top of page

ஞானஸ்நானத்துக்காக தண்ணீரை விலக்கலாமா?


இன்றைக்கு தண்ணீர் ஞானஸ்நானத்துக்கு எதிராக சிலர் வேத வசனங்களை புரட்டி அது தேவையில்லை என்று வைராக்கியமாக வாதிடுகின்றனர். ஆதியிலிருந்து நாம் பார்க்கும் போது தேவன் ஒரு கட்டளையை சொன்னால் அதற்கு கீழ்படிய  தேவையில்லை என்று பிசாசு முயற்சி செய்வான். ஏதேன் தோட்டத்தில்  கனியை புசிக்க கூடாது என்று தேவன் கட்டளையிட்டார், சாத்தானோ புசிக்கும்படியாக அவர்களிடம் பேசி வெற்றியும் பெற்று விட்டான்.


ஞானஸ்நானம் என்ற இயேசுவின் கட்டளைக்கு எதிராக போலியான ஞானஸ்நானத்தை சாத்தான் கொண்டு வந்து விட்டான்.


பாவ மன்னிப்புக்கென்ற ஞானஸ்நானத்தை பாவத்தை பற்றிய ஞானமில்லாத  குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள். வேதாகமத்தில் இல்லாததை தங்கள் சுய ஞானத்தினால்சபையின் கொள்கையாக்கி விட்டார்கள்.

 

அடுத்ததாக, ஞானஸ்நானம் என்பது நிச்சயமாக பெந்தேகோஸ்தே சபையின் உபதேசம் இல்லை தேவனுடைய கட்டளை மேலும் தேவனுடைய ஆலோசனை. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்.  மத்தேயு 28:19,20.


இயேசு கிறிஸ்து பரலோகத்துக்கு செல்லும் முன் சொல்லப்பட்ட முக்கியமான கட்டளை தான் தண்ணீரில் முழ்கி ஞானஸ்நானம் எடுப்பது. இப்பொழுது புரிந்து கொண்டீர்களா இது பெந்தேகோஸ்தே சபைகளின் உபதேசமல்ல, கர்த்தராகிய இயேசுவால் கொடுக்கப்பட்ட கட்டளை. 


கிறிஸ்து சபைக்கு தலையாயிருக்கிறார் எனவே உங்கள் சபையில் கிறிஸ்து தலையாயிருக்கிறார் என்றால் கிறிஸ்துவின் உபதேசத்தையே அடித்தளமாக கொண்டிருக்க வேண்டும். மாறாக மனிதன் உருவாக்கிய கொள்கைகளை அடிப்படையாக கொண்டு சபை நடத்தப்பட்டால் அது நிச்சயமாக கிறிஸ்துவின் சபையாக இருக்கமுடியாது. இயேசு கிறிஸ்து பேதுருவை நோக்கி நீ தேவனுக்கு ஏற்றவைகளை சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளை சிந்திக்கிறாய் என்று கடிந்து கொண்டார். உங்கள் கொள்கைகளுக்கு சாதகமாக ஒருகாலும் சத்தியத்தை தவறாக போதிக்காதீர்கள்.


கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்லகிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.   2 யோவான்-9.

அடுத்ததாக, யோவான் 4 ம் அதிகாரத்தின் 3 ம் வசனத்தில் இயேசு கிறிஸ்து முன்னிலையில் அவரது சீஷர்கள் ஞானஸ்நானம் கொடுத்து வந்தார்கள். அதாவது ஞானஸ்நானம் தேவையில்லையென்றால் நிச்சயமாக இயேசு கிறிஸ்து தன் சீஷர்களை ஞானஸ்நானம் கொடுக்க அனுமதித்திருக்க மாட்டார். இந்த சம்பவத்தில் இயேசு கிறிஸ்துவின் அனுமதியின் படியே சீஷர்கள் ஞானஸ்நானம் கொடுத்தார்கள்.

அப் 8 ம் அதிகாரத்தில் பரிசுத்த ஆவியானவர் பிலிப்புவிடம் நீ போய் எத்தியோப்பிய மந்திரியின் இரதத்தில் சேர்ந்து கொள் என்றார், பிலிப்பு அந்த மந்திரியிடம் சேர்ந்து அவனுக்குத் இயேசுவை பற்றி போதித்தான் அப்பொழுது இரதம் தண்ணீர் உள்ள இடத்திற்கு வந்த போது மந்திரி பிலிப்புவிடம் இதோ தண்ணீர் இருக்கிறதே...நான் ஞானஸ்நானம் பெறுவதற்கு தடை என்ன என்று கேட்க, பிலிப்புவும் நீர் விசுவாசித்தால் தடையில்லை என்று சொன்னான். அடுத்து, இருவரும்  தண்ணீரில் இறங்கினார்கள்.பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான்.இந்த சம்பவத்தில் ஞானஸ்நானம் கொடுத்து முடித்து கரையேறும் போது திடீரென்று பிலிப்பு மறைந்து போனான் அதாவது பரிசுத்த ஆவியானவர் பிலிப்புவை கொண்டு போய் விட்டார் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஞானஸ்நானம் கொடுக்கபடும் வரை பரிசுத்த ஆவியானவர் காத்திருந்தார் என்பதை புரிந்து கொண்டீர்களா? மேலும் இந்த சம்பவத்திலிருந்து தெளிப்பு ஞானஸ்நானம் போதுமென்றால் அவர்கள் இருவரும் தண்ணீரில் இறங்க தேவையில்லையே. இரதத்திலே தண்ணீர் இருந்திருக்கும் அந்த தண்ணீரை பயன்படுத்தி இரதத்திலே தெளித்து ஞானஸ்நானம்  கொடுத்திருக்கலாம், அவர்கள் இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள் மேலும் இருவரும் கறையேறினார்கள் என்பதை கவனியுங்கள். ஞானஸ்நானம் என்றாலே மூல பாஷையில் மூழ்குதல் என்று தானே அர்த்தம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வேதபாரகர்களிடம் யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ  அல்லது மனுஷரால் உண்டாயிற்றோ என்று கேட்டார் அதற்கு அவர்கள் பதில் சொல்லவில்லை, இதற்கு விடை யோவான் 1-33 ல் என்னை ஜலத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கும் படி அனுப்பினவர் என்று பிதாவாகிய தேவனை யோவான் ஸ்நானன் குறிப்பிடுகிறார். மேலும், அவர் கூறுகையில் பரிசுத்த ஆவியானவர் இறங்கி யார் மேல் தங்குவதை நீ காண்பாயோ அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங் கொடுக்கிறவர் என்று எனக்கு சொல்லியிருந்தார் என்றார்.


யோவான் ஸ்நானன் முதலில் இயேசு கிறிஸ்து தன்னிடம் ஞானஸ்நானம் எடுப்பதற்கு இடம் கொடுக்கவில்லை. இயேசுவோ அவனிடம் வந்து இப்பொழுது இடம் கொடு இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். மேலும், இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்று ஜலத்திலிருந்து கறையேறினவுடன் வானம் அவருக்கு திறக்கப்பட்டது.பரிசுத்த ஆவியானவர் புறாவை போல் அவர் மேல் இறங்கினார் வானத்திலிருந்து பிதாவாகிய தேவன் இவர் என் நேசகுமாரன் இவர் மேல் பிரியமாயிருக்கிறேன் என்றார். இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் எடுத்த பிறகு பிதாவானவரால் பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதை விளங்கி கொண்டீர்களா?


 அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.
1 யோவான் 2-6.  மேலும், நாம் அவரது அடிசுவடை பின்பற்றும் படியான மாதிரியை வைத்து விட்டு போனார் என்று பேதுரு எழுதுகிறார்.


இப்பொழுது சொல்லுங்கள் நீங்கள் யாரை பின்பற்றுகிறீர்கள். உங்களுக்காக சிலுவையில் தன் ஜீவனை தந்த இயேசுவையா அல்லது  இயேசுவின் கட்டளையை தள்ளி விட்ட உங்கள் ஸ்தாபனத்தையா அல்லது ஸ்தாபனத்தின் தலைவரையா?


பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாக தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள். லூக்கா 7-30 நீங்கள் ஞானஸ்நானம் எடுக்க சொன்ன தேவனுடைய ஆலோசனையை தள்ளி விடுகிறீர்களா?


தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்கு செவி கொடுக்கிறான் என்று இயேசு சொன்னார்.தேவனால் உண்டாயிராதவன் செவிக்கொடுக்க மாட்டான் என்றார். மேலும்,  யோவான் 12-48 ல் என்னை தள்ளி என் வார்த்தைகளை ஏற்று கொள்ளாதவனை நியாயம் தீர்க்க தோன்றியிருக்கிறது. நான் சொன்ன வசனமே அவனை கடைசி நாளில் நியாயம் தீர்க்கும் என்ற வசனம் உங்களை எச்சரிக்கவில்லையா? இயேசுவின் இரத்தத்தால் பாவ மன்னிப்பாகிய மீட்பை பெற்ற அனைவரும் ஜலத்தினாலும் பரிசுத்த ஆவியினாலும்  ஞானஸ்நானம் பெற்று கொள்ள வேண்டும்.


பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஐலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது. 1 யோவான் 5:8.


ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜியத்தை காண மாட்டான்.என்று இயேசு சொன்னதை நினைவில் கொள்ளுங்கள்.

கடந்த நாள்களில் ஒருவர் பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானமே மேலானது, இரட்சிப்பின் உள்ளான மாற்றமே சரியானது மேலும் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெற்றவர்கள் தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம் எடுக்க தேவையில்லை என்று பதிவிட்டிருந்தார். நான் அவரிடம் ஒரு கேள்வியை கேட்கிறேன்! இது இயேசுவுக்கு தெரியாதா? அப்ப ஏன் இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் கொடுக்கும்படி கட்டளையிட்டார்?! நீங்கள் இயேசுவை விட ஞானவானா?


அப்போஸ்தலர் 11 ம் அதிகாரத்திலே கொர்நேலியு வீட்டில் பேதுரு பிரசங்கம் பண்ணிய போது பிரசங்கத்தை கேட்டவர்கள் பரிசுத்தாவியின் ஞானஸ்நானத்தை பெற்று கொண்டார்கள்.47 ம் வசனத்தில் அப்பொழுது பேதுரு நம்மை போல பரிசுத்த ஆவியை பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படி கட்டளையிட்டான். அப்போஸ்தலர் 16 ம் அதிகாரத்தில் இர்ட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட சிறைசாலை தலைவனுக்கு பவுல் சொன்ன பதில் என்னவெனில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி அவர்களுக்கு வசனத்தை போதித்தான்.33ம் வசனத்திலே அவனும் அவன் வீட்டாரும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள்.


இதிலிருந்து நாம் இயேசுவை விசுவாசித்து இரட்சிக்கபட்டவுடன் ஞானஸ்நானம் பெற வேண்டியது கட்டாயம். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான், விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். மாற்கு 16-16. 

இந்த வசனத்தை சொன்னவர் யார்??. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தானே, உங்களை சிருஷ்டித்தவருக்கு செவி கொடுக்க மாட்டீர்கள்! மனுஷனுக்கு செவி கொடுப்பீர்கள் அப்படி தானே?என்னை மனுஷருக்கு முன்பாக மறுதலித்தவனை என் பிதாவுக்கு முன்பாக மறுதலிப்பேன் என்று இயேசு எச்சரித்ததை மறந்து விடாதீர்கள். 


பேசுகிறவருக்கு நீங்கள் செவிகொடுக்கமாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில், பூமியிலே பேசினவருக்குச் செவிகொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள் தப்பிப்போகாமலிருக்க, பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பிப்போவோம்? எபிரேயர் 12-25.

அப்போஸ்தலர் 16 ம் அதிகாரம் 13-15 வசனங்களில் பவுல் பிரசங்கம் பண்ணுவதை லீதியாள் என்ற ஸ்திரீ கேட்டு கொண்டிருந்தாள். தேவன் அவள் இருதயத்தை திறந்தார் அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றார்கள். வேதாகமத்தில் ஞானஸ்நானத்தை பற்றிய நிகழ்வுகளை கண்டும் காணாதவர்களிகவும் கேட்டும் உணராதவர்களாக இருக்க போகிறீர்களா?


 வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்: அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5-39)  என்று இயேசு சொன்னதை கவனித்தீர்களா? வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் வேதாகமத்தின் ஒரு சிறு எழுத்தாகிலும் ஒரு எழுத்தின்  உறுப்பாகிலும்  ஒழிந்து போகாது இயேசு சொல்லியிருக்கிறாரே? ஞானஸ்நானம் தேவையில்லை என்று இயேசு கிறிஸ்துவின் உபதேசத்துக்கு எதிராக வசனங்களை எடுத்து தவறாக உபதேசிக்காதீர்கள்.


ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.  வெளிப்படுத்தின விசேஷம் 22:19.


எனவே வேத வசனத்தை உங்கள் கொள்கைக்கேற்ப புரட்டாதீர்கள். ஜனங்களை இயேசு சொன்ன கட்டளைகளுக்கு கீழ்படிய செய்யாமல் மாயம் பண்ணாதீர்கள், இடறலுண்டாக்காதீர்கள்.


அதிக ஆக்கினையை அடைவோம் என்று உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக என்ற வசனத்தை குறித்தும் எச்சரிக்கையாக இருங்கள்.

தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு, இயேசு வரப்போகிறார். 2 தெசலோனிக்கேயர் 1:7.


அவர்கள் திருவசனத்துக்கு கீழ்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள் என்று 1 பேதுரு 2-8 ல் பேதுரு குறிப்பிடுகிறார். அவரை அறிந்திருக்கிறேன் என்று சொல்லியும் அவருடைய கற்பனைகளை கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான்.1 யோவான் 2-4.


பொய்யர்கள் அனைவவரும் அக்கினி கடலிலே பங்கடைவார்கள் என்று வேதம் எச்சரிக்கிறது. பாகிஸ்தானை சேர்ந்த குல்ஷான் எஸ்தர் என்ற ஊனமுற்ற பெண்ணை இயேசு கிறிஸ்து அவருக்கு நேரடியாக தரிசனமாகி அவரை குணப்படுத்தினார். மேலும், அவரிடம் இயேசு கிறிஸ்து பாத் Tub ல் தண்ணீர் நிரப்பி அதில் மூழ்கி ஞானஸ்நானம் எடுக்கும்படி கட்டளையிட்டார். அந்த பெண் இயேசு சொன்னபடியே ஞானஸ்நானம் பெற்று கொண்டார். அந்த பெண் மூலம் அநேகர் கிறிஸ்துவுக்கு நேராக நடத்தப்பட்டார்கள். தயவு செய்து இணையதளத்தில் அவர்களது சாட்சியை படித்து பாருங்கள். பிலிப்பியர் 3 ம் அதிகாரம் 10 ம் வசனத்திலே அவருடைய மரணத்துக்குள் பங்கு பெற்றால் தான் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழ தகுதியாக முடியும் என்பதை பவுல் குறிப்பிடுகிறார்.ரோமர் 6 ம் அதிகாரம் 4,5 வசனங்களிலே....


மேலும், பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.  ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.என்று ஞானஸ்நானத்தின் விளக்கத்தை பவுல் தெளிவு படுத்துகிறார். ஞானஸ்நானத்தினால் இந்த பாவ சரீரமாகிய பழைய மனிதன் அடக்கம் செய்யப்படுகிறான். அதாவது  ஞானஸ்நானத்தில் அவரோடே கூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடேகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.  கொலோசெயர் 2:12.


ரோமர் 6-6,7 ல் இனி பாவத்துக்கு ஊழியம் செய்யாதபடிக்கு பாவ சரீரம் ஒழிந்து போகும் பொருட்டாக நம்முடைய பழைய மனுஷன் அவரோடு கூட அறையப்பட்டான் என்று அறிந்திருக்கிறோம். மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே?


கிறிஸ்துவின் பரிகார மரணத்தை தனக்குரியதாக ஏற்று கொள்ளும் ஒவ்வொரு மனுஷனுடைய பழைய அழுக்கான பாவ தன்மை சிலுவையில் அறையப்படுகிறது, பாவ சரீரம் ஒழிக்கப்படுகிறது. அதாவது, பாவத்துக்கு மரித்து கிறிஸ்துவோடு அடக்கம் பண்ணப்படுவது என்பது தண்ணீரில் முழுவதுமாக மூழ்குவதை குறிக்கிறது. மேலும், புதிய ஜீவனுள்ளவர்களாய் புதிய சிருஷ்டியாய் தண்ணீரிலிருத்து வெளியே வரும் மறுபடியும் பிறக்கும் அனுபவம்.

இஸ்ரவேல் ஜனங்கள் பஸ்கா ஆட்டு குட்டி அடிக்கபட்டதினால் அந்த இரத்தத்தினாலே சங்கார தூதனிடமிருந்து பாதுகாக்கப்பட்டு செங்கடலை கடந்து கானான் தேசத்தை அடைந்தார்கள் அதே மாதிரி தான் நாம் பஸ்காவாகிய இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டு ஞானஸ்நானத்தின் மூலமாக பிரித்தெடுக்கப்பட்டு பரம கானானை அடைய போகிறோம்.


1 கொரி 10-2ல் எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள்.அதாவது இஸ்ரவேல் ஜனங்கள் செங்கடலை கடந்து சென்றது ஞானஸ்நானத்துக்கு ஒப்பனையாக சொல்லப்பட்டிருக்கிறது.


நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே.  ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனை பேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.  கலாத்தியர் 3:27.


நோவாவின் பேழையிலே எட்டு பேர் மாத்திரம் பிரவேசித்து தண்ணீரினால் காக்கப்பட்டார்கள். இதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது.  1 பேதுரு 3:21.


அதாவது ஞானஸ்நானம் உடலின் அழுக்கை போக்கும் செயல் அல்ல, குற்றமற்ற மனச்சாட்சியுடன் அவருக்கு தரும் வாக்குறுதியாகும் அது இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் வழியாக உங்களுக்கு மீட்பளிக்கிறது.

இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.  யோவான் 3:3.

இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.  யோவான் 3:5.

என் வழிகள் உங்கள் வழிகள் அல்ல என்று தேவன் சொன்னார். நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்று இயேசு கிறிஸ்து சொன்னார்.நீங்கள் யாருடைய வழியை பின்பற்றுகிறீர்கள்.


நாம் பூமிக்கேற்றவைகளை சிந்திக்கிறோம்! வசனங்களை நம்முடைய கொள்கைகளுக்கு ஏற்றவாறு பயன்படுத்துகிறோம்!?.


பிரியமானவர்களே, முதலாவது வேதாகமத்தில் சொல்லப்பட்ட ஞானஸ்நானம் என்ற சத்தியத்தை பரிசுத்த ஆவியானவர் உதவியுடன் தியானியுங்கள், வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். ஒரு வேளை உங்கள் சபை ஞானஸ்நானம் என்ற சத்தியத்தின் படி நடத்தபடவில்லையென்றால் இயேசு கிறிஸ்து கட்டளையிட்டதை செயல்படுத்த சொல்லுங்கள். உங்களுக்கு பரலோகத்துக்கு போவதற்கு வழியும் சத்தியமும் அவர் ஒருவரே.அவர் சொன்ன கட்டளைகளை ஒருகாலும் புறக்கணிக்காதீர்கள். உங்கள் வைராக்கியம் இயேசுவின் மீதும் தேவனுடைய வசனத்தின் மீதும் இருக்கட்டும்.

வேதாகமத்தை மனுஷீக புத்தி கூர்மையின் வல்லமையால் போதிக்கவும் முடியும், பரிசுத்தாவியின் வல்லமையால் போதித்திடவும் முடியும். ஊழியத்தில் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் ஊழியத்தை ஆவிக்குறிய அதிகாரத்தோடு   செயல்படுத்தி காட்ட வேண்டும். ஆனால், மார்க்க ரீதியினால் ஆன கொள்கைகளுக்கும் அதிகாரத்துக்கும் சபைகள் கீழ்படுத்தப்படுகிறது. இயேசு கிறிஸ்து பிலாத்துவை பார்த்து சொன்னார் சத்தியத்தை குறித்து சாட்சி கொடுக்கவே நான் பிறந்தேன் சத்தியவான் எவனும் என் குரல் கேட்கிறான். அவர் சொன்ன கட்டளையையே வேண்டாம் என்று நாம் போதிக்கும் படி நம்மை அதிகாரப்படுத்தியது நிச்சயம் கிறிஸ்துவின் அதிகாரம் இல்லை.


அன்றைக்கு பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலால் அநேகர் ஞானஸ்நானம் என்ற கட்டளைக்கு கீழ்படிந்தார்கள். இன்றைக்கு சத்தியத்துக்கு மாறாக  போதித்து அநேகரை சத்தியத்துக்கு நேராக நடத்தாமல் நம்மை ஆளுகை செய்வது நிச்சயமாக சகல சத்தியத்துக்குள் நடத்தபடும்படியாக நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியானவரின் ஆளுகை  இல்லை.

தேவசமுகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு, தேவன் வானத்திலிருக்கிறார், நீ பூமியிலிருக்கிறாய். பிரசங்கி 5-2.  ஆமென்.

bottom of page