ஆசை
சகோதரி. அனு ஃபெஸ்லின்
உலகத்தில் பிறந்த எந்த மனிதனுக்கும் ஆசைகள் உண்டு. உலகத்தில் ஆசையே இல்லை என்று சொல்லும் மனிதர்களை பார்க்க முடியாது. ஆசை நோவுக்கு அவிழ்தம் ஏது! ஆசைக்கு அளவில்லை! என்பது தமிழ் பழமொழிகள். மனிதனின் ஆசையானது அலைந்து தேடுகிறதைப் பார்க்கிலும் கண் கண்டதே நலம்; இதுவும் மாயையும், மனதைச் சஞ்சலப்படுத்து- கிறதுமாயிருக்கிறது என பிரசங்கி கூறுகிறார். மனிதனின் ஆசைகள் அவனை பாவம் செய்ய தூண்டுகிறது. பாவத்தின் சம்பளம் மரணம். மனிதனின் அளவுக்கதிகமான ஆசைகள் விசுவாசத்தை விட்டு வழுவி பாவத்திற்கு உட்படுத்தி நித்திய அழிவுக்கு நேராய் வழிநடத்துகிறது. ஆசையினால் வேதத்தின் மனிதர்கள் எப்படியாய் பாவத்தில் விழுந்தனர் எனவும் வேதம் நமக்கு கூறும் ஆலோசனைகளையும் குறித்து நாம் தியானிக்கலாம்.
மண்ணாசை
-
ராஜாவாகிய ஆகாப்பின் அரமனை அண்டையில் நாபோத்துக்கு தன் பிதாக்களின் சுதந்தர பங்காகிய ஒரு திராட்சைத்தோட்டம் இருந்தது. இதை தனதாக்கி கொள்ளும்படி ராஜா நாபோத்திடம் விலை பேசினான். ஆனால் நாபோத் இதற்கு உடன்படவில்லை. இதனால் ஆகாப் ராஜா சலிப்பும் கோபமுமாய் போஜனம் பண்ணாமல் படுத்திருந்தான். அவன் மனைவியாகிய யேசபேல் இதை அறிந்ததும்: நீர் இஸ்ரவேலின் ராஜா அல்லவா? நாபோத்தின் திராட்சைதோட்டத்தை நான் உமக்கு கொடுப்பேன் என்று சொல்லி நாபோத்தை கொலை செய்ய ராஜாவின் பெயரால் நிருபங்களை அனுப்பினாள். நாபோத் மரித்தபின் திராட்சைத் தோட்டத்தை சொந்தமாய் எடுத்துக்கொள்ளும்படி ஆகாப் போயிருந்த போது தேவன் எலியா தீர்க்கத்தரிசியின் மூலம் அவனோடு பேசினார். “கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்ய நீ உன்னை விற்றுப்போட்டாய்”[1இராஜாக்கள்21:1-29]. இன்றைய நாட்களில் கிறிஸ்தவர்கள் அநேகர் மண்ணாசையில் மயங்கி சொத்துக்களுக்காக சொந்த சகோதரரோடு சண்டையிட்டு பகைத்துக் கொள்ளுவதும் நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பதும் இயற்கையாகி போனது. மண்ணாசையினால் ஆகாப் ராஜா தேவ கோபத்திற்கு உட்பட்டு தன் குமாரருக்கு பொல்லாப்பை வரப்பண்ணினான்.
-
பிரியமானவர்களே வேதம் கூறுகிறது “நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே” [எபிரேயர்:13:5]. ஏனெனில் ஒரு மனிதனுக்கு எவ்வளவு ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல.தேவன் மட்டுமே நமக்கு நித்திய ஜீவனை அளிப்பவர்.வேதம் கூறுகிறது போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டு போவதுமில்லை என்பது நிச்சயம். நாம் உலகத்தின் மீது பற்றுக்கொண்டு வாழ்வதை விட்டு தேவனிடத்தில் உண்மையாய் அன்புகூர்ந்து அவரை பற்றி வாழ கற்றுக்கொள்ளுவோம். எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை [1கொரிந்தியர்:2:9]. செழிப்பான பூமியான சோதோமை தெரிந்துக் கொண்டு குடியேறினான் லோத்து. ஆனால் லோத்துவால் ஒரு ஆசீர்வாதமான சந்ததியை உருவாக்க முடியவில்லை. ஆபிரகாமோ லோத்து தெரிந்து கொண்ட பூமியை அவன் இஷ்டத்துக்கு விட்டுகொடுத்தான். அப்படியாய் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவரையே பற்றிக்கொண்ட ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் எண்ணிமுடியாதவை. நாமும் முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் தேடுவோம். தேவன் நம்மை பரிபூரணமாய் ஆசீர்வதிப்பாராக.
பொருளாசை
-
எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார் என்ற எச்சரிப்போடு இயேசுகிறிஸ்து ஜனங்களுக்கு ஒரு உவமையை சொன்னார்: ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது.அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே;நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்து வைத்து,பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான். தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார். தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார்[லூக்கா:15-21]. இன்றைய காலங்களில் நம்மில் பலர் பொன், பொருள் சேர்க்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு மிகவும் பிரயாசப்படுவர். விலையுர்ந்த ஆடைகள் பொருட்கள் மீது நம்முடைய நாட்டம் அதிகரிக்கிறது. நாம் பூமிக்குரிய பொக்கிஷங்களை சேர்த்து வைப்பதில் அதிக அக்கறை காட்டுகிறோம். நம்முடைய பொக்கிஷம் எங்கேயோ அங்கே நம்முடைய இருதயமும் இருக்கும். ஆனால் வேதம் கூறுகிறது பரலோகத்திலே உங்களுக்கு பொக்கிஷங்களை சேர்த்து வையுங்கள்[மத்தேயு:6:20]. நம்முடைய வேதாகமம் பொருளாசைக்காரரை விக்கிரக ஆராதனைக்காரர் என்று குறிப்பிடுகிறது. திருடரும், பொருளாசைக்காரரும் , வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை [Iகொரிந்தியர்:6:10 ]. இஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய சவுல் பொருளாசையினால் நிராகரிக்கப்பட்டார். இஸ்ரவேலர் எரிகோவை முற்றுகையிட்ட போது ஆகான் என்பவன் பொருளாசையினால் சாபத்தீடான சால்வை, வெள்ளி,பொன்பாளம் ஆகியவற்றை இச்சித்ததால் மரணத்தை தழுவினான்[யோசுவா:7].
-
தாவீது ராஜா “கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருளி செய்வார்” என கூறுகிறார்.
-
பிரியமானவர்களே நாம் தாவீது ராஜாவைப் போல எல்லா சூழ்நிலைகளிலும் தேவனை துதித்து பாடி அவரில் மனமகிழ்ச்சியாய் இருப்போம்.தாவீது ராஜா தேவனுடைய ஆலயத்தைக் கட்ட பொக்கிஷங்களை சேர்த்தது போல நாமும் அவருடைய ராஜ்யத்தைக் கட்டுவோம். தாவீதுக்கு நிலையான வீட்டை கட்டுவித்த தேவன் நம்முடைய வீட்டையும் கட்டி எழுப்புவார்.
பண ஆசை
பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள். நீயோ, தேவனுடைய மனுஷனே இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; [Iதீமோத்தேயு:6:10-12].
பணம் மனிதனுக்கு தேவை. ஆனால் பணம் நமக்கு ஜீவனை தருவதில்லை.ஐசுவரியம் நம்மை தேவனுடைய ராஜ்ஜியத்திற்கு அழைத்து செல்வதுமில்லை. இயேசுவோடு கூட இருந்த சீடனாகிய யூதாஸ் காரியேத்து பண ஆசையினால் வஞ்சிக்கப்பட்டு முப்பது வெள்ளிகாசுக்காக இயேசுவையே காட்டிக்கொடுத்தான். இயேசுவோடு விசுவாச பயணத்தை ஆரம்பித்த அவனால் அதை முடிக்க முடியவில்லை.பண ஆசையினால் நித்திய ஜீவனையே இழந்து போனான். அப்போஸ்தலர் காலத்தில் வாழ்ந்த அனனியா சப்பீராவும் தங்கள் காணியாட்சியை விற்றதில் ஒரு பங்கை வஞ்சித்து வைத்து பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாக பொய் சொல்லும்படி சாத்தான் அவர்கள் இருதயத்தை வஞ்சித்தான்.அவர்களும் பண ஆசையினால் விசுவாசத்தை விட்டு வழுவி விழுந்து போனார்கள். சாத்தான் பண ஆசையை நம் இருதயத்தில் தூண்டிவிடாதபடி நாம் எச்சரிக்கையாய் நம்மை காத்துக் கொள்ள வேண்டும்.
இன்றைய சூழலில் அநேகமாக எல்லா மனிதர்களுக்கும் மிக குறுகிய காலகட்டத்தில் ஐசுவரியவானாக வேண்டும் என்பதே நோக்கமாய் இருக்கிறது. அதற்காக நேர்மையற்ற முறையில் பணத்தை சம்பாதிப்பவர்களும் உண்டு. பண ஆசையினால் தங்கள் சொந்த பெற்றோர்களையும் சகோதரர்களும் உறவுகளையும் பகைத்து அவர்களை விசாரியாமல் எந்த உதவிகளும் செய்யாமல் சுயநலத்தோடு வாழும் கிறிஸ்தவர்களும் உண்டு. வேதம் கூறுகிறது, ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான் [1தீமோத்தேயு:5:8]. பிரியமானவர்களே நாம் ஐசுவரியவானாக பிரயாசப்பட வேண்டாம். ஏனெனில் வேதம் கூறுகிறது ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். நாம் நம்முடைய பலத்தால் கொஞ்சம் மாத்திரமே சம்பாதிக்க முடியும். ஆனால் கர்த்தரின் ஆசீர்வாதமோ ஐசுவரியத்தை தரும். நம்முடைய தாழ்மைக்கும், கர்த்தருக்கு பயப்படுதலுக்கும் வரும் பலன் தான் ஐசுவரியமும், மகிமையும், ஜீவனுமாம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே நாம் நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும், நன்மை செய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும், நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் பவுல் நமக்கு கட்டளையிடுகிறார். நாம் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, நமக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுவோம்.தேவன் நம்மோடு கூட இருந்து நம்மை வழிநடத்தி ஆசீர்வதிப்பார்.
பெண்ணாசை
ராஜாவாகிய சாலொமோன், பார்வோனின் குமாரத்தியை நேசித்ததுமல்லாமல், மோவாபியரும், அம்மோனியரும், ஏதோமியரும், சீதோனியரும், ஏத்தியருமாகிய அந்நிய ஜாதியாரான அநேகம் ஸ்திரீகள்மேலும் ஆசைவைத்தான். கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரிடம் நீங்கள் அவர்களண்டைக்கும் அவர்கள் உங்களண்டைக்கும் பிரவேசிக்கலாகாது. அவர்கள் நிச்சயமாய்த் தங்கள் தேவர்களைப் பின்பற்றும்படி உங்கள் இருதயத்தைச் சாயப்பண்ணுவார்கள் என்று சொல்லியிருந்தார். ஆனாலும் சாலொமோன் அவர்கள்மேல் ஆசைவைத்து, அவர்களோடு ஐக்கியமாயிருந்தான். சாலொமோன் வயதுசென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நியதேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள். அதினால் அவனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப் போல, தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை. பூமியின் சகல ராஜாக்களை பார்க்கிலும் ராஜாவாகிய சாலொமோனை தேவன் ஞானத்தினாலும் ஐசுவரியத்தினாலும் மகிமையினாலும் முடிசூட்டி இருந்தார். அவனுக்கு சரியான ராஜா ஒருவனும் அவன் நாட்களில் இருந்ததில்லை.
ஆனால் பெண்ணாசையினால் சாலொமோன் ராஜா ஜீவனுள்ள தேவனாகிய கர்த்தரை விட்டு பின்வாங்கி அந்நிய தேவர்களை சேவித்தான். தேவன் எச்சரித்தும் அவன் மனந்திரும்பவில்லை. அதனால் தேவன் ராஜ்யபாரத்தை அவன் குமாரனுடைய கையினின்று பிடுங்கி அவன் ஊழியக்காரனுக்கு கொடுத்தார்[1இராஜாக்கள்:11].
வேதம் கூறுகிறது விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ் செய்தாயிற்று.[மத்தேயு:5:27,28]ஆகிலும் வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும்[1கொரிந்தியர்:7:2]. விபச்சாரக்காரன் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பதில்லை. ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள் [கொலோசெயர்:3:5]. இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் பாவத்திற்கு தூண்டும் கருவிகள் பல. எனவே வாலிப சகோதர சகோதரிகளும், திருமணமான ஆண்களும் பெண்களும் தங்களை பாவத்தில் சிக்கி அடிமைபடாதபடி காத்துக்கொள்ள வேண்டும். யோசேப்பை போல எல்லா சூழ்நிலைகளிலும் நம்மை பரிசுத்தமாய் காத்துக்கொள்வதில் வைராக்கியமாய் செயல்படுவோம்.
மனிதர்களாக பிறந்த எல்லாருக்கும் ஆசைகள் உண்டு. ஆனால் அவை பேராசையாகி நம்மை பாவத்தில் தள்ளிவிட வாய்ப்புண்டு. பேராசையினால் நாம் செய்யும் பாவங்கள் நம் சந்ததியையும் பாதிக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நாம் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடக்க அழைக்கப்பட்டவர்கள்.
கிறிஸ்தவர்களாகிய நாம் உலகத்தின் ஆசைகளை விட்டு விலகி தேவனை சார்ந்து விசுவாச வாழ்க்கை வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.வேதம் கூறுகிறது கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்[கலாத்தியர்:5:24].உலகத்தின் ஆசைகளையும் இச்சைகளையும் நாம் சிலுவையில் அறையாவிட்டால் கிறிஸ்துவோடு கூட நெருங்கி வாழமுடியாது. தாவீது ஒரு ராஜாவாயிருந்தும் அவருடைய ஆத்துமா தேவனையே வாஞ்சித்தது; அவருடைய இருதயம் பரிசுத்த ஸ்தலத்தில் தேவனைப் பார்க்க ஆசையாயிருந்தது. தாவீது ராஜா கூறுகிறார் “ இப்படியே பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப்பார்க்க ஆசையாயிருந்து, உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன்[சங்கீதம்:63:2].
நம்முடைய இருதயத்தின் ஆசை என்ன? நம்முடைய உள்ளம் எதை வாஞ்சிக்கிறது.நம்முடைய பேச்சுக்கள் செயல்கள் எல்லாம் உலகத்தை குறித்ததா? இல்லை கிறிஸ்துவை குறித்ததா? சற்று சிந்திப்போமா? வேதம் கூறுகிறது உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.உலகத்திற்கும் தேவனுக்கு ஊழியம் செய்ய உங்களால் கூடாது.நம்முடைய விருப்பம் ஆசை எல்லாம் இயேசுவாக இருக்கட்டும். நிலையற்ற உலக பொருட்கள் மேல் கொண்ட ஆசை நம்பிக்கையை விட்டு நாம் நிலையான நித்திய ஜீவனை தரும் இயேசுவை பற்றிக்கொள்ளுவோம். அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார் தேகத்தைவிட்டுப்பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும். நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றிலும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்[பிலிப்பியர்:3:12 ]. எவ்வளவு அருமையான சாட்சி பாருங்கள்.நாமும் கூட பவுலைப் போல கிறிஸ்து இயேசுவினால் நாம் எதற்காக பிடிக்கப்ப்டடோமோ அதை பிடித்துக்கொள்ளுபடி ஆசையாய் தொடருவோம். நம்முடைய ஆசை ஏக்கமெல்லாம் இயேசுவின் மேலிருக்கும் போது தேவன் நம்மை அற்புதமாய் ஆச்சரியமாய் நாம் எண்ணுகிறதற்கும் நினைத்துப்பார்க்கிறதர்கும் மிகவும் அதிகமாய் ஆசீர்வதித்து வழிநடத்துவார் என்பதில் ஐயமில்லை.தேவன் தாமே நம் ஒவ்வொருவரையும் உன்னதத்தின் பரிபூரண ஆசீர்வதங்களினால் நிறைத்து வழிநடத்துவாராக. ஆமென்.