய இயேசு தேவனா என்றால் 1 யோவான் 5-20 ம்  ல் சொல்லப்பட்ட அவரே மெய்யான தேவன் என்ற வசனத்தின்படி ஆம் என்று சொல்லி விடுங்கள். இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரனா என்றால் 2 யோவான் 3 ம் வசனத்தின் படி ஆம் என்று சொல்லுங்கள். பிதாவானவர் தேவனா என்றால் யோவான் 17-3 ன் படி ஒன்றான  மெய் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன் என்ற வசனத்தின் படி ஆம் என்று சொல்லி விடுங்கள். பரிசுத்த ஆவியானவர் வெறும் வல்லமையா என்று கேட்டால் ஆவியானவர் வல்லமையாகவும் தன்னை வெளிப்படுத்துவார்.ஆள்தத்துவமுள்ளவராகவும் தன்னை வெளிப்படுத்துவார் என்று சொல்லுங்கள். வெளி 14-13 ல் ஆவியானவரும் ஆம் என்று திருவுளம் பற்றுகிறார் என்று சொல்லிற்று என்று ஆவியானவர் பேசுவதை நான் விசுவாசிக்கிறேன் என்று சொல்லுங்கள்.அப்போஸ்தலர்   5-3-4 வசனத்தின் படி பேதுரு பரிசுத்த ஆவியானவரை தேவன் என்று சொல்வதையும் நான் நம்புகிறேன் என்று சொல்லுங்கள்.

வேதாகமத்தின் ஒவ்வொரு உறுப்பும் ஒழிந்து போவதில்லை எனவே ஒவ்வொரு காரியத்தையும் நான் விசுவாசிக்கிறேன் என்று சொல்லுங்கள். ஏனெனில் என் வழிகள் உங்கள் வழிகளல்ல.என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல, நம் நினைவுகள் மற்றும் வியாக்கியானங்கள் எல்லாம் பூமிக்கு அடுத்தவையாக இருக்கிறது.

மனிதன் பூமியின் தன்மை உள்ளவனாயிருந்து பூமிக்கடுத்தவைகளை பேசுகிறான் என்று வேதம் சொல்கிறது. எனவே, பரலோகத்தின் அறிவை கொண்டு தான் தெய்வத்துவத்தின் ஆழங்களை  ஆராய்ந்து அறிய முடியும்.  நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார் அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார். 1 கொரிந்தியர் 2-10.

தேவனுடைய ஆழங்களையும் ரகசியங்களையும் பரிசுத்த ஆவியானவரே ஆராய்ந்து அறிந்திருக்கிறார்.எனவே பரிசுத்த ஆவியானவர் மாத்திரம் தான் பிதாவின் ஆதினத்துக்கடுத்த ரகசியங்களை உங்களுக்கு சொல்லி கொடுக்க முடியும்.

பரிசுத்த ஆவியானவர் வர் தான் சகல சத்தியத்துக்குள்ளும் உங்களை நடத்த முடியும்.  என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.  யோவான் 14:26.

நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டியதில்லை. அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது. அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.  1 யோவான் 2:27.

இன்றைக்கு பரிசுத்த ஆவியானவரின் உதவியில்லாமல் வேதத்தை ஆராய்ந்து பார்க்க முற்பட்டவர்கள் வஞ்சிக்கப்பட்டு போகிறார்கள். அவர்கள் ஆவியில்லாதவர்கள், சுய சிந்தனைகளினாலும் சுய அறிவினாலும் வேதாகம வசனங்களை ஆராயாதீர்கள்.

 

லூக்கா 24-45 ல் அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களை நோக்கி...என்று இயேசு சொன்ன வசனங்களை கவனித்தீர்களா? தேவ வசனத்தை அறிந்து கொள்ளும் படி தேவ ஆவியானவர் உங்கள் மனக்கண்களை திறக்கும் படி கேளுங்கள்.

வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக.  2 தீமோத்தேயு 3:16.

 

இப்படி கள்ள உபதேசத்தை போதிக்கிறவர்கள் தங்களுக்கு தான் எல்லாம் தெரியும் என்ற ரீதியில் பேசுவார்கள். ஆனால் வசனம் சொல்கிறது...

ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக்கொள்வானானால், ஒன்றையும் அறியவேண்டியபிரகாரமாக அவன் இன்னும் அறியவில்லை. 1 கொரிந்தியர் 8-2

அடுத்ததாக, மற்றொரு வசனம் இப்படி சொல்கிறது, அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்.

சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை.  யோவான் 7:17,18 என்று இயேசு சொன்னதை நினைவில் கொள்ளுங்கள்.

 

எனவே இணையதளங்களில் இருக்கும் கள்ள உபதேசத்தை பரப்பி கொண்டிருக்கும் வேதபுரட்டர்களை விட்டு விலகுங்கள். நீங்கள் வேதாகமத்தை ஆராய்ந்து பாருங்கள் அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டு என்று இயேசு சொன்னதை நினைவில் கொண்டு வேதாகமத்தை தேடி வாசியுங்கள்.

சத்தியத்தை அறிந்து கொள்ளுங்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.

 

வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி  சொன்னபின்பு அவனைவிட்டு விலகு.  தீத்து 3-10 ஆமென்.